For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

ஜெ.வின் டெல்லி பயணமும்... தள்ளாட்டத்தில் தமிழகத்தின் நிதி நிலைமையும்....

By R Mani
Google Oneindia Tamil News

- ஆர். மணி

சட்டசபை தேர்தலில் தொடர்ந்து 2-வது முறையாக வெற்றி பெற்று 4-வது முறையாக ஆட்சியைக் கைப்பற்றி முதலமைச்சராக பொறுப்பேற்றுக் கொண்டவுடன் முதன் முறையாக ஜெயலலிதா ஜூன் 14-ம் தேதி டெல்லிக்குப் போனார். தலைநகரில் பிரதமர் நரேந்திர மோடியை அவரது இல்லத்தில் சந்தித்துப் பேசிய ஜெயலலிதா தமிழகத்தின் சார்பில் நீண்டதோர் பட்டியலை அவரிடம் கொடுத்தார். இதில் மொத்தம் 29 கோரிக்கைகள் இடம் பெற்றிருக்கின்றன. சுமார் 40 நிமிடங்களுக்கு மேல் பிரதமருடன் பேசிய ஜெயலலிதா அனைத்து 29 கோரிக்கைகளையும் நிறைவேற்றுமாறு அவரை வலியுறுத்தியதாகத் தெரிகிறது.

இந்தக் கோரிக்கைகளில் முக்கியமானது - காவிரி நடுவர் மன்றத் தீர்ப்பை நிறைவேற்ற மேலாண்மை வாரியம் அமைப்பது, முல்லைப் பெரியாறின் கொள்ளளவை 152 அடியாக உயர்த்துவது, கெயில் திட்டத்தை விவசாய நிலங்களுக்கு பாதிப்பில்லாமல் மாற்று வழியில் செயற்படுத்துவது, அத்திக்கடவு அவினாசி திட்டத்துக்கு நிதியுதவி, அரசு கேபிளுக்கு டிஜிட்டல் ஒளிபரப்பு உரிமம், சிறு மற்றும் குறுந் தொழில்களுக்கு சிறப்பு நிவாரண உதவி, 14 வது நிதிக் குழுவின் பாரபட்சமான, சமமற்ற அணுகுமுறையால் தமிழகத்துக்கு ஏற்பட்டிருக்கும் இழப்பை ஈடுகட்ட அடுத்த நான்காண்டுக்களுக்கு ஆண்டுதோறும் சிறப்பு நிதியுதவியாக 2,000 கோடி ரூபாய் கொடுக்க வேண்டும் போன்ற கோரிக்கைகள் இடம் பெற்றிருக்கின்றன.

முக்கியமாக ஜிஎஸ்டி வரி விதிப்பு முறை அமல்படுத்தப்பட்டால் அதனால் ஏற்படும் இழப்பை ஈடுகட்ட ஆண்டுதோறும் தமிழகத்துக்கு, குறைந்தது ஐந்தாண்டுகளுக்கு 9,000 கோடி ரூபாய் ஒதுக்க வேண்டும் என்றும் கோரிக்கை விடுக்கப்பட்டிருக்கிறது.

Jaya's Delhi visit and TN govt's financial position

இதில் சுவாரஸ்யமான விஷயம், மோடியை ஜெயலலிதா சந்தித்த அதே நாள் கொல்கத்தாவில் அனைத்து மாநில நிதியமைச்சர்கள் மாநாடு ஜிஎஸ்டி விவகாரம் சம்மந்தமாகவும், அதில் கருத்தொற்றுமை ஏற்படுத்துவதற்காகவும் கூட்டப் பட்டிருந்தது. இந்த மாநாட்டிற்கு தலைமை தாங்கி நடத்தியவர் மத்திய நிதியமைச்சர் அருண் ஜெட்லி. மாநாட்டிற்கு பிறகு பேசிய அருண் ஜெட்லி ஜிஎஸ்டி விவகாரத்தில் தமிழ்நாட்டைத் தவிர அனைத்து மாநிலங்களும் கிட்டத் தட்ட ஒப்புதல் கொடுத்து விட்டதாக கூறியது குறிப்பிடத் தக்கது. இதில் கூடுதலான தகவல் நாடு முழுவதும் இருந்து அந்தந்த மாநில நிதியமைச்சர்கள் கலந்து கொண்ட இந்த மாநாட்டில் தமிழகத்தின் சார்பில் நிதியமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் கலந்து கொள்ளவில்லை ... மாறாக வணிக வரித்துறை அமைச்சர் கே.சி. வீரமணி தான் கலந்து கொண்டார்.

