For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

காவிரி மேலாண்மை வாரியம் அமைந்துவிடக் கூடாது என்ற "கெடுமதி" கொண்டவரா கருணாநிதி- ஜெ. தாக்கு

By Mayura Akilan
Google Oneindia Tamil News

சென்னை: காவிரி மேலாண்மை வாரியம் அமைந்து விடக்கூடாது என்ற கெடுமதியில் கருணாநிதி உள்ளாரோ என்று எண்ணத் தோன்றுகிறது என முதல்வர் ஜெயலலிதா கடுமையாக தாக்கியுள்ளார்.

இதுகுறித்து இன்று அவர் விடுத்துள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது:

''காவேரி நதிநீர் குறித்த வழக்கினை சத்தம் போடாமல் திரும்பப் பெற்ற தி.மு.க. தலைவர் கருணாநிதி; முல்லைப் பெரியாறு பிரச்னையில் அப்போதைய மத்திய அரசை கண்டிக்க அஞ்சிய தி.மு.க. தலைவர் கருணாநிதி; மத்தியிலும், மாநிலத்திலும் ஆட்சியில் இருந்த போது, காவேரி நடுவர் மன்ற இறுதித் தீர்ப்பினை மத்திய அரசிதழில் வெளியிட ஒரு துரும்பைக் கூட கிள்ளிப் போடாத கருணாநிதி; ஒகேனக்கல் கூட்டுக் குடிநீர்த் திட்டத்தை செயல்படுத்த கர்நாடக தேர்தலைக் காரணம் காட்டி முடக்கி வைத்த கருணாநிதி; இன்று திடீரென்று ஞானோதயம் பிறந்தது போல் காவேரி மேலாண்மை வாரியம் அமைப்பது பற்றி உடனடியாக அனைத்துக் கட்சிகளின் கூட்டத்தைக் கூட்டி கருத்துகளைக் கேட்க வேண்டும் என்று அறிக்கை விட்டிருப்பது நகைப்புக்குரியதாக உள்ளது.

காவேரி நடுவர் மன்றத்தின் இறுதித் தீர்ப்பு 5.2.2007 அன்று வெளியிடப்பட்டது. அப்போது மத்தியிலும், மாநிலத்திலும் ஆட்சி அதிகாரத்தில் இருந்தவர் கருணாநிதி. காவேரி நடுவர் மன்ற இறுதித் தீர்ப்பினை மத்திய அரசிதழில் வெளியிட நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று நான் அப்போதே தொடர்ந்து வலியுறுத்தினேன்.

2011ஆம் ஆண்டு ஆட்சியை விட்டுச் செல்லும் வரை காவேரி நடுவர் மன்ற இறுதித் தீர்ப்பினை மத்திய அரசிதழில் வெளியிட கருணாநிதி எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை. ஆனால் தற்போது, காவேரி மேலாண்மை வாரியம் அமைப்பது பற்றி அனைத்துக் கட்சிகளின் கருத்துக்களை கேட்க வேண்டும் என்று கூறியிருப்பது, இது போன்ற வாரியம் அமைவதை விரும்பவில்லையோ என்று தான் எண்ணத் தோன்றுகிறது.

அரசிதழில் தீர்ப்பு

அரசிதழில் தீர்ப்பு

2011ஆம் ஆண்டு நான் மூன்றாவது முறையாக முதலமைச்சராகப் பொறுப்பேற்ற பிறகுதான், காவேரி நடுவர் மன்ற இறுதித் தீர்ப்பினை மத்திய அரசிதழில் வெளியிட ஆக்கப்பூர்வமான நடவடிக்கைகளை எடுத்தேன். உச்ச நீதிமன்றம் மூலம் எனது தலைமையிலான தமிழக அரசு போராடியதன் விளைவாக, காவேரி நடுவர் மன்ற இறுதித் தீர்ப்பு மத்திய அரசிதழில் வெளியிடப்பட்டு விட்டது.

முறையிடாத கருணாநிதி

முறையிடாத கருணாநிதி

இதனைத் தொடர்ந்து காவேரி மேலாண்மை வாரியம் அமைத்திட வேண்டும் என்று தி.மு.க. அங்கம் வகித்த மத்திய காங்கிரஸ் கூட்டணி அரசுக்கு நான் கடிதமும் எழுதினேன்; உச்ச நீதிமன்றத்தில் வழக்கும் தொடுத்தேன். ஆனால், அவர்கள் ஆட்சியில் இருந்த வரையில் நடவடிக்கை எடுக்கவில்லை. அப்பொழுதெல்லாம் அது குறித்து வாய் திறக்காத கருணாநிதி; மக்கள் செல்வாக்கை இழந்தவுடன் திடீரென்று தமிழர்களின் நலனில் அக்கறை இருப்பது போல் காட்டிக் கொள்வது, மக்களை ஏமாற்றும் செயல். ஆனால், தமிழக மக்கள் இனியும் ஏமாற தயாராக இல்லை.

அனைத்துக்கட்சி கூட்டம் தேவையா?

அனைத்துக்கட்சி கூட்டம் தேவையா?

