இப்படி யோசிச்சா எப்படி? மின்கம்பங்களோடு கால்வாய் அமைத்த காண்ட்ராக்டர்! இது திருப்பத்தூர் மாடல்!
திருப்பத்தூர்: திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூரில் ஏற்கனவே மின்கம்பங்கள் இருக்கும் நிலையில் அதனை அப்புறப்படுத்தாமல் அதனுடன் சேர்த்து கால்வாய் அமைக்கப்பட்டுள்ளது.
Recommended Video
தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் தற்போது மத்திய, மாநில அரசு திட்டங்களின் கீழ் மேம்பாட்டு பணிகள் நடைபெற்று வருகிறது.
புதிதாக தார் சாலை, சிமென்ட் ரோடு, கால்வாய் அமைத்தல் உள்பட மக்களின் அடிப்படை வசதிகளை மேம்படுத்தும் பணி தீவிரமாக நடந்து வருகிறது.

ரூ.50 லட்சம் பணி
இந்நிலையில் திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் நகராட்சி 35வது வார்டிற்குட்ப்பட்ட பகுதிகளில் நகராட்சி சார்பில் கால்வாய் அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. 15வது நிதிக்குழு மானியம் 2021-22 வரையறை செய்யப்படாத நிதியின் கீழ் ரூ.50 லட்சத்தில் பணிகள் நடைபெற்று வருகிறது. ஒப்பந்த அடிப்படையில் பணி நடக்கிறது.

கால்வாய்க்கு நடுவே மின்கம்பம்
இந்நிலையில் தனியார் காண்ட்ராக்டர் மூலம் மழை நீர் வடிகால்வாயுடன் கூடிய சிமென்ட் கான்கிரீட் தளம் 539.00 மீட்டர் அளவிற்கு அமைக்கப்பட்டு வருகிறது. பெத்தலேகம் 4வது தெருவில் மின்கம்பங்களுடன் சேர்த்து வடிகால்கால்கள் மற்றும் சிமெண்ட் தளம் அமைக்கப்பட்டுள்ளது. இதனால் நாளடைவில் மின்கம்பம் சேதமடைய வாய்ப்புள்ளது. இதனால் அதிகாரிகள் இதில் கவனம் செலுத்த வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

வேலூரில் நடந்தது என்ன?
முன்னதாக கடந்த சில நாட்களுக்கு முன்பு வேலூரில் இதேபோன்ற சம்பவம் நடந்தது. வேலூரை சீர்மிக நகரமாக்கம் திட்டத்தில் மெயின் பஜார் காளிகாம்பாள் தெரு உள்ளிட்ட பகுதிகளில் சிமெண்ட் சாலை போடப்பட்டது. அப்போது சிவா என்பவர் நிறுத்தி இருந்த மோட்டார்சைக்கிளுடன் சேர்த்து சிமெண்ட் சாலை போட்டனர். இதேபோல் சாய்நாதபுரம் பொன்னியம்மன் கோவில் தெருவில் நிறுத்தி வைக்கப்பட்ட ஓடாத பழை ஜீப்பை அப்புறப்படுத்தாமல் தார் சாலை போடப்பட்டது.

ஒப்பந்தம் ரத்து
இதுதொடர்பான படங்கள் இணையதளத்தில் வெளியான நிலையில் மோட்டார் சைக்கிளை அகற்றாமல் சிமெண்ட் சாலை போட்ட ஒப்பந்ததாரரின் ஒப்பந்தம் ரத்து செய்யப்பட்டது. இந்நிலையில் தான் தற்போது திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் பகுதியில் மின்சார சிமென்ட் தூண்களை சேர்த்து கழிவுநீர் கால்வாய் போடப்பட்டுள்ள நிகழ்வு ஆம்பூர் பகுதியில் பெரும் சர்ச்சயை ஏற்படுத்தியுள்ளது.












Click it and Unblock the Notifications