ஜெயலலிதாவின் இந்த பயணம் முதலில் அரசியல் காரணங்களுக்காக முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்பட்டது. ஆனால் அரசியல் காரணங்களை விட பொருளாதார விவகாரங்களுக்காவே இந்த பயணம் முக்கியத்துவம் வாய்ந்ததாக தற்போது பார்க்கப்படுகிறது. காரணம் தற்போது தமிழ் நாட்டின் நிதி நிலைமையை கவனத்தில் கொண்டு பார்த்தால் மத்திய அரசின் உதவியில்லாமல் எதுவும் செய்ய முடியாது என்ற நிலைமையை நோக்கி மாநிலம் நகர்ந்து கொண்டிருப்பதுதான்.

2016 - 2017 ம் ஆண்டுக்கான இடைக்கால பட்ஜெட்டில் நடப்பு கணக்கு பற்றாக்குறை அதாவது கரண்ட் அகவுண்ட் டெஃபிசிட் 4,000 கோடி ரூபாயாக மதிப்பிடப் பட்டிருந்தது. இதனுடன் சேர்த்து 7 வது ஊதிய குழு பரிந்துரைகளை அமல் படுத்தினால் செலவாகும் 17,000 கோடி ரூபாய் மற்றும் தேர்தல் நேரத்தில் ஜெ. அறிவித்த இலவசங்களுக்கான 11,000 கோடி ரூபாய் ஆகியவற்றை கூட்டினால் நடப்பு கணக்கு பற்றாக்குறை 32, 000 கோடி ரூபாயாக அதிகரிக்கும் என்கின்றனர் சில பொருளாதார அறிஞர்கள். அப்படிப்பட்ட சூழ்நிலையில் தமிழக அரசு ஊழியர்களுக்கான சம்பளம் மற்றும் ஓய்வூதியங்களை வழங்குவதற்கே மாநில அரசு மத்திய அரசிடமும், இன்ன பிற நிதி நிறுவனங்களிடமும் கையேந்தி நிற்க வேண்டியிருக்கும்.

Jaya's Delhi visit and TN govt's financial position

1990களின் மத்தியில் சில மாதங்கள் அப்போதய ஆந்திர பிரதேச அரசாங்கம் இதே போன்றதோர் நிலைமையில் இருந்த போது ஒவ்வோர் மாதமும் அரசு ஊழியர்களின் சம்பளத்துக்காக எல்ஐசியிடம் கடன் வாங்கியது இங்கு குறிப்பிடத்தக்கது.

இதே போன்று 2016 - 2017 ம் ஆண்டு இடைக்கால பட்ஜெட்டில் திட்ட செலவினங்களுக்கான நிதி ஒதுக்கீட்டின் பற்றாக்குறை அதாவது ஆங்கிலத்தில் சொன்னால் ஃபிஸ்கல் டெஃபிசிட் 30,000 கோடி ரூபாய் என்று கணக்கிடப்பட்டிருக்கிறது.

ஆகவே இந்த 30,000 கோடி மற்றும் நடப்பு கணக்கு பற்றாக்குறையான 32,000 கோடி ரூபாய் ஆகியவற்றை கூட்டினால் 62,000 கோடி ரூபாய் துண்டு விழும். கூடுதல் நிதிச் சுமை ஏற்படும். இதனை எப்படி மாநில அரசு சமாளிக்கப் போகிறது என்பதுதான் பொருளாதார நிபுனர்கள் கவனிக்கும் விஷயமாகும்.

