திமுக கூட்டணியில் விசிக வெளியேறினால் தீபாவளிபோல கொண்டாடுவார்கள் – திருமாவளவன் பரபரப்பு
செங்கல்பட்டு: 2026 சட்டமன்ற தேர்தலுக்கு குறுகிய காலமே உள்ளது. தமிழ்நாடு அரசியல் கட்சிகளின் கூட்டணியில் பல்வேறு மாற்றங்கள் நிகழ வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது. விசிக தலைவர் திருமாவளவன், "நாளை திமுக கூட்டணி வேண்டாம் என்று நான் அறிக்கை விட்டால் ஆஹா.. ஓஹோ என்று மகிழ்ச்சியடைவார்கள். ஏன் இன்னொரு தீபாவளி பண்டிகை போல கொண்டாடுவார்கள்." என்று வெளிப்படையாக பேசியிருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
செங்கல்பட்டில் நடந்த கூட்டத்தில் விசிக தலைவர் திருமாவளவன் பேசும்போது, "பாஜகவுக்கு தமிழ்நாட்டில் நேரடி எதிரியாக இருப்பது விசிக தான். அதை வரவேற்கிறோம். பாஜகவா, விசிகவா என்றால் பிரச்சனை இல்லை. இதை ஜாதியாக கொண்டு செல்வதுதான் பிரச்சனை. அவன் வந்து முன்னால் நிற்கும்போது என்ன ஜாதி தெரியுமா, என்ன மதம் தெரியுமா, என்ன படித்துள்ளான் தெரியுமா. குறிப்பிட்ட சமூகத்திற்கு எதிரானவர்கள் என்கிற பொய்யான நோக்கத்தை பரப்புகிறார்கள். இது முழுக்க முழுக்க அரசியல்.

திமுக கூட்டணி
இதன் மூலம் திமுகவுக்கும், விசிகவுக்கும் உரசல் ஏற்பட வேண்டும் என்பதுதான் அவர்களின் நோக்கம். திமுக தலைமையிலான கூட்டணியில் இருந்து விசிக வெளியேறிவிட்டால் யாரும் நம்மைப் பற்றி பேச மாட்டார்கள். நாம் அவர்களின் டார்கெட்டே கிடையாது. அவர்களின் வேலை, அஜென்டா முடிந்துவிடும். இவ்வளவு பிரச்சனைகளுக்கு ஒரே காரணம், விசிக அதிமுக பக்கம் போகவில்லையே, பாஜகவுடன் உறவாடவில்லையே.
பாஜகவையும், ஆர்எஸ்எஸ்ஸையும் திரும்ப திரும்ப விமர்சனம் செய்யக் கூடிய ஆளாக இருக்கிறாரே. சனாதன எதிர்ப்பை உயர்த்தி பிடிக்கிறாரே. திமுக கூட்டணி கட்டுக் கோப்பாக இருக்க இவர் உற்ற துணையாக இருக்கிறாரே. இதுதான் பிரச்சனை. நாளை திமுக கூட்டணி வேண்டாம் என்று நான் அறிக்கை விட்டால் ஆஹா.. ஓஹோ என்று மகிழ்ச்சியடைவார்கள். ஏன் இன்னொரு தீபாவளி பண்டிகை போல கொண்டாடுவார்கள்.
அரசியலமைப்பு சட்டம்
பிரச்சனை அதுதான். திமுக கூட்டணிக்கு தூண் போல இருக்கிறாரே என்ற ஆதங்கம் தான். திமுக கூட்டணியை பாதுகாக்கும் இயக்கமாக விசிக இருக்கிறது. மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி என்பதுதான் முக்கியம். இந்த மதச்சார்பற்ற என்பதுதான் அம்பேத்கரின் அரசியல். அம்பேத்கரின் பிள்ளைகள் புரிந்து கொள்ள வேண்டிய அரசியல். அம்பேத்கர் எழுதிய அரசியலமைப்பு சட்டத்தின் மிக முக்கியமான கோட்பாடு மதச்சார்பின்மை.
அரசுக்கு மதம் கூடாது. எந்த நாட்டிலும் இல்லாத ஒன்று இந்திய அரசியலமைப்பு சட்டத்தில் உள்ளது. இதன் காரணமாக தான் பாஜகவுக்கு இதை இந்து நாடாக அறிவிக்க முடியவில்லை என்று நினைக்கிறார்கள். அம்பேத்கரை விமர்சிக்கும் துணிச்சல் பாஜக ஆர்எஸ்எஸ்க்கு கிடையாது. அப்படி சொன்னால் அவர்களால் இந்தியாவில் அரசியல் செய்ய முடியாது. அவர்களும் அம்பேத்கரின் புகழை பாட வேண்டும் என்கிற நிர்பந்தம் நிலவுகிறது.
திராவிட அரசியல்
ஆனால் அம்பேத்கரின் திட்டத்தை சிதைக்க வேண்டும் என்கிற செயல் திட்டத்தை வைத்துள்ளனர். அதை முறியடிப்பதற்காக தான் மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி இயங்கி வருகிறது. அதை உருவாக்கியதில் விசிகவின் பங்கு முக்கியமானது. கலைஞர் காலத்தில் இருந்து இந்த கோட்பாடுடன் இயங்கி வருகிறது. அம்பேத்கர், பெரியார் அரசியல் ஒன்றுதான். அந்த அரசியலுக்காக தான் திராவிட அரசியலுக்கும் நாங்கள் துணை நிற்கிறோம்.
திராவிட அரசியல் என்றால் திமுக அரசியல் என்று மட்டும் இல்லை. அது சனாதன, வர்ணாசிரம கொள்கைகளுக்கு எதிரானது அரசியல். திராவிட அரசியலை சிதைக்க முயற்சிக்கிறார்கள் என்றால் அம்பேத்கரின் அரசியலை சிதைக்க முயற்சிக்கிறார்கள் என்று அர்த்தம். அதனால் தான் நாங்கள் தலையிடுகிறோம். அம்பேத்கர் என்ன கனவு கண்டாரோ, அதை நனவாக்க வேண்டும் என்கிற கொள்கையுடன் களத்தில் உள்ளோம்." என்றார்.












Click it and Unblock the Notifications