குஜராத் தேர்தலுக்கே ஜி.எஸ்.டி வரிக்குறைப்பு என்பது அக்மார்க் உண்மை - மு.க. ஸ்டாலின்

Subscribe to Oneindia Tamil

சென்னை : ஜி.எஸ்.டி வரியை மத்திய அரசு குறைத்திருப்பதில் உள்நோக்கம் இருக்கிறது என்று திமுக செயல் தலைவர் மு.க. ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.

இரு தினங்களுக்கு முன்பு நடந்த ஜி.எஸ்.டி கூட்டத்தில் மத்திய நிதியமைச்சர் அருண் ஜெட்லி 213 பொருட்களுக்கு ஜி.எஸ்.டி வரியைக் குறைக்க முடிவு எடுக்கப்பட்டுள்ளதாகத் தெரிவித்தார். இது தேர்தல் அரசியலுக்கானது என்று இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் ஸ்டாலின் தெரிவித்து உள்ளார்.

இதுதொடர்பாக இன்று அவர் வெளியிட்டுள்ள அறிக்கை: 213 பொருட்களுக்கான ஜி.எஸ்.டி. வரி விகிதத்தை குறைத்துள்ளது ஜி.எஸ்.டி கவுன்சில். சரக்கு மற்றும் சேவை வரிச் சட்டம் அவசர கதியில் அமல்படுத்தப்பட்டதால் மக்களுக்கு கடும் பாதிப்பு ஏற்பட்டுள்ளது என்றும், வணிகர்கள், சிறு மற்றும் குறு தொழில் செய்வோர் அனைவரும் மிக மோசமாக பாதிக்கப்பட்டுள்ளார்கள் என்றும் தி.மு.க. உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் தொடர்ந்து குரல் எழுப்பியபோதெல்லாம் அமைதி காத்தது மத்திய பா.ஜ.க. அரசு.

 தேர்தலை மனதில் வைத்து.....

தேர்தலை மனதில் வைத்து.....

தி.மு.க.வின் சார்பில், "ஜி.எஸ்.டி. சட்டத்தை அமல்படுத்துவதை 3 மாதம் தள்ளிவைத்து, முறையாக திட்டமிட்டு பிறகு செயல்படுத்துங்கள்" என்று நான் மத்திய நிதி மந்திரிக்கு விடுத்த வேண்டுகோளையும் கூட ஏற்கவில்லை. இங்குள்ள அ.தி.மு.க. அரசும் சட்டமன்றத்தில் தி.மு.க. சுட்டிக்காட்டிய பாதிப்புகளை எல்லாம் கண்டுகொள்ளாமல் விரைந்து ஜி.எஸ்.டி. சட்டத்தை நிறைவேற்றிக் கொடுத்தது. அன்று மக்களின் பாதிப்புகளை கண்டுகொள்ள மறுத்த மத்திய பா.ஜ.க. அரசு, இன்று குஜராத் தேர்தல் நேரத்தில் இந்த வரிக்குறைப்பு அறிவிப்புகளை வெளியிட்டிருக்கிறது.

 வரி உரிமையைக் கைப்பற்றும் செயல்

வரி உரிமையைக் கைப்பற்றும் செயல்

மக்களுக்கு ஏற்பட்டுள்ள பாதிப்புகளை மனதில் வைத்து இந்த வரி விகிதம் குறைக்கப்பட்டுள்ளது என்பதை விட, குஜராத் தேர்தலை எண்ணி எடுக்கப்பட்ட நடவடிக்கை என்பதுதான் ‘அக்மார்க்' உண்மையாக இருக்கிறது. ஜி.எஸ்.டி குளறுபடிகளால் ஏற்பட்ட உயிரிழப்புகளுக்கும், வாழ்வாதார பாதிப்புகளுக்கும் இந்த மத்திய அரசு பொறுப்பேற்க வேண்டும். அரசின் தேவைகளுக்காக செய்யப்படும் இதுபோன்ற மாற்றங்கள், மாநில வரி உரிமையை மத்திய அரசு கைப்பற்றிக் கொண்டது என்ற தி.மு.க.வின் குற்றச்சாட்டை நிரூபிப்பதாக உள்ளது.

