For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

போக்குவரத்து ஊழியர்கள் பிரச்சினை... அழைத்துப் பேசாத அமைச்சர்கள்: கருணாநிதி கண்டனம்!

Google Oneindia Tamil News

சென்னை: போக்குவரத்து ஊழியர்களின் பிரச்சினையை அழைத்துப் பேசாமல் அமைச்சர்கள் அலட்சியம் காட்டியதற்கு திமுக தலைவர் கருணாநிதி கண்டனம் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டிருப்பதாவது:-

வரலாறு:

திராவிட முன்னேற்றக் கழகம் 1967ஆம் ஆண்டு ஆட்சிப் பொறுப்பிற்கு வந்தவுடன் தனியாரிடமிருந்த பேருந்துகளை அரசுடமையாக்கியது. அதனால் பல்லவன், பாண்டியன், சேரன், சோழன் என்று துவங்கப்பட்ட அரசுப் போக்குவரத்துக் கழகங்கள் இன்று ஆல்போல் வளர்ந்து, எட்டு போக்குவரத்துக் கழகங்களாகவும், 22,000 பேருந்துகளைக் கொண்டு 1.43 லட்சம் தொழிலாளர்கள் நாள்தோறும் இரண்டு கோடி பயணிகளை ஏற்றிச் செல்லும் அளவுக்குமாக வளர்ந்துள்ளது.

1977ஆம் ஆண்டு அ.தி.மு.க. ஆட்சிப் பொறுப்பேற்றவுடன் போக்குவரத்துக் கழகத் தொழிலாளர்கள் ஊதிய ஒப்பந்தம் ஏற்படுத்த வேண்டும் என்ற கோரிக்கை வைத்து போராடி, இடைக்கால நிவாரணமாக ரூபாய் 100 தர வேண்டுமென கேட்டுவேலை நிறுத்தத்தில் ஈடுபட்டனர். வேலை நிறுத்தத்தில் ஈடுபட்ட பல்லாயிரக் கணக்கான தொழிலாளர்கள் கைது செய்யப்பட்டார்கள். தொழிற்சங்கங்களின் வேண்டுகோளுக்கிணங்க நானும், மக்கள் தலைவர் ஜி.கே. மூப்பனார், கல்யாணசுந்தரம் மற்றும் அனைத்துக் கட்சித் தலைவர்களும் இணைந்து போக்குவரத்துக் கழகத் தொழிலாளர்களின் ஊதிய ஒப்பந்த பேச்சுவார்த்தையினைத் துவக்கி பிரச்சினையை தீர்க்க வேண்டுமென அரசுக்கு வேண்டுகோள் விடுக்கப்பட்டதுடன், அரசு இதனை அலட்சியம் செய்தால், அனைத்துக் கட்சிகளின் சார்பாக ``பந்த்'' நடைபெறும் என அறிவித்தோம்.

ஈரோட்டில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டிருந்த அன்றைய முதல்வர், அருமை நண்பர் எம்.ஜி.ஆர். அவர்கள் ரூபாய் 27 ஊதிய உயர்வு அளிப்பதாக அறிவித்தார். அதன் பேரில் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு ஊதிய உயர்வு ஒப்பந்தம் ரூ.54 என்று உயர்த்தி வழங்கப்பட்டு முதல் முதலாக தொழிற்சங்கத் தலைவர்களும், நிர்வாகமும் ஓர் முத்தரப்பு ஒப்பந்தம் மூன்றாண்டுகளுக்கு என்று கையெழுத்தாகியது. அன்று துவங்கி அதே எம்.ஜி.ஆர். அவர்கள் ஆட்சிக் காலத்தில் 1980, 1983, 1986 ஆகிய ஆண்டுகளில் தொடர்ந்து ஒப்பந்தங்கள் ஏற்பட்ட வரலாறு உண்டு.

