சமமாக மது ஊத்து.. கணவரிடம் சண்டை பிடித்த மனைவி.. கடைசியில் மனைவி கொலை!
சேலம்: குடிப்பழக்கம் எந்த அளவுக்கு சமுதாயத்தை சீரழித்திருக்கிறது பாருங்கள்.. கணவனும் மனைவியும் சேர்ந்து மது அருந்துகிறார்கள். அப்போது மனைவி கிளாஸில் மதுவைக் குறைத்து தண்ணீரை கூடுதலாக ஊற்றுகிறார் கணவர். இதைப் பார்த்து சமமாக ஊற்று என்று கூறி மனைவி பொங்கி எழுகிறார். இருவருக்கும் சண்டை. கடைசியில், மனைவியைக் கொன்று விடுகிறார் கணவர்.
சேலம் மாவட்டம் ஏற்காடு அடுத்துள்ள பெலாக்காடு கிராமத்தில்தான் இந்த கொடுமையான சம்பவம் நடந்துள்ளது. அந்தக் கிராமத்தைச் சேர்ந்த வெள்ளையன் விவசாயி. 45 வயதாகிறது. இவரது மனைவி பெயர் வெள்ளச்சி, 42 வயது. இருவரும் தினசரி சேர்ந்து மது அருந்துவார்களாம்.
2 நாட்களுக்கு முன்பும் வீட்டில் இருவரும் உட்கார்ந்து மது அருந்த ஆரம்பித்தனர். அப்போது வெள்ளச்சி கிளாஸில் மதுவைக் குறைத்து தண்ணீரை நிறைய ஊற்றி விட்டார் போல வெள்ளையன்.
இதைப் பார்த்த வெள்ளச்சி கோபமடைந்தார். இருவருக்கும் சமமாக மது ஊற்றுமாறு அவர் சண்டை பிடித்தார். ஆனால் வெள்ளையன் மறுத்துள்ளார். இதையடுத்து இருவருக்கும் இடையே கைகலப்பு ஏற்பட்டது. ஒருவரை ஒருவர் அடித்துக் கொண்டனர்.
அதில் மேலும் வெறியாகிப் போன வெள்ளையன், அரிவாளை எடுத்து வெள்ளச்சியை வெட்டித் தள்ளி விட்டார். மேலும் கழுத்தையும் பிடித்து நெரித்துள்ளார். இதில் சம்பவ இடத்திலேயே இறந்து போனார் வெள்ளச்சி.
இரவு போதையிலேயே கிடந்த அவர் காலையில் போதை தெளிந்ததும் விஏஓ மூலமாக போலீஸில் போய் சரணடைந்தார்.












Click it and Unblock the Notifications