For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

தேர்தல் விதிமீறல் செய்யும் அதிமுக, கண்டுகொள்ளாமல் இருக்கும் தேர்தல் அதிகாரிகள், ஏன்னா...: ராமதாஸ்

By Siva
Google Oneindia Tamil News

சென்னை: அதிமுகவினர் செய்யும் தேர்தல் விதிமீறல்களை தேர்தல் அதிகாரிகள் கண்டுகொள்ளாமல் உள்ளனர். ஏனென்றால் சொத்துக்குவிப்பு வழக்கில் ஜெயலலிதா விடுதலையாக கோவில்களில் சிறப்பு வழிபாடு செய்தவர்கள் தான் தேர்தல் அதிகாரிகளாக உள்ளனர் என்று பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது,

EC officials don't stop ADMK from violating election codes: Ramadoss

தருமபுரியில் நேற்று அ.தி.மு.க.வினர் நடத்திய நிகழ்ச்சியில் தேர்தல் விதிகள் அப்பட்டமாக மீறப்பட்டுள்ளன. தமிழகத்தின் மற்ற பகுதிகளிலும் இதே போன்ற விதிமீறல்கள் தொடர்ந்து நடந்த வண்ணம் உள்ளன. ஆனால், இதை தடுக்க வேண்டிய மாவட்ட ஆட்சியர்களும், காவல் கண்காணிப்பாளர்களும் ஆளுங்கட்சிக்கு சாதகமாக ஆதாரங்களை திருத்திக் கொண்டிருக்கின்றனர். இது கண்டிக்கத்தக்கது.

ஊழல் பணத்திற்கு முறையாக கணக்கு காட்டி ஒப்படைக்காத குற்றத்திற்காக ஆட்சி மேலிடத்தின் கோபத்திற்கு உயர்கல்வி அமைச்சர் பழனியப்பன் ஆளானதால், அவரது ஆதரவாளர் பதவி நீக்கம் செய்யப்பட்டு புதிய மாவட்ட செயலாளர் நியமிக்கப்பட்டுள்ளார். இதைத் தொடர்ந்து தருமபுரியிலுள்ள தலைவர்களின் சிலைக்கு புதிய மாவட்ட செயலாளர் மாலை அணிவித்த போது தான் தேர்தல் நடத்தை விதிகள் அப்பட்டமாக மீறப்பட்டன. தலைவர்கள் சிலையை ஒட்டிய பகுதிகளில் ஆளுங்கட்சியினர் வாகனங்களை நிறுத்திவிட்டு கூட்டமாக நின்றதால் அப்பகுதியில் மிகக் கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. இதனால், அவ்வழியே மருத்துவமனைக்கு சென்ற 108 அவசர ஊர்தி கூட்ட நெரிசலில் சிக்கிக் கொண்டதால் அதில் இருந்த நோயாளி கடும் அவதிக்கு ஆளானார்.

அ.தி.மு.க.வினர் நடத்திய கொண்டாட்டங்களின் போது தேர்தல் நடத்தை விதிகளை மீறி, பட்டாசுகள் வெடிக்கப்பட்டன. அவை அங்குள்ள கல்லூரி அருகே கிடந்த சருகுகள் மீது விழுந்து வெடித்ததால் தீ விபத்து ஏற்பட்டது. தீயை அவிப்பதற்காக வந்த தீயவிப்பு ஊர்திகள் கூட சம்பவ இடத்திற்கு செல்ல முடியாத அளவுக்கு கடுமையான போக்குவரத்து நெரிசலை அ.தி.மு.க.வினர் ஏற்படுத்தினர். இதையடுத்து அப்பகுதியைச் சேர்ந்த இளைஞர்கள் கொள்கலன்களில் தண்ணீர் எடுத்துச் சென்று தீயை அவித்துள்ளனர். இதையெல்லாம் அதிகாரிகள் வேடிக்கை பார்த்துக் கொண்டு நின்றிருந்தனர்.

இந்த நிகழ்ச்சிக்காக தருமபுரி தொகுதி தேர்தல் அதிகாரியும், கோட்டாட்சியருமான இராமமூர்த்தி அளித்த அனுமதியில்,‘‘சாலையில் ஊர்வலமாக செல்லக் கூடாது; மகிழுந்தில் வந்து தலைவர்கள் சிலைக்கு மாலை அணிவித்து விட்டு செல்ல வேண்டும்; போக்குவரத்துக்கு பாதிப்பு ஏற்படுத்தக்கூடாது'' என்பன உள்ளிட்ட நிபந்தனைகள் விதிக்கப்பட்டிருந்தன. ஆனால், அனைத்து விதிமுறைகளையும் ஆளுங்கட்சியினர் காலில் போட்டு மிதித்துள்ளனர்.

