இலங்கையில் இருந்து 143 படகுகளை விடுவிக்க நடவடிக்கை தேவை.. மோடிக்கு எடப்பாடி கடிதம்

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: இலங்கையில் உள்ள 50 மீனவர்கள் மற்றும் 143 படகுகளை மீட்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி பிரதமர் மோடிக்கு கடிதம் எழுதியுள்ளார்.

இது தொடர்பாக இன்று பிரதமர் மோடிக்கு அவர் எழுதியுள்ள கடிதத்தில், புதுக்கோட்டை மாவட்டம் கோட்டைப்பட்டினம், ஜெகதாபட்டினத்தைச் சேர்ந்த 8 மீனவர்கள், 2 விசைப்படகுகளில் மீன்பிடிக்கச் சென்றனர்.

Edappadi palanisamy writes letter to Modi on fishermen issue

அவர்களை கடந்த 5-ம் தேதி இரவு இலங்கை கடற்படையினர் கைது செய்து, இலங்கையின் காங்கேசன்துறைக்கு கொண்டு சென்றுள்ளனர். மற்றொரு சம்பவத்தில் கோட்டைப்பட்டினத்தைச் சேர்ந்த 4 மீனவர்கள் சென்ற படகை சேதப்படுத்தி, மீன் மற்றும் சாதனங்களை பறித்த இலங்கை கடற்படையினர், மீனவர்களையும் தாக்கியுள்ளனர்.

இந்த சம்பவத்தில், இலங்கை கடற்படையைச் சேர்ந்த 42-ம் எண் படகு மோதியதில், தமிழக மீனவர்களின் படகு கடலில் மூழ்கியது. நீரில் தத்தளித்த மீனவர்களை அருகில் இருந்த சக மீனவர்கள் மீட்டுள்ளனர். பாக்நீரிணை பகுதியில் வரலாற்று ரீதியாகவும், பாரம்பரியமாகவும் தமிழக மீனவர்களுக்கு உள்ள மீன்பிடி உரிமை விஷயத்தில் தொடர்ந்து இலங்கை அரசு விதிகளை மீறி நடந்து கொள்கிறது. கடந்த 1974 மற்றும் 1976ம் ஆண்டுகளில் இந்திய- இலங்கை ஒப்பந்தங்களின் மூலம் தமிழக மீனவர்களின் வரலாற்று உரிமை விட்டுக் கொடுக்கப்பட்டது.

அப்பாவி தமிழக மீனவர்களின் எதிர்காலத்தை கருத்தில் கொள்ளாமல், ஒருதலைப்பட்சமாக கச்சத்தீவு இலங்கைக்கு தாரைவார்க்கப்பட்டுள்ளது. இந்த ஒப்பந்தங்கள் செல்லாது என்றுதான் எங்கள் தலைவர் மறைந்த முதல்வர் ஜெயலலிதா, உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார். கச்சத்தீவு மற்றும் சர்வதேச கடல் எல்லை ஆகியவை இதுவரை தீர்க்கப்படாத ஒன்றாக உள்ளது என்ற நிலைப்பாட்டில் தமிழக அரசு தொடர்ந்து வருகிறது.

தமிழக மீனவர்களை இலங்கை கடற்படையினர் தொடர்ந்து தாக்கும் சம்பவம் என்றாவது ஒருநாள் நிறுத்தப்பட வேண்டும். பாக்நீரிணை பகுதியில் தமிழக மீனவர்களின் உரிமை விஷயத்தில் எவ்வித சமரசமும் செய்ய முடியாது. எனவே, இலங்கை அரசிடம், தமிழக மீனவர்களின் வாழ்வாதாரத்தை தடுக்கும் வகையிலான இந்த நடவடிக்கைகளை நிறுத்திக் கொண்டு, அவர்களை பாக்நீரிணை பகுதியில் தங்கள் பாரம்பரிய தொழிலை செய்ய அனுமதிக்கும்படி மத்திய அரசு வலியுறுத்த வேண்டும்.

இந்தாண்டு நடத்தப்படும் இருதரப்பு கூட்டத்துக்குப்பின்னராவது இந்த விஷயத்தில் முன்னேற்றம் காணப்பட வேண்டும்.மேலும், இலங்கை அரசு தமிழக மீனவர்களின் வாழ்வாதாரமான மீன்பிடி படகுகள் மற்றும் உபகரணங்களை தொடர்ந்து விடுவிக்காமல் இரக்கமற்ற முறையில் நடந்து கொள்கிறது.

நீண்டகாலமாக பராமரிப்பின்றி படகுகளும், மீன்பிடி சாதனங்களும் உள்ளதால் அவை பயன்படுத்த முடியாத நிலைக்கு சென்றுள்ளன. எனவே, தாங்கள் இந்த விஷயத்தில் உடனடியாக தலையிட்டு, 50 மீனவர்கள் மற்றும் அவர்களது 143 படகுகளையும் மீட்க நடவடிக்கை எடுக்க வேண்டும். இந்த விஷயத்தில் தங்களது உடனடி நடவடிக்கையையும், நீண்ட நாள் பிரச்சினைக்கு தீர்க்கமான முடிவையும் எதிர்பார்க்கிறேன். இவ்வாறு முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி தெரிவித்துள்ளார்.

வாழ்க்கைத் துணையை தேடுகிறீர்களா? தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

English summary
CM Edappadi palanisamy letter to Prime Minister Narendra Modi, urged him to ensure the immediate release of these fishermen and their boats.
Please Wait while comments are loading...