மறுபடியும் 'கை' பிடிப்பதா, இல்லை 'தாமரை'யைப் பறிப்பதா.. குழப்பத்தில் திமுக?
சென்னை: மீண்டும் காங்கிரஸுடன் கூட்டணி அமைக்கக் கூடாது என்று திமுகவில் பலரும் கருத்து தெரிவித்து வருவதால், வரும் லோக்சபா தேர்தலில் என்ன மாதிரியான கூட்டணியை மேற்கொள்வது என்ற குழப்பத்தில் திமுக இருப்பதாக கூறப்படுகிறது.
தற்போது காங்கிரஸ் கூட்டணியில் திமுக இல்லை. மத்திய அமைச்சரவையிலும் திமுக இல்லை. இருப்பினும் காங்கிரஸுடன் முழுமையான விரோதத்திலும் திமுக இருப்பதாக தெரியவில்லை.
அதேசமயம், மீண்டும் காங்கிரஸுடன் கூட்டணி வைக்க திமுகவுக்குள்ளேயே கடும் எதிர்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது. இதனால் கூட்டணி தொடர்பாக திமுக தலைமை சற்றே குழப்பத்தில் இருக்கிறதாம்.

மறுபடியும் சேர்ந்தால் சிக்கலாகி விடும்
நான்கு மாநில சட்டசபைத் தேர்தலில் காங்கிரஸ் பெரும் தோல்வியைச் சந்தித்துள்ள நிலையில், அக்கட்சியுடன் கூட்டணி வைத்தால் அது திமுகவுக்கு பெரும் பாதகமாக அமையும் என்று திமுகவில் பலரும் கருதுகிறார்களாம்.

மாவட்டச் செயலாளர்கள் எதிர்ப்பு
முக்கியமாக, திமுக மாவட்டச் செயலாளர்கள், காங்கிரஸுடன் மீண்டும் கூட்டணி வைக்கக் கூடாது என்று மு.க.ஸ்டாலினிடம் தெரிவித்துள்ளனராம்.

ஸ்டாலினுக்கும் உடன்பாடில்லை
அதேபோல, திமுக பொருளாளர் மு.க.ஸ்டாலினுக்கும் கூட காங்கிரஸுடன் கூட்டணி சேருவதில் உடன்பாடு இல்லை என்று சொல்கிறார்கள்.

மக்களிடையே காங். எதிர்ப்பு அலை
மேலும் மக்களிடையே தற்போது காங்கிரஸுக்கு எதிரான அலை வீசுவதால், அக்கட்சியுடன் கூட்டணி அமைத்தால் அது திமுகவுக்கு ஆபத்தாகவே முடியும் என்பது திமுக தலைவர்கள் பலரின் வாதமாகும். எனவே காங்கிரஸிடமிருந்து விலகியிருப்பதே நல்லது என்றும் இவர்கள் சொல்கிறார்கள்.

பாஜகவுடன் உறவுக்கு சிலர் முயற்சி
மறுபக்கம் பாஜகவுடன் உறவை ஏற்படுத்த சிலர் முயற்சித்து வருவதாக தெரிகிறது. இதுகுறித்து திமுகவைச் சேர்ந்த மூத்த எம்.பி. ஒருவர் டெல்லி பாஜக தலைவர்களை ரகசியமாக சந்தித்து வருகிறாராம். இவர் ஸ்டாலின் ஆதரவாளர் ஆவார்.

காங்கிரஸ் கஷ்டம்.. பாஜகவுக்கு வாய்ப்புண்டு
இதுகுறித்து சில திமுக தலைவர்கள் கூறுகையில், காங்கிரஸுடன் கூட்டணி என்பது வாய்ப்பு குறைவுதான். அதேசமயம், பாஜகவுடனான கூட்டணிக்கு வாய்ப்பு இல்லை என்பதை மறுக்க முடியாது என்கிறார்கள்.

கருணாநிதி அமைதி
இந்த விவகாரத்தில் இதுவரை திமுக தலைமை முடிவு எதையும் எடுத்தது போலத் தெரியவில்லை. கூட்டணி குறித்து வெளிப்படையாக விவாதிக்க திமுக தலைவர் கருணாநிதியும் மறுத்து விட்டார். அதுகுறித்து அவர் அமைதி காக்கிறார்.

விஜயகாந்த்தும் வேண்டாமாம்
கடந்த ஆகஸ்ட் மாதம் நடந்த மாவட்டச் செயலாளர்கள் கூட்டத்தில் கலந்து கொண்ட பெரும்பாலான செயலாளர்கள், லோக்சபா தேர்தலில் காங்கிரஸ், தேமுதிகவுடன் இணைந்து பெரும் கூட்டணி அமைக்கலாம் என்று யோசனை கூறினார்கள். ஆனால் இப்போது அவர்கள் தங்களது நிலைப்பாட்டை மாற்றி விட்டனராம்.

மோடியை நம்பிப் போனால்...
இதற்கிடையே, சில தலைவர்கள் மிகுந்த நிதானத்தோடு இந்த விவகாரத்தை அணுக வேண்டும் என்று தலைமையிடம் கூறியுள்ளனராம். மோடி அலை, நாடாளுமன்றத் தேர்தலில் பயன்படலாம். ஆனால் தமிழக சட்டசபைத் தேர்தலுக்கு அது நிச்சயம் உதவாது. எனவே அதையும் மனதில் கொண்டு எந்த முடிவையும் எடுக்க வேண்டும் என்று அவர்கள் தலைமைக்கு எடுத்துரைத்துள்ளார்களாம்.
பார்க்கலாம், கருணாநிதி என்ன முடிவெடுக்கிறார் என்பதை.












Click it and Unblock the Notifications