நீங்கள் இருக்கும்போது எனக்கு என்ன குறை.. தொண்டர்களிடம் உருகிய கருணாநிதி

Subscribe to Oneindia Tamil

திருப்பூர்: கடலென திரண்டிருக்கும் தொண்டர்களாகிய என் அன்பு உடன் பிறப்புகளாகிய நீங்கள் இருக்கும்போது எனக்கு என்ன குறை: நீங்கள் இருக்கும்போது இந்த கழகத்திற்கு என்ன குறை, நீங்கள் இருக்கும்போது இந்த கழகத்துக்கு வெற்றி வாய்ப்புக்கு என்ன ஐயப்பாடு என்று திமுக தலைவர் கருணாநிதி கேட்டுள்ளார்.

திருப்பூரில் நடந்த பிரமாண்ட தேர்தல் பிரசாரத்தின்போது பேசுகையில் இப்படி உருக்கமாகப் பேசினார் கருணாநிதி.

திருப்பூரில் நடந்த பிரசாரத்தில் கருணாநிதி ஆற்றிய உரையிலிருந்து...

திருப்பு ஊர்...

திருப்பு ஊர்...

திருப்பூர், இந்த நாடாளுமன்றத் தேர்தலில், "திருப்பு" ஊராகவே அமையும் என்பதற்கு அடையாளமாக பல்லாயிரக்கணக்கிலே இங்கே குழுமியிருக்கிறீர்கள். கோவையில் நடைபெற்ற பிரம்மாண்டமான பொதுக் கூட்டத்திலே கலந்து கொண்டு இன்றைக்கு வருகின்ற வழியெல்லாம் திராவிட முன்னேற்றக் கழகத் தோழர்களுடைய, பொது மக்களுடைய அன்பையும், வாழ்த்துக்களையும் பெற்று திருப்பூரில் நடைபெறுகின்ற இந்த நிகழ்ச்சியிலே உங்களையெல்லாம் சந்திக்கின்ற அரிய வாய்ப்பை பெற்றமைக்காக பெருமகிழ்ச்சி அடைகின்றேன்.

ஆரம்ப கால வாழ்க்கை இங்குதான்...

ஆரம்ப கால வாழ்க்கை இங்குதான்...

திருப்பூர் என்பது எனக்கு புதிய ஊர் அல்ல; நான் என்னுடைய ஆரம்ப கால வாழ்க்கையை கோவையிலே தொடங்கி நடத்திக் கொண்டிருந்தபோது, அடிக்கடி திருப்பூருக்கு வந்திருக்கின்றேன். திருப்பூர் தோழர்களை நீண்ட நெடுங்காலமாக நான் அறிவேன். அவர்களிலே சிலர் இன்று இல்லாவிட்டாலும் கூட அவர்களுடைய நினைவையெல்லாம் போற்றி பாராட்டி என்னுடைய உரையை நிகழ்த்த விரும்புகின்றேன்.

எனக்கு என்ன குறை...

எனக்கு என்ன குறை...

நீங்கள் இருக்கும்போது எனக்கு என்ன குறை: நீங்கள் இருக்கும்போது இந்த கழகத்திற்கு என்ன குறை, நீங்கள் இருக்கும்போது இந்த கழகத்துக்கு வெற்றி வாய்ப்புக்கு என்ன ஐயப்பாடு! அந்த நம்பிக்கையிலே தான் இந்த கூட்டத்தை திருப்பூர் கழகத் தோழர்கள், கழக நிர்வாகிகள் ஏறத்தாழ ஒரு மாநாடு போலவே கூட்டியிருக்கிறார்கள்.

துன்பத்தில் மூழ்கியிருக்கும் நெசவாளர்கள்

துன்பத்தில் மூழ்கியிருக்கும் நெசவாளர்கள்

எனக்கு திருப்பூர் வட்டாரத்திலே உள்ள மக்களுடைய, குறிப்பாக நெசவாள பெருமக்களுடைய அவல நிலை நன்றாகத் தெரியும். அவர்கள் எத்தகைய துன்ப துயரத்திலே மூழ்கி இருக்கிறார்கள் அதை எடுத்துச் சொல்லக் கூடிய அவசியத்திலும், அந்தத் துன்பத்தை துடைக்கக் கூடிய நெருக்கடியிலும் நாமெல்லாம் இருக்கிறோம் என்பதை மீண்டும் மீண்டும் நான் உங்களுக்கு ஞாபகப்படுத்தி, ஏற்பட்டுள்ள துன்பத்தை பெரிதாக ஆக்குவதற்கு விரும்பவில்லை.

