நிபந்தனைகளை நீட்டிக்கும் ஓபிஎஸ்.... இழுபறியாகும் அதிமுக கோஷ்டிகள் இணைப்பு!

Posted By: Paa
Subscribe to Oneindia Tamil

- பா. கிருஷ்ணன்

சென்னை: தமிழக அரசியல் வரலாற்றில் இரண்டாகப் பிரிந்த அண்ணா திமுக மீண்டும் இணைவதற்கான முயற்சி தொடங்கியுள்ளது. 1989ம் ஆண்டு இதைப் போன்ற சம்பவம் நடந்திருக்கிறது.

வரலாறு மீண்டும் திரும்புகிறது (History Repeats itself) என்று ஆங்கிலத்தில் ஒரு மொழி உண்டு. அப்படி மீண்டும் ஒரு வரலாறு போல நடந்தாலும். அந்த நிகழ்வுக்கும் இந்த நிகழ்வுக்கும் சில ஒற்றுமைகளும் சில வேற்றுமைகளும் உள்ளன.

Doubts over Merger of ADMK Factions

மிகப் பெரிய வேறுபாடு எம்ஜிஆர் மறைவுக்குப் பின்னர் கட்சி ஜெயலலிதா தலைமையிலும் எம்ஜிஆர் மனைவி வி.என். ஜானகி அம்மையார் தலைமையிலும் இரு அணிகளாகச் செயல்பட்டாலும், ஜானகி அம்மையார் அரசியலிலிருந்து விலகியதும், ஜெயலலிதா ஓர் ஆளுமை படைத்த தலைவராக உருவானதாலும் அண்ணா திமுகவின் இணைப்பு சாத்தியமானது மட்டுமின்றி, சின்னத்தை மீட்டு, மீண்டும் ஆட்சிக்கு வர முடிந்தது.

தற்போதைய நிலையில் அப்படிப்பட்ட நிலை எதுவும் முழுமையாக உருவாகவில்லை. திமுகவிலிருந்து எம்ஜிஆர் நீக்கப்பட்டு, தனது தலைமையில் அண்ணா திமுகவைத் தொடங்கியதிலிருந்து கடைசி வரையில். அவர் பொதுச் செயலாளராகப் பதவி வகித்தாலும் அதை மற்றவர்களுக்குக் கொடுத்தாலும் அவரே சர்வ வல்லமை படைத்தவராகவும் மக்களால் ஏற்றுக் கொள்ளப்பட்டவராகவும் இருந்தார்.

அவர் 1977ம் ஆண்டு முதலமைச்சராகப் பதவி ஏற்றபின், கட்சியின் தலைமைப் பதவியான பொதுச்செயலாளராக நெடுஞ்செழியன், ப.உ. சண்முகம், ராகவானந்தம் ஆகியோரை அமர்த்தினார். இருந்தாலும் கட்சி அவரது கட்டுக்குள்தான் இருந்தது. எம்ஜிஆர் உடல் நலம் குன்றிய பிறகு, கட்சியில் இராம வீரப்பன் தலைமையிலும், ஜெயலலிதா தலைமையிலும் இரு வேறு கோஷ்டிகள் இருந்தன.

அதற்கு சிறிது காலம் முன்பு, எம்ஜிஆருக்கு எதிராகக் கொடிபிடித்த குறிப்பிடத் தக்க மூன்று பேரில் நாஞ்சில் மனோகரன் திமுகவில் சேர்ந்தார். சௌந்தரபாண்டியன், அரசியலிலிருந்து ஒதுங்கினார். எஸ்.டி. சோமசுந்தரம் தனிக் கட்சி தொடங்கி 1984 தேர்தலில் தோல்வியடைந்து மீண்டும் அதிமுகவில் சேர்ந்தார். எம்ஜிஆர் மறைவுக்குப் பிறகு முதல்வர் பதவிக்கு ஆட்சியில் இரண்டாம் நிலையில் இருந்த நாவலர் நெடுஞ்செழியன் போட்டியிட்டார். அவருக்கு ஜெயலலிதா ஆதரவு தந்தார். அதே சமயம் ஜெயலலிதாவுக்கு எதிராக இருந்த வீரப்பன் முதல்வர் பதவிக்கு தன்னை முன்னிறுத்திக் கொள்ளாமல் எம்ஜிஆர் மறைவினால் ஏற்பட்ட அனுதாபத்தை அவரது மனைவி வி.என். ஜானகி அம்மையார் பெற முடியும் என்று கருதி, அவரை முதலமைச்சராக நிறுத்தி தேர்ந்தெடுக்கச் செய்தார்.

