கள்ளக்குறிச்சி கலவர வழக்கில் 69 பேருக்கு நிபந்தனை ஜாமீன்.. 56 பேரின் மனுக்களை நிராகரித்த நீதிபதி!
கள்ளக்குறிச்சி : கள்ளக்குறிச்சி கலவர வழக்கில் கைதான 174 பேரில் 69 பேருக்கு 69 பேருக்கு நிபந்தனை ஜாமீன் வழங்கப்பட்டுள்ளது. 56 பேருக்கு ஜாமீன் மறுக்கப்பட்டுள்ளது.
சின்ன சேலம் அருகேயுள்ள கனியாமூர் பள்ளி கலவரம் தொடர்பாக கைதான 174 பேரில் 69 பேருக்கு நிபந்தனை ஜாமீன் வழங்கி விழுப்புரம் மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. 56 பேரின் ஜாமின் மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளன. மற்றவர்களின் ஜாமீன் மனுக்கள் பரிசீலனையில் உள்ளன.
கள்ளக்குறிச்சி மாவட்டம் கனியாமூர் அருகே உள்ள தனியார் மேல்நிலைப்பள்ளியில் கடந்த ஜூலை 17ஆம் தேதி பெரும் வன்முறை ஏற்பட்டது. பள்ளி முன்பு குவிந்த போராட்டக்காரர்கள் போலீசாரை நோக்கி கற்களை வீசி தாக்கினர்.

போலீசார் தடியடி நடத்தி அவர்களை கலைக்க முயன்றபோது பள்ளிக்குள் அத்துமீறி நுழைந்த போராட்டக்காரர்கள் வகுப்பறைகளை அடித்து நொறுக்கினர். மேஜை, நாற்காலிகள் உள்ளிட்ட பொருட்களைத் தூக்கிச் சென்றனர். பள்ளி வளாகத்தில் இருந்த பள்ளி பேருந்துகள் மற்றும் போலீஸ் வாகனங்கள் தீக்கிரையாகின.
இந்த வன்முறை தொடர்பாக கைது செய்யப்பட்ட 174 பேர்சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். அவர்கள் அனைவரும் விழுப்புரம் மாவட்டம் முதன்மை நீதிமன்றத்தில் ஜாமீன் கேட்டு மனு தாக்கல் செய்திருந்ததனர். அந்த ஜாமீன் மனுக்கள் மீதான விசாரணை இன்று நடைபெற்றது. இதில் 69 பேருக்கு நிபந்தனை ஜாமீன் வழங்கி விழுப்புரம் மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்ற நீதிபதி பூர்ணிமா உத்தரவிட்டுள்ளார்.
174 பேர் ஜாமீன் மனுக்கள் தாக்கல் செய்திருந்த நிலையில் நீதிபதி பூர்ணிமா 69 பேருக்கு மட்டும் ஜாமீன் வழங்கி உத்தரவு பிறப்பித்துள்ளார். 56 பேரின் ஜாமின் மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளன. மற்றவர்களின் ஜாமீன் மனுக்கள் பரிசீலனையில் உள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications