For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

நேரடி மானிய திட்டத்தை நிறுத்தி வையுங்கள்: பிரதமருக்கு ஜெயலலிதா கடிதம்

By Siva
Google Oneindia Tamil News

Jayalalithaa wants DBT scheme put on hold
சென்னை: நேரடி மானிய திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து முதல்வர் ஜெயலலிதா பிரதமர் மன்மோகன் சிங்கிற்கு கடிதம் எழுதியுள்ளார்.

இது குறித்து அவர் பிரதமருக்கு எழுதியுள்ள கடிதத்தில் கூறியிருப்பதாவது,

மத்திய அரசு கொண்டு வந்துள்ள அரசு திட்டங்களின் மானிய பணத்தை மக்களுக்கு நேரடியாக வழங்கும் முறைக்கு எதிர்ப்பு தெரிவித்து நான் தங்களுக்கு 27.4.2013 கடிதம் எழுதியதை நினைவு கூற விரும்புகிறேன்.

தமிழ்நாட்டில் இதுபோன்ற நேரடி பணம் வழங்கும் திட்டத்தை மாநில அரசு சில வகைகளுக்கு மட்டும் அமல்படுத்தி வருகிறது. கல்வி உதவித் தொகை, பேறு கால உதவி, சமூக பாதுகாப்பு உதவித் தொகை போன்றவற்றிற்கு இவற்றை செயல்படுத்தி வருகிறோம். இதற்காக மாநில அரசு அனைத்து வகை முன் ஏற்பாடுகளையும் செய்து முறையாக இந்த திட்டங்கள் செயல்படுத்தப்படுகிறது. அவை முழுமையாக கண்காணிக்கப்படுகிறது.

ஆனால் மத்திய அரசு கொண்டு வந்துள்ளது போல அனைத்து திட்ட மானியங்களையும் மக்களுக்கு நேரடியாக வழங்குவது என்பது இயலாத காரியம். வங்கிகள் போதுமான ஊழியர்களை நியமனம் செய்து மக்களுக்கு வழங்கும் வசதி செய்யப்படவில்லை. எனவே இதை செயல்படுத்துவது எளிதானது அல்ல. நேரடி பண மாற்றம் திட்டம் குறித்து நான் ஏற்கனவே 2 வித எதிர்ப்புகளை தெரிவித்தேன். இந்த திட்டத்தை பொது வினியோகம், உர மானியம், மண்ணெண்ணெய் மானியம் போன்றவற்றிக்கு பயன்படுத்தக் கூடாது என்று கூறியிருந்தேன்.

ஏன் என்றால் இந்த திட்டம் வழங்கப்படும் பொருட்கள் குறிப்பிட்ட காலத்தில் உரிய நேரத்தில் மக்களை சென்றடைய வேண்டிய முக்கியமானது ஆகும். இதில் நேரடி மானிய திட்டம் சரியாக இருக்காது. மேலும், மத்திய அரசு மாநில அரசு மூலம் இதை செயல்படுத்தாமல், வங்கி மூலமாக நேரடியாக வழங்குவது மாநில அரசுகளை மீறி தனி வழியில் செல்வதாகும். இது இந்தியாவின் ஜனநாயகம், கூட்டாட்சி தத்துவம், மத்திய ஒருங்கிணைப்பு ஆகியவற்றிக்கு எதிரானது. அரசியல் சட்டத்தை மீறுவதாக இது அமைந்துள்ளது.

இந்த நிலையில் நேரடி மானிய திட்டத்தை முதல் கட்டமாக அமல்படுத்துவதற்கு அரியலூர், புதுக்கோட்டை, திருச்சி ஆகிய மாவட்டங்களை மத்திய அரசு தேர்வு செய்தது. இப்போது மத்திய பெட்ரோலிய துறை மந்திரி தமிழக அரசுக்கு 7.9.2013-ல் ஒரு கடிதம் எழுதி உள்ளார். அதில் 2-வது கட்டமாக சமையல் கியாஸ், நேரடி மானிய திட்டத்தை இந்தியா முழுவதும் 235 மாவட்டங்களில் அமல்படுத்தப் போவதாகவும், அதில் தமிழ்நாட்டை சேர்ந்த 28 மாவட்டங்கள் சேர்க்கப்பட்டுள்ளதாகவும் இந்த திட்டம் 1.1.2014 முதல் அமலுக்கு வரப்போவதாகவும் கூறப்பட்டுள்ளது.

