For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

மண் மேடான பொன் விளையும் பூமி! மலைக்க வைக்கும் கிரானைட் கொள்ளை!!

By Mayura Akilan
Google Oneindia Tamil News

மதுரை: காணும் இடமெங்கும் பச்சைப் பசேல் என்றிருந்த பிரதேசம் இருபது ஆண்டுகளில் மண்மேடாக காட்சியளித்தால் அங்கு விவசாயம் செய்தவர்களின் மனநிலை எப்படி இருக்கும் என்பதை ஐ.ஏ.எஸ் அதிகாரி சகாயத்தின் ஆய்வு நமக்கு உணர்த்துகிறது.

மாடி வீடு கட்டி சொந்தங்களோடு வாழ்ந்த ஜனங்களை விரட்டி விட்டு நிலத்தை பறித்துக்கொண்டது கிரானைட் கொள்ளைக் கும்பல். விவசாய நிலங்களையும் தட்டி பறித்துக்கொண்டதோடு ஊரை விட்டே விரட்டிவிட்டனர். இதை கேட்க யாராவது வரமாட்டார்களா என்று காத்துக்கொண்டிருந்த மக்களுக்கு ரட்சகராய் தெரிகிறார் ஐ.ஏ.எஸ் அதிகாரி சகாயம்.

தங்களின் இந்த நிலைக்கு காரணம் யார்? யார்? அவர்களின் மீது சட்டப்படியான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கண்ணீர் மல்க முறையிடுகின்றனர். இப்படி புகார் சொல்பவர்களையும் புல்லுருவி ஒன்று மிரட்டி பார்க்கிறது.

சூப்பர்வைசர் கண்ணன் என்கிற அந்த உளவாளி, பொதுமக்கள் சொல்லும் குறைகளுக்கு எதிர்ப்பு தெரிவிப்பதோடு, பொதுமக்களிடமும் சகாயத்திடமும் சண்டைக்கு செல்லவே அதை சட்டையே செய்யாமல் தனது பணியை தொடர்ந்து செய்து கொள்ளையர்களுக்கு எதிராக அறிக்கை தயாரித்துள்ளார் சகாயம்.

டாமின் ரூபத்தில் ஆபத்து

டாமின் ரூபத்தில் ஆபத்து

மேலூர் பகுதி இரண்டு போகம் விளையும் விவசாய பூமியாக மட்டுமே இருந்தது. நாலாபக்கமும் விண்ணைத் தொட்டு வளர்ந்து நிற்கும் மலைகள், எந்த நேரமும் பச்சைப் பசேல் என கண்ணுக்குக் குளிர்ச்சி கொடுக்கும் நெல், கரும்பு, வாழை, வயல்கள் என இயற்கை எழில் கொஞ்சும் ஏரியா.

மேலூரை அடுத்து உள்ள ரெங்கசாமிபுரத்தில் 'டாமின்' நிறுவனம் (தமிழ்நாடு மினரல்ஸ் லிமிடெட்) உடைக்கல் (அஸ்திவாரக் கல்) குவாரி அமைத்தபோது, வடக்கு சருகு வலையபட்டியைச் சேர்ந்த வெள்ளை என்பவர் குத்தகை எடுத்தார். கஷ்டப்பட்டு குவாரியை எடுத்தவர், அவரால் அசலையே புரட்ட முடியவில்லையாம்.

கிரானைட் கற்கள்

கிரானைட் கற்கள்

அந்த நேரத்தில் மேலூர் பகுதியில் வெட்டி எடுக்கப்படும் உடைக் கற்கள் சேலம், ஈரோடு, கிருஷ்ணகிரி, நாமக்கல் வரை போகும். அங்கே இந்தக் கற்களின் தரத்தை பார்த்த கிருஷ்ணகிரியைச் சேர்ந்த கிரானைட் புள்ளி ராஜ மாணிக்கம் என்பவர், உலகத் தரம் வாய்ந்த கிரானைட் மேலூர் பகுதியில் இருப்பதைத் தெரிந்துகொண்டு மேலூர் பகுதியில் காலடி எடுத்து வைத்தார்.

