சென்னை செயின் பறிப்பு சம்பவங்கள்- மூளையாக செயல்பட்ட ஜாபர், போலீஸ் என்கவுண்ட்டரில் சுட்டுக் கொலை!
சென்னை: சென்னை அடையாறு பகுதிகளில் நேற்று நடைபெற்ற தொடர் செயின் பறிப்பு சம்பவங்களின் மூளையாக செயல்பட்ட கொள்ளையன் ஜாபர் குலாம் ஹூசைன், போலீஸ் என்கவுண்ட்டரில் சுட்டுக் கொல்லப்பட்டார். சென்னை தரமணி ரயில் நிலையம் அருகே போலீஸ் பிடியில் இருந்து தப்பிச் செல்ல முயன்ற போது திருவான்மியூர் போலீசார் துப்பாக்கிச் சூடு நடத்தியதில் ஜாபர் உயிரிழந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஜாபரை என்கவுண்ட்டர் செய்த இன்ஸ்பெக்டர் புகாரி, ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் திருவேங்கடம் என்பவரையும் என்கவுண்ட்டர் செய்தவர். தற்போது சுட்டுக்கொல்லப்பட்ட ஜாபர் மீது 50-க்கும் மேற்பட்ட கொள்ளை வழக்குகள் நிலுவையில் உள்ளன.

சென்னையில் நேற்று 7 இடங்களில் அடுத்தடுத்து செயின் பறிப்பு சம்பவங்கள் நடைபெற்றன. இந்த கொள்ளை சம்பவங்களில் ஈடுபட்ட வடமாநில கொள்ளையர்கள் விமானங்கள் மூலம் தப்பிச் செல்ல முயன்றனர்.
ஆனால் சென்னை போலீசார் அதிவேகமாக செயல்பட்டு விமான நிலையத்துக்குள் சென்று வடமாநில கொள்ளையர்களை தட்டி தூக்கினர். இதேபோல ரயில் மூலம் தப்பிச் செல்ல மற்றொரு கொள்ளையனை ஆந்திரா அருகே ஓடும் ரயிலில் மடக்கியும் போலீசார் கைது செய்தனர்.
சென்னையில் நேற்று நிகழ்ந்த செயின் பறிப்பு சம்பவங்கள் அனைத்திலும் ஒரே நபர்தான் இரு சக்கரவாகனத்தில் அமர்ந்து பெண்களிடம் செயினை பறிப்பது தெரியவந்தது. செயின் பறிப்பு சம்பவங்களில் கில்லாடியான ஜாபர்தான் அந்த நபர் என்பதையும் போலீசார் உறுதி செய்தனர். மகாராஷ்டிரா மாநில போலீசாராலும் தேடப்பட்ட ஜாபர் மீது 50-க்கும் மேற்பட்ட வழக்குகள் நிலுவையில் உள்ளன.
இதனையடுத்து ஜாபரை சுற்றி வளைத்த போலீசார் கைது செய்தனர். ஜாபரை கைது செய்த போலீசார் பதுக்கி வைத்த நகைகளை மீட்பதற்காக அழைத்துச் சென்றனர். அப்போது தரமணி ரயில் நிலையம் அருகே, போலீஸ் பிடியில் இருந்து ஜாபர் தப்ப முயன்றார். இதனால் திருவான்மியூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் புகாரி, ஜாபர் மீது துப்பாக்கிச் சூடு நடத்தினார். இதில் ஜாபர் படுகாயமடைந்த நிலையில் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். ஆனால் சென்னை ராயப்பேட்டை மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் ஜாபர் உயிரிழந்தார்.
சென்னையில் அண்மையில் ரவுடிகள் திருவேங்கடம், காக்கா தோப்பு பாலாஜி, சீசிங் ராஜா ஆகியோர் என்கவுண்ட்டரில் சுட்டுக் கொல்லப்பட்டிருந்தனர். இவர்களில் ஆம்ஸ்ட்ராங் கொலையில் தொடர்புடைய ரவுடி திருவேங்கடத்தை என்கவுண்ட்டர் செய்த இன்ஸ்பெக்டர் புகாரிதான், தற்போது ஜாபர் மீதும் துப்பாக்கிச் சூடு நடத்தியவர் என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications