• search
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

மருத்துவ மாணவிகள் மரணத்தில் சிபிஐ விசாரணை தேவை: இளங்கோவன் வலியுறுத்தல்

By Karthikeyan
Google Oneindia Tamil News

சென்னை: மருத்துவ மாணவிகள் 3 பேரின் மரணத்தில் நீதிமன்ற அல்லது சிபிஐ விசாரணை தேவை என்று தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் வலியுறுத்தியுள்ளார்.

இது தொடர்பாக ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் இன்று வெளியிட்ட அறிக்கை:

விழுப்புரம் மாவட்டம், சின்னசேலம் அருகே தனியாருக்குச் சொந்தமான எஸ்.வி.எஸ். சித்தா மற்றும் ஹோமியோபதி மருத்துவக் கல்லூரியைச் சேர்ந்த மோனிஷா, சரண்யா, பிரியங்கா ஆகிய மூன்று மாணவிகள் கிணற்றில் விழுந்து தற்கொலை செய்து கொண்ட கொடுமை நிகழ்ந்துள்ளது. கல்லூரியில் போதிய அடிப்படை வசதிகள் இல்லை என்றும், கல்விக் கட்டணம் அதிகமாக இருப்பதாகக் கூறியும் கடந்த ஓராண்டு காலமாக மாணவர்கள் பல்வேறு போராட்டங்களை நடத்தி வந்துள்ளனர்.

Ilangovan demands cbi probe students death near villupuram

ஏற்கனவே 6 மாணவிகள் விழுப்புரம் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு தங்களது கோரிக்கை நிறைவேறாததால் விஷம் குடித்து பின்பு காப்பாற்றப்பட்டுள்ளனர். அதன்பிறகும் நிலைமை சீரடையாத காரணத்தால் இறுதிக்கட்டமாக மூன்று மாணவிகள் தற்கொலை செய்து கொண்டுள்ளனர்.

தனியார் கல்லூரியில் பயிலும் மாணவிகளின் கோரிக்கையை மாவட்ட ஆட்சித் தலைவரோ, தமிழக அரசோ பரிவுடன் கவனிக்காத காரணத்தால் இன்றைக்கு மூன்று மாணவிகள் உயிரிழக்க வேண்டிய பரிதாபம் நிகழ்ந்துள்ளது. 'இந்த மாணவிகள் தற்கொலை செய்து கொள்ளவில்லை, அடித்து கொல்லப்பட்டு கிணற்றில் வீசப்பட்டுள்ளார்கள்" என்று மாணவிகளின் பெற்றோர் கல்லூரி நிர்வாகத்தின் மீது குற்றம் சாட்டி காவல் நிலையத்தில் புகார் கூறியுள்ளனர்.

குற்றம் சாட்டப்பட்ட கல்லூரியின் தாளாளர், முதல்வர் மற்றும் சிலர் கைது செய்யப்பட்டிருந்தாலும் காவல் துறையினரால் நேர்மையான, பாரபட்சமற்ற விசாரணை நடைபெறுமா என்பது மிகப்பெரிய கேள்விக்குறியாகும். மாணவிகளின் கோரிக்கையை பரிவுடன் கவனிக்காமல் அலட்சியப்போக்குடன் செயல்பட்ட அ.தி.மு.க. ஆட்சியாளர்கள் மாணவிகளின் படுகொலைக்கு காரணமானவர்கள் மீது நடவடிக்கை எடுப்பார்களா என்பது மிகப்பெரிய சந்தேகத்திற்குரியதாகும்.

கடந்த காலங்களில் அ.தி.மு.க. அமைச்சரின் ஊழலுக்கு துணைபோக மறுத்த காரணத்தால் திருநெல்வேலி மாவட்ட விவசாய செயற்பொறியாளர் முத்துக்குமாரசாமி தற்கொலை செய்து கொண்ட சோகம் நிகழ்ந்தது. அடுத்து யுவராஜ் கொலை வழக்கில் விசாரணை மேற்கொண்ட மாவட்ட காவல்துறை துணை கண்காணிப்பாளர் விஷ்ணுபிரியா நேர்மையாக நடந்து கொண்டதால் உயர் அதிகாரிகள் கொடுத்த அழுத்தத்தை தாங்க முடியாமல் மனஉளைச்சல் காரணமாக தற்கொலை செய்து கொண்டார். இப்படி தமிழகத்தில் தொடர்ந்து அதிகார வர்க்கத்தின் அச்சுறுத்தலால் தாங்க முடியாமல் பல தற்கொலைகள் நிகழ்வது தொடர் கதையாகி வருகிறது.

தமிழ்நாடு என்பது தற்கொலை நாடாக மாறிவிட்டதோ என்கிற சந்தேகம் பலருக்கும் எழுந்து வருகிறது. ஏனெனில் தங்களது கோரிக்கைகளுக்கு தீர்வோ, நிவாரணமோ கிடைக்காத நிலையில் மனஉளைச்சல் காரணமாக தற்கொலைதான் ஒரே தீர்வு என்று அவலநிலைக்கு தமிழகம் தள்ளப்பட்டுள்ளதோ என்கிற அச்சம் இன்றைக்கு ஏற்பட்டுள்ளது. இத்தகைய தற்கொலைகளை தடுத்து நிறுத்துவதற்கு தமிழகத்தின் முதலமைச்சர் ஜெயலலிதாவுக்கு கவனம் செலுத்த நேரம் இருப்பதாகத் தெரியவில்லை.

தமிழக அரசின் நிர்வாகத்திற்காக ஒருநாளில் ஒரு மணி நேரம் கூட ஒதுக்க முடியாத நிலையில் உள்ள முதலமைச்சர் ஜெயலலிதா, தமிழகத்தில் நடைபெற்று வரும் தற்கொலை சாவுகளை தடுத்து நிறுத்துவார் என்ற நம்பிக்கை மக்களுக்கு முற்றிலும் இல்லை. இந்நிலையில் தற்கொலை செய்து கொண்ட மாணவிகளுக்கு நீதி கிடைக்க பாரபட்சமற்ற, நேர்மையான விசாரணை நடைபெற வேண்டுமானால் தமிழக காவல்துறையின் கட்டுப்பாட்டில் இல்லாத வகையில் நீதிமன்ற நேரடி தலையீட்டின் மூலமாகவோ அல்லது மத்திய புலனாய்வுத்துறை மூலமாகவோ விசாரணை நடத்தப்பட்டு, உண்மையான குற்றவாளிகள் தண்டிக்கப்பட வேண்டும். இவ்வாறு இளங்கோவன் கூறியுள்ளார்.

English summary
Tamilnadu congress leader EVKS ilangovan has demanded that CBI to probe on 3 students death nearVillupuram.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X