For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

நாகேஸ்வரராவின் மரணம் நாட்டுக்கும், சினிமாத்துறைக்கும் இழப்பு: ஜெ.

By Mayura Akilan
Google Oneindia Tamil News

Jayalalithaa condoles actor Nageswara Rao’s death
சென்னை: இந்தியா மிகப்பெரிய நடிகர்களில் ஒருவரை இழந்து விட்டது. இது நாட்டுக்கும், சினிமா துறைக்கும் பேரிழப்பாகும் என்று நடிகர் நாகேஸ்வரராவின் மரணத்திற்கு முதல்வர் ஜெயலலிதா இரங்கல் தெரிவித்துள்ளார்.

இது குறித்து இன்று அவர் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில் கூறியுள்ளதாவது:

தெலுங்கு நடிகர் அக்கினேனி நாகேஸ்வரராவ் இன்று மரணம் அடைந்தார் என்ற செய்தி அறிந்து மிகவும் வேதனை அடைந்தேன். அவர் தனது இளம் வயதில் நாடகங்களில் நடிப்பதில் மிகுந்த ஈடுபாடு கொண்டிருந்தார்.

தமிழ் மற்றும் தெலுங்கில் வெளியாகி மிகவும் பிரபலமான தேவதாஸ் படத்தில் சிறப்பாக நடித்திருந்தார். இதில் அவரது நடிப்பு காலத்தால் அழிக்க முடியாத புகழை சேர்த்தது.

தமிழ் மற்றும் தெலுங்கில் 250 படங்களுக்கும் மேலாக நடித்துள்ளார். அவற்றில் ஓர் இரவு, பூங்கோதை, அலாவுதீனும் அற்புத விளக்கும், மாதர் குல மாணிக்கம், கல்யாண பரிசு, பிரேமாபிஷேகம், மோக மனசுலு, மாயா பஜார் மற்றும் பல படங்கள் மறக்க முடியாதவை.

1950 மற்றும் 1970-ம் ஆண்டுகளில் தெலுங்கு பட உலகில் ஜாம்பவானாக திகழ்ந்தார். இவர் முதன் முதலில் தெலுங்கில் 'இத்தாரு மித்ருலு' என்ற படத்தில் இரட்டை வேடத்தில் சிறப்பாக நடித்திருந்தார்.

இந்திய சினிமாவின் மிக உயரிய தாதா சாகேப் பால்கே விருதை பெற்றுள்ளார். பத்மவிபூஷன், கலைமாமணி மற்றும் சிறந்த நடிகருக்கான தேசிய விருது போன்றவற்றையும் பெற்றுள்ளார்.

பிலிம்பேர் விருதுகள், ரகுபதி வெங்கையா விருது மற்றும் என்.டி.ஆர். தேசிய விருதுகளும் வழங்கி கவுரவப்படுத்தப்பட்டார்.

நான் அவருடன் பல படங்களில் நடித்தேன். எனது முதல் தெலுங்கு படமான 'மனுசுலு மமதலு' என்ற படத்தில் நாகேஸ்வரராவுடன் நடித்து இருக்கிறேன். அவருடன் பணியாற்றியது எனக்கு ஒரு மகிழ்ச்சிகரமான அனுபவமாகும்.

அவரது மறைவின் மூலம் இந்தியா மிகப்பெரிய நடிகர்களில் ஒருவரை இழந்து விட்டது. இது நாட்டுக்கும், சினிமா துறைக்கும் பேரிழப்பாகும்.

அவரது குடும்பத்தினருக்கு எனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்து கொள்வதுடன் அவரது இழப்பை தாங்கிகொள்ளும் சக்தியை குடும்பத்தினருக்கு வழங்குமாறு இறைவனை வேண்டுகிறேன். அவரது ஆன்மா சாந்தியடையட்டும். இவ்வாறு ஜெயலலிதா வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில் கூறியுள்ளார்.

English summary
Tamil Nadu chief minister J Jayalalithaa on Wednesday expressed grief over the sudden demise of legendary Telugu actor Akkineni Nageswara Rao.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X