10-ம் வகுப்பு தேர்வுக்குப் பின் மதிப்பெண் சான்றிதழ்களில் திருத்தம் செய்ய முடியாது: சென்னை ஹைகோர்ட்

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: 10 ஆம் வகுப்பு பொது தேர்வு எழுதிய பின், மதிப்பெண் சான்றிதழ்களில் பிறந்த தேதி, பெயர் ஆகியவற்றில் திருத்தம் செய்ய முடியாது என்று சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

விழுப்புரம் மாவட்டம், செங்கமேடு கிராமத்தை சேர்ந்த பி.கருணாகரன் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு ஒன்றை தாக்கல் செய்துள்ளார். அந்த மனுவில், நான் 1992-ம் ஆண்டு ஜனவரி 16-ந் தேதி பிறந்தேன்.

Can't alter birth certificate after SSLC: Madras High Court

ஆனால், சட்டவிவரங்கள் தெரியாத என் பெற்றோர், 1989-ம் ஆண்டு ஜனவரி 19-ந் தேதி பிறந்ததாக பள்ளியில் சேர்க்கும்போது குறிப்பிட்டுவிட்டனர். நான் 10-ம் வகுப்பு தேர்வு எழுதும்போது, எனக்கு பிறப்பு சான்றிதழ் இல்லாததால், பள்ளி மாற்றுச்சான்றிதழில் உள்ள பிறந்த தேதியையே குறிப்பிட்டுவிட்டேன். அதன்பின்னர் பிளஸ்-2 தேர்விலும் அதேபோல குறிப்பிட்டிருந்தேன்.

இதன்பின்னர் கடந்த 2010-ம் ஆண்டு வானூர் குற்றவியல் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தேன். 10 மற்றும் பிளஸ்-2 மதிப்பெண் சான்றிதழ்கள், பள்ளி மாற்றுச்சான்றிதழ் ஆகியவற்றில் 1992-ம் ஆண்டு ஜனவரி 16-ந் தேதி நான் பிறந்ததாக பதிவு செய்யவேண்டும் என்ற உத்தரவை பெற்றேன்.

குற்றவியல் கோர்ட்டு பிறப்பித்த உத்தரவின் அடிப்படையில், வருவாய் துறை அதிகாரியிடம், பிறப்பு சான்றிதழ் பெற்றேன். அதன்பின்னர், நான் படித்த பள்ளி நிர்வாகத்திடம் இருந்து, 1992-ம் ஆண்டு பிறந்தேன் என்று புதிய மாற்றுச்சான்றிதழை பெற்றேன்.

இந்த ஆவணங்களை எல்லாம் வைத்து, என்னுடைய 10 மற்றும் பிளஸ்-2 மதிப்பெண் சான்றிதழ்களில் பிறந்த தேதியை மாற்றித்தரும்படி தமிழக தேர்வுத்துறை செயலாளரிடம் கடந்த 2014-ம் ஆண்டு மனு செய்தேன். பலமுறை நேரில் சென்று முறையிட்டும், பிறந்த தேதியை திருத்தம் செய்து தராமல் உள்ளார். எனவே, என்னுடைய உண்மையான பிறந்த தேதியை குறிப்பிட்டு புதிய மதிப்பெண் சான்றிதழ்களை வழங்கும்படி தேர்வுத்துறை செயலாளருக்கு உத்தரவிடவேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டிருந்தது.

இந்த வழக்கை விசாரித்த நீதிபதி கிருபாகரன், எஸ்.எஸ்.எல்.சி. விதிகளின் படி, 10 ஆம் வகுப்பு பொதுத் தேர்வுக்கு பின், வயது மற்றும் பெயர்களில் திருத்தங்கள் செய்ய முடியாது. எனவே, மனுதாரரின் 10 மற்றும் பிளஸ்-2 மதிப்பெண் சான்றிதழ்களில் பிறந்த தேதியை திருத்தம் செய்வதற்கு, தேர்வுத்துறை செயலாளருக்கு அதிகாரமே கிடையாது.

மேலும், பிறந்த தேதியை மாற்றவேண்டும் என்று தேர்வுத் துறை செயலாளருக்கு உத்தரவிட குற்றவியல் கோர்ட்டுக்கு அதிகாரமே கிடையாது. மேலும், எஸ்.எஸ்.எல்.சி. விதிகளின்படி, 10-ம் வகுப்பு தேர்வுக்கு பின்னர் பிறந்த தேதியை மாற்ற முடியாது. எனவே, இந்த வழக்கை தள்ளுபடி செய்கிறேன். இவ்வாறு நீதிபதி என்.கிருபாகரன் உத்தரவிட்டுள்ளார்.

வாழ்க்கைத் துணையை தேடுகிறீர்களா? தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

English summary
Madras High Court dismissed the petition filed of alter birth certificate after SSLC
Please Wait while comments are loading...