For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

தெலுங்கானா பிரச்சினையே முடியலை… திருப்பதியை தமிழ்நாட்டுடன் இணைக்கச் சொல்லும் ராமதாஸ்

By Mayura Akilan
Google Oneindia Tamil News

சென்னை: ஆந்திர மாநிலத்தில் தமிழர்கள் வாழும் திருப்பதி, காளஹஸ்தி உள்ளிட்ட பகுதிகளை தமிழ்நாட்டுடன் மீண்டும் இணைக்க மத்திய அரசு நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று பாட்டாளி மக்கள் கட்சியின் நிறுவனர் டாக்டர் ராமதாஸ் மீண்டும் கூறியுள்ளார்.

இதுகுறித்து டாக்டர் ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது:

தெலுங்கானா தனி மாநிலத்தை உருவாக்குவதற்கான சட்ட முன் வரைவு நாடாளுமன்ற மக்களவையில் தாக்கல் செய்யப்பட்டு, குரல் வாக்கெடுப்பின் மூலம் நிறைவேற்றப்பட்டிருக்கிறது.

Dr.Ramadoss Seeks merger 8 Taluks with TN

தெலுங்கானா தனி மாநிலக் கோரிக்கை கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பே நிறைவேற்றப்பட்டிருக்க வேண்டும். தெலுங்கானா பகுதி பிரிக்கப்படுவதால் சீமாந்திரா பகுதி மக்களிடையே நிலவும் கவலைகளைப் போக்கவும் மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மொழிவாரி மாநிலங்கள் உருவாக்கப்பட்டபோது தெலுங்கானாவுக்கு இழைக்கப்பட்ட துரோகம் இப்போது சரி செய்யப்பட்டுள்ள நிலையில், தமிழ்நாட்டிற்கு செய்யப்பட்ட அநீதி மட்டும் அப்படியே தொடருகிறது.

தப்பிய திருத்தணி

1956-ம் ஆண்டில் சென்னை மாகாணத்தைப் பிரித்து ஆந்திர மாநிலம் உருவாக்கப்பட்ட போது, அப்போதைய வட ஆற்காடு மாவட்டத்தின் அங்கமாக விளங்கிய தமிழர்கள் அதிகம் வாழும் 9 வட்டங்கள் ஆந்திராவுடன் இணைக்கப்பட்டன. இதை எதிர்த்து தமிழக மக்கள் நடத்திய கடும் போராட்டத்தின் விளைவாக திருத்தணி வட்டம் மட்டும் மீண்டும் தமிழ்நாட்டுடன் இணைக்கப்பட்டது.

8 தாலுகாக்கள் இணைப்பு

திருப்பதி, காளஹஸ்தி, புத்தூர், சித்தூர், சத்தியவேடு உள்ளிட்ட 8 வட்டங்கள் ஆந்திரத்துடனேயே இணைந்திருக்கின்றன. இதுதவிர தமிழர்கள் அதிகம் வாழும் தேவி குளம், பீர்மேடு உள்ளிட்ட சில பகுதிகள் கேரளத்துடனும், இன்னும் சில பகுதிகள் கர்நாடகத்துடனும் இணைக்கப்பட்டன.

வேலைவாய்ப்பு மறுப்பு

இந்த மாநிலங்களுடன் இணைக்கப்பட்ட பகுதிகளில் வாழும் தமிழர்கள் இன்னும் அடிமைகளாகவே நடத்தப்படுகின்றனர். ஆந்திராவில் கல்வி மற்றும் வேலை வாய்ப்பில் தெலுங்கு பேசும் மக்களுக்கே முன்னுரிமை அளிக்கப்படுகிறது என்பதால், தங்களுக்கு கல்வியும் வேலைவாய்ப்பும் மறுக்கப்படுகிறது என்று அங்குள்ள தமிழர்கள் குமுறுகின்றனர்.

தமிழகத்துடன் இணைக்க

தமிழகத்தில் தான் தங்களால் நிம்மதியாக வாழ முடியும் என நினைக்கும் மக்கள், தாங்கள் வாழும் பகுதிகளை தமிழகத்துடன் இணைக்கும்படி கோருகிறார்கள்.

கேரளத்துடன் இணைக்கப்பட்ட பகுதிகளில் வாழும் தமிழர்களும் நிலவுரிமை மற்றும் வாழ்வுரிமை இழந்து தவிப்பதால் தமிழகத்துடன் இணையவே விரும்புகின்றனர்.

பிரித்தவைகளை இணையுங்கள்

எனவே மொழி வாரி மாநிலங்கள் அமைக்கப்பட்டபோது, அண்டை மாநிலங்களுடன் இணைக்கப்பட்ட தமிழர்கள் வாழும் திருப்பதி, காளஹஸ்தி உள்ளிட்ட பகுதிகளை தமிழ்நாட்டுடன் மீண்டும் இணைத்து நீதி வழங்க மத்திய அரசு முன்வர வேண்டும்.

இதை வலியுறுத்தும் தீர்மானத்தை தமிழக சட்டப்பேரவையின் நடப்புக் கூட்டத்திலேயே அனைத்துக் கட்சி உறுப்பினர்களின் ஒருமனதான ஆதரவுடன் நிறைவேற்ற வேண்டும் என்று டாக்டர் ராமதாஸ் கூறியுள்ளார்.

English summary
The Pattali Makkal Katchi founder Dr.Ramadoss on Wednesday demanded that the Tirupathi and Kalakasthi now in Andhra to be merged with Tamil Nadu.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X