For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

சர்க்கரை என்று காகிதத்தில் எழுதி நாக்கில் தடவினால் இனிக்குமா? முதலீட்டாளர் மாநாடு பற்றி கருணாநிதி!

By Veera Kumar
Google Oneindia Tamil News

சென்னை: "முள்ளு முனையிலே மூணு குளம் வெட்டினேன்; அதிலே இரண்டு குளம் பாழ்; ஒண்ணுல தண்ணியே வரல" என்று சொல்வார்களே, அதைப் போலத்தான் ஜெயலலிதா கூட்டிய முதலீட்டாளர் மாநாடும், சர்க்கரை என்பது காகிதத்தில் எழுதி நாக்கில் தடவிக் கொண்டதைப் போல முடிந்துள்ளது என்று திமுக தலைவர் கருணாநிதி தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து திமுக தலைவர் கருணாநிதி வெளியிட்டுள்ள அறிக்கை:

கடந்த ஓராண்டில், இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி அவர்கள் 26 நாடுகளுக்குப் பயணம் செய்து, அதன் மூலமாக பல மாநிலங்களுக்கும் சேர்த்துக் கிடைத்த நேரடி முதலீடே மொத்தம் 1 லட்சத்து 89 ஆயிரம் கோடி ரூபாய்தான் என்று மத்திய அரசின் தொழில் கொள்கை மற்றும் மேம்பாட்டுத் துறையின் புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன.

Karunanidhi criticise Tamilnadu Global Investors meet

ஆனால் தமிழகத்தின் முதலமைச்சர் ஜெயலலிதா இரண்டே நாள் மாநாட்டில், உட்கார்ந்த இடத்திலிருந்தவாறே 2 லட்சத்து 40 ஆயிரம் கோடி ரூபாய் முதலீட்டைக் குவித்த அதிசயம் இருக்கிறதே, "மந்திரத்திலே மாங்காய் விழுந்த வந்த கதை" தான்!

ஆனால் ஜெயலலிதா இந்த மாநாட்டை கடந்த நான்கு ஆண்டுகளுக்கு முன்பே கூட்டியிருந்தால், இந்நேரம் இந்தத் தொழிற்சாலைகள் எல்லாம் தொடங்கி, தமிழகத் தெருக்களில் பாலும், தேனும் ஓடியிருக்குமே; அந்தப் பொன்னான வாய்ப்பை ஏன் நழுவ விட்டார்கள் என்று தான் புரியவில்லை!

தமிழகத்தில் தொழில் தொடங்க விதிமுறைகள் எளிமை ஆக்கப்பட்டு விட்டதாம்; ஒரே மாதத்தில் தொழில் தொடங்க அனுமதி கிடைத்து விடுமாம்; ஜெயலலிதா அறிவித்திருக்கிறார். ஆனால் அங்கே நடைபெற்ற கருத்தரங்கில் அரியலூர் மாவட்டத்தைச் சேர்ந்த தொழிலதிபர் தனஞ்ஜெயன் தைரியமாக எழுந்து, "கடந்த இரண்டாண்டு காலமாக தொழில் தொடங்க கலெக்டர் மற்றும் சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் சரியான ஆவணங்களைக் கொடுத்தேன். ஆனால் இதுவரை அனுமதி கிடைக்க வில்லை" என்றெல்லாம் அமைச்சருடன் வாக்குவாதம் செய்திருக்கிறார்.

இந்த மாநாடு பற்றி, இன்று வந்த வார இதழில் எழுதப்பட்டுள்ள கட்டுரையின் சில பத்திகள் வருமாறு :-

"குறைந்த விலைக்கு நிலம் தருகிறோம், வரிச் சலுகையும் அளிக்கிறோம் என ஆந்திராவும், கர்நாடகாவும் போட்டி போட்டுக் கொண்டு, தமிழகத்தில் கூட்டம் நடத்தி, முதலீட்டாளர்களை அழைத்தார்கள். கர்நாடக முதல்வர் சித்தராமையா கோவைக்கே வந்து கர்நாடகாவில் தொழில் தொடங்க வாருங்கள் என அழைப்பு விடுத்தார்.