‘'தமிழகத்துக்கு மத்திய அரசு கிட்டத்தட்ட 80,000 கோடி ரூபாய் உடனடியாக கொடுக்க வேண்டும் என்று தமிழக அரசு மத்திய அரசிடம் கேட்டிருப்பது இந்த 62,000 கோடி ரூபாய் இழப்பை ஈடுகட்டத்தான். ஆனால் மத்திய அரசு இதில் எவ்வளவு தொகையை கொடுக்கும், அப்படியே கொடுத்தாலும், அந்த தொகை எந்தளவுக்கு மாநிலத்தின் தேவைகளுக்கு போதுமானதாக இருக்கும் என்பதெல்லாம் மிகப் பெரிய கேள்விகள்தான்'' என்கிறார் சென்னையை சேர்ந்த பொருளாதார நிபுனர் வெங்கட்ராமன்.

ஏற்கனவே பிஹார் மற்றும் மேற்கு வங்கம் போன்ற மாநிலங்கள் இதே போன்றதோர் நிதியுதவியை அதாவது ‘'ஸ்பெஷல் பேக்கேஜ்'' கேட்டுக் காத்துக் கிடப்பது குறிப்பிடத்தக்கது.

தமிழகத்தின் வருவாய் வழியினங்கள் கடந்த சில ஆண்டுகளாகவே பெரியளவில் உயர்ந்து வராத நிலைமையில் துண்டு விழும் இந்தளவுக்கான பெரிய தொகையை மாநில அரசு எப்படி சமாளிக்கப் போகிறது என்பது புரியாத புதிர்தான். இதில் மாநிலத்தின் வருவாயில் கிட்டத்தட்ட மூன்றில் ஒரு பங்கை கொடுத்துக் கொண்டிருப்பது மதுபானங்களை விற்று டாஸ்மாக் கொடுக்கும் பணம். விரைவில் 500 டாஸ்மாக் கடைகள் மூடப் படவிருக்கின்றன. படிப்படியாக மது விலக்கு என்ற லட்சியத்தை அடைய டா'ஸ்மாக் கடைகள் அனைத்துக்கும் நிரந்தர மூடு விழா நடத்தப்பட்டால் தமிழ்நாட்டுப் பொருளாதாரம் இன்னும் அதள பாதாளத்துக்குப் போகும். கூடுதல் வில்லங்கமாக வரக் காத்திருப்பது விரைவில் நடைமுறைக்கு வரவிருக்கும் ஜிஎஸ்டி மசோதா.

நாடு முழுவதிலும் ஒரே மாதிரியான வரி விதிப்புக்கு வழி வகுக்கும் ஜிஎஸ்டி வரி விதிப்பு முறை அமல்படுத்துவது உற்பத்தி பொருளாதாரத்தை அடிப்படையாகக் கொண்ட தமிழ்நாடு போன்ற மாநிலங்களுக்கு முதல் சில ஆண்டுகளுக்கு நெருக்கடியை கொடுக்கும் என்று எதிர்ப்பார்க்கப்படுகிறது. அதனால்தான் தமிழகம் ஜிஎஸ்டி யை கடுமையாக எதிர்த்துக் கொண்டிருக்கிறது.

முதல் ஐந்தாண்டுகளுக்கு குறைந்தது ஆண்டுதோறும் 9,000 கோடி ரூபாய் வரையில் மத்திய அரசு தமிழகத்துக்கு நிதியுதவி வழங்க வேண்டும் என்று இதனால்தான் மத்திய அரசை தமிழக அரசு வலியுறுத்துக் கொண்டிருக்கிறது.