இதற்கு நான் எனது கடுமையான எதிர்ப்பைத் தெரிவித்துக் கொள்கிறேன். சமையல் கியாஸ் நேரடி மானிய திட்டத்துக்கு நாங்கள் கடுமையாக எதிர்ப்பு தெரிவிக்கிறோம். சமையல் கியாஸ் மிகவும் அத்தியாவசியமான பொருளாகும். இது தேவையான நேரத்தில் பயனாளிகளுக்கு கிடைக்க வேண்டும். நேரடி பண மாற்றம் மூலம் உரிய நேரத்தில் உதவி கிடைக்காது.

மேலும், சமையல் கியாஸ் நேரடி மானியம் ஆதார் எண் பெற்றவர்களுக்கு தான் வழங்கப்படும். ஆனால் தமிழ்நாடு உள்பட பல மாநிலங்களில் ஆதார் எண் வழங்கப்படும் பணி மிகவும் மந்தமான நிலையில் நடக்கிறது. இதில் ஏராளமான குழப்பங்கள் உள்ளன.

தமிழ்நாட்டில் ஆதார் அட்டை பெற தகுதியுடைய 6 கோடியே 74 லட்சம் பேர் உள்ளனர். ஆனால் இதுவரை 2 கோடியே 52 லட்சம் பேருக்கு தான் வழங்கப்பட்டுள்ளது. இப்படி இருக்க இந்த திட்டத்தை எப்படி செயல்படுத்த முடியும். இதில் குழப்பமும், பொது மக்களுக்கு தொல்லையும் தான் ஏற்படும். இந்த திட்டத்தை அமல்படுத்த 3 மாத காலம் அவகாசம் வழங்கி இருக்கிறார்கள். 3 மாதத்திற்குள் ஆதார் எண்ணை பெறாதவர்கள் எப்படி கியாஸ் நேரடி மானியத்தை பெற முடியும்.

ஆதார் அட்டையை எந்த ஒரு சேவை பணிக்கும் ஆதாரமாக எடுத்துக் கொள்ளக் கூடாது என்று சுப்ரீம் கோர்ட்டு சமீபத்தில் தீர்ப்பில் கூறியுள்ளது. அப்படி இருக்க நேரடி மானிய திட்டத்துக்கு அதை பயன்படுத்துவது சட்டத்திற்கு விரோதமாக அமைகிறது. இந்த சூழ்நிலையில் தமிழ்நாட்டிற்கு வழங்கப்படும் மண்ணெண்ணெய் அளவு 50 சதவீதம் வரை குறைக்கப்பட்டுள்ளது. இதனால் கிராமம் மற்றும் சிறு நகர பகுதிகளில் மக்கள் சமையலுக்கு விறகு மற்றும் மின்சாரத்தை பயன்படுத்தும் நிலை உருவாகி உள்ளது.

நான் ஏற்கனவே மத்திய அரசு திட்ட பயனாளிகளை அடையாளம் காணுவதற்கு மாநில அரசின் நிர்வாகத்தை பயன்படுத்துவதற்கு எதிர்ப்பு தெரிவித்து இருந்தேன். ஆனால் கியாஸ் நேரடி மானிய திட்டத்திற்கு அதை மீறி பயன்படுத்திக் கொள்கிறார்கள். இந்த திட்டத்தை பொறுத்த வரையில் மாநில அரசுகளுடன் கலந்து பேசி தான் முடிவு எடுக்க வேண்டும்.

ஆதார் அட்டை இன்னும் வழங்கப்படாத நிலையிலும், பாங்குகளில் உரிய வசதிகள் செய்து தரப்படாத நிலையிலும் இந்த திட்டத்தை செயல்படுத்துவது சரியாக இருக்காது. மேலும், கோர்ட்டு வழங்கியுள்ள உத்தரவுகளுக்கும் எதிராக இது அமைந்துள்ளது. இதனால் உரிய உத்தரவாதம் அளிக்கும் வரையில் இந்த திட்டத்தை அமல்படுத்தக் கூடாது. இதை முற்றிலும் மறுபரிசீலனை செய்ய வேண்டும். அதுவரை இந்த திட்டத்தை நிறுத்தி வைக்க வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன் என்று அவர் அதில் தெரிவித்துள்ளார்.

English summary
Reiterating her government’s opposition to Direct Benefit Transfer for LPG scheme, Tamil Nadu Chief Minister Jayalalithaa on Monday urged Prime Minister Manmohan Singh to put on hold the roll out of proposed Phase-II of the project.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X