அதேபோல் 1989 ஆம் ஆண்டில் கழகம் ஆட்சிக்கு வந்தவுடன் அன்று போக்குவரத்துத் துறை அமைச்சராக இருந்து தம்பி மு. கண்ணப்பன் அவர்கள் தொழிற்சங்கங்களை அழைத்துப் பேசி அதுவரை தீர்க்கப்படாத பிரச்சினைகளும் தீர்த்து வைக்கப்பட்டன.

மீண்டும் அ.தி.மு.க. ஆட்சிக் காலத்தில் 1992 மற்றும் 1995 ஆம் ஆண்டுகள் இதே ஜெயலலிதா ஆட்சிக் காலத்தில் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு ஒப்பந்தங்கள் செய்யப்பட்ட வரலாறும் உண்டு.

கழகம் 1996 ஆம் ஆண்டு ஆட்சிப் பொறுப்பேற்றவுடன் நீண்ட நாள் போக்குவரத்துக் கழகத் தொழிலாளர்களின் கோரிக்கைகளில் ஒன்றாகிய அரசு ஊழியர்களைப் போலவே, ஓய்வூதியம் உள்ளிட்ட பல்வேறு பிரச்சினைகளை போக்குவரத்துத் துறை அமைச்சராக இருந்த தம்பி பொன்முடி மூலம் பேசி 1998ல் ஓர் ஒப்பந்தம் ஏற்பட்டது.

ஜெயலலிதா தலைமையில் அ.தி.மு.க. ஆட்சி 2001ல் பொறுப்பேற்றவுடன் தொழிலாளர்களுக்கு வழங்கப்பட்ட 20 சதவிகித (ரூ.6,000) போனஸை குறைத்து 8.33 சதவிகிதம் (ரூ.2,500) மட்டுமே வழங்கப்படும் என அறிவித்ததால் தொழிலாளர்கள் கொந்தளித்து 17 நாட்கள் போராட்டம் நடத்தினார்கள். போராடிய போக்குவரத்துக் கழகத் தொழிலாளர்களின் பிரச்சினைகளை தீர்க்க அன்றும் அரசு முன்வரவில்லை. அதுமட்டுமல்ல ஒரே நாளில் ஒன்றரை லட்சம் அரசு ஊழியர்களை வீட்டுக்கு அனுப்பி வைத்தவர்களும் ஜெயலலிதா அரசினர்தான். அரசுப் பேருந்துகளில் 50 சதவிகிதம் தனியாருக்கு தாரைவார்க்க அரசு ஆணை பிறப்பித்த வரலாறுகளும் உண்டு.

மிகவும் சிறப்பான நிகழ்வு:

ஐந்தாவது முறையாக கழகம் ஆட்சிப் பொறுப்பேற்றவுடன் அ.தி.மு.க. ஆட்சிக் காலத்தில் நீட்டித்த 5 ஆண்டு ஒப்பந்தத்தை 3 ஆண்டுகள் எனக் குறைத்து 2007 ஆம் ஆண்டு ஓர் ஒப்பந்தமும், 2010 ஆம் ஆண்டு ஓர் ஒப்பந்தமும் போக்குவரத்துத் துறை அமைச்சராக இருந்த தம்பி கே.என்.நேருவை கொண்டு நிறைவேற்றி தொழிலாளர்களின் பாதிப்புகள் அனைத்தும் சரி செய்யப்பட்டன.

வேலை நிறுத்தம் செய்த 17 நாட்களை பணி நாட்களாகக் கருதி அரசு ஆணை பிறப்பித்தது, இந்திய வரலாற்றில் மிகவும் சிறப்பான நிகழ்வு என அனைவரும் போற்றி மகிழ்ந்தனர்.

மீண்டும் 2011 ஆம் ஆண்டில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டவுடன் போக்குவரத்துத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி பேருந்துகளை தனியார் மயமாக்க முயற்சித்தார். மூன்று ஆண்டு ஊதிய ஒப்பந்தத்தை ஐந்து ஆண்டுகளாக மாற்றவும் முயற்சித்தார். ஆனால் கடுமையான எதிர்ப்பின் காரணத்தினால் அவைகளை நிறைவேற்ற முடியவில்லை.