ஆனால் அரசியல் ரீதியிலான ஒரு லாபம், அதாவது மேற்கு வங்கத்தில் மமதா பானர்ஜிக்கும், பிஹாரில் நிதிஷ் குமாருக்கும் இல்லாத ஒரு லாபம் ஜெயலலிதாவுக்கு இருக்கின்றது. அது அதிமுக வின் 50 நாடாளுமன்ற எம் பி க்கள். குறிப்பாக மாநிலங்களவையில் அதிமுகவுக்கு இருக்கும் 13 எம்பிக்கள் நரேந்திர மோடி அரசுக்கு மிக, மிக அவசியமாகும். இன்று மாநிலங்களவையில் எந்த விதமான மசோதாக்கள் நிறைவேற்றப் படுவதற்கும் அதிமுகவின் தயவு மோடி அரசுக்கு கண்டிப்பாகத் தேவை.

இந்த துருப்புச் சீட்டை வைத்து தமிழகத்துக்குத் தேவையான நிதியுதவியை ஜெயலலிதாவால் ஓரளவுக்காவது கொண்டு வர முடியும். அதே சமயத்தில் அரசியல் ரீதியில் இதற்கான விலையை மோடி அரசு கண்டிப்பாக அதிமுகவிடம் இருந்து எடுத்துக் கொள்ளும்.

ஏனெனில் அரசியலில் ‘'இலவச மதிய உணவு'' ஆங்கிலத்தில் சொன்னால் ‘'there are no free lunches in politics" என்பார்கள்.

இதுதான் இன்றைய யதார்த்தமான அரசியல் மற்றும் பொருளாதார நிலவரம். இதில் எதிர்பாராத வேறு சில சம்பவங்கள் நடந்தால், அவை நீதித்துறை, அரசியல், இயற்கையின் தலையீடு என்று எதன் பொருட்டு நடந்தாலும், அப்போது தமிழகத்தில் நிலவரம் மேலும் கலவரமாகிப் போகும். ஜெயலலிதாவின் டெல்லிப் பயணத்தைப் பொறுத்தவரையில் சுருக்கமாகச் சொல்லுவதானால், அபாயகரமான தள்ளாட்டத்தில் இருக்கும் இன்றைய தமிழகத்தின் நிதி நிலைமை மேம்பாடு அடைய மத்திய அரசின் உடனடி நிதியுதவி - இது பெரியதோர் நிதியுதவியாக கண்டிப்பாக இருக்க வேண்டும் - அவசியம் தேவை ...

அப்படி அந்த நிதியுதவி மத்திய அரசிடமிருந்து தமிழகத்துக்கு வந்து சேரவில்லையென்றால் மாதந்தோறும் அரசு ஊழியர்களுக்கான சம்பளம் மற்றும் ஓய்வூதியம் போன்றவற்றே கொடுப்பதே தமிழக அரசுக்கு திண்டாட்டமாகிப் போகும். தமிழகத்தின் தற்போதய கடன் கிட்டத்தட்ட இரண்டரை லட்சம் கோடிக்கு மேல் இருக்கிறது. இதற்கான ஆண்டு வட்டி மட்டுமே 29,000 கோடி ரூபாயாகும்.

மோடியின் கடைக் கண்பார்வை கிடைக்கவில்லை என்றால் தமிழகத்தின் நிதி நிலைமை மேலும் சிதைந்து சின்னாபின்னமாகலாம். ஏற்கனவே தமிழகத்தின் கஜானா விரைந்து காலியாகிக் கொண்டிருக்கிறது .... கஜானா முற்றிலும் துடைத்தெறியப் பட்டு, திவாலை நோக்கி தமிழகத்தின் நிதி நிருவாகம் போவதும், போகாமல் இருப்பதும் நரேந்திர தாமாரதரதாஸ் மோடியின் கைகளில் தான் தற்போது இருந்து கொண்டிருக்கிறது ......

English summary
Columnist Mani's Article on TN CM Jayalalithaa's Delhi Visit and Tamilnadu Finance Position
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X