மாநகரமாக்கியவன் நான்

மாநகரமாக்கியவன் நான்

எனக்குத் தெரியும், திருப்பூர் நகரத்தை - இங்கே உரையாற்றிய நண்பர்கள் எடுத்துக் காட்டியதைப் போல திருப்பூரை மாநகரமாக ஆக்குகின்ற அந்தப் பணியை தமிழக முதலமைச்சராக நான் இருந்த காலத்தில் நிறைவேற்றிக் கொடுத்தேன் என்பதும் அதற்கு நன்றிக் கடனான நீங்கள் என்பால் தொடர்ந்து அன்பு செலுத்துகிறீர்கள் என்பதும் நான் அறியாதவன் அல்ல.

அன்பு செலுத்தினால் போதாது

அன்பு செலுத்தினால் போதாது

அன்பு செலுத்தினால் மட்டும் போதாது; நான் உங்களிடத்திலே அதற்காக வெகுமதி எதுவும் கேட்கவில்லை. நன்றி உணர்வோடு, பாராட்டுகின்ற இந்த நேரத்தில் நீங்கள் இங்கே உங்களால் ஆதரிக்கப்படுகின்ற, ஆதரிக்கப்பட வேண்டும் என்று விரும்பி நாங்கள் நிறுத்தியிருக்கிற வேட்பாளர்களையெல்லாம் - திருப்பூர் நாடாளுமன்றத் தொகுதிக்கு கழக வேட்பாளராக டாக்டர் செந்தில் நாதன் அவர்களையும், ஈரோடு தொகுதியினுடைய கழக வேட்பாளராக திருமதி. பவித்திர வள்ளி அவர்களையும், கோவை நாடாளுமன்றத் தொகுதி கழக வேட்பாளராக கணேஷ் குமார் அவர்களையும், நீலகிரி நாடாளுமன்றத் தொகுதி கழக வேட்பாளரான தம்பி ஆ. ராசா அவர்களையும், பொள்ளாச்சி நாடாளுமன்ற தொகுதி கழக வேட்பாளராக பொங்கலூர் நா. பழனிச்சாமி அவர்களையும் ஆதரித்து பெரும்பான்மையான வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றிபெறச் செய்ய வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்.

என்னுடைய வாக்கும் சேருகிறது

என்னுடைய வாக்கும் சேருகிறது

நீங்கள் அவர்களுக்கு அளிக்கின்ற வாக்குகளில் என்னுடைய வாக்கும் சேருகிறது. ஏனென்றால் உங்களைப் போலவே அவர்களை நான் அன்போடு, மகிழ்ச்சியோடு, ஆர்வத்தோடு, உணர்ச்சியோடு நேசிப்பவன்.

உங்கள் ராசா...

உங்கள் ராசா...

அதிலும் குறிப்பாக உங்கள் ஊருக்கு பக்கத்திலே உள்ள உதகை தொகுதியினுடைய வேட்பாளர் தம்பி ராசா இன்றைக்கு உங்களுடைய பேராதரவைப் பெறுவார் என்ற நம்பிக்கை எனக்கு நிரம்ப இருக்கிறது. திருப்பூர் நாடாளுமன்றத் தொகுதியினுடைய வேட்பாளர் செந்தில்நாதன் அவர்கள் பார்க்க, பழக, பணியாற்ற, மற்றவர்களோடு பணி புரிகின்ற நிலையிலே தொண்டாற்ற ஏற்றவர் என்பதை நான் அறிந்தவன். அதனால்தான் இந்த தொகுதியிலே பெருவாரியான வாக்குகள் வித்தியாசத்திலே அவர் வெற்றி பெற வேண்டும் என்று விரும்புகிறேன்.

