வரும்.. வராது.. அங்கிட்டு இங்கிட்டு. தொடங்கிவிட்ட சட்டசபை தேர்தல் கூட்டணி 'கால்குஷேன்கள்'

Subscribe to Oneindia Tamil

சென்னை: தமிழக சட்டசபை தேர்தலுக்கு ஓராண்டு காலம் இருந்தாலும் அரசியல் ஆடுகளத்தில் இப்போதே கூட்டல் கழித்தல் கால்குலேஷன்கள் படுஜோராக தொடங்கிவிட்டன.

தமிழக தேர்தல் களத்தைப் பொறுத்தவரை தி.மு.க, அ.தி.மு.க. என்ற இரண்டு பிரதான கட்சிகளின் தலைமையில்தான் கூட்டணி அமைவது வழக்கம். ஆனால் அண்மைக்காலமாக இந்த பார்முலா மரணிக்கத் தொடங்கிவிட்டது.

லோக்சபா தேர்தலின் போதுகூட இப்படியான ஒரு தோற்றம் இருக்கத்தான் செய்தது.. அண்ணா தி.மு.க. அணியில் இடதுசாரிகளும் தி.மு.க. அணியில் தே.மு.தி.க. உள்ளிட்ட பிற கட்சிகளும் இடம்பெறலாம் என்கிற நிலை இருந்தது..

தலையெடுத்த பா.ஜ.க.

தலையெடுத்த பா.ஜ.க.

ஆனால் லோக்சபா தேர்தல் என்பதாலும் மத்தியில் ஆட்சி செய்த காங்கிரஸ் நிச்சயம் தோற்கும் என்பதாலும் கடந்த முறை மூன்றாவது அணி ஒன்றும் உருவானது.. பாரதிய ஜனதா தலைமையில் பரம எதிரிகளாக இருந்த தே.மு.தி.க, பா.ம.க. இணைந்தன... வழக்கம் போல கூட்டணியில் முதல் ஆளாக ம.தி.மு.க. இடம்பிடித்தது..

சீண்டுவாரில்லா தி.மு.க.

சீண்டுவாரில்லா தி.மு.க.

எதிர்பார்க்கப்பட்டது போல இந்த அணி தேர்தல் முடிந்த கையோடு வனவாசம் கண்டது. அதன் பின்னர் ஸ்ரீரங்கம் இடைத்தேர்தலிலும் கூட தி.மு.க., அனைத்து எதிர்க்கட்சிகளிடம் ஆதரவு கேட்டுப் பார்த்தது.. ஆனால் எவரும் தி.மு.க.வை சீண்டுவாராக இல்லை.

கழன்று கொண்ட சிறுத்தை

கழன்று கொண்ட சிறுத்தை

அட தி.மு.க.வுடனேயே இருந்து வந்த விடுதலை சிறுத்தைகள் கட்சி கூட அதனை கண்டுகொள்ளாமல் போன காட்சியும் அரங்கேறியது.. தற்போது மீண்டும் கூட்டணி கால்குலேஷன்களுக்கு கால்கள் முளைத்துவிட்டன.. இறக்கை முளைத்து முழு உருவம் பெறுவதற்குள் அதன் மொத்த உருவமே தாறுமாறாகப் போகத் தொடங்கிவிடும் என்பதிலும் மாற்றம் இல்லை..

அண்ணா தி.மு.க. நிலை

அண்ணா தி.மு.க. நிலை

அண்ணா தி.மு.கவைப் பொறுத்தவரையில் தற்போதைய நிலையில் அது வழக்கம் போல ஒன்றிரண்டு சிறு கட்சிகளுடன் களம் காணவே வாய்ப்பு உண்டு. அப்படியே சிறு கட்சிகளை அணிக்காக சேர்த்தாலும் கூட இரட்டை இலை சின்னத்தில்தான் நிற்க வைக்கும்.. அக்கட்சியைப் பொறுத்தவரையில் அதிக தொகுதிகளில் போட்டியிட வேண்டும்.. என்பதுதான் இலக்காக இருக்கும்.

வி.சி. தாவும்?

வி.சி. தாவும்?

