வசூல் வேட்டையில் இறங்கிய போலி உணவு பாதுகாப்பு அதிகாரி.. மடக்கிப் பிடித்த பிரியாணி கடைக்காரர்!
திண்டுக்கல்: திண்டுக்கல்லில் புதிதாக தொடங்கப்பட்ட பிரியாணி கடையில் உணவு பாதுகாப்புத் துறை அதிகாரி போல நடித்து ரூ. 500 லஞ்சம் கேட்ட நபரை மடக்கிப் பிடித்து போலீசில் ஒப்படைத்துள்ளனர். இந்தச் சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
திண்டுக்கல் பேருந்து நிலையம் அருகே தனியார் பிரியாணி கடை ஒன்று கடந்த சில மாதங்களுக்கு முன்பு தொடங்கப்பட்டது. இந்த நிலையில் இன்று அதிகாலை பழனி பகுதியைச் சேர்ந்த சண்முக சுந்தரம் என்பவர் பிரியாணி கடைக்கு சென்று நோட்டமிட்டுள்ளார். அதன் பின்னர் வெளியே வந்த சண்முக சுந்தரம் கடைக்கு எதிரே இருந்து கொண்டு அந்த பிரியாணி கடை உரிமையாளருக்கு போன் செய்துள்ளார்.

அப்போது, சண்முக சுந்தரம் உணவு பாதுகாப்புத் துறை அதிகாரி பேசுவதாக தன்னை அறிமுகப்படுத்திக் கொண்டு ரூ.500 லஞ்சம் கேட்டுள்ளார். இதனை அடுத்து ஓட்டல் உரிமையாளர் 5 நிமிடம் காத்திருக்குமாறு கூறியுள்ளார். பின்னர் உடனடியாக திண்டுக்கல் உணவு பாதுகாப்பு துறை அதிகாரிக்கு தொலைபேசி மூலம் தொடர்பு கொண்டு யாரும் உணவகத்திற்கு ஆய்வு செய்ய வந்துள்ளார்களா? என விசாரித்துள்ளார்.
அதற்கு அதிகாரிகள் அவ்வாறு எந்த ஆய்வும் செய்யவில்லை என தெரியப்படுத்தியுள்ளார். இதைக் கேட்டதும் சுதாரித்துக்கொண்ட ஓட்டல் உரிமையாளர் வெளியே நின்று கொண்டிருந்த சண்முக சுந்தரத்தை ஓட்டலில் வேலை செய்யும் ஆட்களைக் கொண்டு மடக்கிப் பிடித்து திண்டுக்கல் வடக்கு காவல் நிலையத்தில் ஒப்படைத்துள்ளார்.
இதனையடுத்து போலீசார் உணவு பாதுகாப்புத்துறை அதிகாரி என்று நாடகமாடிய சண்முக சுந்தரத்தை கைது செய்தனர். மேலும் இதே போல திண்டுக்கல் மாவட்டத்தில் வேறு எங்கும் உணவு பாதுகாப்பு துறை அதிகாரி எனக் கூறி சண்முக சுந்தரம் பண வசூலில் ஈடுபட்டுள்ளாரா என விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
மேலும், பிரியாணி கடை உரிமையாளரிடம் உணவு பாதுகாப்பு துறை அதிகாரி என சண்முகசுந்தரம் பேசிய ஆடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது.












Click it and Unblock the Notifications