துடிதுடிப்போடு தொண்டு திகழும்

துடிதுடிப்போடு தொண்டு திகழும்

கோவை நாடாளுமன்றத் தொகுதி கழக வேட்பாளர் கணேஷ் குமார் இளைஞர். இந்த இளைஞர் நாடாளுமன்றத்திற்குச் சென்றால் எவ்வளவு சுறு சுறுப்போடு காரியம் ஆற்றுவார், துடிதுடிப்போடு அவருடைய தொண்டு திகழும் என்பதை அறிந்தவன் என்ற முறையில் அவரை நீங்கள் வெற்றி பெறச் செய்ய வேண்டும் என்று கேட்டுக் கொள்கின்றேன்.

அர்ப்பணிப்பு பழனிச்சாமி

அர்ப்பணிப்பு பழனிச்சாமி

பொள்ளாச்சி நாடாளுமன்றத் தொகுதி கழக வேட்பாளர் பொங்கலூர் பழனிச்சாமி, மாவட்டக் கழகச் செயலாளராக இருந்து கொண்டு பெரும் புகழ் பெற்றவர். இயக்கத்திற்காக தன்னை ஒப்படைத்து - அவருடைய வாழ்க்கையிலே எத்தனையோ சோதனைகள் வந்தாலும் கூட அவற்றையெல்லாம் பொருட்படுத்தாமல் பொதுவாழ்வு, பொது வாழ்வு - அதிலும் கழகத்தோடு இணைந்த பொதுவாழ்வு என்ற நிலையிலே தன்னை அர்ப்பணித்துக் கொண்டவர்.

அன்புத் தம்பி.. அருமைத் தம்பி ராசா...

அன்புத் தம்பி.. அருமைத் தம்பி ராசா...

நீலகிரி நாடாளுமன்றத் தொகுதியினுடைய கழக வேட்பாளர் ராசாவை போல, எனக்கு சில தம்பிமார்கள் உண்டு. அந்தத் தம்பிமார்கள் எப்படியெல்லாம் இந்த இயக்கத்தை வளர்த்து வருகிறார்கள், எப்படியெல்லாம் இந்த இயக்கத்தில் நடு நாயகமாக விளங்குகிறார்கள் என்பதை அறிந்தவன் நான். தம்பி ராசாவைப் பாராட்டுவது, பாராளுமன்றத்திலே சென்று, அவர் எடுத்து வைக்கின்ற வாதங்களால் யாராலும் வெல்ல முடியாத வாதங்களால் - அந்த வாதங்களிலே வாய்மை இருக்கின்ற காரணத்தால், அருமைத் தம்பி ராசா அவர்களை நீங்கள் வெற்றிபெறச் செய்ய வேண்டும்.

பவித்திரவள்ளியை வெல்ல வையுங்கள்

பவித்திரவள்ளியை வெல்ல வையுங்கள்

ஈரோடு நாடாளுமன்றத் தொகுதியில் கழக வேட்பாளராக பவித்திர வள்ளி போட்டியிடுகிறார். கழகம் அவருக்காக, உங்களுடைய ஆதரவைக்கோரி, ஆதரவை எதிர்பார்த்து உங்கள் கரங்களிலே அந்த அம்மையாரை ஒப்படைத்திருக்கிறது. அவர்களுக்கும் நீங்கள் வெற்றியை வழங்க வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன். இந்த வேண்டுகோளை வைப்பதற்காகத்தான் அவசர அவசரமாக ஈரோடு கூட்டத்திற்குச் சென்று கொண்டிருக்கிற நான் இங்கே குழுமியிருக்கின்ற உங்களுக்காகவே என்னுடைய காரை இங்கே நிறுத்தச் சொல்லிவிட்டு இந்த மேடைக்கு வந்து உங்களையெல்லாம் சந்தித்து, உங்களை பார்ப்பதே ஒரு பெரும் பேறு. உங்களைப் பார்ப்பதே என் மனதுக்கு ஒரு தெம்பு! ஒரு மகிழ்ச்சி! மன நிறைவு என்ற வகையில் உங்களுக்கு முன்னால் அமர்ந்திருக்கிறேன்.

