கள்ளக்குறிச்சி: ஜெய்பீம் பாணி போலீஸ் சித்ரவதை- சிறையிலடைக்கப்பட்ட சக்திவேலுக்கு திடீர் நெஞ்சுவலி!
கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சியில் போலீசார் கஸ்டடியில் ஜெய்பீம் திரைப்பட பாணியிலான 3 நாள் சித்தரவதைக்குப் பின்னர் மிக தாமதமாக நீதிமன்றத்தில் அனுமதிக்கப்பட்டு சிறையில் அடைக்கப்பட்ட குறவர் சமூகத்தைச் சேர்ந்த சக்திவேல் நெஞ்சு வலி காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவருக்கு கள்ளக்குறிச்சி மருத்துவமனையில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
Recommended Video
சின்னசேலம் அருகே ஞாயிற்றுக்கிழமையன்று சீருடை இல்லாமல் வந்த போலீசார் 5 குறவர் இன ஆண்களை விசாரணைக்கு என அழைத்துச் சென்றனர். 3 நாட்கள் போலீஸ் கஸ்டடியில் 5 பேரும் சித்ரவதை செய்யப்பட்டதாக குற்றம்சாட்டப்பட்டது.
இது தொடர்பான செய்திகளை நாமும் நேற்று தொடர்ந்து வெளியிட்டு வந்தோம். சக்திவேலின் கர்ப்பிணி மனைவி உள்ளிட்டோர் ஜெய்பீம் திரைப்பட பாணியில் மிக கடுமையாக அலைக்கழிக்கப்பட்டனர். இதனையடுத்து 5 பேரில் செல்வம் மற்றும் பரமசிவம் ஆகியோரை மட்டும் போலீசார் உறவினர்களிடம் ஒப்படைத்தனர்.

ஆஜர்படுத்துவதில் தாமதம் ஏன்?
எஞ்சிய 3 பேரான தர்மராஜ், சக்திவேல், பிரகாஷ் ஆகியோரில் சக்திவேல் தவிர 2 பேரும் நேற்று பகலில் கள்ளக்குறிச்சி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டனர். ஆனால் சக்திவேலை மட்டும் இரவு 8 மணிக்கு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி உளுந்தூர்பேட்டை கிளைச் சிறைச்சாலையில் அடைத்தனர். சக்திவேல் மிக தாமதமாக ஆஜர்படுத்தப்பட்டது ஏன் எனவும் உறவினர்கள் கேள்வி எழுப்பி இருந்தனர்.

சக்திவேலுக்கு நெஞ்சுவலி
இந்நிலையில் இன்று மாலை சக்திவேல், சிறையில் நெஞ்சு வலியால் துடித்திருக்கிறார். இதனையடுத்து உளுந்தூர்பேட்டை மருத்துவமனையில் முதலில் சக்திவேல் அனுமதிக்கப்பட்டார். பின்னர் மருத்துவர்களின் அறிவுரையின் பேரில் அவர் கள்ளக்குறிச்சி அரசு தலைமை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

போலீஸ் சித்ரவதை
முன்னதாக விடுவிக்கப்பட்ட செல்வம் செய்தியாளர்களிடம் பேசுகையில், போலீசார் விசாரணையின் போது மிக கொடூரமாக சித்ரவதை செய்ததாக கண்ணீர் கதறலுடன் தெரிவித்தார். தர்மராஜ் என்பவரின் கட்டை விரல்களை அந்தரத்தில் கட்டி தொங்கவிட்டதை நேரில் பார்த்த போது தமக்கு உயிரே நின்று போய்விட்டது என குமுறி இருந்தார்.

உறவினர்களுக்கு அனுமதி மறுப்பு?
இந்த நிலையில் தற்போது சக்திவேல் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இதுவரை அவரது கர்ப்பிணி மனைவி உட்பட உறவினர்கள் யாரும் மருத்துவமனை வளாகத்துக்குள் அனுமதிக்கப்படவில்லை எனவும் கூறப்படுகிறது. இது கள்ளக்குறிச்சி பகுதியில் பதற்றத்தை ஏற்படுத்தி உள்ளது.












Click it and Unblock the Notifications