ஆளுநர் ரவியின் துணைவேந்தர்கள் மாநாடு-அதிகார அத்துமீறலின் உச்ச கட்டம்-இடதுசாரிகள், எஸ்டிபிஐ கண்டனம்
ன்னை: தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு போட்டியாக தமிழ்நாடு பல்கலைக் கழகங்களின் துணைவேந்தர்கள் மாநாட்டை தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி, உதகையில் கூட்டியிருப்பது அதிகார அத்துமீறலின் உச்சகட்டம் என்று சிபிஐ தமிழ் மாநிலச் செயலாளர் இரா. முத்தரசன், சிபிம் மாநில செயலாளர் பெ.சண்முகம் மற்றும் எஸ்டிபிஐ மாநிலத் தலைவர் நெல்லை முபாரக் உள்ளிட்டோர் கண்டனம் தெரிவித்துள்ளனர்
இது தொடர்பாக இரா. முத்தரசன் கூறியிருப்பதாவது: தமிழ்நாடு ஆளுநர் பொறுப்புக்கு நியமிக்கப்பட்ட ஆர்.என்.ரவி, ஆரம்ப நாளில் இருந்தே மக்களால் தேர்வு செய்து, அமைக்கப்பட்ட மாநில அரசுக்கு எதிராக செயல்பட்டு வருகிறார்.

அரசியலமைப்பு சட்டம் ஆளுநருக்கு வழங்கியுள்ள கடமைப் பொறுப்புகளை நிறைவேற்றாமல், மக்கள் நலனுக்கு எதிராகவும், மாநில அரசுக்கு எதிராகவும் தாக்குதல் நடத்தும் மலிவான அரசியல் நடவடிக்கையில் ஈடுபட்டு வருகிறார். தமிழ்நாடு சட்டப் பேரவையின் மாண்புக்கும், மரபுக்கும் தீராக்களங்கம் ஏற்படுத்தும் தரம் தாழ்ந்து செயல்பட்டு வருகிறார்.
மாநில அரசுக்கு எதிராக பல்கலைக் கழகங்கள்?
தமிழ்நாட்டின் ஒட்டு மொத்த மக்களும் எதிர்த்து வரும் தேசியக் கல்விக் கொள்கையை ஆளுநர் மாளிகை வழியாக செயல்படுத்த முயன்று வருகிறார். அரசியலமைப்பு சட்டரீதியாக இணை வேந்தர் பொறுப்பில் உள்ள மாநில அரசின் உயர்கல்வித்துறை அமைச்சர் பங்கேற்காத துணை வேந்தர்கள் கூட்டத்தை நடத்தி, மாநில அரசின் கொள்கைகளுக்கு எதிரான தாக்குதல் தளமாக பல்கலைக் கழகங்களை ஆயத்தப்படுத்தி வருகின்றார்.
உச்சநீதிமன்றத்தின் விரிவான தீர்ப்பு
இந்த நிலையில் ஆளுநரின் அதிகார அத்துமீறல்களை பட்டியலிட்டு, அரசியலமைப்பு அதிகாரம் பெற்ற பொறுப்புக்கு ஆர்.என்.ரவி தகுதியற்றவர் என்பதற்கான ஆதாரங்கள் மற்றும் தரவுகளுடன் விரிவான புகார் மனு குடியரசுத் தலைவரின் கவனத்துக்கு நேரில் சமர்பித்து, அதன் மீது நடவடிக்கை கோரப்பட்டது. குடியரசுத் தலைவர் மாளிகையில் இருந்து எந்த விதமான தகவலும் கிடைக்கப் பெறாத நிலையில் மாநில அரசு உச்ச நீதிமன்றத்தை அணுகியது. தமிழ்நாடு அரசின் முறையீடுகளை விசாரித்த உச்ச நீதிமன்றத்தின் இரண்டு நீதிபதிகள் அமர்வு கடந்த 08.04.2025 ஆம் நாள் விரிவான தீர்ப்பு வழங்கியுள்ளது.