கருணாநிதி அவர்களே கவலைப்படாமல் செல்லுங்கள்...

கருணாநிதி அவர்களே கவலைப்படாமல் செல்லுங்கள்...

நீங்கள் எனக்குத் தரவேண்டிய வாக்குறுதி, """"கருணாநிதி அவர்களே கவலைப் படாமல் செல்லுங்கள். வாக்கு எண்ணிக்கை நாளன்று பெரும்பான்மையான வாக்கு வித்தியாசத்தில் இந்தத் தொகுதிகளிலே வேட்பாளர்களாக நிறுத்தப்பட்டிருக்கின்றவர்களையெல்லாம் நாங்கள் வெற்றி பெறச் செய்வோம்'' என்ற உறுதியை நீங்கள் எனக்குத் தரவேண்டும். தந்தால்தான் இன்றைக்கு கஷ்டப்பட்டுக் கொண்டிருக்கிற, கண்ணீர் விட்டுக் கொண்டிருக்கின்ற, துன்ப துயரங்களால் துவண்டு போய்க் கிடக்கின்ற ஏழை, எளிய நடுத்தர நெசவாளர்களையெல்லாம் காப்பாற்றுவதற்கு நீங்கள் உறுதி அளித்தாக வேண்டும்.

போராடினால் போலீஸ் வரும்

போராடினால் போலீஸ் வரும்

நான் கேள்விப்படுகிறேன், நான் பத்திரிகையிலே படித்து அறிகிறேன். நம்முடைய கழக நண்பர்களெல்லாம் கண் கலங்க எடுத்துச் சொன்ன செய்திகளெல்லாம் காதுகளிலே விழுகின்றன. நெசவாளர்கள் போராடினார்கள், இந்த ஆட்சியிலே போராடினால் போலீஸ் வருமே தவிர அவர்களை அழைத்துப் பேச அமைச்சர்கள் வரமாட்டார்கள்.

அமைச்சர்களுக்கு வேறு வேலை இருக்கிறது

அமைச்சர்களுக்கு வேறு வேலை இருக்கிறது

ஏனென்றால் அமைச்சர்களுக்கு அதைவிட பெரிய வேலைகளெல்லாம் இருக்கின்றது. "வசூலுக்கு" போக வேண்டிய வேலை இருக்கிறது. அந்த வேலையெல்லாம் அமைச்சர்களுக்கு இருக்கிறது. என்ன வசூல், எப்படி வசூல் என்பதையெல்லாம் கேட்காதீர்கள். அது வசூலிப்போருக்கும், வசூல் நேரத்தில் வழங்குகின்றார்களே அவர்களுக்கும் மாத்திரம்தான் வெளிச்சம். நான் அவைகளைளெல்லாம் சொல்ல விரும்பவில்லை.

என்ன ஆட்சி இது...

என்ன ஆட்சி இது...

நாட்டிலே இன்றைக்கு ஆட்சி நடைபெறுவதாகச் சொல்லுகிறார்களே, எப்படிப்பட்ட ஆட்சி நடைபெறுகிறது? ஒரே ஒரு உதாரணம் சொல்லுகின்றேன். கொட நாடு பங்களாவில் இன்றைக்கு அடிக்கடி போய் தங்குகின்ற அம்மையார் முதலமைச்சர் ஜெயலலிதா அவர்கள் வாங்கி குவித்திருக்கிற சொத்துக்களைப் பற்றி ஒரு வழக்கு நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. அந்த வழக்கில் எவ்வளவு சாட்சியங்கள், எத்தனை வழக்கறிஞர்கள் மாற்றங்கள், தகிடுதத்தங்கள், தில்லுமுல்லுகள் இத்தனையும் அந்த வழக்கிலே நாம் படிக்க முடியும். காணமுடியும். ஆனால் அந்த வழக்கை அப்படியே மறைத்து விட்டு, நல்ல பிள்ளையைப் போல நாடகமாடிக்கொண்டிருக்கிறார்கள்.

ஆறாயிம் கோடி ரூபாய்

ஆறாயிம் கோடி ரூபாய்

நான்காயிரம், ஐந்தாயிரம் கோடி ரூபாய், ஆறாயிரம் கோடி ரூபாய் என்று சொத்துப் பரிவர்த்தனைகளும், பங்களாக்களும் எங்கே? திருப்பூர் பகுதியிலே கஷ்டப்பட்டுக் கொண்டிருக்கிறார்களே அந்த கைத்தறி நெசவாளர்களுக்கா? இல்லை! இவர்களையெல்லாம் கஷ்டப்பட விட்டுக் கொண்டு, மகாராணி போல மஞ்சத்திலே அமர்ந்து லாலி பாடிக் கொண்டிருக்கிறார்களே அவர்களுக்கும், அவர்களால் போற்றப்படுகின்ற புனிதவதிகளுக்கும்தான் இந்த ஏராளமான சொத்துக்கள்; இந்த சொத்துக்குவிப்பு வழக்கு நடைபெறுகின்றது.

எத்தனை சூழ்ச்சிகள்

எத்தனை சூழ்ச்சிகள்

திராவிட முன்னேற்றக் கழகத்தின் பொதுச்செயலாளர் நம்முடைய அன்புக்குரிய பேராசிரியர் அவர்கள் இணைத்துக் கொண்ட அந்த வழக்கின் அடிப்படையில் இது வரை கிடைத்துள்ள சான்றுகளை எல்லாம் மறைக்க, தள்ளி வைக்க எத்தனையோ சூழ்ச்சிகள் நடத்தப்படுகின்றன. அந்த சூழ்ச்சிகளை எல்லாம் தாண்டி, வெகு விரைவிலே பெரிய உண்மை வெளிச்சத்திற்கு வரப்போகிறது.

விரைவில் மேக்கப் கலையப் போகிறது

விரைவில் மேக்கப் கலையப் போகிறது

இது வரையில் யாரை, நாம் "அவதாரம்'' என்று கருதிக் கொண்டிருந்தோமோ, விளம்பரம் செய்து கொண்டிருந்தோமோ, அந்த அவதாரத்தினுடைய "மேக்கப்"" கலையப் போகிறது. அந்த அவதாரத்தினுடைய உண்மை உருவம் உலகத்திற்கு தெரியப் போகிறது. அப்படி தெரிகிற நேரத்திலே தான் இது அவதாரம் அல்ல, மற்றவர்களைப் போல மக்கள் பிரதிநிதி என்ற உண்மை புரியும்.

ஏமாந்த மக்களால் அமைந்த அரசு

ஏமாந்த மக்களால் அமைந்த அரசு

இது மக்களுக்காக ஏற்பட்ட அரசு அல்ல, ஏமாந்த மக்களால் அவர்களுடைய வாக்குகளைப் பெற்று அமைந்த அரசு என்ற உண்மை அப்போது தான் புலப்படப் போகிறது. அது வரையில் சில நாட்கள் நீங்கள் காத்திருக்கத்தான் வேண்டும். ஐந்து முறை நான் தமிழகத்தினுடைய முதலமைச்சராக மட்டுமல்ல, சட்டமன்ற உறுப்பினராக 12 முறை இருந்திருக்கிறேன். தற்போது ஒரு முறை, இருமுறை நம்முடைய தம்பி துரைமுருகனைப் போன்றவர்கள் கேட்ட கேள்விகளுக்கு எடுத்து வைத்த விளக்கங்களுக்கு பிரச்சினைகளுக்கு பதில் சொல்ல சட்டமன்றத்திலே யாரும் இல்லை.

ஒரு முதலமைச்சர் இருக்கிறார்

ஒரு முதலமைச்சர் இருக்கிறார்

ஆனால் ஒரு முதலமைச்சர் இருக்கிறார். அந்த முதலமைச்சர் சட்டமன்றத்திலே ஒரே ஒரு விதியின் கீழ் அறிக்கையைத்தான் வாசிப்பார். அதற்குப் பெயர் 110 வது அறிக்கை. அதை படித்துவிட்டு அமர்ந்தால் அதிலே அவர் சொன்ன அறிவிப்புகள்; அதை கேட்டு விட்டு எதிர்ப்பார்க்கின்ற அந்த நிலைமைகள் எல்லாம் ஏற்படுமா என்றால் ஏற்படாது.

ஆட்சி தேவையா

ஆட்சி தேவையா

சொன்னது எதையும் நிறைவேற்றாதா ஒரு ஆட்சி தேவையா? அந்த ஆட்சிதான் ஜெயலலிதாவினுடைய ஆட்சி. ஆனால், ஒரு உண்மையை உங்களுக்குச் சொல்லுகின்றேன். சொல்லாத ஒன்றை நிறைவேற்றுகின்ற ஆட்சி ஜெயலலிதா ஆட்சி, சொல்லாதது; ஏழை எளிய மக்களை வஞ்சித்து, "இருட்டறையில் உள்ளதடா உலகம்'' என்ற அளவிற்கு நாட்டை இருட்டிலே தள்ளி அதோ வருகிறது, இதோ வருகிறது, இந்த மாதம் வருகிறது. அடுத்த மாதம் வருகிறது மின்சாரம் என்றெல்லாம் குறிப்பிட்டு மக்களை ஏமாற்றுகின்ற ஒரு ஆட்சி இன்றைக்கு நடைபெறுகின்ற ஜெயலலிதா ஆட்சி என்பதை மாத்திரம் நீங்கள் மறந்துவிடக்கூடாது. அப்படிப்பட்ட ஆட்சியின் அவலங்கள் இன்னும் எவ்வளவு காலத்திற்கு நீடிப்பது? மாதக்கணக்கிலா? ஆண்டுக்கணக்கிலா? என்றால் வேண்டாம், வேண்டாம் அது நாள் கணக்கிலே முடிந்தால் போதுமானது என்று சொல்லுகின்ற மக்களை நாடு தற்போது நன்றாக கண்டு வருகிறது.

மீண்டும் வருவேன்.. பரிசும் தருவேன்

மீண்டும் வருவேன்.. பரிசும் தருவேன்

அத்தகைய நிலைக்கு உங்களையெல்லாம் அழைத்துச் செல்ல, உங்களை எல்லாம் பயன்படுத்த திராவிட முன்னேற்றக் கழகம் இன்றைக்கு ஈடுபட்டு இருக்கின்ற பணிதான், நாடாளுமன்ற, அடுத்து, சட்டமன்றத் தேர்தலிலே உங்களை சந்திக்கின்ற பணி. அந்தப் பணியில் நாங்களும், எங்களோடு சேர்ந்து இருக்கின்ற தோழமைக் கட்சி நண்பர்களும், தலைவர்களும் கலந்து ஆலோசித்து நாங்கள் அமைக்கின்ற அந்தக் கூட்டணிக்கு உங்களது ஆதரவைத் தொடர்ந்து வழங்க வேண்டும். வழங்குவீர்கள் என்ற நம்பிக்கையோடு, நீங்கள் திருப்பூர் தொகுதியிலே எங்களுக்கு வெற்றியைத் தந்த பிறகு, அந்த வெற்றி விழாவைக் கொண்டாட நான் இங்கே வருவேன். அப்படி வரும் போது உங்களுக்குப் பரிசாக மேலும் ஒரு மணி நேரம் பேசுவேன் என்ற வாக்குறுதியையும் உங்களுக்குத் தந்து, அந்தக் கூட்டத்தை மேலும் சிறப்பாக நடத்துவதற்கு நம்முடைய தோழர்கள் ஏற்பாடுகளைச் செய்ய வேண்டும் என்று கழகத்தின் கண்மணிகளையெல்லாம் கேட்டுக் கொண்டு மறவாதீர் உதய சூரியன் சின்னம்! அது நம் உயிர்ச் சின்னம்! நம்முடைய உள்ளத்தில் ஊடுருவி இருக்கின்ற சின்னம்! அந்தச் சின்னத்தை மறவாதீர்கள்! அண்ணா தந்த சின்னம் அது! அய்யாவின் கருத்துக்களை எடுத்து ஓதுகின்ற சின்னம் அது! ஆகவே அந்த உதயசூரியன் சின்னத்தை மறவாதீர் என்று கேட்டு விடைபெறுகிறேன் என்றார் கருணாநிதி.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+