For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

திமுக கூட்டணியில் இந்திய யூனியன் முஸ்லீம் லீக் நீடிக்கும்.. கருணாநிதியை சந்தித்த காதர்மொய்தீன் உறுதி

By Mayura Akilan
Google Oneindia Tamil News

சென்னை: 2016ம் ஆண்டு சட்டசபை தேர்தலிலும், திமுக-வுடனான கூட்டணி தொடரும் என்று இந்தியன் யூனியன் முஸ்லீம் லீக் தலைவர் காதர் மொய்தீன் தெரிவித்துள்ளார். தி.மு.க. தலைவர் கருணாநிதியை சென்னை கோபாலபுரம் இல்லத்தில் இன்று சந்தித்துப் பேசிய காதர்மெய்தீன் இதனை தெரிவித்துள்ளார்.

சட்டசபை தேர்தலுக்கு தயாராகி வருவதால் தமிழக தேர்தல் களம் பரபரப்பான சூழ்நிலையை எட்டியுள்ளது. கூட்டணி அமைக்க அரசியல் கட்சியினர் போராடி வரும் நிலையில் கடந்த தேர்தலில் கூட்டணி அமைத்த கட்சிகள் அதே கூட்டணியில் நீடிக்குமா? புதிய கூட்டணிகள் உருவாகுமா என்பது பற்றி பல கருத்துக்கள் நிலவி வருகின்றன.

Indian Union Muslim League alliance continue DMK in Assembly election

திமுக, அதிமுக கூட்டணியில் எந்தெந்த அணிகள் இணையும் என்று எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில் திமுக அணியில் இந்திய யூனியன் முஸ்லீம் லீக் நீடிக்கும் என்று அக்கட்சியின் தலைவர் அறிவித்துள்ளார். கடந்த சட்டசபை தேர்தல், நாடாளுமன்ற தேர்தலிலும் இந்திய யூனியன் முஸ்லீம் லீக் திமுக அணியில் இடம் பெற்றிருந்தது. இந்த ஆண்டும் தமிழகத்தில் நடைபெறவுள்ள சட்டசபை தேர்தலிலும் திமுக தலைமையிலான அணியில் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தொடர்ந்து பங்கு பணியாற்றும் என்று காதர் மொய்தீன் கூறியுள்ளார்.

திமுக தலைவர் கருணாநிதியை சந்தித்த பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய காதர் மொய்தீன், தமிழினத் தலைவர் டாக்டர் கலைஞர் அவர்களை நானும், நிர்வாகிகளும் சந்தித்தோம். இன்று, நேற்றல்ல. 1961ம் ஆண்டு முதல் நட்புடன் இருக்கிறோம். ஆட்சியில் இருந்தாலும், இல்லாவிட்டாலும் மாதந்தோறும் சந்தித்து அளவளாவுவோம் மற்றும் கருத்துக்களை பரிமாறிக் கொள்வோம்.

கடந்த மூன்று மாதங்களாக சந்திக்க முடியாமல் போய்விட்டது. இப்போது சந்தித்து புத்தாண்டு மற்றும் பொங்கல் நல்வாழ்த்துக்களை தெரிவித்துக்கொண்டதோடு,உடல் நலமாக இருக்க வாழ்த்தினேன். இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தொடங்கி 69 ஆண்டுகள் ஆகிறது. மார்ச் 10ல் தொடங்கப்பட்டது.

தமிழகத்தில் 11 ஆயிரம் பள்ளிவாசல்களை உள்ளடக்கிய மஹல்லா ஜமாஅத்கள் உள்ளன. மார்ச் 10ந்தேதி விழுப்புரத்தில் மஹல்லா ஜமாஅத் ஒருங்கிணைப்பு மாநில மாநாடு ஏற்பாடு செய்துள்ளோம். கடந்த முறை தாம்பரத்தில் நடத்தினோம். முதல்வராக இருந்த கலைஞர், தளபதி ஸ்டாலின் ஆகியோர் பங்கேற்றனர். இதில் 3 லட்சம் பேர் பங்கேற்றனர். விழுப்புரத்தில் நடைபெறும் மாநாட்டில் கருணாநிதியை பங்கேற்க கேட்டுக்கொண்டோம். ஸ்டாலினையும் அனுப்புமாறு கேட்டோம். ஸ்டாலினை அனுப்பி வைப்பதாக கூறினார். முடிந்தால் தானும் வருவதாக கூறினார். உடல்நிலையை பற்றி சொன்னார். நீங்கள் நல்ல முறையில் இருப்பீர்கள். கட்டாயம் பங்கேற்பீர்கள் என தெரிவித்தோம் என்றார்.

