ஐஏஎஸ் அதிகாரி சகாயத்திற்கு கொலை மிரட்டல்.. தமிழக அரசுக்கு வெட்கக்கேடு: ஜி.ராமகிருஷ்ணன் சாடல்!

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: ஐஏஎஸ் அதிகாரி சகாயத்திற்கு உரிய பாதுகாப்பு வழங்க வேண்டும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்தியுள்ளது.

கிரானைட் முறைகேடு தொடர்பாக விசாரணை நடத்தியதால் தனக்கு பல்வேறு தரப்பிலிருந்து கொலை மிரட்டல் வருகிறது. எனவே, தனக்கு பாதுகாப்பு வழங்க வேண்டும் எனக்கோரி ஐஏஎஸ் அதிகாரி சகாயம் உயர் நீதிமன்றத்தில் நேற்று மனு தாக்கல் செய்திருந்தார்.

CPM urges tamil nadu govt to give protection for IAS officer Sahayam

இந்த மனுவை விசாரித்த தலைமை நீதிபதி இந்திரா பானர்ஜி, நீதிபதி எம்.சுந்தர் ஆகியோர் விசாரணையை செப்டம்பர் 14ந்தேதிக்கு ஒத்திவைத்தனர். இதைத்தொடர்ந்து பல்வேறு தரப்பினரும் ஐஏஎஸ் அதிகாரி சகாயத்திற்கு பாதுகாப்பு வழங்க வேண்டும் என கோரிக்கை விடுத்தனர்.

இந்நிலையில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியும் ஐஏஎஸ் அதிகாரி சகாயத்திற்கு பாதுகாப்பு வழங்க வலியுறுத்தியுள்ளது. இதுதொடர்பாக அக்கட்சியின் மாநில செயலாளர் ஜி.ராமகிருஷ்ணன் விடுத்துள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது,

மதுரை மாவட்டத்தில் நடைபெற்ற கிரானைட் முறைகேடுகள் குறித்து விசாரணை நடத்தி கொண்டிருக்கும் ஆட்சிப்பணி அதிகாரி சகாயத்திற்கு 2014ம் ஆண்டிலும், 2015ம் ஆண்டிலும் விடுக்கப்பட்ட கொலை மிரட்டல் குறித்து இன்று வரையிலும் எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என்பது மிகப்பெரிய வெட்கக் கேடு. இந்த காலத்தில் நரபலி குறித்து விபரங்களை தந்து உதவிய சேவற்கொடியோன் மிகக் கடுமையாக மிரட்டப்பட்டிருக்கிறார், அவரது வீடு தீக்கிரையாக்கப்பட்டிருக்கிறது.

இதேபோன்று முறைகேடுகள் நடந்த இடத்தை வான் வழியாக ஆய்வு செய்வதற்கு திரு. உ. சகாயம் அவர்களுக்கு உதவிய பார்த்தசாரதி என்பவர் சந்தேகப்படும்படி விபத்தில் இறந்திருக்கிறார். நீதிமன்றத்தின் மூலம் நியமிக்கப்பட்ட விசாரணைக் கமிஷன் ஆணையர், ஐ.ஏ.எஸ். அதிகாரி தமிழகம் முழுவதும் அனைவராலும் பேசப்படுகிற முறைகேட்டை விசாரித்து கொண்டிருப்பவர் என்கிற இத்தனை அம்சங்களோடும் இருக்கும் ஒருவர் தன் உயிருக்கும், விசாரணைக்கு உதவியவர்களின் உயிருக்கும் பாதுகாப்பில்லை, ஆபத்து சூழ்ந்திருக்கிறது என்று சொல்லுவது தமிழக காவல்துறைக்கும், தமிழக அரசுக்கும் மிகப் பெரிய அவக்கேடாகும்.

தமிழக அரசு கொலை மிரட்டல்கள் குறித்தும், சந்தேக மரணம் தாக்குதல்கள் குறித்தும் உரிய முறையில் விசாரணை நடத்தாத அதிகாரிகளின் நடவடிக்கைகள் பற்றி நீதிமன்ற கண்காணிப்பில் விசாரணை நடத்த முன்வர வேண்டும். சகாயம் உள்பட அவருக்கு உதவியவர்களுக்கு யாருக்கெல்லாம் பாதுகாப்பு இல்லை என்று அவர் கருதுகிறாரோ அவர்களுக்கு எல்லாம் உரிய முறையில் பாதுகாப்பு அளிக்க வேண்டும்.

Unknown men Thrown Pertol Kundu on CPM Office in Coimbatore

சகாயம் அறிக்கையினை உடனடியாக வெளியிடவும், அந்த அறிக்கையின் அடிப்படையில் தவறிழைத்தவர்கள், தவறுக்கு உடந்தையாக இருந்தவர்கள் அனைவர் மீதும் சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டுமென்றும், அரசுக்கு ஏற்பட்ட இழப்பை தவறிழைத்த நிறுவனங்கள், உடந்தையாக இருந்த அதிகாரிகள் அனைவரிடமிருந்தும் வசூலிக்க வேண்டுமெனவும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயற்குழு தமிழக அரசை வலியுறுத்துகிறது. இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

வாழ்க்கைத் துணையை தேடுகிறீர்களா? தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

English summary
CPM state secretary G.Ramakirshnan urges tamil nadu govt to give protection for IAS officer Sahayam.
Please Wait while comments are loading...