போக்குவரத்துகளில் தொழிற்சங்கங்களை ரகசிய வாக்கெடுப்பு மூலம் தேர்வு செய்து பேச்சுவார்த்தை நடத்த வேண்டுமென்று பணியாளர் சம்மேளனம் உயர்நீதிமன்றத்தில் வழக்குத்தொடுத்தது. அவ்வழக்கின் தீர்ப்பாக உடனடியாக சங்க அங்கீகாரத் தேர்தல் நடைபெற்றது. அத்தேர்தலில் 57 சதவிகிதம் (75,432) வாக்குகளைப் பெற்று தொ.மு.ச. தனியொரு சங்கமாக அங்கீகரிக்கப்பட்டது. இந்த அங்கீகாரம் 2015 அக்டோபர் வரை 5 ஆண்டுகளுக்கென நீதிமன்றத் தீர்ப்பின்படி அரசாணை பிறப்பிக்கப்பட்து. ஆனால் அ.தி.மு.க. ஆட்சிக்கு வந்தவுடன் அங்கீகரிக்கப்பட்ட சங்கமான தொ.மு.சங்கத்தை அழைத்துப் பேச மறுத்து வந்தது. ஊதிய ஒப்பந்தம் 31.8.2013 உடன் முடிவடைந்து புதிய ஊதிய ஒப்பந்தம் 1.9.2013 முதல் ஏற்படுவதற்கான கோரிக்கைகளை நிர்வாகத்திடம் அளித்து பேச்சுவார்த்தை நடத்த கோரியும் கடந்த 15 மாதங்களாக நிர்வாகம் பேச்சுவார்த்தைக்கு அழைக்கவில்லை. அ.தி.மு.க. சங்கம் உச்ச நீதிமன்றத்தில், அங்கீகாரத்துக்கான தேர்தலில் தங்கள் சங்கம் 12 சதவிகிதம் வாக்குகள் பெற்றிருப்பதால் தங்களையும் பேச்சுவார்த்தைக்கு அழைக்க வேண்டுமென வழக்கு தொடர்ந்தது. அந்த வழக்குக்கு, நீதிமன்றத்தில், எந்தவிதமான இடைக்காலத் தடையும் விதிக்கப்படவில்
தனியொரு சங்கமாக பேச்சுவார்த்தை நடத்த தொ.மு.ச.வை அழைக்க அரசியல் காழ்ப்புணர்வு கொண்ட அ.தி.மு.க. அரசு மறுத்து வருவதோடு, தொ.மு.ச. ஏதோ ஒரு வழக்கு தொடர்ந்திருப்பதாக பொய்யான செய்திகளை பரப்பி வந்தது. இதனை பேரவை பொதுச்செயலாளர் தம்பி சண்முகத்திடம் கேட்டு, உண்மைகளை அறிந்துகொண்ட பின் அனைத்து தொழிற்சங்கங்களையும் அழைத்துப் பேசி எல்லோரும் கூட்டாகக் கோரிக்கைகளை வைத்து பேச்சுவார்த்தை நடத்துங்கள், அப்போதாவது இந்த அரசு பேச்சுவார்த்தைக்கு அழைக்குமா என்பதை பார்க்கலாம் என்று நான் ஆலோசனை கூறினேன்.

