அடடே! ஜெ. கைரேகை புகழ் டாக்டர் பாலாஜிக்கு அமைச்சர் விஜயபாஸ்கர் கொடுத்த புதுப் பதவி!

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: ஜெயலலிதா அப்பல்லோவில் சிகிச்சை பெற்ற போது அவரது கை ரேகையை எடுத்த டாக்டர் பாலாஜிக்கு தமிழக அரசு புதிய பதவி வழங்கியுள்ளது.

உடல்நலக் குறைவு காரணமாக, கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் அப்போலோவில் அனுமதிக்கப்பட்டார் ஜெயலலிதா. அந்தக் காலகட்டத்தில் அரவக்குறிச்சி, தஞ்சாவூர், திருப்பரங்குன்றம் தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் நடந்தது.

இந்தத் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களுக்கு பி பார்ம் படிவத்தை அதிமுக பொதுச் செயலாளர் என்ற முறையில் ஜெயலலிதா கொடுக்க வேண்டும். அந்த நேரத்தில், ஜெயலலிதா பிஸியோதெரபி சிகிச்சை எடுத்து வருகிறார் என மருத்துவர்கள் தெரிவித்தனர்.

டாக்டர் பாலாஜி

டாக்டர் பாலாஜி

இதையடுத்து, அவரிடம் கைநாட்டு பெறும் வேலையை சென்னை அரசு மருத்துவமனையில் இணை பேராசிரியராக இருந்த டாக்டர்.பாலாஜியிடம் ஒப்படைத்தார் அமைச்சர் விஜயபாஸ்கர். இதன்பின்னர், டாக்டர் பாலாஜியை அனைவரும் மறந்துவிட்டனர்.

விஜயபாஸ்கரிடம் பணம்

விஜயபாஸ்கரிடம் பணம்

ஆர்.கே.நகர் இடைத்தேர்தல் பண விநியோகம் தொடர்பாக விஜயபாஸ்கர் வீட்டுக்குள் நுழைந்தது வருமான வரித்துறை. அங்கே கைப்பற்றப்பட்ட ஆவணம் ஒன்றில், டாக்டர் பாலாஜிக்கு 5 லட்ச ரூபாய் கொடுக்கப்பட்டதாகக் குறிப்பிடப்பட்டிருந்தது. இதைப் பற்றிப் பேசிய டாக்டர் பாலாஜி, நான் பணம் வாங்கியது உண்மைதான். ஆனால், அந்தப் பணம் தனியார் ஓட்டலில் தங்கியிருந்த லண்டன் மருத்துவருக்காகச் செலுத்தப்பட்டது, கைரேகை எடுப்பதற்காக பணம் கொடுக்கவில்லை' எனத் தெரிவித்தார்.

பல்டியும் பதவியும்

பல்டியும் பதவியும்

ஆனால், மறுநாளே, நான் பணமே வாங்கவில்லை. நான் பேட்டி கொடுத்ததாக பொய்யாக செய்தி வெளியிட்டுவிட்டனர்' என பல்டி அடித்தார். இந்நிலையில்தான், தமிழக உறுப்பு மாற்று ஆணையத்தின்(Transplant Authority of Tamil Nadu (TRANSTAN)) செயலர் பதவிக்கு பாலாஜி நியமிக்கப்பட்டிருக்கிறார்.

திடீர் ஆணை

திடீர் ஆணை

இதுகுறித்து நம்மிடம் பேசிய அரசு மருத்துவமனை மருத்துவர் ஒருவர், ஆணையத்தின் செயலராக இருந்த அமலோற்பவநாதனின் பதவிக்காலம் முடிவடைந்ததை அடுத்து, கடந்த அக்டோபம் மாதம் தற்காலிகமாக அந்தப் பதவிக்குக் கொண்டு வரப்பட்டார் பாலாஜி. தற்போது அவரது பதவியை உறுதிப்படுத்தி சுகாதாரத்துறை செயலர் ராதாகிருஷ்ணன் ஆணை வெளியிட்டுள்ளார்.

என்ன தகுதி

என்ன தகுதி

உறுப்பு மாற்று அறுவை சிகிச்சைத் துறையில் அனுபவம் வாய்ந்த ஒருவர்தான் அந்தப் பதவிக்கு வர வேண்டும் என அரசாணையின் விதிகள் கூறுகிறன்றன. டாக்டர் பாலாஜிக்கு அப்படி எந்த அனுபவமும் இல்லை. தர்மபுரி அரசு மருத்துவக் கல்லூரியில் புறத்துளை அறுவை சிகிச்சைத் துறையில் துணை பேராசிரியராக இருந்தவர், இணை பேராசிரியராக பதவி உயர்வு பெற்று பின்னர் சென்னை வந்தார்.

ஜெ. சிகிச்சைக்கு என்ன தொடர்பு?

ஜெ. சிகிச்சைக்கு என்ன தொடர்பு?

இந்த நேரத்தில், ஜெயலலிதா சிகிச்சையை ஒருங்கிணைத்த வல்லுநர் குழுவின் தலைவராக நியமிக்கப்பட்டார். அவருக்கும் ஜெயலலிதா சிகிச்சைக்கும் என்ன தொடர்பு என்ற கேள்வியை யாரும் எழுப்பவில்லை. இந்தப் பதவியில் இருந்த அமலோற்பவநாதனை வலுக்கட்டாயமாக பதவியில் இருந்து விலகச் சொல்லிவிட்டனர். உறுப்பு மாற்று சிகிச்சையில் பல்வேறு குளறுபடிகள் ஏற்படுவதாகப் புகார்கள் எழுந்து வரும் நிலையில், தன்னாட்சி அமைப்பான உறுப்பு மாற்று ஆணையத்தின் செயலர் பதவிக்கு, பாலாஜியைப் போன்றவர்களை நியமிப்பது நியாயம்தானா? அமைச்சருக்கு வேண்டப்பட்டவர் என்ற ஒரே காரணத்துக்காக இப்படியொரு பதவி அவருக்கு வழங்கப்பட்டிருக்கிறது என்றார் ஆதங்கத்துடன்.

வாழ்க்கைத் துணையை தேடுகிறீர்களா? தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

English summary
Controversial Doctor Bajalai now got new post from TamilNadu govt.
Please Wait while comments are loading...