For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

அதிமுக, திமுகவிடம் இருந்து தமிழகம் விடுபடவேண்டும்: ராஜ்நாத்சிங்

By Mayura Akilan
|

விருதுநகர்: தி.மு.க., அண்ணா தி.மு.க., ஆகிய இரு கட்சிகளின் பிடியில் இருந்து தமிழகம் விடுபட வேண்டும். இந்த இரண்டு கட்சிகளுமே ஒருவரையொருவர் பழி வாங்குகின்ற அரசியலைத்தான் நடத்திக் கொண்டு இருக்கின்றார்கள். அவர்களுடைய பிடியில் இருந்து விடுபடாதவரையில், தமிழகம் முன்னேற்றப் பாதையில் செல்ல முடியாது என்று பாஜக தலைவர் ராஜ்நாத்சிங் கூறியுள்ளார்.

பாரதிய ஜனதா கட்சியின் அனைத்து இந்தியத் தலைவர் ராஜ்நாத் சிங், வெள்ளிக்கிழமை மாலை 6.00 மணிக்கு, விருதுநகர் வந்தார். மாரியம்மன் கோவில் திடலில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் வைகோவிற்கு ஆதரவாக வாக்கு சேகரித்து அவர் பேசினார் அப்போது அவர் கூறியதாவது:

தேசிய ஜனநாயகக் கூட்டணியில் மறுமலர்ச்சி தி.மு.கழகம் சேர முன்வந்தபோது, மற்ற அனைவரைக் காட்டிலும் மிக்க மகிழ்ச்சி அடைந்தவன் நான்.

இந்த விருதுநகர், பெருந்தலைவர் காமராஜ் அவர்கள் பிறந்த மண் என்பதை நான் அறிவேன். மேலும் அவர் இந்த நகர்மன்றத்தின் தலைவராகவும் பணி ஆற்றி இருக்கின்றார். அன்று இந்த நாட்டின் மிகப்பெரிய அரசியல் கட்சியின் தலைவராக அவர் உயர்ந்த பொறுப்பிற்கு வந்தார். அந்தப் பெருமகன் இன்று நம்மிடையே இல்லை. இன்று இந்த நாட்டின் மிகப்பெரிய அரசியல் கட்சியான பாரதிய ஜனதா கட்சியின் தலைவர் என்ற முறையில், நான் தலைவர் காமராஜ் அவர்களுக்கு என்னுடைய புகழ் அஞ்சலியைச் செலுத்துகிறேன்.

தமிழகம் விடுபடவேண்டும்

இந்தத் தமிழகம், தி.மு.க., அண்ணா தி.மு.க., ஆகிய இரு கட்சிகளின் பிடியில் இருந்து விடுபட வேண்டும் என்பதற்காக உங்களைச் சந்திக்க வந்து இருக்கின்றேன். ஏனெனில் இந்த இரண்டு கட்சிகளுமே ஒருவரையொருவர் பழி வாங்குகின்ற அரசியலைத்தான் நடத்திக் கொண்டு இருக்கின்றார்கள். அவர்களுடைய பிடியில் இருந்து விடுபடாதவரையில், தமிழகம் முன்னேற்றப் பாதையில் செல்ல முடியாது. எனவேதான், பாரதிய ஜனதா கட்சி, தமிழகத்தின் இதர அரசியல் கட்சிகளை எல்லாம் ஒருங்கிணைத்து ஒரு அணியை உருவாக்கி, மாற்று அணியாக உங்கள் முன்னால் நிறுத்தி இருக்கின்றது.

Congress' only contribution to India is corruption and inflation : Rajnath Singh

தமிழகத்திலும் ஆட்சி

நான் உறுதியாகத் தெரிவிக்கின்றேன். இந்தத் தேர்தலுக்குப் பிறகு மத்தியில் தேசிய ஜனநாயகக் கூட்டணியின் ஆட்சி பொறுப்பு ஏற்கப் போவது போல், அடுத்து இந்தத் தமிழகத்தில் எப்போது சட்டமன்றத் தேர்தல் நடந்தாலும், இங்கே உருவாகி இருக்கின்ற தேசிய ஜனநாயகக் கூட்டணி உறுதியாக ஆட்சியைப் பிடிக்கும்; அதை யாராலும் தடுத்த நிறுத்த முடியாது.