அதன் அடிப்படையில் அனைத்துத் தொழிற்சங்கங்களும் இணைந்து அ.தி.மு.க. தொழிற்சங்கத்தையும் பொதுக்கோரிக்கை தயாரிக்க அழைப்பு விடுத்தனர். ஆனால், ஆளும் கட்சி சங்கம் அதனை நிராகரித்தது. அ.தி.மு.க. சங்கத்தை தவிர மற்ற அனைத்து சங்கங்களும் கோரிக்கை அளித்து பேச்சுவார்த்தை நடத்த வேண்டுமென அரசிடம் கோரினர். ஆனால், அரசு மீண்டும் மீண்டும் வழக்கு இருப்பதாக பொய் சொல்லி காலம் கடத்தி வந்தது. இதனால் அனைத்து தொழிலாளர்களும் இணைந்து திருச்சியில் டிசம்பர் 2ஆம் தேதி 30,000 தொழிலாளர்கள் கூடிய மாநாட்டில் எடுத்த முடிவின் அடிப்படையில் வேலை நிறுத்த அறிவிப்பு டிசம்பர் 5 ஆம் தேதி அனைத்து தொழிற்சங்கங்களும் கையொப்பமிட்டு நிர்வாகத்திடம் அளித்தது. ஆனால், நிர்வாகம் அலட்சியம் செய்து அ.தி.மு.க. சங்கத்தில் 95,000 பேர் உறுப்பினர்கள் இருப்பதாகவும் அதனால் வேலை நிறுத்தத்தை முறியடிப்போம் என்றும் வீராப்பு பேசினார்கள்.

தொழிலாளர்களுடைய கோரிக்கைகள் குறித்து அவர்களுடைய பிரதிநிதிகளை அழைத்துப் பேசாமல், தமிழக முதல்வர் கடந்த 8.12.2014 அன்று நீதிமன்றத்தில் வழக்கு இருப்பதால் ரூ.1000 இடைக்கால நிவாரணமாக 1.1.2015 முதல் வழங்குவதாக மீண்டும் ஒரு பொய்யை சட்டமன்றத்தில் கூறினார். இதனால் ஆத்திரமடைந்த தொழிலாளர்கள் போக்குவரத்து மண்டல நிர்வாகங்களை முற்றுகையிட்டு 9.12.2014 அன்று போராட்டங்கள் நடத்தினர்.

பேசவில்லை...

வேலை நிறுத்தம் முறையாக சட்டப்படி 19.12.2014 முதல் தொடங்கியிருக்க வேண்டும். வேலை நிறுத்தம் அறிவித்தவுடன் அரசு அழைத்து பேசியிருக்க வேண்டும். ஆனால், தொழிலாளர் துறையும் போக்குவரத்துத் துறையும் மெத்தனம் காட்டி கோரிக்கைகளை நிராகரித்துள்ளன. தொழிற்சங்கங்கள் பொறுமையாகவும், பொறுப்புணர்ச்சியோடும் 19.12.2014 முதல் 22.12.2014 வரை பொதுமக்களிடம் வேலை நிறுத்தத்திற்காக ஆதரவு திரட்டியதாகவும், இறுதிவரை அரசு பேச்சுவார்த்தை நடத்த முன்வராததால் தொழிற்சங்கங்கள் 29.12.2014 முதல் வேலை நிறுத்தம் செய்வதென அறிவித்தன என்றும், இதற்கான விளக்கக் கூட்டம் 26.12.2014 அன்று சென்னை பல்லவன் சாலையில் மாலை 4 மணி முதல் 6 மணி வரை நடைபெற்ற பொழுது தொழிலாளர் நலத் துறையின் சார்பில் பேச்சுவார்த்தைக்கு அழைத்தார்கள் என்றும், ஆனால், அங்கு பதில் சொல்லக் கூடிய பொறுப்புள்ள பெரிய அதிகாரிகள் யாரும் வரவில்லை என்றும், தொ.மு.ச. கடிதம் கொடுத்தால் பேச்சுவார்த்தை உடனடியாக துவங்கப்படும் என்று கூறியதாகவும் என்னிடம் விவரங்கள் தரப்பட்டன.