ரெங்கசாமிபுரம் குவாரியில் பெரிய சைஸ் கிரானைட் கற்களை வெட்டி எடுக்க வெள்ளையிடம் சப்- கான்ட்ராக்ட் போட்டார் ராஜ மாணிக்கம். அங்கு வெட்டி எடுக்கப்பட்ட 'காஷ்மீர் ஒயிட்' கிரானைட் கற்களின் தரம் ராஜமாணிக்கத்தின் வாழ்க்கைத் தரத்தை உயர்த்தியது. அதனால் வெள்ளையின் வாழ்க்கையிலும் வெளிச்சம் வந்தது.

பி.ஆர்.பியின் சாம்ராஜ்யம்

பி.ஆர்.பியின் சாம்ராஜ்யம்

அப்போது பெரியாறு பாசனக் கால்வாயில் துணைக் கால்வாய்களைக் கட்டுவதற்காக மேலூர் பகுதிக்கு வந்த பி.ஆர்.பி. என்று சொல்லப்படும் பழனிச்சாமி. கால்வாய் கட்டுவதற்காக மேலூரில் வாடகை வீட்டில் இருந்துகொண்டே கிரானைட் கற்களைப் பற்றி மோப்பம் பிடித்தார்.

அமைச்சர் ஆதரவில்

அமைச்சர் ஆதரவில்

அப்போது, பொதுப் பணித் துறை அமைச்சராக இருந்தவரின் (மூக்கு நடிகையோடு குடும்பம் நடத்தியவர்) தொடர்பு கிடைக்கவே, மெள்ள மெள்ள கிரானைட் பிரவேசம் எடுத்தார் பி.ஆர்.பி பழனிச்சாமி. இவருக்கும் இந்தத் தொழிலில் அரிச்சுவடி சொல்லிக் கொடுத்தது வெள்ளையின் 'காஷ்மீர் ஒயிட்' குவாரிதான். வெள்ளையோடு ஒப்பந்தம் செய்துகொண்டு கிரானைட் தொழிலைத் தொடங்கிய பி.ஆர்.பி. அடுத்த சில வருடங்களிலேயே கிரானைட் முதலை ஆகிவிட்டார்.

சிதைந்த சின்னங்கள்

சிதைந்த சின்னங்கள்

கிரானைட் கொள்ளையர்களின் பேராசையில் சிதைக்கப்பட்ட புராதான சின்னங்கள், இயற்கையை அழித்து வெட்டப்பட்ட கிரானைட் மரணக் கிணறுகள் மதுரை மாவட்டத்தில் மிரள வைக்கின்றன. தலையில்லாத முண்டமாக சேதாரமாகியுள்ள பெரும் மலைகள், இனி விவசாயமே செய்ய முடியாது என்ற நிலையில் இருக்கும் தரிசு நிலங்கள் காண்பவர்களை அச்சுறுத்துகின்றன.

இதை தட்டிக்கேட்க வேண்டிய அரசு அதிகாரிகளோ கிரானைட் முதலைகள் போடும் எச்சில் துண்டுக்காக வாலாட்டியதன் விளைவினால் விளை நிலங்கள் எல்லாம் கிரானைட் கழிவுகளால் மூடப்பட்டு பாலைவனமாகிப்போனது.

கண்ணீர் கதைகள்

கண்ணீர் கதைகள்

மலையை வெட்டி மண் ஆக்கிய கிரானைட் கொள்ளையர்கள் தண்ணீர் வரத்து கால்வாய்களிலும், ஓடைகள், குளங்கள், கண்மாய்களிலும் கிரனைட் கழிவுகளை கொட்டி அவற்றை தடம் தெரியாமல் அழித்துவிட்டனர் இவற்றைத்தான் இன்றைக்கு கண்ணீரோடு கதை கதையாக கூறுகின்றனர் சகாயத்திடம்.

தப்பிய யானை மலை

தப்பிய யானை மலை

மதுரையில் இருந்து காரைக்குடி செல்லும் வழியில் உள்ளது மேலூர். அதற்கு முன்பாகவே ஒத்தக்கடை யானைமலையும், விவசாய கல்லூரியும் அதன் பசுமையும் நம்மை வரவேற்கும். யானைமலையை வெட்டி சிற்ப கலை நகரம் அமைக்கப்போவதாக 2010ஆம் ஆண்டு அறிவிக்கப்பட்டது. சிற்ப நகரம் என்ற பெயரில் சிவப்பு நிற கிரானைட் கற்களை வெட்ட திட்டம் போட்டனர் சில முதலைகள். ஆனால் மக்களின் போராட்டத்தால் யானைமலை தப்பியது.