இலங்கைத் தமிழர் பிரச்சினைக்குத் தீர்வு

நம்முடைய இலங்கைத் தமிழர்களுக்கு நீதி கிடைத்ததா? தி.மு.க. என்ன செய்தது? அண்ணா தி.மு.க. என்ன செய்தது? இலங்கையின் அரசியல் சட்டத்தில் 13 ஆவது திருத்தத்தை மேற்கொண்டார்கள். ஆனால் இன்றுவரையிலும் அதைச் செயற்படுத்தவில்லை. ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசு வெளியுறவுக் கொள்கையில் தோல்வி அடைந்து விட்டது. அவர்கள் உரிய அழுத்தத்தைக் கொடுத்து இருந்தால், இலங்கைத் தமிழர்களுக்கு நீதி கிடைத்து இருக்கும். ஆனால் அவர்கள் செய்யவில்லை.

நான் உறுதி அளிக்கின்றேன்; தேசிய ஜனநாயகக் கூட்டணி ஆட்சி அமையும்; நரேந்தர்பாய் மோதி பிரதமராகப் பொறுப்பு ஏற்பார்; நாங்கள் உரிய முறையில் நடவடிக்கைகள் மேற்கொண்டு, இலங்கைத் தமிழர்களின் பிரச்சினைக்குத் தீர்வு காண்போம்.

ஐக்கிய பிற்போக்கு கூட்டணி

தி.மு.க., அண்ணா தி.மு.க. அல்லது ஐக்கிய முற்போக்குக் கூட்டணி, இவர்களால் எந்த முன்னேற்றமும் இல்லை. குறிப்பாக, அவர்கள் ஐக்கிய முற்போக்குக் கூட்டணி என்கிறார்கள்; நான் சொல்லுகிறேன் அது ஐக்கிய பிற்போக்குக் கூட்டணி.

மீனவர்கள் நலவாரியம்

மீனவர்களின் பிரச்சினைகளைத் தீர்ப்பதற்கு அவர்கள் என்ன செய்தார்கள்? தமிழக மீனவர்களுக்கு மட்டும் அல்ல; அனைத்து இந்திய மீனவர்களுக்கும் நான் ஒரு உறுதிமொழி அளிக்க விரும்புகிறேன். மத்தியில் நம்முடைய அரசு அமைந்தவுடன், எவ்வளவு விரைவாக முடியுமோ அவ்வளவு விரைவாக தேசிய மீனவர் நல வாரியம் அமைப்போம்.

விலைவாசி உயர்வு

காங்கிர கட்சி எப்போதெல்லாம் ஆட்சிப்பொறுப்பிற்கு வருகின்றதோ, அப்போதெல்லாம் மக்களுக்கு அன்றாடத் தேவையான பொருள்களின் விலைகள் பலமடங்கு உயர்ந்து விடுகின்றன. இந்தியா விடுதலை பெற்றது முதல் இன்றுவரையிலும், சுமார் 50 ஆண்டுகள் வரையிலும் அவர்கள்தான் ஆட்சி நடத்தி இருக்கின்றார்கள். ஆனால், 1998 முதல் 2004 வரையிலும் தேசிய ஜனநாயகக் கூட்டணி ஆட்சி நடந்தபோது விலைவாசி உயரவில்லை என்பதை, இந்தியாவில் மட்டும் அல்ல; உலக அளவில் பொருளாதார மேதைகள் பாராட்டி இருக்கின்றார்கள். அடல் பிகாரி வாஜ்பாய் அவர்களுடைய நிர்வாகத் திறமையின் காரணமாகவே இதைச் சாதித்துக் காட்ட முடிந்தது; விலைவாசியைக் கட்டுக்குள் வைக்க முடிந்தது.

