பேச்சுவார்த்தை நாளை நடக்கும் போது அதெப்படி மீனவர்களை கைது செய்வது?: மோடிக்கு ஓ.பி.எஸ். கடிதம்!!
சென்னை: தமிழகம்-இலங்கை மீனவர்கள் பேச்சுவார்த்தை அர்த்தமுள்ளதாக அமைய வேண்டும் என்றால், இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்ட 54 தமிழக மீனவர்களை உடனே விடுவிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பிரதமருக்கு தமிழக முதல்வ ர்ஓ.பன்னீர்செல்வம் கடிதம் எழுதியுள்ளார்.
தமிழகம்-இலங்கை மீனவர் பிரதிநிதிகளுக்கு இடையே நாளை பேச்சுவார்த்தை நடத்த தயாராக இருப்பதாக தமிழக அரசு, மத்திய அரசுக்கு ஏற்கனவே கடிதம் அனுப்பியிருந்தது.

இந்த நிலையில் நேற்று இரவு தமிழக முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், பிரதமர் நரேந்திரமோடிக்கு கடிதம் ஒன்று அனுப்பியுள்ளார். அதில் கூறப்பட்டுள்ளதாவது:
தமிழகம் - இலங்கை மீனவர்கள் பேச்சுவார்த்தை நாளை சென்னையில் நடைபெற உள்ளது. இதற்காக இலங்கையை சேர்ந்த மீனவ பிரதிநிதிகள் இன்று சென்னை வர உள்ளனர்.
இந்த பேச்சுவார்த்தைக்கான தேவையான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. இதன் மூலம், இந்த பிரச்சினைக்கு நிரந்தர தீர்வு கிடைக்கும் என்று தமிழக மீனவர்கள் எதிர்பார்த்து காத்திருக்கும் நிலையில், இலங்கை கடற்படையினர் 2 வெவ்வேறு சம்பவங்களில் 10 படகுகளில் சென்ற 54 அப்பாவி மீனவர்களை கைது செய்துள்ளனர்.
கடந்த 21-ந்தேதி இரவு ராமநாதபுரம் மாவட்ட ராமேசுவரத்தில் இருந்து 5 படகுகளில் சென்ற 33 மீனவர்களும், புதுக்கோட்டை மாவட்டம் ஜெகதாபட்டினத்தில் இருந்து 5 படகுகளில் சென்ற 21 மீனவர்களும் பாக் ஜலசந்தி பகுதியில் மீன்பிடித்துக் கொண்டிருந்தபோது, இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இதில் ராமேசுவரம் மீனவர்களை 27-ந்தேதி வரையும், ஜெகதாபட்டினம் மீனவர்களை ஏப்ரல் 2-ந்தேதி வரையும் நீதிமன்ற காவலில் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். தற்போதைய சூழ்நிலையில், தமிழக மீனவர்கள் கைது செய்யப்பட்டுள்ள சம்பவம் அதிர்ச்சி அளிக்கிறது.
தமிழகம்-இலங்கை மீனவர்களுக்கு இடையே பேச்சுவார்த்தை நடைபெற உள்ள நிலையில் இப்படியொரு சம்பவம் நடைபெற்று இருப்பது, இந்த பேச்சுவார்த்தைக்கு முட்டுக்கட்டையாக அமையும். இந்த சம்பவம் தமிழக மீனவர்கள் மத்தியில் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.
இந்த சம்பவத்தை தொடர்ந்து, பேச்சுவார்த்தை சுமுகமாக நடைபெறும் வகையில், கடலோர மாவட்டங்களில் ஏற்பட்டுள்ள பதற்றத்தை தணிக்க தேவையான நடவடிக்கைகளை அரசு எடுத்து வருகிறது.
சமீபத்தில் நடந்த இந்த சம்பவத்திற்கு தனிப்பட்ட வகையில் நீங்கள் கவனம் செலுத்தி, கைது செய்யப்பட்ட 54 மீனவர்களையும், அவர்களது 10 படகுகளையும் உடனடியாக விடுவிக்க தீர்க்கமான மற்றும் நிலையான நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இந்த விவகாரத்தை வெளியுறவுத்துறை மூலம் இலங்கை அரசுக்கு கொண்டு சென்று, தமிழக மீனவர்களையும், படகுகளையும் விடுவிக்க அறிவுறுத்த வேண்டும். தமிழக மீனவர்களை விடுவித்தால் மட்டுமே சென்னையில் நடைபெற உள்ள பேச்சுவார்த்தை அர்த்தமுள்ளதாக அமையும்.
இவ்வாறு முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் அதில் கூறியுள்ளார்.












Click it and Unblock the Notifications