அரசு பள்ளிகளிலும் மழலையர் வகுப்புகள் வேண்டும்... மனித உரிமைப் பாதுகாப்பு இயக்கம் போராட்டம்
சென்னை: அரசு துவக்கப்பள்ளிகளில் மழலையர் பள்ளி வகுப்புகளை (LKG & UKG) உடனடியாக தொடங்குவதன் மூலம் தனியார் பள்ளிகளின் அதிக கட்டண வசூலிப்பிற்கு முற்றுப்புள்ளி வைக்கப் பட வேண்டும் என்பதை வலியுறுத்தி சென்னையில் உள்ள பள்ளிக்கல்வி இயக்குனரகம்முன்பாக மனித உரிமைப் பாதுகாப்பு இயக்கத்தின் சார்பில் போராட்டம் நடத்த உள்ளதாக அறிவிக்கப் பட்டுள்ளது.
இது தொடர்பாக மனித உரிமை பாதுகாப்பு இயக்கத்தின் சார்பில் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது :-
எல்லா செல்வங்களுள் உயர்ந்த செல்வம் நம் மழலைச் செல்வங்கள் தான். 3 முதல் 6 வயதுடைய மழலைகள், பச்சைக் களிமண் போன்றவர்கள். அவர்களை ‘பிள்ளையாராகவும்' பிடிக்க முடியும் ‘குரங்குகளாகவும்' பிடிக்கமுடியும். "மழலைகளுக்கான கல்விமுறையை பல்வேறு குழந்தைகள் மனநல நிபுணர்கள், கல்வியாளர்கள் 3 முதல் 6 வயதுடைய குழந்தைகளுக்கு புலனறிவு கல்வி முறையில் கற்பிக்க வேண்டுமென்று கூறுகின்றனர்.
புத்தகமில்லாமலும், ஆடல், பாடல் மூலமாகவும் ஐம்புலன்களை பயன்படுத்த கற்றுத்தர வேண்டுமென்றும், கிறுக்குதல், தாள்களை கிழித்தல், கசக்குதல் போன்ற பல்வேறு பயிற்சிகளையே விளையாட்டு முறையில் (Play Way Method) கற்பிக்க வேண்டுமென்றும் கூறுகின்றனர்.
மத்திய அரசின் தேசிய கல்வி ஆய்வு மற்றும் பயிற்சிக் கழகத்தால் (NCERT) உருவாக்கப்பட்ட தேசிய பாடத்தொகுப்பிற்கான கட்டமைப்பு (National Curriculam Framework, 2005) இத்தகைய கல்விமுறை எந்த வகையில் நடைமுறைப்படுத்த வேண்டும் என்பதற்கு பெரிய அளவில் திட்டத்தை தயாரித்துள்ளது. (இன்றுவரை அது எழுத்தில் மட்டுமே உள்ளது) இதனடிப்படையில் குழந்தைகளின் வளர்ச்சிக்கான ஒருங்கினைந்த சேவை (Integerated Child Development Services) என்று மத்திய அரசு திட்டமிட்டு அங்கன்வாடி, பால்வாடி நிலையங்களை ஏற்படுத்தினாலும், மழழையர்களுக்கான கல்வி முழுமையாக நடைமுறைப்படுத்தப்படவில்லை.
முதல் வகுப்பு தொடங்கி பன்னிரெண்டாம் வகுப்பு வரை, அரசு பள்ளிகளை நடத்துகின்றன. அப்படி இருக்கும்பொழுதே அவற்றில் போதிய உட்கட்டமைப்பு வசதிகளில்லை, மாணவர்கள் சரியாக தேர்ச்சி பெறுவதில்லை, சரியாக பாடம நடத்தப்படுவதில்லை என்று பல காரணங்களை காட்டியே கொள்ளையடிக்கும் தனியார் பள்ளிகளுக்கு, மழலையர் பள்ளி வகுப்புகளை அரசு நடத்தாமல் இருப்பதும், மழலையர் பள்ளி வகுப்புகளுக்கு தனியார் பள்ளிகளையே பெற்றோர்கள் சார்ந்திருக்கும் சூழலும் ஆட்டுக் கிடைக்கு ஓநாய்களை காவல் வைத்தது போலாகிறது.
பெட்ரோல், விலையை போன்று ஆண்டுக்காண்டு எகிறும் மழலையர் பள்ளி வகுப்புகளுக்கான கட்டண உயர வினால் பெற்றோர்கள் விழிபிதுங்கி நிற்கின்றனர். காசிருப்பவர்களும், கடன் பெற்று சமாளிப்பவர்களும் மட்டுமே மழலையர் பள்ளிகளில் தங்கள் குழந்தைகளை சேர்க்கமுடியும், காசில்லாதவன் குழந்தைகளுக்கு ‘மழலையர் பள்ளிகளில் பயில வக்கில்லை' என்ற ‘மனு' நீதி உருவாக்கப்பட்டுள்ளது.
இப்படி அரும்பாடுபட்டு தங்கள் குழந்தைகளை மழலையர் பள்ளி வகுப்புகளில் சேர்க்கும் பெற்றோர்களுக்கு தங்கள் குழந்தைகளுக்கு எந்த வகையான கல்வி போதிக்கப்படுகிறது என்பது தெரியாது. 8 க்கு 10 அளவிலான சிறிய இடத்தில் கூட ‘வகுப்பறைகளை' நடத்தும் தனியார் மழலையர் பள்ளிகள் மற்றும் அரசு அங்கீகரம் பெறாமல் நடத்தப்படும் ஆயிரக்கணக்கான பள்ளிகள் என, பிஞ்சுக் குழந்தைகளை பிணைய கைதிகளாக வைத்து பணம் பறிக்கும் வழிப்பறி கூட்டத்தில் சிக்கி பெற்றோர்கள் சின்னாபின்னமாகின்றனர்.
