விஜயகாந்த்தை அரசு கைது செய்யாது, ஏன் தெரியுமா?.. ஹைகோர்ட் நீதிபதி சொன்ன 'சுவாரஸ்ய' காரணம்
மதுரை: தேர்தல் நெருங்கும் நிலையில், விஜயகாந்த்தை கைது செய்து இலவச விளம்பரத்தை அரசு தேடி தராது என்று நம்புவதாக அவரின் முன்ஜாமீன் மனு மீது விசாரணை நடத்திய ஹைகோர்ட் நீதிபதி தெரிவித்துள்ளார்.
தஞ்சையில் நடைபெற்ற ஆர்ப்பாட்ட கூட்டத்தின்போது, ஜெயலலிதா படம் அகற்றப்பட்டது தொடர்பாக அதிமுக எம்எல்ஏ எம்.ரங்கசாமி புகாரின்பேரில், விஜயகாந்த், தேமுதிக தெற்கு மாவட்டச் செயலர் ஜெயப்பிரகாஷ், வடக்கு மாவட்டச் செயலர் பரமசிவம், தஞ்சை மாநகரச் செயலர் அடைக்கலம் உட்பட 59 பேர் மீது இந்திய தண்டனைச் சட்டம் 143, 147, 504 மற்றும் பொதுச் சொத்து சேதம் தடுத்தல் சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்தனர்.
இந்த வழக்கில் முன்ஜாமீன் கோரி, உயர் நீதிமன்ற மதுரை கிளையில் விஜயகாந்த் நேற்று அவசர மனு தாக்கல் செய்தார். இந்த மனு, நீதிபதி ஜி.சொக்கலிங்கம் முன் நேற்று விசாரணைக்கு வந்தது.

கைது செய்ய வாய்ப்பு
அப்போது, விஜயகாந்த் சார்பில் மூத்த வழக்கறிஞர் அஜ்மல்கான் வாதிடும் போது, விஜயகாந்த் மீதான வழக்கில் 50 பேரை போலீஸார் கைது செய்துள்ளனர். விஜயகாந்த்தையும் கைது செய்வதற்கு வாய்ப்புகள் உள்ளன.

முதல்வரே சொல்லிட்டாரு
டிசம்பர் 29ம் தேதி (நேற்று) தமிழக முதல்வர் விடுத்துள்ள அறிக்கையின்படி (அதிமுகவினர் போராட கூடாது என்ற அறிவிப்பு) பார்க்கும்போது விஜயகாந்த் எவ்வித குற்றமும் செய்யவில்லை எனத் தெரிகிறது. இதுதொடர்பாக வழக்குரைஞர் ஆணையத்தை நியமித்து நீதிமன்றம் விசாரிக்க வேண்டும். அதுவரை மனுதாரரை கைது செய்யக் கூடாது என்று அரசுத் தரப்பில் உத்தரவாதம் அளிக்க வேண்டும் என்றார்.

அரசியல் கணிப்பு
அதற்கு நீதிபதி சொக்கலிங்கம், "தேர்தல் நெருங்கும் நிலையில், மனுதாரரை கைது செய்து, அவருக்கு அரசுத் தரப்பில் விளம்பரம் தேடித் தர மாட்டார்கள், எனவே பயப்பட வேண்டாம்" என்றார்.

அரசு கோரிக்கை
இதையடுத்து, அரசு வழக்கறிஞர் பாலசுப் பிரமணியன் வாதிடும்போது, இந்த வழக்கில் போலீஸ் தரப்பில் அரசு தலைமை வழக்கறிஞர் வாதிட உள்ளார். இதனால் விசாரணையை ஒத்திவைக்க வேண்டும் என்றார்.

ஜனவரி 5 வரை அரெஸ்ட் இல்லை
இதைப் பதிவு செய்த நீதிபதி, அரசுத் தரப்பில் பதிலளிக்கும் வரை மனுதாரரை கைது செய்யக் கூடாது எனக் கூறி மனு மீதான விசாரணையை ஜனவரி 5ம் தேதிக்கு ஒத்திவைத்து உத்தரவிட்டார். நீதிமன்றங்களும் அரசியல் காய் நகர்த்தல்களை கணித்து கருத்து கூற ஆரம்பித்துள்ளது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications