For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

அதிமுக அரசின் தொழிலாளர் விரோதப் போக்கை மக்கள் மன்றத்தில் எடுத்துரைப்போம்: கருணாநிதி

Google Oneindia Tamil News

சென்னை: அதிமுக அரசின் தொழிலாளர் விரோத போக்கை சட்டசபையில் கூற முடியாவிட்டாலும், மக்கள் மன்றத்தில் மடை திறந்த வெள்ளமென எடுத்துரைப்போம் எனத் தெரிவித்துள்ளார் திமுக தலைவர் கருணாநிதி.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள கேள்வி - பதில் அறிக்கையில் கூறியிருப்பதாவது :-

கேள்வி:- போக்குவரத்து ஊழியர்களின் ஊதிய ஒப்பந்த விவகாரம் முற்றிப்போய் சென்னையில் அதன் தலைமை அலுவலகமான பல்லவன் இல்லமே சூறையாடப்பட்டிருக்கிறதே?

Karunanidhi accuses Tamilnadu government

பதில்-பேச்சுவார்த்தை நடத்தாததற்கு உச்ச நீதிமன்ற வழக்கைக் காரணமாக பன்னீர்செல்வம் சொல்லியிருக்கிறார். உச்ச நீதிமன்றத்தில் என்ன வழக்கு தெரியுமா? ஊதிய உயர்வு பற்றி எந்த வழக்கும் கிடையாது. எந்தச் சங்கத்துடன் பேச்சுவார்த்தை நடத்துவது, அழைப்பது என்ற பிரச்சினை வந்த போது, அதற்கு ஒட்டுமொத்தத் தொழிலாளர்களிடம் ரகசிய வாக்கெடுப்பு நடைபெற்றது. அதில் 57 சதவிகித வாக்குகளைப் பெற்று, தொ.மு.ச. பேரவையின் அங்கீகாரம் ஐந்தாண்டுகளுக்கு, அதாவது 2015-ம் ஆண்டு அக்டோபர் வரை உள்ளது.

ஆனால் அதிமுக ஆட்சிக்கு வந்தவுடன் தொழிலாளர்களை மிரட்டி, தொ.மு.ச.வின் அங்கீகாரம் முடிந்து விட்டது என்றார்கள். உயர் நீதிமன்றத்தீர்ப்பின் அடிப்படையில் ஐந்தாண்டு காலத்திற்கு ஒரு முறை தேர்தல் நடத்தவேண்டுமென்ற முடிவோடு நடத்தப்பட்டதில் வெற்றி பெற்ற தொ.மு.ச. பேரவைக்கு ஓராண்டு காலத்திற்குள் அங்கீகாரம் முடிந்து விட்டது என்று கூறினார்கள். அதே நேரத்தில் தொழிற்சங்க அங்கீகாரத்தேர்தலில் 12 சதவிகித வாக்குகளை மட்டுமே பெற்று தோல்வியடைந்த அ.தி.மு.க. சங்கம், வேண்டுமென்றே உச்ச நீதிமன்றத்தில், பேச்சுவார்த்தைக்கு தங்களையும் அழைக்க வேண்டுமென்று வழக்குத்தொடுத்து, அதில் எந்தவிதமான இடைக்கால உத்தரவும் இல்லை; அந்த வழக்குதான் தற்போது நிலுவையில் உள்ளதே தவிர, ஊதிய உயர்வு பற்றி பேச்சுவார்த்தை நடத்துவதற்கும், அவர்களின் வழக்குக்கும் எந்தவிதமான சம்பந்தமும் இல்லை.

இதையெல்லாம் வேண்டுமென்றே மறைத்து, துறையின் அமைச்சர் கூட பதில் கூறாமல், முதலமைச்சர் பன்னீர்செல்வம் போக்குவரத்துத் தொழிலாளர்களுக்கு உதவுவதற்குப் பதிலாக உபத்திரவம் கொடுப்பதைப் போல் உண்மைக்கு மாறான தகவல்களைக்கூறி, அவரே போராட்டம் நடத்தத்தூண்டி விட்டிருப்பதை தி.மு.க. வன்மையாகக் கண்டிக்கின்றது.

பேரவையில் திமுக உறுப்பினர்கள் இருந்தால், இத்தகைய தொழிலாளர் விரோதப்போக்கை எதிர்ப்பார்கள் என்பதால், அவர்களையெல்லாம் ஏதோ ஒரு காரணம் கூறி கூண்டோடு வெளியேற்றி விட்டார்கள் என்பதும் புரிகிறது. அதனால் என்ன? சட்டமன்றம் இல்லை என்றால் என்ன? இருக்கவே இருக்கிறது மகத்தான மக்கள் மன்றம். மக்கள் மன்றத்தில் நமது கருத்துகளை மடை திறந்த வெள்ளமென மனந்திறந்து எடுத்துரைப்போம்.

கேள்வி:-சட்டப்பேரவையில் திமுக குழுத்தலைவர், மு.க.ஸ்டாலின் உள்பட திமுகவினரை ஒட்டுமொத்தமாக அவையின் விவாதத்தில் மேற்கொண்டு கலந்து கொள்ள முடியாமல் வெளியேற்றி விட்டார்களே?

பதில்:-கடந்த மூன்றரை ஆண்டுகளில் அதிமுக அரசின் சார்பாக மொத்தம் 139 அறிக்கைகள் பேரவையில் படிக்கப்பட்டன.

அனைத்துத்திட்டங்களையும் 110வது விதியின் கீழ் முதலமைச்சர் படிப்பது என்றால், அதுவும் 1 லட்சத்து 27 ஆயிரத்து 500 கோடி ரூபாய்க்கான திட்டங்களை 110-வது விதியின் கீழ் முதலமைச்சர் மட்டும் படித்திருக்கிறார் என்றால், பிறகு நிதி நிலை அறிக்கை எதற்காக? நிதி அமைச்சர் எதற்காக? அறிக்கைகளும், அறிவிப்புகளும் யாரை ஏமாற்றுவதற்காக?

29-3-2012 அன்று 110-வது விதியின் கீழ் ஜெயலலிதா படித்த அறிக்கையில் 660 மெகாவாட் எண்ணூர் அனல் மின் விரிவாக்கத் திட்டம் 3,960 கோடி ரூபாயில் தொடங்குமென்று அறிவித்தாரே, என்னவாயிற்று? 9-5-2012 அன்று 1,420 கோடி ரூபாயில் மாமல்லபுரத்தையும் எண்ணூர் துறைமுகத்தையும் இணைக்கப்போவதாக ஜெயலலிதா படித்த 110-வது அறிக்கை என்னவாயிற்று?

25-4-2013 அன்று படித்த அறிக்கையில், நீலகிரியில் சில்லஹல்லா நீரேற்று புனல் மின் திட்டம் 7 ஆயிரம் கோடி ரூபாயிலும், மின் கட்டமைப்பை வலுப்படுத்தும் திட்டம் 5 ஆயிரம் கோடி ரூபாயிலும், திருவலத்தில் துணை மின் நிலையம் 1000 கோடி ரூபாயிலும், துணை மின் நிலையங்கள், மின் தொடர் பாதை அமைக்கும் பணி 1230 கோடி ரூபாயிலும் அமைக்கப்போவதாகப்பேரவையில் படித்தார்களே, அவையெல்லாம் எங்கே?

பேரவை நடைபெற்ற மூன்று நாள்களும் அரங்கேற்றப்பட்ட நிகழ்வுகள் ஜனநாயகத்திற்கு விரோதமானவை; கசப்பானவை; காரிருளை ஒத்தவை. அதனால்தான் நான் அங்கே இருக்க வேண்டாமென்று எண்ணி எனக்குரிய இருக்கை ஏற்பாடு செய்யாமல் விட்டு விட்டார்களோ?

இவ்வாறு அவர் அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

English summary
The DMK president Karunanidhi has accused Tamilnadu government on transport staffs issue.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X