 அன்றே சொன்னது தி.மு.க

அன்றே சொன்னது தி.மு.க

ஓட்டல்களுக்கு 18 சதவீதம் வரி விதிக்கப்பட்டபோது அதை தி.மு.க. எதிர்த்தது. ஓட்டல் தொழிலில் ஈடுபட்டுள்ள சிறிய முதலாளிகள், தொழிலாளிகள் உள்ளிட்ட அனைவரையும் பாதிக்கும் என்பதை எடுத்துரைத்தோம். ஆனாலும் பிடிவாதமாக ஓட்டல்களுக்கு 18 சதவீத வரியை குறைக்க மறுத்து அந்த தொழிலையே 5 மாதங்கள் முடக்கி வைத்தார்கள். ஜி.எஸ்.டி. அமல்படுத்தப்பட்டு 5 மாதங்கள் கழித்து ஓட்டல்களுக்கான ஜி.எஸ்.டி. வரி 5 சதவீதமாக குறைக்கப்பட்டுள்ளது.

 வேதனைக்குரிய ஜி.எஸ்.டி வரி

வேதனைக்குரிய ஜி.எஸ்.டி வரி

ஆரோக்கியமான ஜனநாயகத்தில் எதிர்க்கட்சிகளின் ஆக்கபூர்வமான குரலை கேட்கவேண்டும் என்ற குறைந்தபட்ச அணுகுமுறையைக்கூட மத்தியில் உள்ள பா.ஜ.க. அரசு கடைப்பிடிக்காமல் ஜி.எஸ்.டி. சட்டத்தை எதேச்சதிகாரமான முறையில் அமல்படுத்தியது என்பது உண்மையிலேயே வேதனைக்குரியது.

 இது ஒரு துவக்கம்

இது ஒரு துவக்கம்

ஜி.எஸ்.டி.யின் கீழ் 213 பொருட்களுக்கு வரி குறைக்கப்பட்டுள்ளது ஒரு துவக்கம் என்றாலும், இதுவே முடிவல்ல என்ற மனநிலையை மத்தியில் உள்ள பா.ஜ.க. அரசு பெற வேண்டும். ஏனென்றால் ஜி.எஸ்.டி. வரி அதிகபட்சமாக 18 சதவீதத்துக்கு மேல் போகக்கூடாது என்று எதிர்க்கட்சிகள் மட்டும் கூறவில்லை. மத்திய அரசின் தலைமை பொருளாதார ஆலோசகர் அரவிந்த் சுப்பிரமணியனே கூறியிருக்கிறார்.

 18% அதிகபட்ச ஜி.எஸ்.டி வரி

18% அதிகபட்ச ஜி.எஸ்.டி வரி

ஜி.எஸ்.டி. வரி விதிப்பால் அனைத்து தரப்பு மக்களுக்கும் ஏற்பட்ட பாதிப்பை கணக்கில் எடுத்துக்கொண்டு ஜி.எஸ்.டி.யில் உள்ள 28 சதவீத வரி விதிப்பை (புகையிலை தவிர) அடியோடு ரத்து செய்துவிட்டு இனி அதிகபட்ச வரி 18 சதவீதம் மட்டுமே என்ற முடிவினை மத்திய அரசு எடுக்க முன்வர வேண்டும். ஜி.எஸ்.டி. கவுன்சிலை கூட்டி வரி குறைப்பு அறிவிப்புகளை வெளியிடுவதற்கு பதில், இனி 18 சதவீத வரியே அதிகபட்ச வரி என்ற நிலையை உருவாக்க நடவடிக்கைகளையும் மத்திய அரசு எடுக்க வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன் என்று அந்த அறிக்கையில் ஸ்டாலின் தெரிவித்து உள்ளார்.

திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

English summary
DMK working president MK Stalin has requested to keep 18% is the Highest GST slab for all products. And also added that GST Percentage down is done for Gujarat assembly elections.

நாள் முழுவதும் oneindia
செய்திகளை உடனுக்குடன் பெற