For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

‘’காவிரி குடும்பம்’’ நதி நீர் பிரச்சனையைத் தீர்க்குமா?

By R Mani
Google Oneindia Tamil News

-ஆர். மணி

மீண்டும் காவிரி பிரச்சனை தலை விரித்தாடத் துவங்கி விட்டது. தமிழகத்துக்கு பத்து நாட்களுக்கு 15,000 கன அடி தண்ணீரை கர்நாடகம் திறந்து விட வேண்டும் என்று உச்ச நீதி மன்றம் உத்திரவிட்ட உடனேயே பிரச்சனை வெடித்தது. வழக்கம் போலவே இந்தாண்டும் தமிழ் நாட்டுக்கு ஒரு சொட்டு தண்ணீர் கூட கொடுக்க முடியாதென்று கர்நாடகம் அடம் பிடித்த சூழலில்தான் உச்ச நீதிமன்றத்தின் இந்த உத்திரவு வந்து சேர்ந்தது.

தமிழகத்தின் மனு மீது உச்ச நீதிமன்றம் இந்த உத்திரவை பிறப்பித்த உடனேயே கர்நாடகத்தில் கூட்டப்பட்ட அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் விவகாரம் காரசாரமாக விவாதிக்கப் பட்டது. பின்னர் உச்ச நீதி மன்றத்தின் உத்திரவு மதிக்கப் படும் என்று செய்தியாளர்களிடம் கூறிய கர்நாடக முதலமைச்சர் சித்தராமையா, தீர்ப்பை மறுபரீசீலனை செய்யக் கோரும் மறுசீராய்வு மனு சுப்ரீம் கோர்ட்டில் தாக்கல் செய்யப் படும் என்றும் கூறினார்.

Cauvery Family to solve the dispute?

செப்டம்பர் 6 ம் தேதி தண்ணீர் திறக்கப் பட்டது, முதலில் 15,000 கன அடியாக இருந்த நீரின் அளவு பின்னர் 20,000 கன அடியாக உயர்த்தப் பட்டது.

ஆனால் இந்த தண்ணீர் தமிழகத்தில் இந்தாண்டு சம்பா பயிர்களை காப்பாற்ற போதாது என்றே பரவலாகக் கருதப் படுகிறது. ''உச்ச நீதிமன்றத் தீர்ப்பின்படி கர்நாடகம் தண்ணீரை திறந்து விட்டாலும், மேட்டூர் அணையின் நீர்மட்டம் 90 அடியை எட்டாது. அணையின் நீர்மட்டம் 90 அடியை எட்டாவிட்டால் 15 லட்சம் ஏக்கரில் பயிரிடப்பட்டிருக்கும் சம்பா பயிருக்குத் தேவையான போதிய தண்ணீர் போய்ச்சேராது'' என்கிறார் தமிழ்நாடு விவசாயிகள் சங்கத் தலைவர் (சிபிஎம் சார்பு) கே.பாலகிருஷ்ணன்.

வழக்கமாக ஜூன் 12 ம் தேதி சம்பா பயிருக்காக மேட்டூர் அணை திறக்கப்படும். 2011 ல் ஜூன் 12 ம் தேதிக்கு ஒரு வாரம் முன்பே சம்பா பயிருக்காக மேட்டூர் அணை திறக்கப்பட்டது. அப்போது மழை பலமாகப் பெய்தது. ஆனால் அதன் பிறகு கடந்த ஐந்தாண்டுகளாக ஜூன் 12 ம் தேதி மேட்டூர் அணை திறக்கப்பட்டதே இல்லை.

''இந்தாண்டு, மேட்டூர் அணையை கர்நாடகம் விடுவிக்கும் தண்ணீரை மட்டும் கொண்டு திறப்பது என்பது சூதாட்டத்துக்குச் சமமானது. ஏனெனில் கர்நாடகம் விடுவிக்கும் தண்ணீர் மட்டும் போதாது. செப்டம்பர் மூன்றாவது வாரத்தில் மேட்டூர் அணையை அரசு திறக்கலாம். ஆனால் அக்டோபரில் வட கிழக்கு பருவ மழை போதியளவு பெய்தால் மட்டுமே இந்தாண்டு நாம் சம்பா பயிரை காப்பாற்ற முடியும். உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பின்படியிலான மொத்த தண்ணீரையும் கர்நாடகம் விடுவித்தாலும் கூட நம்மால் இந்தாண்டும் சம்பா பயிர்களைக் காப்பாற்றுவது கடினமான காரியம்'' என்கிறார் பொதுப் பணித்துறை மூத்த அதிகாரி ஒருவர்.

