இருந்ததும் போச்சே.. எடப்பாடி கைக்கு இன்றே செல்லும் "அதிமுக பைல்ஸ்".. அடங்கிய ஓபிஎஸ்.. பெரிய தோல்வி
சென்னை: அ.தி.மு.க அலுவலகத்தில் இருந்து ஓ பன்னீர்செல்வம் தரப்பு மூலம் எடுத்துச் செல்லப்பட்ட பொருட்களை சி.வி.சண்முகத்திடம் காவல்துறையினர் இன்று ஒப்படைகின்றனர்.
தொட்டதெல்லாம் தோல்வி என்று கடும் மன வருத்தத்தில் இருக்கிறார் ஓ பன்னீர்செல்வம். அதிமுக பொதுக்குழு வழக்கில் தோல்வி அடைந்த நிலையில், தேர்தல் ஆணையமும் ஓ பன்னீர்செல்வத்திற்கு எதிராகவே முடிவு எடுத்து உள்ளது.
தேர்தல் ஆணையமும் கடந்த சில நாட்களுக்கு முன் எடப்பாடி பழனிசாமி கோரிக்கையை ஏற்றுக்கொண்டது. இதன் மூலம் அதிகாரப்பூர்வமாக அதிமுகவின் பொதுச்செயலாளர் ஆகிவிட்டார் எடப்பாடி பழனிசாமி.

ஒப்படைப்பு:அதிமுக அலுவலகமும் முன்பே ஓ பன்னீர்செல்வம் கையைவிட்டு போய் விட்டது. இந்த நிலையில்தான் அ.தி.மு.க அலுவலகத்தில் இருந்து ஓ பன்னீர்செல்வம் தரப்பு மூலம் எடுத்துச் செல்லப்பட்ட பொருட்களை சி.வி.சண்முகத்திடம் காவல்துறையினர் இன்று ஒப்படைகின்றனர்.
முன்னதாக அ.தி.மு.க அலுவலகத்தில் இருந்து எடுத்துச் செல்லப்பட்ட பொருட்களை சி.வி.சண்முகத்திடம் ஒப்படைக்க காவல்துறைக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது குறிப்பிடத்தக்கது.
உத்தரவு பின்னணி:அ.தி.மு.க., பொதுக்குழு கூட்டம் கடந்த ஆண்டு ஜூலை 11-ந்தேதி வானகரம் திருமண மண்டபத்தில் நடந்தது. அப்போது, ஓ.பன்னீர்செல்வம் தன் ஆதரவாளர்களுடன் ராயப்பேட்டை அ.தி.மு.க., அலுவலகம் சென்றபோது, இருதரப்பினருக்கும் மோதல் ஏற்பட்டு, அது கலவரமாக மாறியது.
அப்போது, அலுவலகத்தில் இருந்து சொத்து ஆவணங்கள், வாகனங்களில் ஆர்.சி புத்தகங்கள், கம்ப்யூட்டர் உள்பட பல பொருட்களை ஓ.பன்னீர்செல்வம் தரப்பினர் எடுத்துச் சென்று விட்டதாக காவல்துறையிடம் அக்கட்சியின் மாநிலங்களவை உறுப்பினர் சி.வி.சண்முகம் இராயப்பேட்டை காவல்துறையில் புகார் அளித்தார்.
கலவரம் தொடர்பான வழக்கு பின்னர் சி.பி.சி.ஐ.டி விசாரணைக்கு மாற்றப்பட்டு விசாரணை நடைபெற்று வருகின்றது.
அ.தி.மு.க., அலுவலகத்தில் இருந்து எடுத்து செல்லப்பட்ட பொருட்களை காவல்துறையிடம் ஓ.பன்னீர்செல்வம் தரப்பினர் ஒப்படைத்தனர். அந்த பொருட்களை எல்லாம் தற்போது சென்னை சைதாப்பேட்டை 11-வது நீதிமன்ற கட்டுப்பாட்டில் உள்ளன.
இந்த பொருட்களை எல்லாம் கேட்ட அ.தி.மு.க., பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தரப்பில் சி.வி. சண்முகம், சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். அதில் ஜூலை 11-ந்தேதி நடந்த கலவரத்தை தொடர்ந்து அ.தி.மு.க., அலுவலகத்தை அதிகாரிகள் சீல் வைத்து சாவியை எடுத்துச் சென்று விட்டனர். அதை கேட்டு தொடரப்பட்ட வழக்கை விசாரித்த உயர்நீதிமன்றம், எடப்பாடி பழனிசாமி தரப்பிடம் கொடுக்க உத்தரவிட்டது. இந்த உத்தரவை உச்ச நீதிமன்றம் உறுதி செய்தது. எனவே, இந்த பொருட்களை எல்லாம் எங்களிடம் வழங்க வேண்டும் என்று கூறியிருந்தார்.
இதற்கு எதிர்ப்பு தெரிவித்து ஓ.பன்னீர்செல்வம் தரப்பில் வைத்தியலிங்கத்தின் மூலம் மனு தாக்கல் செய்யபட்டது.

இந்த மனுவை விசாரித்த சைதாப்பேட்டை நீதிமன்றம் கடந்த மாதம் பிறப்பித்த உத்தரவில், அதிமுக பொதுக்குழு மற்றும் பொதுச் செயலாளர் தேர்தல் தொடர்பான பிரதான வழக்கில் இறுதி தீர்ப்பு பிறப்பிக்கப்படவில்லை. எனவே, இந்த பொருட்களுக்கு எல்லாம் யார் உரிமையாளர் என்று தற்போது முடிவு செய்ய முடியாது. அதனால், இருவரது மனுக்களும் நிலைக்கத்தக்கது அல்ல என்று கூறி தள்ளுபடி செய்து உத்தரவிட்டது.
சைதாப்பேட்டை நீதிமன்ற உத்தரவை எதிர்த்து சி.வி.சண்முகம் தாக்கல் செய்த மேல் முறையீடு மனு இன்று நீதிபதி ஜி.கே.இளந்திரையன் முன்பு விசாரணைக்கு வந்தது. மனுதரார் சார்பாக மூத்த வழக்கில் ஜான் சத்தியன், முகமது ரியாஸ் ஆஜராகி, உச்ச நீதிமன்றம் உத்தரவை முழுமையாக கருத்தில் கொள்ளாமல் சைதாப்பேட்டை நீதிமன்றம் எங்கள் தரப்பிற்கு ஆவணங்கள் மற்றும் பொருட்களை வழங்க மறுத்து உத்தரவிட்டுள்ளது என வாதிட்டனர்.
ஆவணங்களை சி.வி.சண்முகத்திடம் ஒப்படைக்க எதிர்ப்பு தெரிவித்து மனு தாக்கல் செய்யபட்டது. அனைத்து தரப்பு வாதங்களை கேட்ட நீதிபதி, அதிமுக அலுவலகத்தில் இருந்து எடுத்துச் செல்லப்பட்ட ஆவணங்கள், பொருட்களை கட்சியின் அமைப்புச் செயலாளர் சி.வி.சண்முகத்திடம் வழங்கும்படி காவல்துறைக்கு உத்தரவிட்டுள்ளார்.












Click it and Unblock the Notifications