தேசிய கல்வி ஆய்வு மற்றும் பயிற்சிக் கழகம், கல்வியாளர்கள் மற்றும் குழந்தைகள் நல நிபுணர்கள் கூறுவது போன்ற கல்விமுறை இங்கில்லை. மாறாக 3 முதல் 6 வயது குழந்தைகளுக்கு செக்குமாட்டுத்தனமான, அறிவியலுக்கு முரணான கல்விமுறை இங்கு ‘கட்டாயமாக புகட்டப்படுகிறது.
மனப்பாட கல்விமுறைகளை புகுத்துவது, நிறைய புத்தகங்களை கொடுத்து மழலைகளை சுமை தூக்கிகளாக மாற்றுவது போன்ற பித்தலாட்டத்தங்கள் மூலம் 'கல்வித்தந்தைகளான' தனியார்பள்ளி கொள்ளையர்கள், பெற்றோர்கள் கொடுக்கும் ‘விலைக்கு' உரிய ‘பொருளை' வழங்குவதாக ஏமாற்றுகின்றனர்.
பெற்றோர்களும் தங்களின் மழலைச் செல்வங்கள் ஊசிப் போட்டு பெருக்கப்படும் ‘கறிக்கோழிகளாக' மாற்றப்படுவது பற்றிய விபரீதம் அறியாமல், என் பிள்ளை நிறைய ரைம்ஸ் சொல்கிறான், இங்கிலீசில் பேசுகிறாள், அந்த 'ஸ்கூலில் நிறைய புக்ஸ் கொடுக்குறாங்க', 'தினமும ஹோம் ஒர்க் தர்றாங்க' என்று பூரிக்கின்றனர். தங்கள் இலாபவெறிக்கு, மழலைகளின் சிந்தனையை முடமாக்கும் இந்த அயோக்கியத்தனம் ஒழிக்கப்படவேண்டுமென்றால் ‘மழலையர் பள்ளி வகுப்புகளை' அரசே தொடங்கி நடத்தவேண்டும்.
இவ்வாறு தொடங்கி நடத்தப்படும் ‘மழலையர் பள்ளி வகுப்புகள்' 3 முதல் 6 வயதில் உள்ள அனைத்து குழந்தைகளுக்கும் கட்டாயமாகவும், இலவசமாகவும், தாய்மொழியிலும், அறிவியல்பூர்வமாகவும் இருக்கவேண்டும். இல்லையென்றால் நமது குழந்தைகள் சிந்தனை ரீதியாக முடமாவதை நிறுத்தவோ, காசில்லாதவன் குழந்தைகள் கற்க தகுதியில்லை என்ற மனுநீதியை தடுக்கவோ முடியாது.
மழலையர் பள்ளி வகுப்புகளை அரசே தொடங்கி நடத்தக்கோரி எமது அமைப்பால் கடலூர் மாவட்டத்தில் தொடங்கப்பட்ட ‘மாணவர்களின் கல்வி உரிமைக்கான பெற்றோர் சங்கம் (PUSER), சென்னை உயர்நீதிமன்றத்தில்பொதுநல வழக்கு போட்டதில 4 வாரங்களில் அரசு பதிலளிக்க நீதிமன்றம் உத்தரவிட்டதை நீங்கள் நாளேடுகளில் பார்த்திருப்பீகள்.
மழலையர் வகுப்புகளை 25 மாநகரட்சி பள்ளிகளில் தொடங்கப்போவதாக சென்னை மாநகர மேயர் அறிவித்துள்ளார். ஆனால் தமிழகம் முழுவதும் இருக்கும் ஐம்பதாயிரத்திற்கும் மேற்பட்ட பள்ளிகளில் படிக்கும் குழந்தைகளை பற்றி தமிழக அரசு ஏன் வாய் திறக்க மறுக்கிறது?
"மழலையர் வகுப்புகளை அரசு ஆரம்ப பள்ளியில் இந்த கல்வியாண்டே தொடங்க வேண்டும்" என தமிழக அரசையும், கல்வித்துறையையும் வலியுறித்தி கல்வி இயக்குநரகத்தை 30.05.2014 அன்று காலை 11 மணியளவில் முற்றுகைப் போரட்டம் நடத்த உள்ளோம்.
தனியார் பள்ளிகள் கொள்ளையடிப்பதை தடுக்கவும், அரசுப் பள்ளியில் தரமான கல்வியை வழங்கு என்ற கோரிக்கையின் நீட்சியாக அரசு பள்ளியில் மழழையர் வகுப்பு தொடங்கக் கோரும் இந்தப் போராட்டம் தனியார்மய காலக்க ட்டத்தில் மிகுந்த முக்கியத்துவம் வாய்ந்ததாக இருக்கிறது.
எனவே எமது அமைப்பின் சார்பில் அரசு துவக்கப்பள்ளிகளில் மழலையர் பள்ளி வகுப்புகளை (LKG & UKG) உடனடியாக தொடங்கி நடத்த போராடுவோம்! தனியார் பள்ளிகளின் கட்டண பகற்கொள்ளைக்கு முற்றுப்புள்ளி வைப்போம்!! என்ற கோரிக்கையை முன்வைத்து 30.05.2014 காலை 11 மணி அன்று பள்ளிக்கல்வி இயக்குனரகத்தை முற்றுகையிட்டு ஆர்ப்பாட்டம் நடத்த திட்டமிட்டுள்ளோம்.
- இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப் பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications