படிப்பும், படிப்போடு சற்று படைப்பும்.. காரைக்குடி மாணவர்களின் "முகை"
காரைக்குடி: சிவகங்கை மாவட்டம், காரைக்குடி, இராம.சு. இராமநாதன் செட்டியார் நகராட்சி உயர்நிலைப்பள்ளியில் முகை என்ற கையெழுத்து இதழ் வெளியிட்டு விழா 23.10.2015 அன்று நடைபெற்றது.
விழா தலைமையாசிரியர் பீட்டர் ராஜா தலைமையில் சிறப்பாக நடைபெற்றது. அவ்விழாவில் தலைமையாசிரியர் அவர்கள் "முகை" கையெழுத்து சிறப்பிதழை வெளியிட பட்டதாரி ஆசிரியர் ஜாக்குலின் கனிமொழி மற்றும் கீதா சுந்தரேஸ்வரி ஆகியோர் பெற்று கொண்டனர்.

பட்டதாரி ஆசிரியர் சித்ரா அனைவரையும் வரவேற்றார். இவ்விதழானது ஏழாம் வகுப்பு, மாஸ்டர் பிரைன் இன் டிரெயினிங் குழு மாணவர்களால், பட்டதாரி ஆசிரியர் சித்ரா அவர்கள் வழிகாட்டுதலின் மூலம் வடிவமைக்கப்பட்டது.

இவ்விதழில் சொல் சொக்கட்டான், கவிதை தொகுப்பு, நலம் தரும் மருத்துவக் குறிப்புகள், கண்டுபிடிப்பாளர்களும்- கண்டுபிடிப்புகளும்,நுண்ணறிவுத் திறன், மாணவர்கள் கைவண்ணம், அறிந்து கொள்வோம், ஜோக்ஸ் ஆகிய தலைப்புகளின் கீழ் மாணவர்கள் தொகுத்திருந்தனர்.

இதனைத் தொடர்ந்து இசை சொற்பொழிவு நடைபெற்றது. இச்சொற்பொழிவு யோகராஜ் அவர்களால் மாணவர்களுக்கு நடத்தப்பட்டது. அவர், நிகழ்ச்சியில் கவிஞர் கண்ணதாசன், அறிஞர் அண்ணா, திரு.வி. கல்யாண சுந்தரனார் போன்ற தலைவர்களைப் பற்றி எடுத்து கூறினார்.

மேலும் திருக்குறள், புறநானூறு, எட்டுத்தொகை ஆகிய நூல்களின் சிறப்புகளை எடுத்துக் கூறினார். சொற்பொழிவின் இடையே மாணவர்களை உற்சாகப்படுத்தும் விதத்தில் பாடல்கள் பாடி ஆர்வமூட்டினார். மாணவர்கள் ஆர்வத்துடன் கண்டு ரசித்தனர்.
நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை பட்டதாரி ஆசிரியர் கோமதி அவர்கள் செய்திருந்தார். நிகழ்ச்சியின் முடிவில் பட்டதாரி ஆசிரியர் கீதா நன்றி கூறினார்.












Click it and Unblock the Notifications