அண்ணா தி.மு.க. அணியில் புதிய வரவாக விடுதலைச் சிறுத்தைகள் இடம்பிடிக்கும் நிலை உள்ளது. அந்த அணியில் ஏற்கெனவே வேல்முருகனின் வாழ்வுரிமைக் கட்சி இருக்கிறது. வாழ்வுரிமைக் கட்சி ப்ளஸ் திருமா ப்ளஸ் அண்ணா தி.மு.க. என்கிற போது வடமாவட்டங்களில் பெரும் வெற்றியை பெற முடியும் என்றும் கருதலாம்... இடதுசாரிகளை சேர்த்துக் கொண்டு சவாரி செய்வது கூடுதல் சுமைதான் என கருதி வழக்கம் போல அண்ணா தி.மு.க. கழற்றிவிடவே வாய்ப்புண்டு...

கஷ்டகாலத்தில் தி.மு.க.

கஷ்டகாலத்தில் தி.மு.க.

தி.மு.க.வைப் பொறுத்தவரையில் இலவு காத்த கிளிதான்.. தே.மு.தி.க., காங்கிரஸ், பா.ம.க, இடதுசாரிகள் என அனைத்து கட்சிகளையும் இணைத்துக் கொண்டுதான் தேர்தலை சந்தித்தாக வேண்டிய நெருக்கடி அக்கட்சிக்கு இருக்கிறது... அதனால் இத்தனை கட்சிகளையும் வளைத்துப் போட பகீரத பிரயத்தனங்களை தி.மு.க. மேற்கொள்ளத்தான் செய்யும்.

ஸ்டாலினுக்கு அக்னி பரீட்சை

ஸ்டாலினுக்கு அக்னி பரீட்சை

கடந்த லோக்சபா தேர்தலில்தான் முதல் முறையாக மு.க.ஸ்டாலின் கூட்டணி முயற்சிகளை முன்னெடுத்தார். அது படுதோல்வியில் முடிந்தது. இதனால் இம்முறை அவர் முன்னெடுக்கும் கூட்டணி முயற்சி வெற்றி பெற்றாக வேண்டும்.. இல்லையெனில் மு.க.ஸ்டாலினுக்கு அது பெரும் சறுக்கலாக இருக்கும்.. அரசியல் அரங்கில் அவர் மீதான குறிப்பாக அவர் தலைமைப் பதவிக்கு தகுதியானவர்தானா என்பதற்கான அக்னி பரீட்சையாகவும் அது இருக்கும்.

முதல்வர் கனவு

முதல்வர் கனவு

அண்ணா தி.மு.க.வை வீழ்த்தி ஆட்சியை தி.மு.க. கைப்பற்றியாக வேண்டும்; ஸ்டாலின் முதல்வராக வேண்டும் என்ற கட்டாயமும் தி.மு.கவுக்கு இருக்கிறது.. ஸ்டாலினுக்கு இப்போது இல்லையெனில் எப்போது? என்ற புதிய கலக முழக்கம் வந்துவிடக் கூடாதே என்கிற கவலையும் தி.மு.க. தலைமைக்கு இருக்கிறது..இதனால் தலைகீழா நின்று தண்ணி குடித்தேனும் மெகா கூட்டணி அமைக்க போராடும்..

தே.மு.தி.க.வின் அங்கிட்டு இங்கிட்டு

தே.மு.தி.க.வின் அங்கிட்டு இங்கிட்டு

தற்போதைய நிலையில் தி.மு.க.- தே.மு.தி.க. இடையே இணக்கமான நிலை இருக்கிறது. அதே நேரத்தில் 'அங்கிட்டு இங்கிட்டு' என்ற வழக்கமான ஊசலாட்டத்துடன் தே.மு.தி.க. இருந்தும் வருகிறது. அண்மையில் பாரதிய ஜனதா கட்சி, மத்திய அரசு வழக்கறிஞர்கள் பதவிகளை அப்படியே தே.மு.தி.க.வுக்கு அள்ளிக் கொடுத்து தூண்டில் போட்டு வைத்திருக்கிறது. இந்த தூண்டிலை வெட்டிவிட்டு தே.மு.தி.க.வை லாவகமாக தி.மு.க. அணிக்கு கொண்டு வந்தாக கட்டாயம் மு.க.ஸ்டாலினுக்கு இருக்கிறது.

ஆம் ஆத்மி கனவில் பா.ம.க.