27.12.2014 காலை 11 மணிக்கு தொழிலாளர் நலத் துறை பேச்சுவார்த்தை நடத்துவதாக கூறப்பட்டதன் அடிப்படையில் அனைத்து சங்கங்களும் அங்கு சென்றிருக்கிறார்கள். அங்கு அ.தி.மு.க. சங்கமும் வருகை தந்து பேச்சுவார்த்தையில் கலந்து கொண்டிருக்கிறது. உச்ச நீதிமன்றத் தீர்ப்பின் அடிப்படையில் அங்கீகாரம் பெற்ற சங்கமாக தொ.மு.ச. இருப்பதால் தொழிலாளர் துறை முன்னதாக ஓர் முத்தரப்பு ஒப்பந்தத்தை செய்து அதன் மூலம் அனைத்து சங்கத்தையும் அழைத்து பேச்சுவார்த்தையை 30.12.2014 அன்று துவங்குவது என்ற ஆலோசனையை தொ.மு.ச. பேரவை அரசு முன் வைத்தபோது, முதலில் ஏற்றுக் கொண்ட நிர்வாகம் பின்னர் மறுத்து தொ.மு.ச. கடிதம் கொடுத்தால்தான் பேச்சுவார்த்தை துவங்கப்படும் என்று அறிவித்திருக்கின்றனர். உடனடியாக தொ.மு.ச. எந்த கௌரவமும் பார்க்காமல் நாங்கள் கடிதம் கொடுக்கிறோம்.

உடனே இன்றே பேச்சுவார்த்தையை துவங்க வேண்டும், அப்படி நீங்கள் துவங்கினால் வேலை நிறுத்தத்தைப் பற்றி மறுபரிசீலனை செய்யலாம் என்று கூறப்பட்டது. ஆனால், நிர்வாகம் நீங்கள் கடிதம் கொடுங்கள் நாங்கள் அதை சட்டப்படி ஆலோசனை செய்து ஜனவரி 30 ஆம் தேதிக்குப் பிறகு பேச்சுவார்த்தை நடத்துவதாக கூறியதன் அடிப்படையில் அனைத்து தொழிற்சங்கத் தலைவர்களும் ஆத்திரமடைந்து நிர்வாகத்தின் ஏமாற்று தந்திர வேலைகளென உடனடியாக பேச்சுவார்த்தை அமைச்சர் முன்னிலையில் நடைபெறுவதற்கு ஏற்பாடு செய்யும் வரை வேலை நிறுத்தம் தொடருமென அறிவித்து விட்டு வெளியே வந்துள்ளார்கள்.

கண்டனம்:

நாள்தோறும் 2 கோடி ஏழையெளிய மக்கள், பள்ளி செல்லும் மாணவ மாணவியர், மருத்துவமனைக்குச் செல்லும் உடல்நலமற்றோர் போன்ற வாக்களித்த மக்கள் அரசுப் போக்குவரத்தின்றி அவதிப்படுவார்களே என்பதை உணர்ந்து, போக்குவரத்துத் துறைக்குப் பொறுப்பேற்ற அமைச்சரும், முதலமைச்சரும் உரிய காலத்தில் இதற்கொரு தீர்வு காண தவறிவிட்டதால், போக்குவரத்து தொழிலாளர்கள் நாளை (29-12-2014) முதல் வேலை நிறுத்தம் செய்ய முன் வருகின்ற அளவுக்கு நிலைமையை முற்றவைத்து வளர்த்து விட்டதற்காக செயலற்ற இந்த அ.தி.மு.க. அரசையும், போக்குவரத்துத் துறை அமைச்சரையும் வன்மையாகக் கண்டிப்பதோடு; காலம் கடந்துவிட்ட இன்றைய நிலையிலாவது பிரச்சினையிலே தலையிட்டு, போக்குவரத்துச் சங்கங்களின் பிரதிநிதிகளை அழைத்துப் பேசி ஒரு சுமூக முடிவு காண்பதற்கு வழிவகை காண முன் வர வேண்டுமென்று வலியுறுத்துகிறேன்.

இவ்வாறு அதில் அவர் தெரிவித்துள்ளார்.

English summary
The DMK president Karunanidhi has condemned Tamilnadu government for not taking action on transport employees strike issue
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X