ஆனால், 1988ம் ஆண்டு நம்பிக்கை வாக்கெடுப்பின்போது சட்டப் பேரவையில் நேர்ந்த கலவரத்தால், ஆட்சியே கவிழ்ந்தது. 1988 முதலமைச்சர் பதவிக்கான போட்டியை அடுத்து, அதிமுக ஜெயலலிதா அணி, ஜானகி அணி என இரண்டாக உடைந்ததால், இரட்டை இலைச் சின்னம் முடக்கப்பட்டது.

அதிமுகவின் ஜெயலலிதா அணிக்கு சேவல் சின்னமும், ஜானகி அணிக்கு இரட்டைப் புறா சின்னமும் அளிக்கப்பட்டன. அதன் பின்னர் 1989ம் ஆண்டு சட்டப் பேரவை தேர்தலில் இரு அணிகளும் தோல்வி அடைந்தன.

ஜெயலலிதா மறைவுக்குப் பின்னால், உடனடியாக முதலமைச்சர் பதவி விவகாரத்தில் எந்தக் குழப்பமும் நேரவில்லை. கடந்த காலங்களில் ஜெயலலிதா இருந்தபோதே இரண்டு முறை முதலமைச்சராகப் பொறுப்பேற்ற ஓ.பன்னீர்செல்வம் முதலமைச்சரானார். கட்சித் தலைமைப் பதவியிலும் தொடக்கத்தில் எவ்வித குழப்பமும் இல்லாமல்தான் இருந்தது. ஜெயலலிதாவின் உடன்பிறவா சகோதரி என வருணிக்கப்பட்ட வி.கே. சசிகலாவை சிறிது காலம் கழித்து அண்ணா திமுகவின் பொதுச் செயலாளராகப் பதவியேற்றார்.

அப்போதும் எவ்வித பூசலும் ஏற்படவில்லை. முதல்வராக ஓ.பி.எஸ்., கட்சிப் பொதுச் செயலாளராக வி.கே. சசிகலா என சுமுகமாகப் போய்க்கொண்டிருந்தது.

1988ம் ஆண்டு முழுவதும் தமிழகத்தில் குடியரசுத் தலைவர் ஆட்சி நடந்தது. 1989ம் ஆண்டு தேர்தல் நடத்தப்பட்டபோது, அண்ணா திமுக இரண்டாகப் பிரிந்து போட்டியிட்டதாலும், இரட்டை இலைச் சின்னம் முடக்கப்பட்டாதலும், வாய்ப்பு பறிபோனது. திமுக மீண்டும் ஆட்சி அமைக்க வழியேற்பட்டது. அந்தத் தேர்தலில் ஜெயலலிதா தலைமையிலான அணி சட்டப் பேரவையில் 27 இடங்களைக் கைப்பற்றி நிலையில், ஜானகி அணியில் பி.எச். பாண்டியன் தவிர வேறு யாரும் வெற்றி பெறவில்லை. இதையடுத்து ஜானகி அணியும் ஜெயலலிதா அணியும் இணைவதே நல்லது என்று இரு தரப்பினரும் உணர்ந்தனர்.

அதையடுத்து, இரு தரப்பினருக்கும் இடையில் சுமுகமாகப் பேச்சு நடந்து, இணைந்த அதிமுகவின் தலைவராக விஎன் ஜானகி, பொதுச் செயலாளராக ஜெயலலிதா என்று அறிவிக்கப்பட்டது. ஆனால், வி.என். ஜானகி அரசியல் ஆர்வத்தை இழந்தார். அரசியலிலிருந்து விலகுவதாகவும் அறிவித்தார். இதனால், கட்சியின் பொதுச் செயலாளராக ஜெயலலிதாவே அதிகாரம் படைத்தவராக ஆனார்.

