For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

ஜெயலலிதாவுக்கு எதிராக வாள் வீச்சு.. திமுக, பாஜக பற்றி மூச்: தேமுதிக பொதுக்குழு தீர்மானம் முழு விவரம்

By Veera Kumar
Google Oneindia Tamil News

சென்னை: தேமுதிக பொதுக்குழு மற்றும் செயற்குழு இன்று பெரம்பலூரில் நடைபெற்றது. கட்சி தலைவர் விஜயகாந்த் தலைமையில் நடந்த இக்கூட்டத்தில் 23 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளன. பெரும்பாலான தீர்மானங்கள் ஜெயலலிதா மற்றும் அதிமுகவுக்கு எதிராகவே உள்ளன. மருந்துக்கு கூட பிற கட்சிகளை பற்றி தேமுதிக தீர்மானம் வாய் திறக்கவில்லை. அதிமுக தவிர்த்த மற்ற கட்சிகளில் எதனுடன் வேண்டுமானாலும் விஜயகாந்த் கட்சி கூட்டணிக்கு செல்ல தயாராக இருப்பதை இந்த தீர்மானங்கள் வெளிப்படுத்துகின்றன.

தீர்மானங்களின் முழு விவரம் இதோ:

தீர்மானம் 1: இந்திய நாட்டை வல்லரசாக்க பாடுபட்ட முன்னாள் குடியரசுத்தலைவர் மறைந்த டாக்டர் ஏ.பி.ஜெ.அப்துல்கலாம் அவர்கள், தமிழகத்தில் பூரண மதுவிலக்கை அமல்படுத்த வலியுறுத்தி மறைந்த காந்தியவாதி சசிபெருமாள், கழகத்தலைவர் விஜயகாந்த்தின் பால்ய நண்பர் அ.செ.இப்ராஹீம் ராவுத்தர், சமீபத்தில் தமிழகத்தில் ஏற்பட்ட மழை வெள்ளத்தில் உயிரிழந்த சுமார் 500க்கும் மேற்பட்டவர்கள் மற்றும் தேசிய முற்போக்கு திராவிட கழகத்திற்காக பாடுபட்டு, உழைத்து, சிறப்பான முறையில் பணியாற்றி, அண்மையில் இயற்கை எய்திய நிர்வாகிகள், தொண்டர்கள் என அனைவருக்கும் இப்பொதுக்குழு கண்ணீர் அஞ்சலியை செலுத்தி, அவர்களின் ஆன்மா சாந்தியடைய இறைவனை வேண்டுகிறது.

DMDK General Council slams Jayalalitha

அவர்களை இழந்துவாடும் அவர்களது குடும்பத்தினருக்கும், உறவினர்களுக்கும், நண்பர்களுக்கும், தேமுதிகவினருக்கும் இப்பொதுக்குழு ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபத்தையும் தெரிவித்துக்கொள்கிறது.

தீர்மானம் 2: மக்களுக்காக மக்கள் பணியின் மூலம் இலட்சக்கணக்கான ரூபாய் மதிப்புள்ள பொருட்களை ஏழை, எளிய மக்களுக்கு உதவியாக வழங்கியும், பார்வையற்ற மாற்று திறனாளிகளின் போராட்டத்திற்கு நேரில் சென்றும், ஆந்திராவில் சுட்டுக்கொல்லப்பட்ட 20 தமிழர்களின் குடும்பத்திற்கு ஆறுதலும் பத்து லட்சம் ரூபாய் நிதியுதவி வழங்கியும், தமிழகத்தின் நலனுக்காக ஐந்து அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி அனைத்து கட்சி பிரதிநிதிகளுடன் பாரத பிரதமரை சந்தித்து வந்தவர் விஜயகாந்த்.

விவசாயிகளுக்காக திருவாரூரில் ஆர்ப்பாட்டம் செய்தும், இராமநாதபுரத்தில் இப்தார் நோன்பு திறப்பில் கலந்துகொண்டும், முன்னாள் குடியரசுத்தலைவர் திரு.ஏ.பி.ஜெ.அப்துல்கலாம் மறைவிற்கு நேரில்சென்று அஞ்சலி செலுத்தி, அவரது பிறந்தநாளை மாணவர் தினமாக கொண்டாட பாரத பிரதமரிடம் நேரில் வலியுறுத்தியும், காந்தியவாதி சசிபெருமாள் மறைவிற்கு நேரில்சென்று அஞ்சலி செலுத்தியும், பூரண மதுவிலக்கை அமல்படுத்தக்கோரி மனித சங்கிலி போராட்டம், உண்ணாவிரத போராட்டம் நடத்தியும், புதுக்கோட்டையில் குர்பானி வழங்கியும் செயல்பட்டவர் விஜயகாந்த்.

