For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

இருள் அகன்று ஒளி பிறக்கட்டும்.. தமிழக மக்கள் வளமும், நலமும் பெறட்டும்.. திருநாவுக்கரசர்

Google Oneindia Tamil News

சென்னை: இந்திய நாட்டில் இன்று இருள் அகன்று ஒளி பிறக்கட்டும் என்றும் தமிழக மக்கள் வாழ்வில் வளமும் நலமும் பெற்று வாழ வேண்டும் என்றும் காங்கிரஸ் கட்சியின் தமிழகத் தலைவர் திருநாவுக்கரசர் தீபாவளி வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார்.

திருநாவுக்கரசர் வெளியிட்டுள்ள தீபாவளி வாழ்த்து செய்தியில் கூறியிருப்பதாவது:

Congress leader Tirunavukkarasar extends Diwali greetings

தீயவன் ஒருவன் அழிவில் மகிழ்வுற்ற மக்கள் கொண்டாடிய கொண்டாட்டமே இன்று தீபாவளியாக கொண்டாடப்பட்டு வருகிறது. மனிதர்களுக்கு எதிராக கொடுமை செய்த அசுரன் என்பதால் அவனை நரகாசுரன் என்று அழைக்கப்பட்டதாக புராணங்கள் கூறுகின்றன. மனித இனத்திற்கு எதிராக கொடுமை செய்த நரகாசுரனை வதம் செய்ததையே மகிழ்ச்சியாக கொண்டாடிய தீபாவளி, இன்றைக்கு மக்கள் பண்டிகையாக விளங்கி வருகிறது. ஜாதி, மதம், இனம், மொழி எல்லைகளைக் கடந்து தீபாவளி பண்டிகையை அனைத்து மக்களும் மிகுந்த மகிழ்ச்சியோடு கொண்டாடி வருகிறார்கள்.

கடந்த 28 மாதங்களுக்கு முன்பு மத்தியில் ஆட்சியில் அமைந்த பாரதிய ஜனதா கட்சி மக்களுக்கு எதிராக பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. ஆட்சி அமைந்தவுடனேயே காங்கிரஸ் ஆட்சிக் காலத்தில் பா.ஜ.க. ஆதரவோடு நிறைவேற்றப்பட்ட நில கையகப்படுத்துதல் சட்டத்திற்கு மாற்றாக அவசர சட்டத்தை ஐந்து முறை பிறப்பித்து விவசாயிகளின் விரோதத்தை சம்பாதித்துக் கொண்டது. காங்கிரஸ் கட்சியின் சார்பாக இளம் தலைவர் ராகுல்காந்தி களத்தில் நின்று விவசாயிகளை திரட்டி தலைநகர் தில்லியில் பேரணி நடத்தி எதிர்ப்புக் காட்டிய பிறகுதான் விவசாய விரோத அவசரச் சட்டம் ரத்து செய்யப்பட்டது.

நாங்கள் ஆட்சிக்கு வந்தால் விவசாயிகளின் விலை பொருளுக்கு டாக்டர் எம்.எஸ். சுவாமிநாதன் குழுவின் பரிந்துரையின்படி இடுபொருள் செலவோடு 50 சதவீதத்தை கூட்டி குறைந்தபட்ச விலை நிர்ணயிக்கப்படும் என்று வாக்குறுதி கொடுத்தது பா.ஜ.க. ஆனால் உச்சநீதிமன்றத்தில் இந்த அடிப்படையில் விலை நிர்ணயம் செய்ய முடியாது என்று மனு தாக்கல் செய்ததும் பா.ஜ.க. தான்.

இதன்மூலம் விவசாயிகளுக்கு கொடுத்த வாக்குறுதியை நிறைவேற்றாமல் ஏமாற்றியதும் பா.ஜ.க. தான்.

கிராமப்புற மக்களின் வறுமையை விரட்டுவதற்காக மத்திய காங்கிரஸ் அரசால் கொண்டு வரப்பட்ட மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை வாய்ப்பு உறுதித் திட்டத்திற்கான நிதியை குறைத்து, திட்டத்தையே முடக்குவதற்கு முயற்சி செய்தது பா.ஜக. அரசு. ஆனால் மக்கள் எதிர்ப்பு கடுமையாக உருவான நிலையில் திட்டத்தை நிறைவேற்றுவதற்கு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டன.