பொன் விளையும் பூமி

பொன் விளையும் பூமி

இந்த யானைமலையின் கம்பீரத்தை பார்த்துக்கொண்டே குளுமையோடு பயணித்தால் நீர் வரத்து கால்வாய்கள் சலசலக்க மேலூர் வந்து விடும். ஒத்தக்கடை, யானைமலை, கீழையூர், கீழவளவு, அரிட்டாபட்டி, திருவாதவூர், இடையபட்டி, என மேலூரை சுற்றியுள்ள கிராமங்களில் 90களில்விவசாயம் செழித்து வளர்ந்திருந்தது. மலைகளும், சிறு சிறு குன்றுகளும் அதன் நடுவே பசுமையுமாய் காட்சியளித்த இந்த பகுதியில் கிரானைட் வடியில் காலன் காலடி எடுத்து வைத்ததன் விளைவை இப்போது அனுபவிக்கின்றனர் என்கின்றனர்.

சமணர் படுகைகள்

சமணர் படுகைகள்

இங்குள்ள மலைகளில் சமணர்கள் வாழ்ந்ததற்கான ஆதாரங்கள், கல்வெட்டுக்கள், சமணர் படுகைகள், குகைக்கோயில்கள், தமிழ் பிராமி எழுத்துகள் உள்ளன. இம்மலைகளை, புராதன சின்னங்களாக அறிவித்து, தொல்லியல் துறை பராமரித்து வருகிறது. கிரானைட் நிறுவன உரிமையாளர்கள், புராதன சின்னங்கள் நிறைந்த மலைகளை வெடி வைத்து தகர்த்ததை, தொல்லியல் துறையினர், "டாமின்' அதிகாரிகள் கண்டுகொள்ளவில்லை.

வெடிவைத்து தகர்ப்பு

வெடிவைத்து தகர்ப்பு

அரிட்டாபட்டி மலையின் ஒரு பகுதி, கீழவளவு பஞ்சபாண்டவர் மலை, சர்க்கரை பீர் மலை, இடையபட்டி, திருவாதவூர், புறாக்கூடு மலைகள் முழுவதும் வெடி வைத்து தகர்த்து, கிரானைட் கற்களை எடுத்துள்ளனர். இந்த விதி மீறல்கள் 15 ஆண்டுகளாக நடந்துள்ளன. இதனால் புராதன சின்னங்கள் சில அழிந்து விட்டன.

ரோஸ்நிற கற்கள்

ரோஸ்நிற கற்கள்

புறாக்கூடு மலை மீது கருப்புசுவாமி கோயில் இருந்தது. மலை உச்சி புறாக்கூடு போல் தோற்றம் கொண்டது. இம்மலை "ரோஸ்' நிற பாறைகளால் ஆனது. இதையும் "டாமின்' மூலம் வெட்டி எடுத்து விட்டனர். புராதன சின்னங்களை சிதைத்து, கிரானைட் நிறுவனத்தினர் வளம் கொழித்துள்ளனர்; வெடி வைத்து சிதைக்கப்பட்ட மலைகள் மட்டுமே, எச்சங்களாக பரிதாப காட்சி தருகின்றன. கிரானைட் கற்களுக்காக இயற்கை வளங்கள் கொள்ளையடிக்கப்பட்டது பற்றி ஆய்வு செய்து வரும் ஐ.ஏ.எஸ் அதிகாரி சகாயத்திடம் கதை கதையாக சொல்கின்றனர் அங்கு வாழ்ந்து வரும் மக்கள்.

அரசு விருது பெற்ற விவசாயி

அரசு விருது பெற்ற விவசாயி

ஐ.ஆர்., எட்டு மகசூலில் ஏக்கருக்கு, 100 மூட்டை எடுத்து அரசின் விருது பெற்ற விவசாயி இன்றைக்கு அதே ஏக்கத்தோடு வாழ்ந்து வருகிறார். கிரானைட் கற்களை எடுப்பதற்காக பத்திரப் பதிவு அலுவலர்களை விவசாயிகளின் வீட்டுக்கு கூட்டி வந்து, மிரட்டி பவர் பத்திரம் எழுதி வாங்கியுள்ளனர் பி.ஆர்.பி கிரானைட் முதலைகள்.

