For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

கோவை மாமன்ற கூட்டத்தில் அடிதடி... மேஜை உடைப்பு... பாட்டில் வீச்சு: திமுக கவுன்சிலர்கள் கைது

By Mayura Akilan
Google Oneindia Tamil News

கோவை: கோவை மாநகராட்சி பட்ஜெட் கூட்டத்தில் திமுக, அதிமுகவினர் மோதிக் கொண்ட சம்பவத்தால் பரபரப்பு ஏற்பட்டது. இதில் மாநகராட்சி மேயரின் மேஜை உடைக்கப்பட்டது. பாட்டில் வீச்சு, சட்டை கிழிப்பு என கோவை மாமன்றமே போர்களமாக மாறியது. தகராறில் ஈடுபட்டதாக 9 திமுக கவுன்சிலர்கள் கைது செய்யப்பட்டனர்.

கோவை மாநகராட்சி பட்ஜெட் கூட்டம் இன்று நடைபெற்றது. இதில் 76.87 கோடி ரூபாய்க்கு பற்றாக்குறை பட்ஜெட்டை நிதிக்குழுத்தலைவர் பிரபாகரன் தாக்கல் செய்தார். மாநகராட்சி பட்ஜெட் அறிவிப்புகளை மேயர் ராஜ்குமார் அறிவித்தார். இதைத்தொடர்ந்து பட்ஜெட் மீதான விவாதம் மதியம் 2 மணிக்கு நடைபெறும் எனச்சொல்லி பட்ஜெட் கூட்டத்தை ஒத்திவைத்தார்.

பட்ஜெட் புத்தகத்தை படிக்க அவகாசம் தேவை என்றும், விவாதத்தை தள்ளி வைக்க வேண்டும் என்றும் மார்க்சிஸ்ட், திமுக கவுன்சிலர்கள் வலியுறுத்தினர். ஆனால் இதை கண்டுகொள்ளாத மாநகராட்சி மேயர் மன்றத்தில் இருந்து வெளியேறினார். இதனால் ஆவேசமடைந்த திமுக கவுன்சிலர்கள், ஆண்டுதோறும் ஒரே அறிவிப்புகளை பட்ஜெட்டில் வெளியிட்டு வருவதாகவும், பட்ஜெட் புத்தகத்தின் நிறம் மட்டுமே மாறுவதாகவும் குற்றம் சாட்டினர்.

மேயர் மேஜை முன்பு கோஷமிட்டனர். மேலும் 4 ஆண்டுகளில் மாநகராட்சியில் மேற்கொள்ளப்பட்ட திட்டங்களை வெள்ளை அறிக்கையாக வெளியிட வேண்டும் என வலியுறுத்தியும் அவர்கள் முழக்கங்கள் எழுப்பினர். அப்போது திமுக கவுன்சிலர்களுக்கு எதிராக மேயர் மேஜை முன் கூடிய அதிமுக கவுன்சிலர்கள், முதல்வர் வாழ்க என்று முழக்கமிட்டனர்.

DMK councillors held after they clash with AIADMK members in Coimbatore

இதனால் இரு தரப்பினருக்குமிடையே மோதல் உருவானது. இதில் ஏற்பட்ட தள்ளுமுள்ளுவில் மாநகராட்சி மேயர் மேஜை இழுத்து உடைக்கப்பட்டது. மேலும் கவுன்சிலர்கள் ஒருவரையொருவர் தாக்கிக்கொண்டதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. சட்டையை கிழித்துக்கொண்டும், பாட்டில்களை ஒருவர் மீது ஒருவர் வீசியும் தாக்குதல் நடத்திக்கொண்டனர்.

தொடர்ந்து மன்றக்கூட்டத்தில் இருந்து வெளியேறிய கவுன்சிலர்கள், மாநகராட்சி மன்றத்துக்கு வெளியேயும் மோதிக்கொண்டனர். அப்போது அங்கு இருந்த செய்தியாளர்களுக்கு திமுக கவுன்சிலர்கள் பேட்டிக் கொடுத்துக்கொண்டிருந்தபோது, அவர்களை அதிமுக கவுன்சிலர்கள் தாக்க முற்பட்டதால் அங்கு பரபரப்பு நிலவியது.

செருப்புகளை தூக்கிக்கொண்டும், தகாத வார்த்தைகளால் திட்டிக்கொண்டும் கவுன்சிலர்கள் மோதிக்கொண்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதையடுத்து திமுக கவுன்சிலர்கள் 9 பேர் கைது செய்யப்பட்டனர்.

கோவை நகரின் முக்கிய பகுதியில் மாநகராட்சி அமைந்துள்ளது. மாமன்றத்திற்குள்ளே நடைபெற வேண்டிய விவாதம் அடிதடியாக மாறியதால், வெளியே வந்து மோதலில் ஈடுபட்டது பொதுமக்களை முகம் சுளிக்க வைத்தது. இந்த தாக்குதலில் காயமடைந்ததாக திமுக, அதிமுகவினர் இரு தரப்பு கவுன்சிலர்களும் குற்றம் சாட்டினர்.

கடந்த பட்ஜெட் கூட்டத்திலும் திமுக, அதிமுக கவுன்சிலர்களிடையே மோதல் ஏற்பட்டது குறிப்பிடத்தக்கது.

English summary
Police arrested nine DMK councillors after they clashed with AIADMK members during the budget session of the Coimbatore Corporation council on Friday.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X