திமுக ஆட்சியில் இருந்தபோது, மதுரை கிழக்கு, மருங்காபுரி ஆகிய தொகுதிகளில் இடைத்தேர்தல் நடைபெற்றபோது, அண்ணா திமுக இரட்டை இலைச் சின்னத்தில் போட்டியிட்டது. மருங்காபுரியில் பேராசிரியர் பொன்னுசாமியும் (முன்னாள் ஜெ.அணி), மதுரை கிழக்கில் எஸ்.ஆர். ராதாவும் (முன்னாள் ஜா. அணி) வென்றனர். அதுவே அக்கட்சி வலுப்பெற்றதை நிரூபித்தது.

இப்போதைய நிலையில் ஏராளமான மாற்றங்கள் இருக்கின்றன.

கட்சியின் பொதுச் செயலாளராக வி.கே. சசிகலாவுக்கு யாரும் போட்டியாக வரவில்லை. அவர் கட்சியின் தலைவராக இருந்தபோதே, ஓ.பன்னீர்செல்வம் அரசில் இடம்பெற்ற அமைச்சர்கள் வெளிப்படையாகவே சசிகலாவே முதலமைச்சராக வேண்டும் என கோரிக்கை விடுத்ததுதான் பிளவுக்கும் பிரச்சினைக்கும் தொடக்கம்.

காரணம், சசிகலா மீது சொத்துக் குவிப்பு வழக்கின் தீர்ப்பு நெருங்கிக் கொண்டிருந்தது. அதிலிருந்து தப்பிக்க முதலமைச்சராகலாம் என்ற யோசனையோ, ஏதாவது முடிவு வருவதற்குள் அந்த நாற்காலியில் அமர்ந்து பார்த்துவிடலாம் என்று வந்த தூண்டுதலோ காரணமாக இருக்கலாம். அதனால், கட்சிப் பொதுச் செயலாளர் பதவியை ஏற்க அவசரம் காட்டாத அவர் ஆட்சித் தலைமையை ஏற்க அவசரம் காட்டினார்.

அதன் தொடர்ச்சியாக, ஓ.பன்னீர்செல்வம் முதலமைச்சர் பதவியிலிருந்து விலகினார். தான் ராஜிநாமா செய்ய கட்டாயப்படுத்தப்பட்டதாக அவர் பகிரங்கமாக அறிவித்ததே கட்சியின் பிளவுக்கு வழிவகுத்தது. பொதுவாக ஓ.பி.எஸ். போன்றவர்கள் போராட்டக் குணத்தை வெளிப்படுத்தியதில்லை. முதலமைச்சர் பதவியைத் துறந்தவர், ஜெயலலிதா சமாதியில் தியானம் இருந்து, ஊடகங்களுக்கு அளித்த பேட்டியில் தனது முதல் எதிர்ப்பைக் காட்டினார்.

எம்ஜிஆருடன் வாழ்க்கை நடத்திய வி.என். ஜானகி இது தனக்குச் சரிப்பட்டு வராது என்பதை முழுமையாகப் புரிந்துகொண்டார். ஆனால், ஜெயலலிதாவுடன் வாழ்ந்த சசிகலா அப்படி புரிந்து கொண்டதாகத் தெரியவில்லை.

விஎன் ஜானகி அம்மையார் கட்சியின் தலைவர் பதவியை ஏற்கவில்லை என்று அறிவித்ததுடன், அரசியலை விட்டு விலகியதால், ஜெயலலிதாவுக்கு எவ்வித சிக்கலமும் இல்லாமல் போனது. காரணம், எம்ஜிஆர் உயிருடன் இருந்தபோது, தனது குடும்பத்தினர் ஆட்சியிலோ கட்சியிலோ தலையிடக் கூடாது என்று உத்தரவிட்டார். அது அவர்களின் வேதம் போல் ஆனது. இதை்ப் போல ஜெயலலிதாவும் அறிவிக்காவிட்டாலும், அதைப் புரிந்துகொள்ளும் வகையில் செயல்பட்டிருக்கிறார்.