புறாக்கூடு மலை

புறாக்கூடு மலை

செம்மினிபட்டி ஊராட்சியில், ஒன்பது ஏக்கரில் உள்ள புறாக்கூடு மலையை ஆய்வு செய்த போது, ''பி.ஆர்.பி., நிறுவனத்தினர், தமிழ்நாடு கனிம நிறுவனம் (டாமின்) பெயரில், 92 அடி உயர மலையை வெட்டி கற்களை கடத்தினர்,'' என்று புகார் தெரிவிக்கப்பட்டது.

கடத்தல் விற்பனை

கடத்தல் விற்பனை

புறாக்கூடு மலையில், 'டாமின்' குறியீடு மற்றும் எண் கொடுத்து பி.ஆர்.பி., குவாரிக்கு, கற்கள் கொண்டு செல்லப்பட்டதும், பின், 'காஸ் வெல்டிங்' மூலம் குறியீடு அகற்றப்பட்டு வெளிச்சந்தையில் விற்கப்பட்டதும் ஆய்வில் தெரிந்தது.

தற்காலிக பணி நீக்கம்

தற்காலிக பணி நீக்கம்

புறாக்கூடு மலை அடிவாரத்தில், 23 பேரிடம் நிலங்களை வாங்கியதாக பி.ஆர்.பி., நிறுவனத்தினர், போலி பட்டா தயாரித்து, அங்கு கற்களை அடுக்கி வைத்திருக்கின்றனர் என்று கிராமத்தினர் புகார் கூறவே இதுகுறித்து ஆய்வு செய்ய ஆர்.டி.ஓ., செந்தில்குமாரிக்கு, சகாயம் உத்தரவிட்டார்.'

கோவில் அழிப்பு

கோவில் அழிப்பு

'பெரியசேண்டலை குளத்தில் இருந்த முனியாண்டி கோவிலை, பி.ஆர்.பி., நிறுவனத்தினர் அழித்து விட்டனர்' என, கிராமத்தினர் புகார் கூறினர். எரிச்சிக்கண்மாயை ஆய்வு செய்த சகாயத்திடம் கிராமத்தினர், 'விளைநிலங்களில் கிரானைட் கழிவுகளை கொட்டியது குறித்து வி.ஏ.ஓ.,விடம் புகார் தெரிவித்தும் நடவடிக்கை இல்லை' என்று புகார் சொன்னார்கள்.

8 கண்மாய்கள் காணோம்

8 கண்மாய்கள் காணோம்

இ.மலம்பட்டியில் நவன்குடி குளத்தை, பி.ஆர்.பி., நிறுவனத்தினர் அழித்து கிரானைட் கற்களை வெட்டியது தெரிய வந்தது. தலா, 26 ஏக்கர் கொண்ட நவன்குடி, குப்பையன், திருமணிமுத்தாறு, பெரிய, சின்ன சேண்டலைகுளம் உட்பட, எட்டு கண்மாய்கள் அழிக்கப்பட்டது குறித்து அறிக்கை தாக்கல் செய்ய வருவாய்த் துறையினருக்கு, உத்தரவிட்ட சகாயத்திடம் சண்டைக்கு போனார் பி.ஆர்.பியின் உளவாளி சூப்பர்வைசர் கண்ணன். அதை சட்டை செய்யாத சகாயம் உங்க தரப்பு புகாரை எழுதி கொடுங்க என்று மட்டுமே கேட்டுவிட்டு ஆய்வை தொடங்கினார்.

செயற்கை பஞ்சம்

செயற்கை பஞ்சம்

பொக்கிஷ மலையைச் சுற்றி இருந்த கூத்தன் செட்டி புதுக்குளம், வேப்பம்குடி கண்மாய், குதிரை சாம்பான் கண்மாய் என்று அங்கிருந்த கண்மாய் பகுதிகளுக்குள் கிரானைட் கழிவுகளை மலைபோல் கொட்டி செயற்கையாக பஞ்சத்தை ஏற்படுத்தியுள்ளனர். அதோடு மட்டுமல்லாது தடுமாறிய விவசாயிகளிடம் நிலங்களை சொற்ப தொகைக்கு மிரட்டி வாங்கி, அவர்களை அந்த இடத்தைவிட்டே விரட்டியுள்ளனர். சோகத்துடன் தங்களின் சொந்த கதையை சொல்ல, அவற்றை வாய்ஸ் ரெக்கார்டரில் பதிவு செய்துகொண்டார் சகாயம்.