கால எல்லைகளை நிர்ணயித்த உச்சநீதிமன்றம்
தமிழ்நாடு சட்டப் பேரவையில் நிறைவேற்றி, ஒப்புதலுக்காக அனுப்பப்பட்ட சட்ட திருத்த மசோதாக்கள் மீது ஆளுநர் முடிவு எடுக்காமல் இருந்தது சட்டவிரோதமானது என திட்டவட்டமாக கூறியுள்ளது. அரசியலமைப்பு சட்டம் பிரிவு 142 வழங்கியுள்ள சிறப்பு அதிகாரத்தை பயன்படுத்தி, அரசியல் அமைப்பு சட்டம் பிரிவு 200ன்படி ஆளுநர், அரசியலமைப்பு சட்டப்படி, ஆற்ற வேண்டிய கடமைப் பொறுப்புகளை நினைவூட்டி, அதற்கான கால எல்லைகளையும் வரையறுத்து சுட்டிக் காட்டியுள்ளது. ஆளுநர் ஒப்புதலுக்காக அனுப்பி வைக்கப்பட்ட சட்டத்திருத்த மசோதாக்கள் அனைத்தும், அனுப்பி வைக்கப்பட்ட தேதியில் ஒப்புதல் பெறப்பட்டதாகும். அவைகள் அனைத்தும் உடனடியாக நடைமுறைக்கு வருகின்றன என்று அறிவித்துள்ளது.
பல்கலைக் கழக வேந்தராக முதல்வர்
உச்ச நீதிமன்றம் வழியாக ஒப்புதல் பெறப்பட்ட சட்ட திருத்த மசோதாக்களில், பல்கலைக் கழகங்களின் வேந்தர் பொறுப்பில் இருந்து, ஆளுநரை நீக்கிவிட்டு, அந்தப் பொறுப்பில் மாநில முதலமைச்சரை நியமிக்க வழிவகை செய்யும் சட்டத்திருத்த மசோதாவும் ஒன்று என்பது குறிப்பிடத்தக்கது.
முதல்வரின் துனைவேந்தர்கள் கூட்டம்
இந்த முறையில், பல்கலைக் கழகங்களின் வேந்தர் பொறுப்பில் நியமிக்கப்பட்ட முதலமைச்சர், கடந்த 16.04.2025 ஆம் தேதி பல்கலைக் கழகங்களின் துணை வேந்தர்கள் கூட்டத்தை நடத்தி, அரசின் கொள்கைகளை செயல்படுத்த வேண்டும் எனக் கேட்டுக் கொண்டுள்ளார். இந்த சூழலில் நாட்டின் குடியரசுத் துணைத் தலைவர் ஜெகதீப் தன்கர், உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பையும், நடவடிக்கைகளையும் கடுமையாக விமர்சித்து சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளார்.
முதல்வருக்கு போட்டியாக ஆளுநரின் கூட்டம்
இப்போது, சட்டப்படி வேந்தர் பொறுப்பில் இருந்து நீக்கப்பட்ட ஆளுநர், வரும் 25, 26, 27 தேதிகளில் பல்கலைக்கழக துணை வேந்தர்கள் மூன்று நாள் மாநாடு, நீலகிரி ஆளுநர் மாளிகையில் நடைபெறும் எனவும், இந்த மாநாட்டில் குடியரசுத் துணைத் தலைவர் ஜெகதீப் தன்கர் பங்கேற்பார் என்று அறிவித்திருப்பதும் ஒரு அசாதாரண நிலையை, நெருக்கடியை உருவாக்கும் திட்டமாக தெரிகிறது. ஆளுநரின் அதிகார அத்துமீறல்களை தடுக்க வேண்டிய குடியரசுத் துணைத் தலைவர், அவருடன் இணைந்து செயலாற்றுவது அரசியலமைப்பு சட்ட நெருக்கடியை உருவாக்கும் அரசியல் சதியா? என ஆழ்ந்த சந்தேகம் எழுகிறது.
துணைவேந்தர்கள் புறக்கணிக்க வேண்டும்
தமிழ்நாட்டின் அரசியல் களத்தில் கால் ஊன்ற வேண்டும் என்ற நாக்பூர் குரு பீடத்தின் சேவகர்களாக செயல்படும் ஆளுநர், குடியரசுத் துணைத் தலைவர் ஆகியோர் பங்கேற்கும் துணை வேந்தர்கள் மாநாட்டை பல்கலைக் கழகங்களின் துணை வேந்தர்கள் புறக்கணிக்க வேண்டும். ஆர்.என்.ரவியின் தொடரும் அதிகார அத்துமீறல்களை தடுத்து நிறுத்த, ஜனநாயக சக்திகள் ஓரணியில் திரண்டு நேரடி நடவடிக்கையில் ஈடுபட முன்வர வேண்டும் என இந்தியக் கம்யூனிஸ்டு கட்சியின் தமிழ்நாடு மாநில செயற்குழு கேட்டுக் கொள்கிறது.. இவ்வாறு இரா.முத்தரசன் தெரிவித்துள்ளார். இதேபோல சிபிஎம் மாநிலச் செயலாளர் சண்முகம் , கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.