பருவ மழை போதியளவு பெய்யாத காலங்களில் இரண்டு மாநிலங்களுக்கும் இடையே ஏற்படும் மோதல் இந்தாண்டும் ஏற்பட்டிருக்கிறது. கிட்டத்தட்ட 134 ஆண்டுகால பிரச்சனை இது. பிரிட்டிஷ் ஆட்சிக் காலத்தில் அப்போதய மைசூர் மஹாராஜாவுக்கும், சென்னை ராஜதானிக்கும் இடையே 1892 ஒரு ஒப்பந்தம் ஏற்பட்டது..

அந்தக் காலத்தில் சென்னை ராஜதானி அரசியல்ரீதியில் மிகவும் வலுவானதாக இருந்தது. ஆனால் மைசூர் மஹாராஜா அந்தளவுக்கு வலுவானவராக இல்லை. இதனால் அன்றைய பிரிட்டீஷ் ஆட்சியாளர்கள் தங்களை மிரட்டி இந்த ஒப்பந்தத்தில் கையெழுத்திட வைத்து விட்டார்கள். அதனால் இன்றளவும் காவிரி விவகாரத்தில் தங்களுக்கு வஞ்சம் இழைக்கப் பட்டதாகவே கர்நாடகம் கருதுவதுதான் விவகாரத்தின் முக்கியமானதோர் கோணம்.

பிரிட்டீஷ் ஆட்சிக் காலத்தில் இரண்டாவது ஒப்பந்தம் 1924ல் ஏற்பட்டது. பின்னர் 1974 ல் ஒரு வரைவு ஒப்பந்தம் உருவாக்கப்பட்டது. இதற்கு சம்மந்தப் பட்ட அனைத்து மாநிலங்களும், அதாவது, கர்நாடகம், தமிழ் நாடு, கேரளா மற்றும் புதுச்சேரி ஆகிய மாநிலங்களும், மத்திய அரசும் 1976 ல் ஒப்புதல் அளித்தன. பின்னர் 1990 ல் அமைக்கப் பட்ட காவிரி நடுவர் மன்றம் 1991 இடைக்காலத் தீர்ப்பையும், 2007 ல் இறுதித் தீர்ப்பையும் வழங்கியது.

இந்த இறுதித் தீர்ப்பின் படி தமிழகத்துக்கு ஆண்டுதோறும் 419 டிஎம்சியும், கர்நாடகத்துக்கு 270 டிஎம்சியும், கேரளத்துக்கு 30 டிஎம்சியும், புதுச்சேரிக்கு 7 டிஎம்சி தண்ணீரும் கர்நாடகம் திறந்து விட வேண்டும். இது மாதாந்திர அளவில் திறக்கப் பட வேண்டும்.

2007 ல் வந்த இந்த தீர்ப்பு 2013-ல் அரசிதழில் வெளியிடப்பட்டது. ஆனால் இந்த தீர்ப்பை செயற்படுத்துவதற்கான காவிரி மேலாண்மை வாரியமும், காவிரி நீர் ஒழுங்குமுறை ஆணையமும் இதுவரையில் அமைக்கப்படாதுதான் சிக்கலின் மூல வேராகும். இந்த அமைப்புகள் ஏற்படுத்ப் பட்டால் ஒட்டு மொத்த காவிரி நதி நீர் நிருவாகமும், கர்நாடகத்தில் உள்ள அணைகளும், துணை அணைகளும் இவற்றின் கட்டுப்பாட்டில் போய் விடும்.