ஆம் ஆத்மி கனவில் பா.ம.க.

தி.மு.க.- அண்ணா தி.மு.க.வுடன் கூட்டணியே கிடையாது நாங்கள் ஒரு ஆம் ஆத்மி.. என்ற கனவில் மிதக்கிறது பா.ம.க. ஆனால் இந்த கனவெல்லாம் வேஸ்ட்.. வாங்க.. வந்து சேருங்க என்று இழுத்துக் கொண்டிருக்கிறது தி.மு.க... இதற்கான பேச்சுவார்த்தைகளும் மும்முரமாக நடக்கிறது என்கின்றன அறிவாலய வட்டாரங்கள்...

இடதுசாரிகள்

இடதுசாரிகள்

இடதுசாரிகளைப் பொறுத்தவரையில் தி.மு.க.வுடன் கூட்டணி சேருவதுதான் குறைந்த பட்ச மரியாதைக்கு வழி.. இதை உணர்ந்தும் உணராமல் ஸ்ரீரங்கம் தொகுதியில் மூக்குடைபட்ட கதையாகவும் அவர்கள் விலகிப் போக வாய்ப்பிருக்கிறது..

காங்கிரஸ்

காங்கிரஸ்

காங்கிரஸ் கட்சியைப் பொறுத்தவரையில் ஒரே ஒரு பிடி தி.மு.க.தான்.. வேற வழியில்லை.. தி.மு.க.வும் 'மதச்சார்பின்மை' 'மக்கள் நலன்' என மாய்மால வார்த்தைகள் சொல்லி அரவணைத்துப் போகக் கூடும்..

பம்மாத்து பா.ஜ.க.

பம்மாத்து பா.ஜ.க.

தமிழக சட்டசபை தேர்தலை பாரதிய ஜனதா ரொம்பவே எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறது.. அதன் உண்மை பலம் என்ன என்பது ஸ்ரீரங்கத்தில் தெரிந்து போனதுதான்.. ஆனாலும் கீழே விழுந்தாலும் மீசையில் மண் ஒட்டலையே கதையாகி வெற்று ஜாலம் பேசி மிகப் பெரிய பலம் தங்களுக்கு இருப்பதாக மாயத் தோற்றத்தை உருவாக்கிக் கொண்டிருக்கிறது.. தோற்கிற குதிரையான பாரதிய ஜனதா மீது சவாரி செய்ய 'தேர்தல் செலவு'களுக்கு காத்திருக்கும் கட்சிகள்தான் முன்வரும்..

ம.தி.மு.க.

ம.தி.மு.க.

இத்தனை களேபரத்தில் மறுமலர்ச்சி தி.மு.க. என்ன செய்யும்? தி.மு.க.வுடன் கூட்டணி அமைக்கும் என்கிற போக்கை சில மாதங்களுக்கு முன்னர் வெளிப்படுத்தியது அக்கட்சி.. ஆனால் ஒரே போடாக ஏதோ ஒரு தைரியத்தில் தி.மு.க.- அ.தி.மு.க.வுடன் கூட்டணியே கிடையாது என்று அடித்துச் சொன்னார் ம.தி.மு.க. பொதுச்செயலர் வைகோ.. இம்முறை தேர்தல் களத்தை விட்டு அவர் போய்விடப் போவதில்லைதான்..

மீண்டும் ஈழத் தாய்?

மீண்டும் ஈழத் தாய்?

அண்மைக்காலமாக ஒருசில பிரச்சனைகளில் அண்ணா தி.மு.க.வை பாராட்டி வருகிற போக்கைப் பார்த்தால் "ஈழத் தாய்" கோஷத்தை வைகோ, திருமா, வேல்முருகன் மூவரும் இணைந்து முன்னெடுக்கலாம்.. என்கிற வகையில் அண்ணா தி.மு.க. அணியில் ம.தி.மு.க. இணையலாம் என தெரிகிறது..'அரசியலில் நிரந்தர எதிரியும் இல்லை நண்பனும் இல்லை' 'காலமும் மாறி காட்சிகளும் மாறின' என்கிற அரசியலுக்கே உரித்தான மொழிகளுக்கு தமிழக தேர்தல் களம் மட்டும் என்ன விதிவிலக்காக இருக்கவா போகிறது?

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+