அ.தி.மு.க.வின் அட்டகாசங்கள் அரங்கேறிக் கொண்டிருந்த நேரத்தில் மாவட்ட ஆட்சியர் விவேகானந்தனும், காவல் கண்காணிப்பாளர் லோகநாதனும் அவ்வழியே சென்று கொண்டிருந்தனர். ஆனால், ஆளுங்கட்சியின் அத்துமீறல்களை பார்த்த பிறகும் கண்டும் காணாதவர்களைப் போல சென்றுவிட்டனர். அ.தி.மு.க.வினரின் விதிமீறல்கள் சர்ச்சையாகிவிட்ட நிலையில், அவர்கள் எந்த விதிமீறலிலும் ஈடுபடவில்லை என்பது போன்ற தோற்றத்தை உருவாக்க அதிகாரிகள் முயன்று வருகின்றனர். இந்த விதிமீறல்கள் குறித்து எந்த வழக்கும் தொடரப்படவில்லை.

தருமபுரி மாவட்டத்தில் மட்டும் தான் என்றில்லாமல் மற்ற மாவட்டங்களிலும் இதே நிலை தான் காணப்படுகிறது. மதுரையில் உரிய ஆவணங்கள் இன்றி கொண்டு செல்லப்பட்ட 10,000 செல்பேசிகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. தமிழகத்தில் 1 கோடி பேருக்கு ஸ்மார்ட் செல்பேசிகளை வழங்குவதற்கு ஆளுங்கட்சி திட்டமிட்டிருப்பதாக பா.ம.க. முதலமைச்சர் வேட்பாளர் மருத்துவர் அன்புமணி இராமதாஸ் குற்றஞ்சாற்றியுள்ள நிலையில், பிடிபட்ட செல்பேசிகளுக்கும், ஆளுங்கட்சிக்கும் இடையே தொடர்பு உள்ளதா? என்பது குறித்து இதுவரை எந்த விசாரணையும் மேற்கொள்ளப்படவில்லை. தமிழகத்தில் இதுவரை ரூ.11.60 கோடி மதிப்புள்ள பணமும், பொருட்களும் பறிமுதல் செய்யப்பட்டுள்ள நிலையில் ஆளுங்கட்சியினர் கடத்திச் செல்லும் பணத்தை பிடிக்க தேர்தல் அதிகாரிகள் முயற்சி செய்யவில்லை.

தமிழகத்தின் ஒட்டுமொத்த நிர்வாகமும் தேர்தல் ஆணையத்தின் கட்டுப்பாட்டில் வந்துவிட்ட பிறகும், அ.தி.மு.க. அரசால் நியமிக்கப்பட்ட மாவட்ட ஆட்சியர்களும், காவல் கண்காணிப்பாளர்களும் தான் எல்லா மாவட்டங்களையும் நிர்வகித்து வருகின்றனர். சொத்துக்குவிப்பு வழக்கிலிருந்து ஜெயலலிதா விடுதலையாகி மீண்டும் முதலமைச்சராக வேண்டும் என்பதற்காக கோவில்களில் அ.தி.மு.க.வினருடன் இணைந்து சிறப்பு வழிபாடு நடத்திய மாவட்ட ஆட்சியர்கள் தான் இப்போது தேர்தல் அதிகாரிகளாக நியமிக்கப்பட்டுள்ளனர். இவர்கள் ஆளுங்கட்சியினரின் முறைகேடுகளை தடுத்து, தேர்தலை நியாயமாக நடத்துவார்கள் என்று நம்புவதை விட மோசமான அப்பாவித்தனம் வேறு எதுவும் இருக்கப்போவதில்லை.

எனவே, தமிழகத்தில் ஆளுங்கட்சிக்கு ஆதரவாக செயல்படும் மாவட்ட ஆட்சியர்கள், காவல்துறை கண்காணிப்பாளர்கள் உள்ளிட்ட அதிகாரிகளை தேர்தல் ஆணையம் உடனடியாக இடமாற்றம் செய்ய வேண்டும். அவர்களுக்கு மாற்றாக நேர்மையான அதிகாரிகளை நியமித்து தமிழகத்தில் தேர்தல் நேர்மையாகவும், ஓட்டுக்களை விலைக்கு வாங்காமலும் நடப்பதை ஆணையம் உறுதி செய்ய வேண்டும் என்று அவர் அதில் தெரிவித்துள்ளார்.

English summary
PMK founder Dr. Ramadoss said that EC officials are not all taking action against ADMK men who keep on violating election.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X