வெள்ளம் பாதித்த மாவட்டங்களுக்கு சுமார் ஒருமாதகாலம் நேரில் சென்று பார்வையிட்டு, நிவாரண உதவிகள் வழங்கியும், சென்னையில் துப்புரவு பணியை மேற்கொண்டும், மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு தஞ்சாவூரில் ஆர்ப்பாட்டமும், வெள்ள நிவாரண முறைகேடுகளை கண்டித்து கடலூரில் ஆர்ப்பாட்டமும், சென்னையில் இரத்ததான முகாமும் என தமிழக மக்களின் நலனுக்காக மக்களோடு மக்களாக களத்தில் இறங்கி போராடும் நமது கழகத்தலைவர் கேப்டன் அவர்களின் மக்கள் பணிகளை இப்பொதுக்குழு வரவேற்கிறது.

தீர்மானம் 3: சென்னை மற்றும் பிற மாவட்டங்களில் பெய்த கனமழையாலும், அதனால் ஏற்பட்ட வெள்ளத்தாலும், ஒவ்வொரு குடும்பமும் பாதிக்கப்பட்டு, வீடுகளையும், உடைமைகளையும், அத்தியாவசிய பொருட்களையும் இழந்துள்ளனர்.

ஒவ்வொரு குடும்பத்திற்கும் குறைந்தபட்சம் ஒரு லட்சம் ரூபாய்க்கு மேல் இழப்பு ஏற்பட்டுள்ளது. ஆனால் அரசு அறிவித்துள்ள நிவாரணத்தொகை "யானைப்பசிக்கு சோளப்பொறியாக" உள்ளது. எனவே அவர்கள் இழந்த பொருட்களை தமிழக அரசே நிவாரண உதவியாக இலவசமாக வழங்க வேண்டும்.

பாதிக்கப்பட்ட மாவட்டங்களில் வாட் வரியை ரத்து செய்யவேண்டும். மேலும் பாதிக்கப்பட்ட சிறு குறு தொழில் நிறுவனங்களுக்கு, பாதிப்பிற்கேற்ற நிவாரணமும், புதிய வட்டியில்லா கடனுதவியும், பழைய கடனுக்கு கால அவகாசமும் வழங்கவேண்டுமென இப்பொதுக்குழு வலியுறுத்திக் கேட்டுக்கொள்கிறது.

தீர்மானம் 4: திருவள்ளூரிலிருந்து தூத்துக்குடி வரை மழை வெள்ளத்தால் விவசாய நிலம் மற்றும் பயிர்கள் பாதிக்கப்பட்டு விவசாயிகளின் வாழ்வாதாரமே கேள்விக்குறியாகியுள்ளது. அரசு அறிவித்துள்ள ஒரு ஹெக்டேருக்கு 13,500 ரூபாய் நிவாரணம் என்பது மிகவும் குறைவாகும்.

நிவாரணத்தொகையை அதிகரித்து கொடுப்பது மட்டுமல்லாமல் விவசாயத்திற்கு தேவையான உரம், பூச்சிக்கொல்லி, விதை, போன்ற இடுபொருட்களை இலவசமாக வழங்கியும், பயிர்கடனை தள்ளுபடி செய்தும், புதிய பயிர்கடன்கள் வழங்கியும் விவசாயிகளின் பாதிப்பை போக்கவேண்டும். அனைத்து பொருட்களுக்கும் தனிகாப்பீட்டு (INSURANCE) திட்டம் இருக்கும்போது, விவசாய பயிர்களுக்கு மட்டும் பொதுவான காப்பீட்டு திட்டம் என்பதை மாற்றியமைத்து, தனிநபர் விவசாய காப்பீட்டு திட்டத்தை கொண்டுவரவேண்டுமென தமிழக அரசை இப்பொதுக்குழு வலியுறுத்திக் கேட்டுக்கொள்கிறது.

தீர்மானம் 5: மழை, வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவும் வகையில், தன்னார்வலர்களும், தொண்டு நிறுவனங்களும், பல்வேறு அமைப்புகளும் நிவாரண உதவி செய்வதற்கு கொண்டுவந்த நிவாரண பொருட்களை வழிமறித்து பறித்துக்கொண்டு, அதன்மீது ஜெயலலிதாவின் ஸ்டிக்கர் படத்தை ஒட்டி, அதிமுக சார்பில் வெள்ள நிவாரண உதவி வழங்கப்பட்டது போன்ற தோற்றத்தை ஏற்படுத்திய, தரம்தாழ்ந்த, வெட்ககேடான செயல்களில் ஈடுபட்ட ஆளும் அதிமுகவினரையும், ஸ்டிக்கர் அரசாங்கத்தையும் இப்பொதுக்குழு வன்மையாக கண்டிக்கிறது.

