கள்ளச்சாராயம் குடித்து இறந்தவர்களுக்கு எதற்கு நிதி? அரசு ஊக்குவிக்கிறதா? பிரமேலதா விஜயகாந்த் கேள்வி
கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சியில் விஷ சாராயம் குடித்து உயிரிழந்தவர்களின் குடும்பத்தினரை நேரில் சந்தித்து ஆறுதல் கூறிய பிரேமலதா விஜயகாந்த், கள்ளச்சாராயம் குடித்து இறந்தவர்களுக்கு எதற்கு நிதி? அவர்களை தமிழக அரசு ஊக்குவிக்கிறதா? என்றும் கேள்வி எழுப்பி உள்ளார்.
கள்ளக்குறிச்சி கருணாபுரம் பகுதியில் கள்ளச்சாராயம் குடித்து உயிரிழந்தவர்கள் 37 பேர் பலியாகியுள்ளனர். மேலும் 90 க்கும் அதிகமானோர் பல்வேறு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். உயிரிழப்புகளின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இதில், இறப்புக்கு காரணம் மெத்தனால் கலந்த விஷச் சாராயம் எனத் தெரியவந்துள்ளது. மெத்தனால் இருப்பை முழுமையாக கண்டறிந்து அழிக்க முதல்வர் ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.

இதற்கிடையே கள்ளக்குறிச்சியில் கள்ளச்சாராயம் குடித்து இறந்தவர்கள் மட்டும் பாதிக்கப்பட்டவர்களை நேரில் சந்தித்து அரசியல் தலைவர்கள் ஆறுதல் கூறி வருகின்றனர். அதன்படி தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் கள்ளக்குறிச்சியில் விஷ சாராயம் குடித்து உயிரிழந்தவர்களின் குடும்பத்தினரை நேரில் சந்தித்து ஆறுதல் கூறினார். தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த அவர் கூறியதாவது:-
பாதிக்கப்பட்டவர்களை நேரில் சந்தித்தேன். அவ்வளவு பெண்கள் என்னை கட்டியணைத்து அழுதுகொண்டு இருந்தது எனக்கு மிகுந்த மன வேதனை அளிக்கிறது. கள்ளச்சாராயம் ஏன் குடித்தீர்கள் என்று கேட்டேன். சீப்பாக கிடைக்கிறது என்று சாப்பிட்டோம்.. ஒரு பங்க்ஷன் போனோம் சாப்பிட்டோம். இப்படி ஆகும் என்று நினைக்கவில்லை என்று கூறுகிறார்கள்.
நம்ம முதல்வர் ஆட்சிக்கு வந்ததும் என்ன சொன்னார் போதை இல்லா தமிழகத்தை உருவாக்குவோம் இது தான் லட்சியம் என்று சொன்னார். ஆனால் இப்போ ஆட்சிக்கு வந்த 3 வருஷம் ஆகிவிட்டது. ஏற்கனவே இது மாதிரி மரக்காணம் உள்ளிட்ட பகுதிகளில் இதே நிகழ்வு நடந்தது. அப்போதும் முதல்வர் வந்து சொன்னார், கள்ளச்சாராயம் இனி தமிழ்நாட்டில் இல்லாதவாறு கட்டாயம் இரும்புக்கரம் கொண்டு அடக்குவோம் என்று சொன்னார்.
ஆனால் இன்றைக்கு கள்ளச்சாராயம் குடித்து 38 பேர் பலியாகியுள்ளனர். இன்னும் நிறையபேர் உயிர் ஊசலாடிக்கொண்டு இருக்கிறது. 10 பேரின் நிலைமை கவலைக்கிடமாக இருக்கிறது. டாஸ்மாக் இல்லா தமிழகத்தை உருவாக்குங்கள் என்று என்னிடம் சொல்லி சொல்ல சொல்கிறார்கள். எப்போதும் முதல் ஆளாக வரக்கூடிய முதல்வர் ஸ்டாலின் இப்போது வரை இங்கு வரவில்லை.
வெறும் தேர்தலை மட்டுமே மையமாக கொண்டு ஆட்சி செய்கிறார்கள். முதலில் 40க்கு 40 என்று கூறி பேசினார்கள். இப்போது 200க்கு 200 என்று பேசி வருகிறார்களே தவிர, மக்களுக்கான பிரச்சினைகளை பற்றி பேசுவதே இல்லை. மேலும் கொடுத்த வாக்குறுதிகள் எதையும் இந்த அரசு காப்பாற்றவில்லை. அடுத்த தேர்தலை பற்றி தான் இந்த கட்சி யோசிக்கிறதே தவிர, மக்களுக்கான பிரச்சினையை தீர்ப்பதை பற்றி யோசிக்கவில்லை என்பது தான் எனது கவலை.
எதாவது ஒரு சம்பவம் நடந்துவிட்டால் உடனடியாக அதிகாரிகளை மாற்றிவிடுகிறார்கள். அதிகாரிகளை மாற்றிவிட்டால் போன உயிர்கள் எல்லாம் வந்துவிடுமா?.. உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு 10 லட்சம் ரூபாய் நிவாரணம் அறிவிக்கிறார் என்றால், கள்ளச்சாராயம் குடிப்பவர்களை ஊக்கப்படுத்துகிறதா இந்த அரசு?.. என்கிற இந்த கேள்வி எழுகிறது.
அப்போ நாமும் கள்ளச்சாராயம் குடித்து இறந்தால் அரசு 10 லட்சம் தரும் என்ற தவறான எண்ணம் மக்கள் மனதில் வந்துவிடும். அதிகாரிகளை மாற்றுவதினாலோ, 10 லட்சம் நிவாரணம் தருவதினாலோ இதற்கு தீர்வு கிடைத்துவிடாது. இது வெறும் கண்துடைப்பு நாடகம் தான். இப்போது விக்கிரவாண்டி தேர்தலில் ஓட்டுக்கு ஆயிரம் ரூபாய் கொடுக்க நினைத்து இருப்பார்கள் என்றால் இந்த சம்பவத்திற்கு பிறகு 2000 கொடுக்க முயற்சிப்பார்கள். அவ்வளவு தான். இவ்வாறு அவர் கூறினார்.
முன்னதாக முதல்வர் ஸ்டாலின், கள்ளக்குறிச்சி வட்டம், கருணாபுரம் காலனியில் மெத்தனால் கலந்த சாராயம் அருந்தியதால் 34 நபர்கள் உயிரிழந்துள்ளனர் என்ற செய்தியைக் கேட்டு மிகவும் வேதனையும் அதிர்ச்சியும் அடைந்தேன். உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு தலா ரூ 10 லட்சம் நிவாரணம் வழங்கப்படும் என்றும் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருபவர்களுகு தலா ரூ.50 ஆயிரம் வழங்கப்படும் என்று தெரிவித்து இருந்தார்.












Click it and Unblock the Notifications