For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

மதுரையில் சூறாவளி காற்றுடன் மழை: பஸ் மீது மரம் விழுந்து குழந்தை பலி

By Mayura Akilan
Google Oneindia Tamil News

மதுரை: மதுரையில் சூறாவளிக்காற்றுடன் பெய்த பலத்த மழையால் பேருந்து மீது மரம் முறிந்து விழுந்தது. இதில் 2 வயது ஆண்குழந்தை உடல் நசுங்கி உயிரிழந்தது

அக்னி நட்சத்திரம் முடிந்த பின்னரும் தமிழகம் முழுவதும் வெயில் கொளுத்தி வருகிறது. கடந்த இரு தினங்களாக வெயிலின் தாக்கம் கொடூரமாக இருந்தது. இந்த வெயிலுக்கு இதமளிக்கும் வகையில் மதுரை சுற்றுவட்டாரப்பகுதிகளில் நேற்று மாலை மழை பெய்தது. நேரம் செல்ல செல்ல திடீரென பலத்த சூறாவளி காற்றும் வீசியது.

Child dies as tree falls on bus

சூறாவளி காற்றுடன் மழை பெய்ததில் பல பகுதிகளில் மரங்கள் வேரோடு முறிந்து விழுந்தன. சாலை ஓரத்தில் உள்ள மின் கம்பங்களும் ஆங்காங்கே சரிந்து விழுந்தன. இதனால் மதுரை நகரில் பல பகுதிகள் இருளில் மூழ்கியது.

பறந்த மேற்கூரைகள்

மதுரை, திருமங்கலம் செல்லும் ரிங் ரோட்டில் பரம்புபட்டி பகுதியில் ஐந்தாம் டோல்கேட் அமைக்கப்பட்டுள்ளது. சூறைக்காற்றுடன் பெய்த பலத்த மழையில் நேற்று டோல்கேட் பகுதியில் உள்ள மேற்கூரைகள் காற்றில் பறந்தன. அப்போது அங்கு 9 பேர் பணியில் இருந்தனர். அதில் கேசியர் ஆறுமுகம் என்பவரது கையில் மேற் கூரை விழுந்ததில் காயம் ஏற்பட்டது. அவர் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார்.

இருளில் மூழ்கிய மேலூர்

மேலூர் பகுதியில் சூறாவளி காற்று பல பகுதிகளை சூறையாடி விட்டது. மேலூர் நகர் முழுவதும் ஏராளமான மின் கம்பங்களும், மரங்களும் சாய்ந்து விழுந்தன. பலரது வீடுகளில் கூரைகள் காற்றில் பறந்தன.

சாய்ந்த மரங்கள்

மேலூர் தாலுகா அலுவலகத்தில் இருந்த பழமையான 4 மரங்கள் சாய்ந்து விழுந்தன. ஒன்றிய அலுவலகம் அருகே ரோட்டில் இருந்த 2 புளியமரங்கள் சாய்ந்தன. அங்கிருந்த மின் கம்பங்களும் வயர்களுடன் சாய்ந்தன. இதனால் அங்கு போக்குவரத்து பாதிக்கப்பட்டது. மின் கம்பங்கள் சாய்ந்தபோது மின்சாரம் பாயாமல் இருந்ததால் சேதம் ஏற்படவில்லை.

சாய்ந்த ராட்டினம்

மேலூர் பஸ் நிலையம் அருகே உள்ள காஞ்சி வனம் மந்தை திடலில் ராட்சத ராட்டினத்துடன் பொருட்காட்சி அமைக்கப்பட்டிருந்தது. திடீரென வீசிய சூறாவளிக் காற்றில் சுமார் 100 அடி உயரமுள்ள ராட்சத ராட்டினம் சாய்ந்து அருகில் உள்ள கோவில் சுவர் மீது விழுந்தது. அங்கு எப்போதும் ஆட்கள் இருப்பது வழக்கம். ராட்சத ராட்டினம் சாய்ந்து விழுந்தபோது உஷாரான பொதுமக்கள் அங்கிருந்து தப்பி ஓடியதால் தப்பினர். சிலருக்கு மட்டும் லேசான காயங்கள் ஏற்பட்டன.

பஸ் மீது விழுந்த மரம்

மதுரை, மேலூரை போல திருமங்கலம் பகுதியிலும் சூறாவளி காற்றுடன் பலத்த மழை பெய்தது. ஆலம்பட்டி பகுதியில் சூறாவளி காற்றில் ரோட்டோரம் இருந்த மரம் சாய்ந்து மதுரையில் இருந்து தென்காசிக்கு சென்று கொண்டிருந்த அரசு பஸ் மீது விழுந்தது.

குழந்தை மரணம்

இதில் பஸ்சின் முன்பகுதி நொறுங்கி சேதமடைந்தது. மரம் முறிந்து விழுந்ததில் அந்த பஸ்சில் பயணம் செய்த சங்கிலிராஜ்-ஜெயா தம்பதியரின் 2 வயது ஆண் குழந்தை அஸ்வின் பலியானார். சங்கிலிராஜ் திருப்பூரில் பணியாற்றி வருகிறார். ஜெயா ராஜபாளையம் பட்டாலியன் பிரிவில் போலீசாக பணியாற்றி வருகிறார். மேலும் 15-க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்தனர். பஸ்சின் இடிபாடுகளில் சிக்கியவர்களை கிராமத்தினர் மீட்டு சிகிச்சைக்காக திருமங்கலம் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர்.

நசுங்கிய மோட்டார்சைக்கிள்

இதற்கிடையே இருசக்கர வாகனத்தில் வந்த ஆலம் பட்டியை சேர்ந்த தங்கமுடி வந்து கொண்டு இருந்தபோது சூறாவளி காற்றில் மரம் முறிந்து விழுந்ததில் மரத்தின் அடியில் மாட்டி அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார். இவருடைய இருசக்கர வாகனம் அப்பளம் போல் நொறுங்கியது.

தீவிர சிகிச்சை

திருமங்கலம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டவர்கள் மேல் சிகிச்சைக்காக மதுரை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். இவ்விபத்து குறித்து திருமங்கலம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

English summary
A one-and-a-half-year-old child died and six others sustained injuries after a huge tree fell on the bus in which they were travelling, following heavy rains in Tirumangalam near here on Sunday evening.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X