தீர்மானம் 6: தமிழகத்தில் பூரண மதுவிலக்கை அமல்படுத்தக்கோரி அனைத்து தரப்பினரும் வீதியில் இறங்கி போராடியும், செவிடன் காதில் ஊதிய சங்காக அதிமுக அரசு இருந்து வருகிறது. மூன்று தலைமுறைகள் மதுவால் பாதிக்கப்பட்டு அவர்களின் ஒட்டுமொத்த வாழ்க்கையும் சீர்குலைந்துபோய், தாய்மார்களும், சகோதரிகளும், விதவைகளாகிக் கொண்டிருக்கும் நிலையில்கூட டாஸ்மாக் மதுபானக் கடைகளை மூடாத அதிமுக அரசைக் கண்டித்தும், தமிழகத்தில் பூரண மதுவிலக்கை அமல்படுத்த தேவையான நடவடிக்கையை எடுக்கவேண்டும் என்றும் இப்பொதுக்குழு வலியுறுத்திக் கேட்டுக்கொள்கிறது.

தீர்மானம் 7: தமிழக மக்களின் பாரம்பரியமிக்க வீர விளையாட்டான ஜல்லிக்கட்டுப் போட்டியை நடத்துவதற்கு அனுமதி அளிக்கும்படி, மத்திய அரசை தேமுதிக தலைவர் கேப்டன் அவர்கள் பலமுறை நேரடியாகவும், கடிதம் மற்றும் அறிக்கை வாயிலாகவும் வலியுறுத்தினார்கள். அதேபோல் தமிழகத்தின் மற்ற அரசியல் கட்சியினரும் வலியுறுத்தினார்கள். தமிழர்களின் உணர்வுகளுக்கு மதிப்பளித்து ஜல்லிக்கட்டுப் போட்டியை நடத்த அனுமதியளித்த மத்திய அரசுக்கும், பாரத பிரதமர் நரேந்திரமோடி அவர்களுக்கும், மத்திய அமைச்சர்கள் பிரகாஷ் ஜவடேகர், பொன்.ராதாகிருஷ்ணன் ஆகியோருக்கும் இந்தப் பொதுக்குழு தனது நன்றியினை தெரிவித்துக்கொள்கிறது.

தீர்மானம் 8: இலங்கை அரசு தமிழக மீனவர்களை தாக்குவதும், கைது செய்வதும், படகுகளை பறிமுதல் செய்வதும், அதன்பின் மீனவர்களை மட்டும் விடுதலை செய்வதையும் வாடிக்கையாக கொண்டுள்ளது. தற்போதுவரை இப்பிரச்சனைகள் தொடர்ந்துகொண்டே இருக்கின்றன. இதற்கு காரணமான சிங்கள இராணுவத்தை இப்பொதுக்குழு வன்மையாக கண்டிக்கிறது. இப்பிரச்சனைகளுக்கு நிரந்தர தீர்வுகாண வேண்டுமென மத்திய, மாநில அரசுகளை இப்பொதுக்குழு வற்புறுத்தி கேட்டுக்கொள்கிறது.

தீர்மானம் 9: உயர்நீதிமன்றத்தில் கிரானைட் முறைகேடு குறித்து தாக்கல் செய்யப்பட்ட அறிக்கையின்படி மதுரை மாவட்டத்தில் மட்டும் ஒரு லட்சம் கோடிக்குமேல் முறைகேடுகள் நடைபெற்றுள்ளதாக தெரியவந்துள்ளது. சுமார் ஒரு வருட காலத்திற்கு மேலாக விசாரணை செய்த சகாயம் ஐ.ஏ.எஸ், அதுகுறித்த உண்மைகளை தமிழக மக்கள் மத்தியில் வெளிப்படையாக தெரிவிக்கவேண்டும்.

அதில் சட்ட ரீதியாக பிரச்சனைகள் ஏதேனும் இருந்தால் உயர்நீதி மன்றத்தின் அனுமதியைபெற்று, அறிக்கையின் முழுவிபரங்களை வெளியிடவேண்டும். மேலும் தமிழகம் முழுவதும் மணல், கிராணைட், தாது மணல் போன்ற கனிமவளங்களின் கொள்ளைகளை முழுவதுமாக தடுத்து நிறுத்தி, அதுகுறித்து நேர்மையான அதிகாரிகள் மூலம் விசாரணை செய்திட உயர்நீதிமன்றம் தானாகவே முன்வந்து உத்தரவிடவேண்டுமென இப்பொதுக்குழு வலியுறுத்தி கேட்டுக் கொள்கிறது.

தீர்மானம் 10: தனியார் மின் நிறுவனங்களிடம் அதிக விலைகொடுத்து மின்சாரம் கொள்முதல் செய்வதால், அதற்காக அவர்களுக்கு கொடுக்கப்பட்ட தொகை, கடந்த ஆண்டு தமிழ்நாடு மின்வாரியத்தின் வருமானத்தைவிட அதிகம் கொடுக்கப்பட்டதாக கூறப்படுகிறது. அதாவது பொதுத்துறை மின் நிறுவனங்களிடமிருந்து கொள்முதல் செய்யப்பட்ட மின்சாரத்திற்கான வருமானத்தையும் சேர்த்து, தனியார் மின்நிறுவனங்களுக்கு கொடுக்கப் பட்டுள்ளது.

