For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

பாஜக, காங். இரண்டுமே குதிரையேறி குழியில் தள்ளும் கட்சிகள்... ரஜினிக்கு இது தெரியாததா என்ன?

By Shankar
Google Oneindia Tamil News

மூன்றாண்டுகளுக்கு முன்பு பிரதமர் வேட்பாளருக்குப் போட்டியிட்ட போது நரேந்திர மோடி வேட்டி - சட்டை காஸ்ட்யூமில் சூப்பர் ஸ்டார் ரஜினியைச் சந்திக்க அவரது வீடு தேடிப் போனார். பக்கத்து தெருவில்தான் அன்றைய முதல்வர் ஜெயலலிதா வீடு. இத்தனைக்கும் அப்போது ஜெயலலிதா வீட்டில்தான் இருந்தார். ரஜினியைப் பார்த்தவர், ஜெயலலிதாவைக் கண்டு கொள்ளாமல் திரும்பினார்.

இது மரியாதை நிமித்த சந்திப்பு... ரஜினி அரசியலுக்கு வந்தால் நன்றாக இருக்கும் என்று கூறிவிட்டுக் கிளம்பினார் (அதற்கு முன் அத்வானியும் இப்படி வந்து போனார்).

Cong., BJP's endless efforts to pull Rajinikanth

அதன் பிறகு முக ஸ்டாலின், வைகோ, திருமாவளவன் என வரிசையாக- கருணாநிதி, ஜெயலலிதா தவிர - தலைவர்கள் ரஜினியைச் சந்தித்து அந்த புகைப்படங்கள் மீடியாவில் ஹைலைட்டாகும்படி பார்த்துக் கொண்டார்கள். ஆனால் எல்லோருமே சொன்னது 'மரியாதை நிமித்த சந்திப்பு'. அதாவது 'தேர்தல் நேரத்து மரியாதை நிமித்த அரசியல் சந்திப்பு' என்று நாம் அர்த்தப்படுத்திக் கொள்ள வேண்டும்.

சட்டமன்றத் தேர்தல், ஆர்கே நகர் இடைத் தேர்தல், அட நடிகர் சங்கத் தேர்தல், தயாரிப்பாளர் சங்கத் தேர்தல் என அத்தனை தேர்தல்களின்போதும் ரஜினி தேவைப்படுகிறார் சம்பந்தப்பட்ட வேட்பாளர்களுக்கு. இவர்கள் அனைவருமே, அவரைச் சந்தித்து விட்டு வந்ததும், ரஜினி அரசியலுக்கு வரவேண்டும்.. வந்தால் நன்றாக இருக்கும். ஆனால் அது அவர் விருப்பம், என பேட்டி கொடுத்துவிட்டுப் போவார்கள், நேற்று வந்து பார்த்துப் போன நக்மா வரை.

தமிழக அரசியலில் ரஜினியின் பாதிப்பு கடந்த 24 ஆண்டுகளாகவே தொடர்கிறது. அவர் அரசியலில் இல்லாமல் இருந்தாலும், அவரைச் சுற்றி ஏகப்பட்ட அரசியல்... அரசியல் தலைவர்கள்.

1996-ல் ரஜினி சம்மதித்திருந்தால், அவரையே தமிழக முதல்வராக்க அன்றைய பிரதமர் பிவி நரசிம்மராவ் தயாராக இருந்தார். தமிழகத்தில் காங்கிரஸ் இழந்த மணி மகுடத்தை ரஜினி மூலம் பெற்றுவிடலாம் எனத் திட்டமிட்டார். ஆனால் ரஜினி சம்மதிக்கவில்லை.

காங்கிரஸுடன் கோபம் கொண்டு தமாகா ஆரம்பித்த ஜிகே மூப்பனார், தங்கள் கட்சியின் முதல்வர் வேட்பாளராக ரஜினியை இருக்கச் சொன்னார். அதற்கும் ரஜினி ஒப்புக் கொள்ளவில்லை. தனிக்கட்சி ஆரம்பித்து தேர்தல்களில் போட்டியிட பல தலைவர்கள், ரசிகர்கள் எவ்வளவோ நெருக்கடி கொடுத்தும் ரஜினி அமைதி காக்கிறார்.

இப்போது, முன் எப்போதும் இல்லாத அளவுக்கு, ரஜினியைச் சுற்றி அரசியல் நகர்வுகள். தமிழகத்துக்கும் தமிழ் கலாச்சாரத்துக்கும் என்றுமே அந்நியமான பாஜக, எப்படியாவது தமிழ் நாட்டில் காலூன்றப் பார்க்கிறது. அதற்கு என்ன விலையும் கொடுக்கத் தயார். எதையும் செய்யத் தயார். அதை தமிழகம் கண் கூடாகப் பார்த்து வருகிறது.

இன்றைக்கு அந்தக் கட்சியின் தமிழக தலைமை மற்றும் நிர்வாகத்தை ஒரு கோமாளிக்கூட்டத்தைப் போலத்தான் மக்கள் பார்க்கிறார்கள். எந்த வகையிலும் மக்கள் செல்வாக்கைப் பெற முடியாத தலைவர்கள் இவர்கள். இவர்களை வைத்துக் கொண்டு தமிழகத்தில் ஒரு வார்டைக் கூட ஜெயிக்க முடியாது என்பது மோடிக்குத் தெரியாதா? எனவேதான் மக்கள் செல்வாக்கு மிகுந்த ரஜினிகாந்த்தைத் தலைவராக்கத் துடிக்கிறார்கள் அமித் ஷாவும் மோடியும். 'ஜனாதிபதி ஆகணுமா.. முதல்வர் பதவி வேணுமா... அட பிரதமர் பதவியைத் தவிர என்ன வேணும்னாலும் கேளுங்க... தர்றோம்' இதுதான் இப்போதைய பாஜக டீல் என்கிறது அரசியல் வட்டாரம்.

ஆனால் ரஜினிக்குத் தெரியும்... காங்கிரஸ், பாஜக இரு கட்சிகளுமே தமிழக மக்களை ஒட்டுண்ணியாக உறிஞ்சிப் பிழைக்கப் பார்ப்பவை என்பது. அவரால் இத்தனை கடுமையாக இவர்களை விமர்சிக்க முடியாது. அவர் இயல்பு அது. ஆனால் நிதர்சனம் புரிந்தவர்.

அதனாலேயே 90 களில் காங்கிரசுக்கு முட்டுக் கொடுக்க மறுத்தார். அந்தக் காரணங்கள் இன்றும் உயிர்ப்போடு, முன்பை விட மோசமாக உள்ளதால் பாஜகவை ஆதரிக்க மறுக்கிறார். அவர்கள் ஆயிரம் விருதுகள், பெருமைகளை ஓடி வந்து அளித்தாலும் புன்னகையுடன் கடந்து செல்கிறார். தன்னை எந்தத் தலைவர் வந்து சந்தித்தாலும் கண்டுகொள்ளாமல் கடந்து போகும் ரஜினி, பாஜக தலைவர்கள் யாராவது வந்து பார்த்துவிட்டு பேட்டி அளித்த அடுத்த நாள், தான் எந்தக் கட்சிக்கும் ஆதரவாக நடந்து கொள்ள மாட்டேன் என விளக்கம் அளிக்கிறார்.

ரஜினி தனியாகக் கட்சி ஆரம்பித்து மக்களைச் சந்தித்தால் மட்டுமே அவருக்கு ஆதரவு அளிக்கலாமா வேண்டாமா என மக்கள் யோசிப்பார்கள். காங்கிரஸ், பாஜக எந்தக் கட்சியின் சார்பில் அவர் வந்தாலும் மக்கள் ஆதரவு என்பது மைனஸில் போய் நிற்கும்.

இதையெல்லாம் புரிந்துதான் பல தருணங்களில் தெளிவாக, 'அரசியலுக்கு வந்தால் தனிக் கட்சிதான். யாருடைய தயவிலும் வரமாட்டேன்' என ரஜினி கூறி வந்துள்ளார்.

ரஜினி சொல்லும் தனிக்கட்சி என்பது, அவரது கோடிக்கணக்கான ரசிகர்களின் கனவு.. ஆசையும் கூட. ஒருவேளை அது நிறைவேறாவிட்டாலும் 'தங்கள் தலைவர் நிம்மதியாக நடித்துக் கொண்டு, தங்களுக்கு தரிசனம் கொடுத்தால் போதும்' என்ற சிந்தனை உடையவர்கள் அவர்கள்.

இது புரிந்தும் புரியாத மாதிரி அரசியல் பிரபலங்கள் மரியாதை நிமித்தமாக ரஜினியை சந்தித்து அரசியல் பண்ணிக்கொண்டிருக்கிறார்கள். காரணம், நடிப்பில் அவர்கள் ரஜினியையே மிஞ்சக் கூடிய வித்தகர்கள்.. கிடைத்தவரை லாபம் என திருப்திகொள்ளும் அரசியல் வியாபாரிகள்!

English summary
Either Congress or BJP's continuously tryig to pull Rajinikanth to their parties for the past quarter century.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X