இருக்கும் தண்ணீரை எந்த மாநிலத்துக்கு எவ்வளவு பிரித்துக் கொடுக்க வேண்டும் என்பதை இந்த அமைப்புகள் தான் முடிவு செய்யும். காவிரியின் மதகுகளை (sluice gates) திறந்து விடும் அதிகாரம் இந்த அமைப்புகளுக்குப் போய் விடும். கர்நாடாகாவில் மாறி, மாறி ஆட்சிக்கு வருவது காங்கிரஸ் கட்சியும், பாஜக வும் தான். இப்போது புரிகிறதா காவிரி மேலாண்மை வாரியமும், ஒழுங்கு முறை ஆணையமும் ஏன் அமைக்கப் படவில்லை என்பது?

கிட்டத்தட்ட ஒன்றரை நூற்றாண்டு கால இந்தப் பிரச்சனைக்கு அரசியல் வாதிகளையும் தாண்டி தீர்வு காணும் முயற்சி கடந்த 2003 - 2004 ஆண்டு காலத்தில் மேற்கொள்ளப் பட்டது. சென்னையில் உள்ள மெட்ராஸ் இன்ஸ்டிடியூட் ஆஃப் டெவலப்மெண்ட் ஸ்டடீஸ் (எம்ஐடிஎஸ்) என்ற கல்வி அமைப்பின் நீரியியல் துறை பேராசிரியராக இருந்த டாக்டர் எஸ். ஜனகராஜன் என்பவர்தான் இந்த முயற்சியைத் துவக்கினார். இரு மாநில விவசாயிகளை ஒருவருடன் ஒருவர் கலந்து பேச ஏற்பாடுகள் செய்வது இந்த முயற்சி. இந்த முயற்சிக்குப் பெயர் ''காவிரி குடும்பம்''.

இரண்டு மாநிலங்களையும் சார்ந்த நூற்றுக் கணக்கான விவசாயிகள் ஒருவர் மற்றவரின் மாநிலத்துக்குப் பயணம் செய்தனர். ''தமிழகத்தில் அப்போது நாகப்பட்டினம், திருவாரூர் போன்ற இடங்களுக்கு வந்த கர்நாடக விவசாயிகள் இங்குள்ள வாடிய பயிர்களையும், விவசாயிகளின் நிலைமையையும் பார்த்து கண்ணீர் விட்டு அழுதனர். அதே போன்று கர்நாடகத்தின் மாண்டியா போன்ற மாவட்டங்களுக்குப் போன தமிழக விவசாயிகள் அங்கு அவர்கள் கண்ட விளைநிலங்களை கண்டு மனங் கலங்கி நின்றனர்'' என்கிறார் பேராசிரியர் ஜனகராஜன்.

கிட்டத்தட்ட மூன்றாண்டுகள் இந்த முயற்சி நீடித்தது. இதன் நோக்கம் காவிரி பிரச்சனையால் அதிகம் பாதிக்கப் படும் இரண்டு மாநில விவசாயிகளையும் ஒருவருடன் ஒருவர் கலந்து பேச ஏற்பாடுகள் செய்வதன் மூலம் பிரச்சனைக்குத் தீர்வு காண புதிய வகை வாய்ப்புகளை உருவாக்குவது. இவை சிறிய அளவிலான வாய்ப்புகளாக இருந்தாலும் கூட, காலப் போக்கில் இத்தகைய முயற்சிகளால் உருவாகும் சிந்தனையும், கருத்தாக்கங்களும், அந்தந்த மாநில அரசுகளை பிரச்சனைக்கு நிரந்தரத் தீர்வு காண உந்தித் தள்ளும் என்பதுதான்.

அதாவது இரண்டு மாநிலங்களின் அரசியல் ஒதுங்கிக் கொள்ள களத்தில் நிற்கும் விவசாயிகள் ஒருவர் மற்றவரின் பிரச்சனையை புரிந்து கொள்ளுவதென்பதும், அதன் மூலம் பிரச்சனைக்கான நிரந்தரத் தீர்வை நோக்கி நகருவது என்பதும் தான் இதன் நோக்கமாக இருந்தது. ''ஆனால் துரதிர்ஷ்டவசமாக 2006 ம் ஆண்டுக்குப் பிறகு இந்த முயற்சி முன்னெடுக்கப் படாமல் அப்படியே முடங்கிப் போனது. கர்நாடகத்தில் அரசு மட்டத்தில் இந்த முயற்சிக்கு ஓரளவுக்கு ஆதரவு இருந்தது.