ஏற்கனவே சூரியசக்தி மின்சாரம் கொள்முதல் செய்ய அதானி நிறுவனத்திடம் அதிக விலைக்கு ஒப்பந்தம் போடப்பட்டதால் சுமார் ஒரு லட்சம் கோடி ரூபாய் தமிழக அரசுக்கு நஷ்டம் ஏற்படுமென கூறப்படுகிறது. இதுபோன்று நிர்வாகத்திறமையின்மையாலும், புதிய மின்னுற்பத்தி திட்டங்கள் எதையும் செயல்படுத்தாமலும், மக்களை ஏமாற்றும் நோக்கில் மின்வெட்டை தற்காலிகமாக சரி செய்வதற்காக, மக்களின் வரிப்பணத்தில் அதிக விலைகொடுத்து மின்சாரம் கொள்முதல் செய்வதையும் இப்பொதுக்குழு வன்மையாக கண்டிக்கிறது.

தீர்மானம் 11: விவசாயத்திற்கு தேவையான அனைத்து இடுபொருட்களின் கடுமையான விலையேற்றத்தாலும், தேவையான நீர் இன்றியும், மின்தடையாலும் விவசாயிகள் அவதிப்படுகின்றனர். ஆனாலும் வேறுவழி தெரியாமல் விவசாயத் தொழிலை தொடர்ந்து செய்து வருகின்றனர்.

பல்வேறு பிரச்சனைகளால் தமிழகத்தில் 250 லட்சம் டன்னாக இருந்த கரும்பு விளைச்சல் 150 லட்சம் டன்னாக குறைந்துள்ள நிலையில் கரும்பு விவசாயிகளுக்கு சுமார் ஆயிரம்கோடி ரூபாய்க்குமேல் சர்க்கரை ஆலைகள் பாக்கி வைத்துள்ளன. மின்சாரம், எத்தனால் தயாரிப்பை ஊக்குவிக்காததால் சர்க்கரை ஆலைகள் நலிவுற்று, ஆயிரக்கணக்கான தொழிலாளர்கள் வேலை இழக்கும் நிலையும் ஏற்பட்டுள்ளது.

எனவே தமிழக அரசு விவசாயிகளுக்கு நிலுவையிலுள்ள பாக்கித்தொகையை உடனடியாக வழங்கவேண்டுமென்றும், கரும்பு உற்பத்திக்கு கூடுதல் செலவாகும் நிலையில் டன் ஒன்றுக்கு 3,500 ரூபாய் வழங்கவேண்டும் என்றும், நேரடி நெல் கொள்முதல் நிலையங்களை அதிகரித்து, ஒரு குவிண்டாலுக்கு ரூபாய் 1,400 மற்றும் 1,470 என வழங்குவதை, மேலும் உயர்த்தி வழங்கவேண்டுமென இப்பொதுக்குழு தமிழக அரசை வலியுறுத்தி கேட்டுக்கொள்கிறது.

தீர்மானம் 12: 2011ல் அதிமுக அரசு ஆட்சியில் அமரும்போது ஒரு லட்சம் கோடி ரூபாயாக இருந்த கடன் தொகையை, தமிழக முதலமைச்சர் ஜெயலலிதா தனது நிர்வாகத் திறமையின்மையால், போக்குவரத்துத்துறை, மின்சாரவாரியம் மற்றும் தமிழக அரசு வாங்கிய கடன் ஆகியவற்றின் மூலம் சுமார் நான்கரை லட்சம் கோடி ரூபாய் அளவிற்கு கடன் தொகையை உயர்த்தியுள்ளார்.

இதைத்தான் தமிழகம் முதலிடத்தை நோக்கிச் செல்வதாக முதலமைச்சர் ஜெயலலிதா சொல்லிக்கொண்டிருக்கிறாரோ? அதிமுக அரசு வாங்கியுள்ள கடன் தொகையால், தமிழகத்தில் சாலை வசதிகள், உள்கட்டமைப்பு வசதிகள் மற்றும் வளர்ச்சி திட்டங்கள் எதையும் செயல்படுத்த முடியாமல், புதிய தொழிற்சாலைகள், புதிய வேலை வாய்ப்பை உருவாக்கமுடியாமல், தமிழகத்தின் ஒட்டுமொத்த வளர்ச்சியும் முடங்கிப் போயுள்ளதை இப்பொதுக்குழு வன்மையாக கண்டிக்கிறது.

