அந்நிய செலாவணி மோசடி வழக்கு: டிடிவி தினகரன் அக்.26ல் ஆஜராக உத்தரவு
டிடிவி தினகரன் மீதான அந்நிய செலாவணி மோசடி வழக்கில் குறுக்கு விசாரணை முடிந்தது. அக்டோபர் 26ஆம் தேதியன்று அவர் எழும்பூர் நீதிமன்றத்தில் ஆஜராக நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.
சென்னை: அக்டோபர் 26ஆம் தேதி சென்னை எழும்பூர் நீதிமன்றத்தில் டிடிவி தினகரன் ஆஜராக உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. டிடிவி தினகரன் மீதான அந்நிய செலாவணி மோசடி வழக்கில் குறுக்கு விசாரணை முடிந்தது.
இங்கிலாந்தில் உள்ள 'பார்க்லே' வங்கியில் ரூ.1 கோடியே 4 லட்சத்து 93 ஆயிரம் அமெரிக்க டாலர் மற்றும் ரூ.44 லட்சம் இங்கிலாந்து பவுண்டுகளை 'டிப்பர் இன்வெஸ்ட்மெண்ட்' என்ற நிறுவனத்தின் பெயரில் சட்டவிரோதமாக முதலீடு செய்தது தொடர்பாக கடந்த 1996ஆம் ஆண்டு டி.டி.வி.தினகரன் மீது மத்திய அமலாக்கப்பிரிவினர் அந்நிய செலாவணி மோசடி வழக்கைப்பதிவு செய்தனர்.

இதேபோல, ஐரோப்பிய நாடுகளில் ஹாப்ஸ்கேரப்ட் ஹோல்ட் என்ற பெயரில் ஹோட்டல் தொடங்குவதற்காக டிப்பர் இன்வெஸ்ட் மெண்ட், டெண்டி இன் வெஸ்ட்மெண்ட், பேனியன் ட்ரீ ஆகிய 3 நிறுவனங்கள் சார்பில் பார்க்லே வங்கியில் ரூ. 36.36 லட்சம் அமெரிக்க டாலர் மற்றும் ரூ.1 லட்சம் பவுண்டுகளை முறைகேடாக முதலீடு செய்தது தொடர்பாவும் தினகரன் மீது மற்றொரு அன்னிய செலாவணி வழக்கும் பதிவு செய்யப்பட்டது.
இந்த 2 வழக்குகளும் கடந்த 21 ஆண்டுகளாக எழும்பூர் பொருளாதார குற்றவியல் நீதிமன்றத்தில் நிலுவையில் இருந்து வந்தது.
இந்த நிலையில் சென்னை உயர்நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவின் படி, இந்த வழக்குகளின் விசாரணை கடந்த பிப்ரவரி மாதம் முதல் வேகம் பிடித்துள்ளது. இதில், முதல் வழக்கில் தினகரனிடம் கடந்த ஏப்ரல் 19ஆம் தேதி எழும்பூர் கோர்ட்டு குற்றச்சாட்டு பதிவு செய்தது.
அப்போது, தனது தரப்பு வாதங்களை எடுத்துரைக்க போதிய வாய்ப்புகளை தரவில்லை என்றும், எனவே, அந்த வழக்கு விசாரணைக்கு தடை விதிக்க வேண்டும் என்றும் சென்னை உயர்நீதிமன்றத்தில் தினகரன் மனு தாக்கல் செய்தார்.
இந்த மனுவை விசாரித்த நீதிபதி ரமேஷ், அந்நிய செலாவணி மோசடி வழக்கை விசாரிக்க எழும்பூர் நீதிமன்றத்திற்கு இடைக்கால தடை விதித்து கடந்த ஜூலை 7ஆம் தேதி உத்தரவிட்டார்.

இந்த தடையை நீக்க கோரி அமலாக்கப்பிரிவு சார்பில் மனு தாக்கல் செய்யப்பட்டது. அதில், 20 ஆண்டுகளுக்கு பின்னர் இப்போது தான் வழக்கு விசாரணை தொடங்கியுள்ளது. தினகரனுக்கு அனைத்து வாய்ப்புகளும் கொடுக்கப்பட்டது. வழக்கை மேலும் இழுத்தடிக்க இப்படி ஒரு மனுவை அவர் தாக்கல் செய்துள்ளார் என்றும் கூறப்பட்டிருந்தது. இதையடுத்து இந்த மனு மீதான தீர்ப்பை நீதிபதி தேதி குறிப்பிடாமல் தள்ளி வைத்திருந்தார்.
இந்நிலையில் இந்த மனு மீதான விசாரணை கடந்த ஜூலை 24ஆம்தேதி நடந்தது. நீதிபதி ரமேஷ் பிறப்பித்த உத்தரவில் தினகரன் மீதான குற்றச்சாட்டுப் பதிவின் போது அவரது தரப்பு வாதத்தை எடுத்துரைக்க சரியான வாய்ப்புகள் தரப்படவில்லை என மனுதாரர் தரப்பில் குற்றம் சாட்டப்பட்டுள்ளது. பொதுவாக இதுபோன்ற முக்கியமான வழக்குகளில் குற்றச்சாட்டுப்பதிவு தான் வழக்கு விசாரணைக்கே முக்கியமானதாகும்.
எனவே தினகரன் மீது கடந்த ஏப்ரல் 19ஆம் தேதி பதியப்பட்ட குற்றச்சாட்டுகளை ரத்து செய்கிறேன். எழும்பூர் நீதிமன்றம் வருகிற 31ஆம் தேதிக்குள், ஏதேனும் ஒருநாளில் மீண்டும் அவரிடம் குற்றச்சாட்டுப் பதிவை நடத்த வேண்டும். அதேபோல, தினகரன் மீதான வழக்கை தினந்தோறும் என்ற அடிப்படையில் 3 மாதங்களுக்குள் விசாரித்து முடிக்கவேண்டும்' என்றும் உத்தரவிட்டார். இதனையடுத்து இந்த வழக்கு விசாரணை மீண்டும் நடைபெற்று வருகிறது.
இதனையடுத்து இந்த வழக்கில் அமலாக்கத்துறை சாட்சிகளிடம் குறுக்கு விசாரணை நடந்து வருகிறது. இதுவரை 10 சாட்சிகளிடம் விசாரணை நடந்து முடிந்துள்ளது.
இந்நிலையில் இன்று மீண்டும் இந்த வழக்கானது நீதிபதி மலர்மதி முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. இன்று 11-வது மற்றும் 12-வது சாட்சிகளிடம் விசாரணை நடைப்பெற்றது. வழக்கை விசாரித்த நீதிபதி வழக்கை வருகின்ற அக்டோபர் 26ம் தேதிக்கு ஒத்திவைப்பதாகவும் அன்றைய தினம் டிடிவி தினகரன் நேரில் ஆஜர் ஆக வேண்டும் என்றும் நீதிபதி உத்தரவிட்டார்.












Click it and Unblock the Notifications