
தினகரன் கோஷ்டி அதிமுக எம்.எல்.ஏ. வெளிநடப்பு- சட்டசபையில் மேஜையை தட்டி வரவேற்ற திமுக!
சென்னை: ஆளும் அதிமுக அரசுக்கு எதிராக அதிமுக எம்.எல்.ஏ. தங்க தமிழ்ச்செல்வன் வெளிநடப்பு செய்ததற்கு சட்டசபையில் திமுக உறுப்பினர்கள் மேஜையை தட்டி வரவேற்றனர்.
முதல்வராக ஓபிஎஸ் இருந்தபோது திமுக எம்.எல்.ஏக்களுடன் சிரித்து பேசுகிறார் என குற்றம்சாட்டி அவரது பதவியை பறித்தது சசிகலா கோஷ்டி. அதுவும் திமுகவுடன் ஓபிஎஸ் நெருக்கமாக இருப்பதாக நள்ளிரவு நேரத்தில் கோபத்தின் உச்சியில் நின்று சசிகலா பேட்டி கொடுத்திருந்தார்.

இதன்பின்னர் அதிமுகவின் சசிகலா கோஷ்டி தொடர்ந்து ஓபிஎஸ் அணிக்கு திமுக ஆதரவளிப்பதாக குற்றம்சாட்டி வந்தனர். தற்போது அதிமுகவின் தினகரன் கோஷ்டி எம்.எல்.ஏ. தங்க தமிழ்ச்செல்வன் முதல்வர் எடப்பாடி தலைமையிலான அரசைக் கண்டித்து இன்று சட்டசபையில் இருந்து வெளிநடப்பு செய்தார்.
தமது ஆண்டிபட்டி தொகுதியில் ஆரம்ப சுகாதார நிலையம் அமைக்க வேண்டும் என்ற கோரிக்கையை நிறைவேற்றவில்லை; இதற்கு அமைச்சர் பதில்தர மறுத்துவிட்டார் என கூறி தங்க தமிழ்ச்செல்வன் வெளிநடப்பு செய்தார்.
ஆளும் கட்சி எம்.எல்.ஏ.வே அரசைக் கண்டித்து சட்டசபையில் இருந்து வெளிநடப்பு செய்தது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதனிடையே தங்கதமிழ்ச்செல்வன் வெளிநடப்பு செய்வதாக கூறியபோது சட்டசபையில் திமுக எம்.எல்.ஏக்கள் மேஜையை தட்டி மகிழ்ச்சியுடன் வரவேற்றனர்.