தீர்மானம் 13: தமிழகத்தில் லஞ்சம் ஊழலால் அரசு அதிகாரிகளும், அலுவலர்களும் தற்கொலை செய்துகொள்வதும், பணியிலிருந்து விருப்ப ஓய்வு பெறுவதும் என்ற நிலை தொடர்கிறது. வேளாண்மைதுறையில் செயற்பொறியாளர் முத்துகுமாரசாமி, வீட்டு வசதித்துறையில் உதவி செயற்பொறியாளர் பழனிசாமி, சுகாதாரத்துறையில் இணை இயக்குனர் டாக்டர்.அறிவொளி, காவல்துறையின் துணைக் கண்காணிப்பாளர் (DSP) விஷ்ணுப்ரியா, உணவு வழங்கல் துறையின் ஊழியர் இளங்கோ என இறந்தவர்களின் பட்டியல் நீண்டுகொண்டே போகிறது.

இவர்கள் அனைவருமே லஞ்சம், ஊழலுக்கு துணை போகாததால் அவர்களுக்கு நெருக்கடி கொடுக்கப்பட்டு, மன உளைச்சலுக்கும், மன அழுத்தத்திற்கும் ஆளாக்கப்பட்டு தற்கொலை செய்துகொண்டுள்ளனர். இதற்கு காரணமானவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்காமல், கண்டும் காணாமல் இருக்கின்ற தமிழக முதலமைச்சர் ஜெயலலிதாவையும், அதிமுக அரசையும் இப்பொதுக்குழு வன்மையாக கண்டிக்கிறது.

தீர்மானம் 14: விலைவாசி உயர்வை கட்டுப்படுத்துவோம் என்று தமிழக தாய்மார்களிடமும், சகோதரிகளிடமும் வாக்குறுதி கொடுத்து, 2011ல் ஆட்சிக்கு வந்த அதிமுக, தனது வாக்குறுதியை நிறைவேற்றாமல் தமிழக மக்களை வஞ்சித்தும், ஏமாற்றியும் விட்டது. ஆட்சிக்கு வந்து சுமார் ஐந்தாண்டுகளில் பால் விலை, பேருந்து கட்டணம், மின்கட்டணம் மற்றும் அனைத்து அத்தியாவசிய உணவு பொருட்களின் விலையும் விண்ணை முட்டும் அளவிற்கு உயர்ந்துவிட்டது.

இதனால் ஏழை, எளிய மக்கள்தான் பெரும் பாதிப்பிற்கு ஆளாகியுள்ளனர். துவரம்பருப்பு ஒரு கிலோ 225 ரூபாய்க்கும், ஒரு கிலோ வெங்காயமும், தக்காளியும் 100 ரூபாய் என்ற அளவில் விற்பனை செய்யப்பட்டது தமிழக முதலமைச்சர் ஜெயலலிதாவின் இந்த ஆட்சியில்தான்.

என்னை வாழவைக்கும் தெய்வங்களாகிய தாய்மார்களே என்று சொல்லும் ஜெயலலிதா, தாய்மார்களை வாழவைக்க என்ன செய்துள்ளார். விலைவாசி உயர்வுக்கு தார்மீக பொறுப்பேற்காமல், தன் வசதிக்கேற்ப பல்வேறு காரணங்களைக்கூறி, விலைவாசி உயர்வை நியாயப்படுத்தும் தமிழக முதலமைச்சர் ஜெயலலிதாவையும், அதிமுக அரசையும் இப்பொதுக்குழு வன்மையாக கண்டிக்கிறது.

தீர்மானம் 15: லஞ்சத்தையும், ஊழலையும் ஒழிப்போம் என்ற முழக்கத்துடன் தமிழகத்தில் தேமுதிக உருவானது. இந்த முழக்கம் இந்தியா முழுக்க தற்போது எதிரொலிக்கிறது. நல்ல நிர்வாகம், நாட்டின் வளர்ச்சி, மக்கள் நலன் ஆகிய மூன்றும் இன்றியமையாதது. டெல்லி மாநில முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் அலுவலகத்தில் லஞ்சம், ஊழல் குற்றச்சாட்டிற்காக சி.பி.ஐ நேரடியாக சென்று சோதனையிடுகிறது.

ஆனால் தமிழ்நாட்டில் லஞ்சமும், ஊழலும் மலிந்துபோய், தலைவிரித்தாடும் நிலையில், முதலமைச்சரிலிருந்து கவுன்சிலர்வரையும் மற்றும் கூட்டுறவு சங்க நிர்வாகிகள் என அதிமுகவை சார்ந்தவர்கள் அனைவரின் மீதும் பல்வேறு குற்றச்சாட்டுகள் எழுந்துள்ள நிலையில், உண்மை நிலையை தமிழக மக்களுக்கு தெளிவுபடுத்த சி.பி.ஐ விசாரணை நடத்தப்பட வேண்டுமென்றும், தமிழகத்தில் லஞ்சம், ஊழலை ஒழித்திட லோக் ஆயுக்தா அமைப்பை நிறுவிடவேண்டுமென்றும் இப்பொதுக்குழு வலியுறுத்துகிறது.