நிர்வாண குளியல்

நிர்வாண குளியல்

புது தாமரைபட்டி கிராமத்தில் கிரானைட் கற்களை தோண்ட வைக்கும் வெடியால் வீடுகள் பிளந்து நிற்கின்றன. சில வீடுகள் இடிந்து விழவே, போலீசுக்கு புகார் சொன்னால் நடு வீதியில் வந்து நிர்வாண குளியல் போடுவார்களாம் கிரானைட் நிறுவன ஊழியர்கள். பெண்களுக்கு பாலியல் தொல்லை கொடுப்பார்களாம். இதனாலேயே பயந்து கொண்டு ஊரை காலி செய்த சோகமும் நடந்துள்ளது.

சுடுகாடான விளைநிலம்

சுடுகாடான விளைநிலம்

10 வருடங்களுக்கு முன்பு 'ஐ.ஆர்8' என்கிற நெல், ஓர் ஏக்கருக்கு 110 மூட்டைகள் வீதம் விளைந்து விருது வாங்கின பூமி. கிரானைட் இருக்குனு தெரிந்ததும் எங்களை மிரட்டியும், தராதவர்களை அடித்தும் வாங்கினார்கள். 500 அடிக்கு மேல பூமியை குடைந்து வெட்டியதில் குடிக்கக்கூட தண்ணீர் இல்லை. காசுக்குத்தான் கேன் தண்ணி வாங்குறோம். இப்போ எல்லா நிலங்களும் போய் கட்டட வேலைக்குப் போறோம். அதுக்கும் வெளி மாநில ஆட்களைக் கூட்டி வந்துடுறாங்க. எங்க பூமியில எங்களால பொழப்பு நடத்த முடியல. நெல், தானியம்னு பொன் விளைந்த பூமி இப்போ சுடுகாடா மாறிப்போச்சு என்று கதறினார் ஒரு பெண்.

குழந்தை நரபலி

குழந்தை நரபலி

என்னுடைய மூன்று வயது குழந்தையை இங்கு நரபலி கொடுத்துட்டாங்க. ஊரே சேர்ந்து ஒரு மாதம் போராட்டம் பண்ணியும் இன்னமும் குற்றவாளியை கண்டுபிடிக்கலை. எதுவும் நடக்கலை. நீங்களாவது ஏதாவது செய்யுங்கய்யா...' என்று கதறினார் உஷா என்கிற பெண்.

கூலிக்காரர்கள் ஆன விவசாயிகள்

கூலிக்காரர்கள் ஆன விவசாயிகள்

நீர் வரத்துக்கால்கள் ஆக்கிரமிக்கப்பட்டதால் பெரும்பாலான வயல்களை கிரானைட் கம்பெனிகளிடமே வந்த விலைக்கு விற்றுவிட்டு கூலி வேலைக்குப் போய்விட்டார்கள் விவசாயிகள். விற்க மறுத்தவர்களின் நிலங்களை மிரட்டி எழுதி வாங்கிக்கொண்டனர். மதுரை மாவட்டத்தில் மட்டும் சுமார் 5,000 ஏக்கருக்கும் கூடுதலாக விவசாய நிலங்களைப் பாழாக்கி அவற்றைக் ஏப்பம் விட்டுருக்கின்றனர் கிரானைட் கொள்ளையர்கள்.

சாட்டை சுழலும்

சாட்டை சுழலும்

கிரானைட் கழிவுகளால் மலடாகி போன விவரங்களையும், விவசாயிகளின் தொலைந்துபோன வாழ்வையும், விவசாய நிலங்கள், நிலத்தடி நீர் இல்லாமல் போன காரணத்தையும், பென்னி குயிக் அமைத்து கொடுத்த நீர்வரத்து கால்வாய்கள், அவைகள் சேதாரப்படுத்தி நொறுக்கப்பட்ட கால்வாய்கள், மண் மேடான மலைகள் என ஆய்வின் மூலம் கண்டறிந்த சகாயம், கிரானைட் கொள்ளையர்களுக்கு எதிராக பட்டியல் தயார் செய்துள்ளாராம். இதன்மூலம் மதுரை மாவட்டத்தில் கனிம வளங்களை இதுநாள்வரை சூறையாடிய மிகப்பெரிய முதலைகள் சிக்குவார்கள் என்ற நம்பிக்கை எழுந்துள்ளது.

English summary
The various damages caused to hillocks, water resources, etc. due to granite mining have been assessed by the Sagayam Committee near Melur in Madurai district.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X