இந்தி திணிப்பா?... உயிரை கொடுத்தாவது இளைஞர்கள் தமிழைக் காப்பார்கள் - ஸ்டாலின்

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: தமிழகத்தின் இருமொழி கொள்கை மற்றும் தமிழுக்கு ஆபத்து என்றால் இளைஞர்களும், திமுகவினரும் உயிரை கொடுத்து தமிழை காப்பார்கள் என்று திமுக செயல்தலைவர் ஸ்டாலின் கூறியுள்ளார்.

இது தொடர்பாக மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கை:

தமிழகத்தில் இந்தி மற்றும் சமஸ்கிருதத்தை திணிக்கும் அடுத்தகட்ட முயற்சியாக ஜவஹர் நவோதய வித்யாலயா பள்ளிகளை கொண்டுவரத் திட்டமிடும் மத்திய பாஜ அரசுக்கு கண்டனத்தை தெரிவித்துக் கொள்கிறேன்.

DMK cadre lay down their lives -Stalin warns Centre

இந்தப் பள்ளிகளை தமிழகத்தில் அனுமதிக்க வேண்டும் என்று சென்னை உயர் நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவிட்ட வழக்கில், உறுதியுடன் இருமொழி கொள்கையை எடுத்து வைக்காமல் அலட்சியம் காட்டிய குதிரை பேர அதிமுக அரசுக்கும் கடும் கண்டனத்தைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

இப்பள்ளிகளில் ஆறாம் வகுப்பிலிருந்து 10ம் வகுப்பு வரை தமிழில் கற்பிக்கப்படும் என்று கூறப்பட்டு இருந்தாலும், கட்டாயம் என்ற வார்த்தை இடம்பெறவில்லை. தமிழகத்தில் இந்தப் பள்ளிகளை தொடங்க அனுமதித்தால், கிராமங்கள் தோறும் இந்தி விழா கொண்டாட்டம் படு விமரிசையாக நடக்கும்.

இந்தப் பள்ளிகளில் தமிழகத்தைச் சேர்ந்தவர்கள் ஆசிரியர் பணிக்கு செல்ல விரும்பினால், நிச்சயம் இந்தியில் தேர்ச்சி பெற்றவராக இருக்கும் சூழல் உருவாகும்.

உண்மையிலேயே கிராமப்புற மாணவர்கள் முன்னேற்றத்தில் பா.ஜ.க. அரசுக்கு அக்கறை இருக்குமென்றால், மாநில அரசுக்கு வழங்கும் கல்வி நிதியுதவியை அதிகரித்துக் கொடுக்க வேண்டும்.

மிக முக்கியமாக, அரியலூர் அனிதாவைப் பலி கொண்ட மருத்துவக் கல்விக்கான நீட் தேர்வை உடனடியாக ரத்து செய்து, நீட் தேர்விலிருந்து நிரந்தரமாக விலக்கு அளிக்கும் தமிழக சட்டமன்றத்தின் இரு மசோதாக்களுக்கு குடியரசுத் தலைவரின் ஒப்புதலை விரைவில் பெற்றுக் கொடுங்கள்.

அதை விடுத்து, மிகப்பெரிய மொழிப் போராட்டத்தின் விளைவாக, எண்ணற்ற மாணவர்கள் மற்றும் இளைஞர்களின் உயிர்த் தியாகத்தில் உருவான இருமொழிக் கொள்கைக்கும், தமிழ் மொழிக்கும் ஆபத்து ஏற்படுத்தும் வகையில் மத்தியில் உள்ள பாஜக அரசு செயல்படும் என்றால், அதை தமிழகத்தில் உள்ள இளைஞர்களும், திமுக தொண்டர்களும் தங்களது இன்னுயிரை கொடுத்தாவது தமிழ் மொழிக் காப்பார்கள் என்பதை உறுதியுடன் தெரிவித்துக் கொள்கிறேன்.
பாஜக மற்றும் அதிமுக அரசுகள் கூட்டணி வைத்து, மீண்டுமொரு மொழிப் புரட்சிக்கு வித்திட்டுவிட வேண்டாம் என்று எச்சரிக்க விரும்புகிறேன்.

வாழ்க்கைத் துணையை தேடுகிறீர்களா? தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

English summary
The youth of Tamil Nadu and DMK cadre would lay down their lives if the Centre acted against the two-language policy and primacy of Tamil, DMK working president M.K. Stalin said.
Please Wait while comments are loading...