தீர்மானம் 16: தமிழகத்தின் வளர்ச்சி குறித்த ஆய்வில் 21வது இடத்தில் வேளாண்மைத்துறையும், 13வது இடத்தில் கல்வித்துறையும், 17வது இடத்தில் உள்கட்டமைப்பு வசதி இருப்பதாகவும், ஒட்டுமொத்த மாநிலங்களின் வளர்ச்சியில் இந்திய அளவில் தமிழகம் 20வது இடத்திற்கு பின்தங்கி சென்றுவிட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆனால் இதையெல்லாம் மூடிமறைக்கும் விதமாக, தமிழக முதலமைச்சர் ஜெயலலிதா உலக முதலீட்டாளர்கள் மாநாடு என்ற பெயரில் சுய விளம்பரம்தேடி, ரூபாய் 2.42 லட்சம் கோடிக்குமேல் தமிழகத்திற்கு முதலீடுகள் வந்தது போன்ற மாயத்தோற்றத்தை ஏற்படுத்தியுள்ளார்.

ஆனால் இதுவரையிலும் எதாவது ஒரு முதலீடு, தொழில் துவங்குவதற்காக வந்துள்ளதென கூறமுடியுமா? எந்த ஒரு இடத்திலாவது தொழிற்சாலை துவங்கப்பட்டதாக காண்பிக்க முடியுமா? இது சம்பந்தமாக இந்த அரசு வெள்ளை அறிக்கை வெளியிட தயாரா? சட்ட மன்றத்தில் 110 விதியின்கீழ் வெற்று அறிவிப்புகளை வெளியிடுவது போல, தமிழக மக்களுக்கு 111 (நாமம்) போட்டு ஏமாற்றிய முதலமைச்சர் ஜெயலலிதாவையும், அதிமுக அரசையும் இப்பொதுக்குழு வன்மையாக கண்டிக்கிறது.

தீர்மானம் 17: செம்பரம்பாக்கம் ஏரியை உரிய நேரத்தில் முறையாக திறந்துவிடாமல், இரவு நேரத்தில் எவ்வித முன்னறிவிப்புமின்றி திடீரென ஏரியை திறந்துவிட்டதன் விளைவே, சென்னை மற்றும் புறநகர் பகுதிகளை வெள்ளம் சூழ்ந்தது. ஏரியிலிருந்து குறைந்த அளவில் படிப்படியாக தண்ணீரை திறந்து விட்டிருந்தால், பல லட்சம் மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டதை தவிர்த்திருக்கலாம்.

கூவம், அடையாறு, பக்கிங்ஹாம் கால்வாய் போன்ற ஆறுகளை தூர்வாரி ஆழப்படுத்தாததும் ஒரு காரணமாக அமைந்தது. மழை வெள்ளத்தின்போது முதலமைச்சர் ஜெயலலிதாவை பொதுப்பணித்துறையின் அதிகாரிகளோ, அமைச்சர்களோ, தொடர்பு கொள்ளமுடியாத நிலையில் இருந்ததால்தான் இந்த பேரழிவு ஏற்பட்டுள்ளது. அதற்கு முதலமைச்சர் ஜெயலலிதாவே முழு பொறுப்பையும் ஏற்கவேண்டும். எவ்வித முன்னேற்பாடும் இல்லாமல் செம்பரம்பாக்கம் ஏரியை திறந்து விட்டு, இந்த பேரழிவை ஏற்படுத்திய தமிழக முதலமைச்சர் ஜெயலலிதாவை இப்பொதுக்குழு வன்மையாக கண்டிக்கிறது.

தீர்மானம் 18: சட்டமன்ற தேர்தல் தேதி அறிவிக்கும் முன்பே பேரணி செல்வதற்கு அனுமதி இல்லாத சாலைகளில், காவல்துறை அதிகாரிகள் மற்றும் அரசு அதிகாரிகளின் முழுஒத்துழைப்புடன், அதிமுக அமைச்சர்கள், பாராளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள், உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகள் மற்றும் அரசு அதிகாரிகள் மற்றும் ஊழியர்கள் புடைசூழ பேரணியாக சென்று அதிமுகவினர் தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டுள்ளனர்.

அதிகார துஷ்பிரயோகம், சட்டமீறல்கள் என இப்போதே அதிமுக முறைகேடான தேர்தலுக்கு தயாராகியுள்ளது. இதைப்பார்க்கும் தமிழக மக்களுக்கு, சட்டமன்ற தேர்தல் முறையாக நடைபெறுமா? என்ற அச்சம் ஏற்பட்டுள்ளது. எனவே மத்திய அரசும், இந்திய தேர்தல் ஆணையமும் தமிழகத்தில் சட்டமன்ற தேர்தலை அறிவிக்கும் போதே, தமிழக அதிமுக அரசை கலைத்துவிட்டு, கவர்னர் ஆட்சியை ஏற்படுத்திய பிறகு, தமிழக சட்டமன்ற தேர்தலை எந்தவித முறைகேடுகளும் இல்லாமல் நடத்திட வேண்டுமென இப்பொதுக்குழு வலியுறுத்தி கேட்டுக்கொள்கிறது.