ஆனால் நிதியை முறையாக ஒதுக்காமல் விவசாயத் தொழிலாளர்களுக்கு இத்திட்டத்தின்கீழ் தர வேண்டிய ஊதியத்தை தராமல் காலம் தாழ்த்தி வஞ்சித்து வருகிறது பா.ஜ.க. அரசு.

பாரதிய ஜனதா கட்சி தேர்தல் அறிக்கையில் 2014 முதல் 2019 ஆம் ஆண்டுக்குள் 10 கோடி பேருக்கு வேலை வழங்குவோம் என வாக்குறுதி அளிக்கப்பட்டது.

கடந்த இரண்டு ஆண்டுகளில் நான்கு கோடி பேருக்கு வேலை வாய்ப்பு வழங்கியிருக்க வேண்டும். ஆனால் கடந்த இரண்டாண்டுகளில் ஒரு கோடி பேருக்குக் கூட வேலை வாய்ப்பு வழங்காத பா.ஜ.க. அரசை மக்கள் காலம் வரும்போது தண்டிக்க தயாராகி வருகிறார்கள்.

மத்திய பா.ஜ.க. அரசின் மக்கள் விரோத நடவடிக்கைகளை இப்படிப் பட்டியலிட்டுக் கொண்டே போகலாம். இத்தகைய மக்கள் விரோத ஆட்சியிலிருந்து மக்களை மீட்கும் பணியில் அன்னை சோனியா காந்தி அவர்களும், இளம் தலைவர் ராகுல்காந்தி அவர்களும் களத்தில் நின்று போராடி வெற்றி வாகை சூடுவார்கள் என்பதை தீபாவளித் திருநாளில் உறுதியாகக் கூற விரும்புகிறேன்.

தமிழகத்தில் வாழ்கிற விவசாயிகள் பல்வேறு மனக் கஷ்டங்களை அனுபவித்து வருகிறார்கள். காவிரி பிரச்சினையில் தமிழகம் வஞ்சிக்கப்பட்டு வருகிறது.

காவிரி நடுவர்மன்ற தீர்ப்பை அமல்படுத்தி, காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வேண்டுமென மத்திய அரசை உச்சநீதிமன்றம் ஆணையிட்ட பிறகும் அதை உதாசீனப்படுத்துகிற நரேந்திர மோடி அரசுக்கு தமிழக மக்கள் பாடம் கற்பிக்க தயாராகி விட்டார்கள். தங்களது எதிர்ப்பை தெரிவிக்க காங்கிரஸ் கட்சியின் சார்பில் மாபெரும் உண்ணாவிரத அறப்போராட்டம், அனைத்து விவசாய சங்கங்கள் நடத்திய ரயில் மறியல் போராட்டத்தில் பங்கேற்பு என பல்வேறு முனைகளில் விவசாயிகள் களம் கண்டு வருகின்றனர். தாங்கள் சாகுபடி செய்த கரும்பை ஆலைகளுக்கு வழங்கி மூன்றாண்டுகள் ஆகியும் அதற்குரிய தொகையை வழங்காமல் விவசாயிகள் ஏமாற்றப்பட்டு வருகிறார்கள். நிலுவைத் தொகையை வழங்க மறுக்கும், ஆலை அதிபர்களை வலியுறுத்தி நியாயம் கிடைக்க தமிழக அரசு எந்த நடவடிக்கையும் எடுக்காத நிலையில் தீபாவளி பண்டிகையை விவசாயிகள் கொண்டாட வேண்டிய நிலை இன்றைக்கு ஏற்பட்டிருக்கிறது.

எனவே, இன்று இந்திய நாட்டில் இருள் அகன்று ஒளி பிறக்கட்டும். தீபாவளி பண்டிகை அன்று புத்தாடை அணிந்து, இனிப்பு பலகாரங்கள் உண்டு, பட்டாசுகள் வெடித்து மகிழ்ச்சியோடு கொண்டாடுகிற தமிழக மக்கள் வாழ்வில் வளமும், நலமும் பெறட்டும் என தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி சார்பில் எனது நெஞ்சம் நிறைந்த தீபாவளி நல்வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன் என்று திருநாவுக்கரசர் கூறியுள்ளார்.

English summary
TN Congress committee leader Tirunavukkarasar has extended his greetings to the people ahead of the festive occasion of Diwali.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X