2011ல் சசிகலா குடும்பத்தினரை கட்சியிலிருந்தும் வீட்டிலிருந்தும் வெளியேற்றிய அவர் சசிகலாவையோ, அவரது குடும்பத்தினரையோ நேரடியாக ஆட்சியிலும் கட்சியிலும் ஈடுபடுத்தவில்லை. இதற்கு முன் டிடிவி தினகரனை எம்பி ஆக்கியவர், 2011ம் ஆண்டுக்குப் பின் வந்த பல தேர்தல்களில் எந்தப் பதவிக்கும் நிறுத்தவில்லை. அதைப் போல் கட்சிப் பதவிகளில் சசிகலா போன்றோரை நியமித்ததாகத் தெரியவில்லை. இன்னும் சொல்லப் போனால், ஜெயலலிதாவால் கட்சியை விட்டு நீக்கப்பட்ட தினகரன் கட்சியின் துணைப் பொதுச் செயலாளராக நியமிக்கப்பட்டதும், சசிகலா சொத்துக் குவி்ப்பு வழக்கின் தீர்ப்பினால், சிறை சென்ற பிறகு அவரே கட்சிக்குத் தலைமை வகிக்கும் நிலையும் கட்சியின் அடிமட்டத் தொண்டர்களுக்குப் பிடிக்கவில்லை.

2011ம் ஆண்டு சசிகலா குடும்பத்தினரை ஜெயலலிதா வெளியேற்றியபோது, மாநிலம் முழுவதும் அண்ணா திமுகவினர் பட்டாசு வெடித்து, இனிப்புகள் வழங்கி பண்டிகையைப் போலவும், தேர்தல் வெற்றி போலவும் கொண்டாடினார்கள் என்பதை நினைவுகூரவேண்டும்.

இப்போது இணைப்பு பற்றி இரு தரப்பினரும் பேசி வருவது பல கேள்விகளை எழுப்பியுள்ளது.

சென்னை ராதாகிருஷ்ணன் நகர் தொகுதியில் நடைபெற இருந்த இடைத் தேர்தல் ஒத்தி வைக்கப்பட்டதற்கு, தினகரனின் தேர்தல் முறைகேடு காரணமாக இருக்குமோ என்ற சந்தேகம் வலுப்பெற்றுள்ளது. திடீரென்று, கட்சியின் இரட்டை இலைச் சின்னத்தைப் பெறுவதற்கு சுகேஷ் என்ற நபருக்கு கோடிக் கணக்கில் பணம் கொடுத்ததாக வந்துள்ள செய்தியும் அவர் மீதான சந்தேகத்தை வலுப்படுத்தி வருகிறது. இது இரட்டை இலைச் சின்னத்தைக் கிடைக்கவிடாமல் செய்துவிடும் என்ற கவலையை தினகரன் அணியினருக்கு ஏற்படுத்தியிருக்கும்.

இரட்டை இலைச் சின்னத்தைப் பெற்றால்தான் வெற்றி என்ற தாரக மந்திரத்தைப் புரிந்துகொண்டதால், ஜானகி, ஜெயலலிதா அணிகள் இணைந்து சின்னத்தை மீட்டெடுத்த வழியைக் கடைப்பிடிக்கலாமோ என்பதால் இணைப்பு குறித்த செய்தி இப்போது பரவியுள்ளது.

ஆனால், ஓபிஎஸ் அணியினர் முன்பு கடைப்பிடித்த நிபந்தனைகளைத் தளர்த்தவில்லை. கட்சி, ஆட்சி ஆகியவற்றில் சசிகலா குடும்பமே இருக்கக் கூடாது என்பதும் ஜெயலலிதா மரணம் குறித்த மர்மம் விசாரணை செய்யப்படவேண்டும் என்ற இரு நிபந்தனைகள் வலுவாக இருப்பதால், இப்போதுள்ள நிலையில் இணைப்பு கொஞ்சம் இழுப்புதான்!

வாழ்க்கைத் துணையை தேடுகிறீர்களா? தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

English summary
Columnist Paa Krishnan's article on merger of ADMK factions.
Please Wait while comments are loading...