திரை உலகின் வரலாற்று ஆசிரியர் மறைந்து விட்டார் - 'பிலிம் நியூஸ்' ஆனந்தன் மறைவிற்கு ஜெயலலிதா இரங்கல்
சென்னை: தமிழ் சினிமா உலகின் தகவல் களஞ்சியம் என்று அழைக்கப்பட்ட பிலிம் நியூஸ் ஆனந்தன் சென்னையில் இன்று காலமானார். அவரது மறைவிற்கு முதல்வர் ஜெயலலிதா இரங்கல் தெரிவித்துள்ளார்.
இது குறித்து ஜெயலலிதா வெளியிட்டுள்ள இரங்கல் செய்தி:
தமிழ்த் திரை உலகின் வரலாற்று ஆசிரியர் என்றும், நடமாடும் நூலகம் என்றும் பெருமை பெற்ற 'பிலிம் நியூஸ்' ஆனந்தன் உடல் நலக் குறைவால் காலமானார் என்ற செய்தியை அறிந்து நான் மிகவும் வருத்த மடைந்தேன். சினிமா உலகில் நீண்ட கால அனுபவம் உள்ள ‘பிலிம் நியூஸ்'ஆனந்தன் சினிமா தொடர்பான அனைத்து விவரங்களையும், புகைப்படங்களையும் தொகுத்துள்ளார்.

தென்னிந்திய திரைப் பட வர்த்தக சபையின் செய்தியாளராக பணியாற்றிய போது, தமிழ் சினிமா குறித்த விவரங்களை சேகரிக்க ஆரம்பித்து, அதையே உணர்வுபூர்வ பணியாக மேற்கொண்டார். எவரிடமும் இல்லாத வகையில் அனைத்து விவரங்களையும் இவர் தொகுத்து வைத்திருந்தார். இதன் காரணமாகவே, கலா பீடம், கலைச்செல்வம், கலைமாமணி உள்ளிட்ட பல்வேறு விருதுகளை பெற்றுள்ளார்.
2002-ம் ஆண்டு எனது தலைமையிலான அரசு ‘பிலிம் நியூஸ்' ஆனந்தன் அவர்கள் சேகரித்து வைத்திருந்த விவரங்கள், புத்தகங்கள், புகைப்படங்கள் போன்ற சேகரிப்புகளை அரசு வாங்கி பாதுகாத்திட பத்து லட்சம் ரூபாய் வழங்கியது.
மேலும், ‘பிலிம் நியூஸ்' ஆனந்தன் அவர்கள் எழுதிய ‘சாதனை படைத்த தமிழ் திரைப்பட வரலாறு'என்னும் நூலை வெளியிடுவதற்கு நிதி உதவி வழங்கியது. ‘பிலிம் நியூஸ்' ஆனந்தன் இழப்பால் வாடும் அவரது குடும்பத்தாருக்கும், நண்பர்களுக்கும், திரை உலகத்தினருக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபத்தையும் தெரிவித்துக் கொள்கிறேன். இவ்வாறு ஜெயலலிதா கூறியுள்ளார்.












Click it and Unblock the Notifications