எஸ்டிபிஐ நெல்லை முபாரக்
எஸ்டிபிஐ மாநிலத் தலைவர் நெல்லை முபாரக் வெளியிட்ட அறிக்கையில்,தமிழக அரசு, உச்ச நீதிமன்றத்தில் நடத்திய சட்டப் போராட்டத்தின் விளைவாக, சட்டமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட மசோதாவின்படி, மாநில பல்கலைக்கழகங்களின் வேந்தர் பொறுப்பில் இருந்து ஆளுநர் ஆர்.என். ரவி விடுவிக்கப்பட்டு, மாநில முதலமைச்சர் அப்பொறுப்பை ஏற்றுள்ளார். இது மக்களாட்சி மற்றும் அரசியலமைப்பு தத்துவங்களுக்கு உட்பட்ட ஒரு முக்கிய வெற்றியாகும்.
ஆயினும், ஆளுநர் ஆர்.என். ரவி, தனது அதிகார வரம்பை மீறி, வரும் ஏப்ரல் 25, 26, 27 ஆகிய தேதிகளில் நீலகிரி ஆளுநர் மாளிகையில் பல்கலைக்கழக துணை வேந்தர்களுக்கான மூன்று நாள் மாநாடு நடத்தப்படும் என அறிவித்திருப்பது முற்றிலும் ஏற்புடையதல்ல. இந்த மாநாட்டில், உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பை கடுமையாக விமர்சித்து, நீதித்துறையின் அதிகாரத்தை கேள்விக்குட்படுத்திய குடியரசுத் துணைத் தலைவர் ஜெகதீப் தன்கர் பங்கேற்பார் என அறிவிக்கப்பட்டிருப்பது, இதன் பின்னணியில் உள்ள அரசியல் நோக்கத்தை வெளிப்படுத்துகிறது.
ஆளுநர், சட்டப்படி வேந்தர் பொறுப்பில் இருந்து நீக்கப்பட்ட பின்னரும், துணை வேந்தர்களை ஒருங்கிணைத்து இத்தகைய மாநாடு நடத்துவது, உச்ச நீதிமன்றத் தீர்ப்பை அவமதிப்பதுடன், மாநில அரசின் அதிகாரத்தை பறிக்கும் முயற்சியாகவே கருதப்படுகிறது. இது மக்களாட்சி மற்றும் அரசியலமைப்பு மாண்புகளுக்கு எதிரான ஒரு ஆபத்தான செயலாகும்.
ஆளுநரின் இந்த அதிகார மீறல் வன்மையாக கண்டிக்கத்தக்கது. மாநில அரசின் உரிமைகளையும், உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பையும் மதித்து, இந்த மாநாட்டை உடனடியாக ரத்து செய்ய வேண்டும் என ஆளுநரை வலியுறுத்துவதோடு, மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசின் அதிகாரத்தை மதித்து, மாநில பல்கலைக்கழகங்களின் நிர்வாகத்தில் தலையிடுவதை தவிர்க்க வேண்டும் எனவும் கேட்டுக்கொள்கிறேன் என தெரிவித்துள்ளார்.
சிபிஎம் மாநிலச் செயலாளர் சண்முகம் வெளியிட்ட அறிக்கையில், மக்களுக்கும், அரசுக்கும் எதிராக தொடர்ந்து செயல்பட்டு வரும் ஆர்.என்.ரவி, உச்ச நீதிமன்ற தீர்ப்பை அவமதிக்கும் விதத்தில் துணை வேந்தர்கள் மாநாடு ஒன்றுக்கு அழைப்பு விடுத்துள்ளார். ஆர்.எஸ்.எஸ் கையாளாக தொடர்ந்து செயல்பட்டு வரும் ஆளுநர் ஆர்.என்.ரவிக்கு, உச்ச நீதிமன்ற தீர்ப்பின் மூலம் கடிவாளம் போட்டிருக்கிறது தமிழ்நாடு அரசு. இந்த பேரிடியை தாங்கிக் கொள்ள முடியாத ஆளுநர் ஆர்.என்.ரவி, பல்கலை கழக துணை வேர்ந்தர்களின் மாநாட்டுக்கு அழைப்பு விடுத்து புதிதாக ஒரு சர்ச்சையை உருவாக்கியுள்ளார்.