அணுகுண்டு சோதனை

வாஜ்பாய் பிரதமராக இருந்த போது பொக்ரானில் ஐந்து அணு வெடிப்புச் சோதனைகள் நிகழ்த்தப்பட்டன. இனி இந்தியாவும் ஒரு அணு வல்லரசு என்பதை உலகுக்கு எடுத்துக் காட்டினார் வாஜ்பாய்.

உடனே பணக்கார நாடுகள் இந்தியா மீது பொருளாதாரத் தடைகள் விதித்தன. அந்த நிலையிலும்கூட, அடல் பிகாரி வாஜ்பாய் அரசு, அத்தியாவசியப் பொருள்களின் விலைகள் உயராமல் பார்த்துக் கொண்டது. இதைத்தான் நல்லாட்சி, திறமையான ஆட்சி என்று கூற முடியும்.

வீரமும் தன்மானமும்

வீரமும், தன்மானமும்தான் ஒரு நாட்டுக்கு மிகவும் முக்கியம். எல்லையில் சீனம் வாலாட்டுகிறது; அருணாசலப் பிரதேசத்துக்கு உரிமை கொண்டாடுகிறார்கள்; காஷ்மீரின் ஒரு பகுதியைக் கைப்பற்றி வைத்து இருக்கின்றார்கள். பாகிஸ்தான் படைகள் அவ்வப்போது நமது எல்லைக்கு உள்ளே ஊடுருவுகின்றன. நமது வீரர்களைக் கொல்கிறார்கள். அவர்களது தலைகளை வெட்டி எடுத்துக் கொண்டு செல்கிறார்கள். ஆனால், நமது பிரதமரும், சோனியா காந்தி அம்மையாரும் அமைதியாக வேடிக்கை பார்த்துக் கொண்டு இருக்கின்றார்கள்.

காங்கிரஸ் கட்சி

சகோதரர்களே, இந்த நாட்டின் மிகப்பெரிய மதவாதக் கட்சி எது தெரியுமா? காங்கிரஸ் கட்சிதான். அவர்கள்தான் மதத்தின் அடிப்படையில் இந்தியாவை இரண்டாகப் பிரித்தார்கள். பாகிஸ்தானை உருவாக்கினார்கள். இந்தியாவில் அதிகமாக மதக் கலவரங்கள் நடைபெற்றது அவர்களுடைய ஆட்சியில்தான்.

குஜராத் ஆட்சி

நாம் இப்போது நரேந்தர்பாய் மோதியை நமது பிரதமர் வேட்பாளராக அறிவித்து இருக்கின்றோம். இன்றைக்கு இந்தியாவில் முஸ்லிம்களுடைய தனிநபர் சராசரி வருமானம் அதிகமாக இருப்பது குஜராத் மாநிலத்தில்தான் என்பதை என்னால் அறுதியிட்டுக் கூற முடியும்.

வைகோவிற்கு வெற்றி

உங்களிடம் ஒரு வேண்டுகோள் விடுப்பதற்காகவே நான் இங்கே வந்து இருக்கின்றேன். இந்தத் தொகுதியில் போட்டியிடுகின்ற நண்பர் வைகோ அவர்கள், சில ஆயிரம் வாக்குகளில் வென்றால் போதாது; அவர் இலட்சம் வாக்குகளுக்கும் மேல் கூடுதலாகப் பெற்று வெற்றி பெற வேண்டும்.. அவர் நாடாளுமன்ற உறுப்பினராக வரும்போது, ஒரு சாதாரண உறுப்பினராக மட்டுமே இருக்க மாட்டார். நமது வைகோ அவர்கள், அரசாங்கத்தில் முக்கியமான முடிவுகளை எடுக்கக்கூடிய இடத்தில் இருப்பார் என்பதை நான் உறுதியாகத் தெரிவித்துக் கொள்கின்றேன் என்றார் ராஜ்நாத்சிங்.

English summary
BJP national president Rajnath Singh said that MDMK leader Vaiko would be given a key portfolio in the NDA cabinet once the BJP wins the elections and forms the government.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X