கூட்டணியில் நீடிப்பு

தொடர்ந்து செய்தியாளர்களின் கேள்விக்கு பதிலளித்த காதர் மொய்தீன், இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தி.மு.க. கூட்டணியில் தொடர்ந்து நீடித்துக் கொண்டிருக்கிறது. இதற்கு 3 காரணங்கள். அவை, தி.மு.க. திராவிட வளர்ச்சிக்காக பாடுபட்டு வருகிறது. தமிழர்களின் வாழ்வுக்கும், அவர்களின் பண்பாட்டுக்கும் துணை நிற்கிறது. சாதி, மதத்துக்கு அப்பாற்பட்டு மதச்சார்பின்மை கடைபிடித்து வருகிறது. இவைகளை தொடர்ந்து செயல்படுத்தி வருவதால்தான் தி.மு.க. கூட்டணியில் நீடிக்கிறோம்.

ஆட்சி மாற்றம்

கடந்த காலத்தில் தி.மு.க. தலைமையில் சமயசார்பற்ற அனைத்து அரசியல் கட்சிகளையும் ஒருங்கிணைத்து தமிழகத்திலும், மத்தியிலும் ஆட்சி மாற்றம் ஏற்படுவதற்கு நாங்கள் முயற்சிகள் எடுத்தோம். அதேபோன்று தற்போது சமயசார்பற்ற அனைவரும் தி.மு.க. தலைமையில் ஒருங்கிணைய வேண்டும். அதற்கான முயற்சியில் நாங்கள் ஈடுபடுவோம். அ.தி.மு.க. தலைமையிலான கூட்டணியை வீழ்த்தி தி.மு.க. தலைமையில் ஆட்சி மாற்றத்தை உருவாக்க அனைத்து தரப்பு மக்களும் தயாராகிவிட்டனர்.

மூன்றாவது அணி நாடகம்

மூன்றாவது அணி, நான்காவது அணி என்பதெல்லாம் நாடகம். அது நாட்டை முன்னேற்றப்பாதைக்கு அழைத்துச் செல்லாது.கடந்த 8 மாதங்களுக்கு முன்பு ஒரு தொய்வு இருந்தது. தளபதி ஸ்டாலின் அவர்கள் தமிழகம் முழுவதும் மக்களை நேரில் சென்று சந்தித்து அவர்கள் குறைகளையெல்லாம் கேட்டறிந்தார். இதன் மூலம் 40 சதவீதத்திற்கும் மேலான மக்கள் தி.மு.க. ஆட்சிக்கு வருவதை உறுதி செய்திருக்கிறார்கள்.

எத்தனை தொகுதிகள்

தி.மு.க.வில் அங்கம் வகிக்கும் முஸ்லிம் அமைப்புகள், தோழமை கட்சிகள் தி.மு.க.வினருக்கு சேர்த்து மொத்தம் 12 முஸ்லிம்கள் இடம் பெறும் அளவுக்கு தொகுதிகளை கேட்போம். கடந்த லோக்சபா தேர்தலில் புதுவை உள்ளிட்ட 40 லோக்சபா தொகுதிகளில் 4 தொகுதிகளை முஸ்லிம்களுக்கு தர வேண்டும் என்று கேட்டோம். கொடுத்தார்கள். மேலும், எங்களின் செயற்குழு கூட்டம் சென்னையில் வருகிற 20ம் தேதி நடைபெறுகிறது. அக்கூட்டத்தில் எத்தனை தொகுதிகள் எந்தெந்த இடங்கள் என்பதை கூடி முடிவு செய்வோம் என்று கூறியுள்ளார் காதர் மொய்தீன்.

English summary
The Tamil Nadu unit of the Indian Union Muslim League (IUML) has decided to continue its truck with the DMK at the State-level.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X