ஆளுநர் ஆர்.என்.ரவி பல்கலை கழகங்களுக்கு வேந்தராக இருக்க வேண்டியதில்லை என்பதை ஏற்கனவே சட்டமன்றத்தில் மசோதாவாக நிறைவேற்றி அனுப்பியதுடன், உச்ச நீதிமன்ற தீர்ப்பின் மூலம் அதனை சட்டமாகவும் ஆக்கியுள்ளது தமிழ்நாடு அரசு.
எனவே, இப்போது ஆளுநர் விடுத்திருக்கும் அழைப்பு உச்ச நீதிமன்ற தீர்ப்பை அவமதிப்பதும், அரசியலமைப்புச் சட்டத்திற்கு விரோதமான அத்துமீறலும் ஆகும். திட்டமிட்ட இந்த மோதல் போக்கிற்கு குடியரசு துணைத் தலைவரும் துணை போவதாக வரும் செய்திகள் அதிர்ச்சியளிக்கின்றன.
ஆர்.என்.ரவியின் இந்த சட்டவிரோத துணை வேந்தர்கள் மாநாட்டு அழைப்பினை சி.பி.ஐ(எம்) வன்மையாக கண்டிக்கிறது. இந்த மாநாட்டில் பல்கலை கழக துணை வேந்தர்கள் யாரும் பங்கேற்க வேண்டாம் என்று சி.பி.ஐ(எம்) சார்பில் வலியுறுத்துகிறோம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
-
முதல் விக்கெட்.. திமுக கூட்டணியில் விலகிய தமிழக வாழ்வுரிமை கட்சி.. அறிவித்தார் வேல்முருகன் -
இதுக்கு மேல கடன் வாங்க முடியாது.. கஜானா காலி.. தத்தளிக்கும் தமிழக வெற்றிக் கழகம்.. அப்போ விஜய்? -
வளைகுடா வளையம்: ஈரானிடம் இந்தியா வைத்த 'செக்'.. தவிப்பில் கச்சா எண்ணெய்! டெல்லி மெகா முடிவு -
டிராகனின் வெள்ளி வேட்டை.. சீனாவைச் சுழற்றியடிக்கும் சில்வர் ஜுரம்.. வெள்ளி இனி குட்டித்தங்கம்.. ஏன்? -
நோட் பண்ணுங்க! கலைஞர் மகளிர் உரிமைத் தொகைக்கு 'செக்' - ரேஷன் கார்டில் இதை கவனிக்கலைன்னா பணம் கட்? -
கழுத்தறுத்த பாஜக..சரண்டராகும் சரத்குமார்! பஞ்சாயத்தை கூட்டிய நாட்டாமை குடும்பத்தார்! பரபர பாலிடிக்ஸ் -
பென்டகன் பிளான் ரெடி.. ஈரானுக்குள் நுழையும் அமெரிக்க வீரர்கள்! கதை மொத்தமா முடியுது! -
Siragadikka Aasai Promo: விஜயாவுக்கு எதிராக ஆதாரத்தை கண்டுபிடித்த முத்து- மீனா.. சிந்தாமணிக்கு ஆப்பு! செம சம்பவம் -
பாஜக நட்சத்திர பேச்சாளர் பட்டியலில் இருந்து தமிழிசை பெயர் நீக்கம்.. பின்னணி இதுதானா? -
தப்புக் கணக்கான ராதிகாவின் முடிவு? மீண்டும் சமத்துவ மக்கள் கட்சியை தொடங்குகிறாரா சரத்குமார்? -
கெத்து காட்டும் இந்தியா.. ஹார்முஸ் ஜலசந்தியை கடக்க இந்திய கப்பல்களுக்கு தனிப்பாதை கொடுத்த ஈரான்.. செம -
நன்றியய்யா நன்றி.. ஓட்டல் ஓனர்கள் வயிற்றில் பால் வார்த்த அறிவிப்பு! இனி சிலிண்டர் தட்டுப்பாடு இல்லை!












Click it and Unblock the Notifications