ஆனால் தமிழகத்தில் 2003 - 2006 ம் ஆண்டு காலகட்டத்தில் ஆட்சியில் இருந்த ஜெயலலிதா அரசிடமிருந்து எந்த ஆதரவும் கிட்டவில்லை. மாறாக ''காவிரி குடும்பம்'' முயற்சியை ஆரம்பம் முதலே சந்தேகக் கண் கொண்டே ஜெ அரசு பார்த்துக் கொண்டிருந்தது. ''காவிரி குடும்பம்'' நடத்தும் ஒவ்வோர் கூட்டத்திலும் உளவுத்துறை அதிகாரிகள் தவறாமல் ஆஜராகி விடுவார்கள்'' என்கிறார் ''காவிரி குடும்பம்'' முயற்சியுடன் அந்தக் காலகட்டத்தில் தொடர்பிலிருந்த கல்வியாளர் ஒருவர்.

தற்போதய பிரச்சனையின் முக்கியமான இரண்டு விஷயங்கள் இவைதான் ...ஒன்று, காவிரியின் முக்கியமான நான்கு அணைகளில் தண்ணீர் நிரம்பி வழிந்தால் மட்டுமே, உபரி நீரை தமிழகத்துக்கு திறந்து விடுவோம் என்ற கர்நாடகத்தின் நிலைப்பாடு. ''கர்நாடகம் தாங்கள் எந்தவோர் ஒப்பந்தத்தையும் ஏற்றுக் கொள்ள மாட்டோம், தமிழகத்துக்கு சொட்டு தண்ணீர் கூட திறந்து விட மாட்டோம், உபரி நீரை மட்டுமே தருவோம் என்பது ஏற்க முடியாதது. முற்றிலும் அநீதியானது. ஏதாவது ஒரு ஒப்பந்தத்தின் மூலம் தமிழகத்துக்கு தண்ணீர் தருவதற்கு கர்நாடகம் இறங்கி வந்திருந்தால் இந்த நிலைமை தோன்றியிருக்காது'' என்கிறார் ஜனகராஜன்.

இரண்டாவது உலகம் முழுவதிலும், இந்தியாவிலும் நீரின் தேவை அதிகரித்திருப்பதும், அதே சமயம் நீராதரங்கள் பல்கிப் பெருகாமல் அப்படியே இருப்பதும். ''பதினைந்து ஆண்டுகளுக்கு முன்பு வரையிலும் நீரின் தேவையில் 80 - 85 சதவிகிதம் விவசாயத்துக்கு இருந்தது. ஆனால் தற்போது தொழிற்சாலைகளுக்கு தேவைப்படும் நீரின் அளவு மிகவும் அதிகரித்துள்ளது. நாளுக்கு நாள் இந்த தேவை அதிகரித்துக் கொண்டுள்ளது. 2011 மக்கள் தொகை கணக்கெடுப்பின் படி தமிழகத்தில் 50 சதவிகித மக்கள் நகர்ப்புறங்களில் வாழ்கிறார்கள். இவர்களது குடிநீர் தேவையும் அதிகரித்துக் கொண்டிருக்கிறது'' என்று கூறும் ஜனகராஜன் அடுத்துச் சொல்லுவதுதான் மிகவும் முக்கியமானது.

''ஆகவே இவற்றை மனதில் கொண்டுதான் இரண்டு மாநிலங்களும் காவிரி பிரச்சனையில் செயற்பட வேண்டும். அதிகளவில் நீரை சேமிக்கும் விவசாயத்துக்கும், நீர்ப்பாசன முறைமைகளுக்கும் நாம் உடனே மாறியாக வேண்டும். கிடைக்கிற தண்ணீரை நாம் எப்படி பிரித்துக் கொள்ளுகிறோம் என்பது ஒரு பக்கம். மற்றோர் பக்கம் நாம் எந்தளவுக்கு நீரை சேமிக்கப் போகிறோம் என்பது. தண்ணீரை பிரித்துக் கொள்ளுவதை விட எதிர்காலத்தில் பூதாகரமான பிரச்சனையாக உருவெடுக்கப் போவது நம்முடைய ஆறுகளை நாம் எப்படி மாசுபடாமல் காப்பாற்றிக் கொள்ளப் போகிறோம் என்பது. காவிரியின் அனைத்து பெரிய துணை ஆறுகளான நொய்யல், பவானி, காலிங்கராயன் கால்வாய், அமரவாதி மற்றும் கொடகனாறு ஆகியவை இன்று மிகப் பெரியளவில் மாசடைந்து கிடக்கின்றன. காவிரி மாசடைவது இதனால் மேலும் தீவிரமான விஷயமாக மாறிக் கொண்டிருக்கிறது'' என்று எச்சரிக்கிறார் ஜனகராஜன்.

1974 ல் தமிழகத்தின் அனைத்து நீராதரங்களையும், கால்வாய்களையும், தூர் வாறுவதற்காகவும், புனரமைப்பதற்காகவும், 1,000 கோடி ரூபாயிலான திட்டம் மாநில அரசால் தீட்டப் பட்டது. ஆனால் இன்றளவும் இந்த திட்டம் செயற்படுத்தப் படவில்லை. சோழர் காலத்தில் கட்டப்பட்ட கால்வாய்களை தூர் வாரினாலே குறைந்தது 40 சதவிகித நீரை சேமிக்கலாம் என்கின்றனர் நீரியியல் வல்லுனர்கள்.

ஆண்டுக்கு ஆண்டு இனிமேல் நீரின் தேவை அதிகரிக்கத் தான் போகிறது. அரசியல் காரணங்களினால் அண்டை மாநிலங்கள் கடை நிலை மாநிலமான தமிழகத்துக்கு தண்ணீர் தருவது சிக்கலாகிக் கொண்டே தான் வருகிறது. சட்டப்படியான உரிமைகளுக்காக போராடுவது ஒரு புறம் என்றால், மறுபுறம் நீராதரங்களை தூய்மையாக்குவது, மாசடையாமல் ஆறுகளைப் பராமரிப்பது, அதிகளவில் நீரை சேமிக்கும் விவசாய வழிமுறைகளுக்கு மாறுவது போன்றவைதான் தமிழகத்தின் நீண்ட கால நலன்களுக்கு உகந்தவையாகும். இந்த இடத்தில்தான் ''காவிரி குடும்பம்'' போன்ற முயற்சிகளின் தேவை அதிகமாக இருக்கிறது.

ஆனால் துரதிர்ஷ்டவசமாக காவிரி பிரச்சனையில் அரசியல் குளிர் காய்ந்து கொண்டிருக்கும் ஆட்சியாளர்கள் ''காவிரி குடும்பம்'' போன்ற முயற்சிகளை ஆதரிக்க மாட்டார்கள். ஆனால் சிவில் சமூகத்திலிருந்து வரும் அழுத்தம் இதுபோன்ற முயற்சிகளுக்கு வலிமை சேர்க்கலாம். சமீபத்திய உச்ச நீதிமன்றத்தின் உத்திரவு மற்றும் கர்நாடகத்தில் நிகழ்ந்த வன்முறைக்குப் பின்னர் ''தி ஹிந்து'', ''எக்ஸ்பிரஸ்'' உள்ளிட்ட முன்னணி ஆங்கில நாளிதழ்களில் ''காவிரி குடும்பம்'' போன்ற முயற்சிகள் ஊக்குவிக்கப் பட வேண்டும் என்று தலையங்கங்கள் எழுதப் பட்டிருப்பது, பிரச்சனைக்கு மாற்று வழியில் தீர்வு காண யோசிப்பதன் அவசியத்தை ஆட்சியாளர்களுக்கும், சிவில் சமூகத்திற்கும் ஏற்படுத்திக் கொண்டிருக்கிறது.

''காவிரி குடும்பம்'' மீண்டும் தழைப்பது தமிழகம் மட்டுமல்ல, கர்நாடகமும் செழிக்கவும், வளங்கொழிக்கவும் கண்டிப்பாக உதவும் தான். செவி மடுப்பார்களா நம் ஆட்சியாளர்கள்?

English summary
An inter-state collective of farmer groups name of "Cauvery Family" in the Tamilnadu and Karnataka should trying to solve the dispute.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X