தீர்மானம் 19: தமிழக முதலமைச்சர் செல்கிறார் என்றால் உடனே சாலைகள் போடப்படுகிறது. அதிமுகவினர் இடைவெளி இல்லாமல் பேனர் வைப்பதற்கு ஒரே நாளில் அனுமதி வழங்கப்படுகிறது. அதிமுக பேரணி நடத்துவதென்றால், அதற்கு அனுமதியே இல்லாத நெருக்கடியான சாலைகளில் கூட பேரணிக்கு அனுமதி வழங்கப்படுகிறது. இது மக்களாட்சியா? மன்னராட்சியா? சட்டத்தின் ஆட்சியா? சர்வாதிகார ஆட்சியா?

திருவள்ளூரிலிருந்து தூத்துக்குடி வரை மழை வெள்ள பாதிப்பால் சாலைகள் போக்குவரத்திற்கு ஏற்றதாக இல்லை, அதனால் மக்கள் உயிருக்கு பாதுகாப்பு இல்லை. சுகாதார சீர்கேடு, வாகனங்கள் பழுது என மக்கள் அன்றாடம் பல்வேறு பிரச்சனைகளை சந்தித்து வரும் வேளையில், தமிழக முதலமைச்சர் ஜெயலலிதாவிற்கும், அதிமுகவினருக்கும் மட்டுமே அரசு இயந்திரம் அதிவேகமாக இயங்குகிறது. ஆனால் மக்களுக்காக என்றால், இந்த அரசு இயந்திரம் இயங்காமல் முடங்கிப்போவது ஏன்? முதலமைச்சர் ஜெயலலிதாவிற்கு ஒரு நீதி, சாதாரண, சாமான்ய மக்களுக்கு ஒரு நீதியா? இந்த சர்வாதிகாரப் போக்கை இப்பொதுக்குழு வன்மையாக கண்டிக்கிறது.

தீர்மானம் 20: அதிமுக ஆட்சியில் கழகத்தலைவர் கேப்டன் அவர்கள் மீது, தொடர்ந்து அவதூறு வழக்குகள் தொடுக்கப்பட்டதை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் முறையிட்டு தீர்வை கண்டுள்ளோம். ஆனால் தற்போது அதிமுக அரசு, கழகத்தலைவர் கேப்டன் உட்பட தேமுதிக நிர்வாகிகள் மீதும், தொண்டர்கள் மீதும் பல்வேறு குற்றப்பிரிவுகளில் வழக்கு பதிவு செய்து அவர்களை பழிவாங்கும் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளது.

தஞ்சாவூர் மற்றும் தமிழகத்தின் பல இடங்களில் கழகத்தின் பேனர்களை அடித்து நொறுக்கியும், தீயிட்டு கொளுத்தியும், உருவ பொம்மையை எரித்தும், வன்முறை வெறியாட்டம் நடத்திய அதிமுகவினர் மீது பெயரவில் மட்டும் வழக்குப்பதிவு செய்துவிட்டு, தேமுதிகவை சார்ந்தவர்கள் 50க்கும் மேற்பட்டவர்கள் மீது வழக்கு பதிவு செய்தது மட்டுமல்லாமல், கும்பகோணத்தில் தேமுதிக வேன் தாக்கப்பட்டதில் படுகாயமுற்று, அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப் பட்டிருந்தவர்கள் நள்ளிரவில் கைது செய்யப்பட்டு 13 நபர்கள் சிறையில் அடைக்கப் பட்டுள்ளனர்.

சென்னையில் உள்ள காவல் நிலையத்தில் கழக தலைவர் கேப்டன் அவர்களுக்கு பாதுகாப்பு அளிக்க கோரி புகார்மனு அளிக்கசென்ற, அத்தொகுதியின் (விருகம்பாக்கம்) சட்டமன்ற உறுப்பினரும், கழக தலைமை நிலைய செயலாளருமான ப.பார்த்தசாரதி மற்றும் அவருடன் இருந்த 18 நபர்களையும் கைதுசெய்து சிறையில் அடைத்துள்ளனர். 100க்கும் மேற்பட்டவர்கள் மீது வழக்கு பதிவும் செய்யப்பட்டுள்ளது.

சென்னையில் நடைபெற்ற மனித சங்கிலி போராட்டத்தின்போது கழக நிர்வாகிகளையும், தொண்டர்களையும் காவல்துறையினர் கண்மூடித்தனமாக தாக்கி பலரும் படுகாயமுற்றனர். இதுபோன்று காவல்துறையை ஏவல்துறையாக்கி தேமுதிகவை பழிவாங்கும் தமிழக முதலமைச்சர் ஜெயலலிதாவையும், அதிமுக அரசையும் இப்பொதுக்குழு வன்மையாக கண்டிக்கிறது.

