பெருமழையில் மூழ்கிய பள்ளிகள்.. சீர்காழி, தரங்கம்பாடியில் இன்று பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை
மயிலாடுதுறை: தமிழ்நாட்டிலேயே அதிகபட்ச மழை பொழிந்த மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி மற்றும் தரங்கம்பாடி வட்டங்களில் பள்ளிகளுக்கு மட்டும் இன்று விடுமுறை அறிவிக்கப்பட்டு உள்ளது.
வடகிழக்கு பருவமழை தமிழ்நாட்டில் மேலும் தீவிரம் அடையத் தொடங்கியுள்ளதை அடுத்து, வங்கக் கடலில் கடந்த புதன்கிழமை காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவானது.
இந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி வடக்கு மற்றும் வடமேற்கு திசையில் நகர்ந்து கடந்த வியாழக்கிழமை தென்மேற்கு வங்கக் கடல் பகுதியில் நிலை கொண்டது.

பெருமழை
வலுவடைந்த தாழ்வு மண்டலம் கரையை கடந்தபோது மயிலாடுதுறை மாவட்டத்தில் பெரு மழை கொட்டித்தீர்த்தது. அதிபட்சமாக மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழியில் 44 செண்டி மீட்டர் பெருமழை கொட்டித் தீர்த்தது. பெருமழை காரணமாக சீர்காழி, தரங்கம்பாடி சுற்றுவட்டார பகுதிகள் வெள்ளக்காடாக மாறி உள்ளன.

வெள்ளம்
பெருமழை வெள்ளம் காரணமாக மக்களின் இயல்பு வாழ்க்கை கடுமையாக பாதிக்கப்பட்டு இருக்கிறது. குடியிருப்புகள் மட்டுமின்றி விளை நிலங்கள், வணிக நிறுவனங்கள், கல்வி நிறுவனங்கள் என பல பகுதிகள் நீரில் மிதக்கின்றன. குறிப்பாக மாணவ மாணவிகளின் புத்தகங்களும் சேதமடைந்து இருக்கின்றன.

அமைச்சர் மெய்யநாதன்
இது தொடர்பாக நேற்று முந்தினம் சீர்காழியில் ஆய்வுக்கு சென்ற அமைச்சர் மெய்யநாதன், செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், தற்போதைக்கு பள்ளி, கல்லூரிகளை திறக்க வாய்ப்புகள் இல்லை. தண்ணீர் சூழ்ந்த பகுதியாக இது உள்ளது. மாணவர்களின் புத்தகங்கள் சேதமடைந்து இருக்கின்றன. எனவே மாவட்ட ஆட்சியருடன் பேச வேண்டும்.

விடுமுறை
எனவே இங்கு பள்ளி, கல்லூரிகளை திறப்பதற்கு சற்று காலதாமதம் ஆகும். அந்த அளவுக்கு பாதிப்பு அதிகமாக உள்ளது. பாதிக்கப்பட்ட மாணவர்களுக்கு புதிய புத்தகங்கள் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும். அதற்கான கணக்கெடுப்பு பணிகள் நடைபெறும். இந்த நிலையில் நேற்று தமிழ்நாட்டிலேயே மயிலாடுதுறை மாவட்டத்தில் மட்டும் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டது.

முதலமைச்சர் ஆய்வு
நேற்று சீர்காழி சென்று வெள்ள பாதிப்புகளை பார்வையிட்ட முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மக்களுக்கு நிவாரண உதவிகளையும் வழங்கினார். மயிலாடுதுறை மாவட்டத்தின் பல பகுதிகளில் தற்போது வெள்ளம் வடிந்துவிட்டதால் சீர்காழி மற்றும் தரங்கம்பாடி வட்டங்களில் மட்டும் பள்ளிகளுக்கு விடுமுறை என மாவட்ட ஆட்சியர் அறிவித்து உள்ளார்.

பள்ளிகளுக்கு விடுமுறை
கனமழையால் பள்ளிகளில் தேங்கி இருக்கும் வெள்ள நீரை மோட்டார் பம்புகள் மூலம் வெளியேற்றும் பணிகள் துரிதமாக நடைபெற்று வருகின்றன. இதன் காரணமாக சீர்காழி மற்றும் தரங்கம்பாடி வட்டங்களில் மட்டும் பள்ளிகளுக்கு மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் கவிதா விடுமுறை அறிவித்து உள்ளார்.












Click it and Unblock the Notifications