காவேரி மேலாண்மை வாரியம் அமைக்கப்பட வேண்டும் என்பதில் தமிழகத்தில் உள்ள எந்த அரசியல் கட்சிக்கும் மாறுபட்ட கருத்து கிடையாது. அனைத்துக் கட்சிகளுமே காவேரி மேலாண்மை வாரியம் அமைக்கப்பட வேண்டும் என்பதில் உறுதியாக உள்ளன. எனவே, இது குறித்து அனைத்துக் கட்சிகளின் கருத்துக்களைக் கேட்க வேண்டும் என்பது அர்த்தமற்ற செயல். மத்திய அமைச்சர் அனந்தகுமார் கர்நாடக மாநிலத்தினைச் சேர்ந்தவர் என்பதால், காவேரி மேலாண்மை வாரியம் அமைப்பது குறித்து மாறுபட்ட கருத்தினை அவர் தெரிவித்து இருக்கிறார். ஆனால், இது குறித்து தமிழகத்திற்கு எதிரான எந்தக் கருத்தையும், பிரதமரோ அல்லது இந்தத் துறை சம்பந்தப்பட்ட மத்திய அமைச்சரோ தெரிவிக்கவில்லை

பிரதமர் உறுதி

பிரதமர் உறுதி

மத்தியில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டதைத் தொடர்ந்து, காவேரி மேலாண்மை வாரியம் அமைக்கப்பட வேண்டும் என்ற கோரிக்கை உள்பட ஏராளமான கோரிக்கைகளை வலியுறுத்தி பிரதமரிடம் நான் 3.6.2014 அன்று கோரிக்கை மனு ஒன்றினை அளித்துள்ளேன். பிரதமரும், அவற்றை கனிவுடன் கேட்டு, ஆவன செய்வதாக உறுதி அளித்துள்ளார். தமிழக அரசுடன் நல்லுறைவை பேணுவதையே பிரதமர் விரும்புகிறார். தமிழகத்திற்கு உதவும் எண்ணத்தில் பிரதமர் இருக்கிறார்.

கருணாநிதியின் அவசரம்

கருணாநிதியின் அவசரம்

காவேரி மேலாண்மை வாரியம் அமைப்பது என்பது காவேரி நடுவர் மன்றத் தீர்ப்பின் அம்சமாகும். இதைச் செயல்படுத்த மத்திய அரசிற்கு சிறிய கால அவகாசம் தேவைப்படும். இந்த விஷயத்தில் நடுநிலையுடன் பிரதமர் செயல்படுவார் என்ற நம்பிக்கை எங்களுக்கு, தமிழக அரசுக்கு இருக்கிறது. எனவே, மத்திய அரசுக்கு உரிய கால அவகாசம் வழங்கப்பட வேண்டியது நியாயமானது தான். பாரதப் பிரதமரை நான் சந்தித்து இது குறித்து எடுத்துரைத்த பின், முழுமையாக ஒரு வாரம் கூட நிறைவடையாத நிலையில் கருணாநிதி அதற்குள் ஏன் இவ்வளவு அவசரப்படுகிறார்?

தும்பை விட்டு வாலைபிடிப்பதா?

தும்பை விட்டு வாலைபிடிப்பதா?

மத்தியிலும், மாநிலத்திலும் ஆட்சியில் இருந்த போது, காவேரி நடுவர் மன்ற இறுதித் தீர்ப்பினை மத்திய அரசிதழில் வெளியிட்டு, அதன் தொடர்ச்சியாக காவேரி மேலாண்மை வாரியத்தை அமைக்க எவ்வித நடவடிக்கையும் எடுக்காத கருணாநிதி; ஆட்சி அதிகாரம் பறிபோன பிறகு; நடந்து முடிந்த மக்களவைத் தேர்தலில் மக்கள் விரட்டி அடித்து மூலையில் உட்கார வைத்த பிறகு, காவேரி மேலாண்மை வாரியம் அமைப்பது பற்றி அனைத்துக் கட்சிகளின் கருத்துக்களை கேட்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று எனக்கு அறிவுரை வழங்குவது, தும்பை விட்டு வாலைப் பிடிப்பதற்குச் சமம்.

கெடுமதி கருணாநிதி

கெடுமதி கருணாநிதி

காவேரி மேலாண்மை வாரியம் அமைப்பது தொடர்பாக தமிழ்நாட்டில் உள்ள அனைத்துக் கட்சிகளும் ஒரே கருத்தினைக் கொண்டுள்ளதால், அனைத்துக் கட்சிகளின் கருத்துக்களை கேட்க வேண்டிய அவசியம் இல்லை. ஒரு வேளை தி.மு.க. தலைவர் கருணாநிதிக்கு காவேரி மேலாண்மை வாரியம் அமைந்துவிடக் கூடாது என்ற கெடுமதியில் தான் இவ்வாறு சொல்கிறாரோ என்று தான் எண்ணத் தோன்றுகிறது. 'நல்லது செய்தல் ஆற்றீராயினும் அல்லது செய்தல் ஓம்புமின்' என்ற வரிகளை கருணாநிதிக்கு நினைவுபடுத்த விரும்புகிறேன்'' எனக் கூறியுள்ளார்

English summary
TamilNadu Chief Minister Jayalalitha attacked Karunanidhi’s statement on all party meeting conducting for Cauvery management board.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X