தீர்மானம் 21: தமிழக சட்டமன்றத்தில் மக்கள் பிரச்சனைகளுக்காக குரல்கொடுத்த தேமுதிகவின் அனைத்து சட்டமன்ற உறுப்பினர்களையும், ஜனநாயக கடமையாற்றவிடாமல் ஒரு கூட்டத்தொடர் முழுவதும் பங்கேற்கமுடியாத வகையில் சட்டமன்றத்திலிருந்து வெளியேற்றியது.

அதே காரணத்திற்காக சட்டமன்ற உறுப்பினர்கள் அழகாபுரம் ஆர்.மோகன்ராஜ், வி.சி.சந்திரகுமார், எல்.வெங்கடேசன், எஸ்.ஆர்.பார்த்திபன், சேகர், கே.தினகரன் ஆகிய ஆறு சட்டமன்ற உறுப்பினர்களையும், மீண்டும் சட்டமன்ற நிகழ்சிகளில் பங்கேற்கமுடியாத வகையிலும், அவர்கள் சட்டமன்ற உறுப்பினராக செயலாற்ற முடியாத வகையிலும் சுமார் ஒரு வருட காலமாக இடைநீக்கம் செய்து, அதிமுக அரசு காழ்ப்புணர்ச்சியுடன் பழிவாங்கி வருகிறது.

எனவேதான் சட்டமன்ற நிகழ்வுகளை அனைத்து தொலைக்காட்சிகளிலும் ஒளிபரப்புசெய்ய அனுமதிக்கவேண்டுமென தேமுதிக நீதிமன்றம் சென்றுள்ளது. தமிழக மக்களின் நியாயமான பிரச்சனைகளுக்காக தொடர்ந்து குரல்கொடுக்கும் தேமுதிகவை, தமிழக முதலமைச்சர் ஜெயலலிதா திட்டமிட்டு பழிவாங்குகிறார். ஆளும் அதிமுகவிற்கு ஒரு நியாயம் தேமுதிகவிற்கு ஒரு நியாயமென செயல்படும் தமிழக முதலமைச்சர் ஜெயலலிதாவையும், அதிமுக அரசையும் இப்பொதுக்குழு வன்மையாக கண்டிக்கிறது.

தீர்மானம் 22: லஞ்சம், ஊழல் காரணமாக ஆட்சியை இழந்த ஜெயலலிதா, தனது தவறை திருத்திக் கொண்டிருப்பார் என்ற நம்பிக்கையிலும், தமிழக மக்களுக்கு நல்லாட்சியை வழங்குவார் எனக்கருதியும் அதிமுகவின் ஆட்சி தமிழகத்தில் அமைய தேமுதிகவும் காரணமாக இருந்தது. ஆனால் மக்கள் நலனைப்பற்றி கவலை கொள்ளாத தமிழக முதலமைச்சர் ஜெயலலிதாவின் தரம்தாழ்ந்த தலைமையை ஏற்று, அதிமுக ஆட்சியமைந்திட பாடுபட்டதற்காக தேமுதிக வெட்கப்படுகிறது. தமிழக மக்களுக்கு விரோதமாக செயல்படும் தமிழக முதலமைச்சர் ஜெயலலிதாவின் தலைமையிலான அதிமுக ஆட்சியை அகற்ற இப்பொதுக்குழு ஏகமனதாக உறுதி ஏற்கிறது.

தீர்மானம் 23: தேசிய முற்போக்கு திராவிட கழகம் தமிழ்நாட்டில் மாபெரும் அரசியல் இயக்கமாக தமிழக மக்களால் உருவாக்கப்பட்டுள்ளது. பல்வேறு தேர்தல்களை இந்த இயக்கம் கண்டிருந்தாலும், வருகின்ற 2016ம் ஆண்டு நடைபெறவுள்ள தமிழக சட்டமன்ற தேர்தலில் தேமுதிக எந்த மாதிரியான நிலையை எடுக்கும் என்பதை அனைத்து தரப்பு மக்களும் எதிர்பார்த்து கொண்டுள்ளனர்.

தமிழகத்தின் வளர்ச்சிக்கும், மக்கள் நலனுக்கும், ஏழை, எளிய நடுத்தர மக்களின் முன்னேற்றத்தை கருத்தில் கொண்டும், சட்டமன்ற தேர்தலில் தேமுதிக எத்தகைய முடிவெடுக்க வேண்டும் என்பது குறித்த முழு அதிகாரத்தையும் இப்பொதுக்குழு தேமுதிக நிறுவனத் தலைவரும், கழக பொதுச் செயலாளருமான கேப்டன் விஜயகாந்த் அவர்களுக்கு ஏகமனதாக வழங்கி தீர்மானிக்கின்றது. இவ்வாறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளன.

English summary
DMDK General Council today passes resolution seeking a ban on sale of liquor in Tamilnadu and slams Jayalalitha.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X