அதனால், கர்நாடக மாநிலம் சாம்ராஜ் நகரில் புதிதாக அமைக்கப்பட்ட 1,595 ஏக்கர் பரப்பள விலான தொழிற்பூங்காவில் தமிழகத்தைச் சேர்ந்த முதலீட்டாளர்கள் சுமார் 12 ஆயிரம் கோடி ரூபாயை முதலீடு செய்தனர். அப்படித்தான் ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடுவும் தமிழக முதலீட்டாளர்களை அழைத்தார். இவ்வளவும் நடந்த பிறகுதான், தமிழக அரசுக்கு திடீர் ஞானோதயம் உதித்தது.

ஜெயலலிதா பங்கேற்பதற்காக இவ்வளவு திட்டமிடும் ஆட்சியாளர்கள், முதலீட்டாளர்களை ஈர்ப்பதற்கான விஷயங்களை ஆரம்பத்திலேயே செய்திருந்தால், அது சரித்திரம் ஆகியிருக்கும். 2016 சட்டசபைப் பொதுத் தேர்தலுக்கு சில மாதங்களே உள்ள நிலையில் குறுகிய கால இடை வெளியில் மாநாட்டை நடத்தி என்ன சாதிக்கப் போகிறார்கள்?

தொழில் தொடங்குவது தொடர்பாக முதலமைச்சரைச் சந்தித்துப் பேசுவதற்கான வாய்ப்பு தமிழ்நாட்டில் இல்லை. மற்ற மாநில முதல்வர்கள் பல மாநிலங்களுக்கும், நாடுகளுக்கும் நேரடியாகவே சென்று முதலீடுகளைத் திரட்டி வருகின்றனர். ஆனால் ஜெயலலிதா, சென்னைக்கு வந்து சந்திக்க விரும்பும் தொழிலதிபர்களைக் கூட சந்திப்பது இல்லை.

தமிழகத்தை வளர்ச்சிப் பாதையில் அழைத்துப் போவதாகச் சொல்லி "விஷன் 2023" என்ற தொலைநோக்குத் திட்டத்தை ஜெயலலிதா வெளியிட்டார். ஆனால், அதன் இலக்கை எட்டுவதற்கான நடவடிக்கைகள் முடங்கிப் போயிருக்கின்றன. "15 லட்சம் கோடியில் உள்கட்டமைப்பு வசதிகள் ஏற்படுத்தப்படும்" என "விஷன் 2023"ல் அறிவிக்கப்பட்டது. அதற்காக, 4.09 லட்சம் கோடி செலவிடப்பட்டிருக்க வேண்டும். ஆனால் 4 ஆயிரம் கோடி கூட ஒதுக்கப்படவில்லை.

இதேபோல, "20 ஆயிரம் மெகாவாட் அளவுக்கு அனல் மின் உற்பத்தி நிலையங்கள் அமைக்கப்படும்" என அறிவிக்கப்பட்டும், அதன் இலக்கை எட்டவில்லை. செங்கல்பட்டு - தூத்துக்குடி, தூத்துக்குடி - கோவை, கோவை - செங்கல்பட்டு இடையே 24 ஆயிரம் கோடி ரூபாயில் முக்கோண 6 வழி மற்றும் 8 வழிச் சாலைகள், 1.88 லட்சம் கோடி ரூபாய்ச் செலவில் மத்திய அரசுடன் இணைந்து ரயில் பாதை மேம்பாடு, 25 ஆயிரம் கோடியில் விமான நிலைய விரிவாக்கத் திட்டம், 1,60,985 கோடி ரூபாயில் தொழில் துறைத் திட்டங்கள், 25 ஆயிரம் கோடி ரூபாயில் நகர்ப் புறங்களில் குடிசைகளில் வாழும் மக்களுக்குப் புதிய வீடுகள் என்ற விஷன் 2023 அறிவிப்புகள் எல்லாம் கானல் நீராகி விட்டது.

மெட்ரோ ரயிலைவிட மோனோ ரயில்தான் "பெஸ்ட்" எனப் பக்கம் பக்கமாக அறிக்கை விட்டு மெட்ரோவை மட்டம் தட்டியவர்கள்தான், மெட்ரோ ரயில் திட்டத்துக்குச் சொந்தம் கொண்டாடினார்கள். மதுரை, கோவை, திருச்சியிலும் மோனோ ரெயில் திட்டம் கொண்டு வரப்படும் என்றும் சொன்னார்கள். எல்லாமே "புஸ்வாணம்" தான்.

கார் தொழிற்சாலைகளில் இருந்து துறைமுகத்துக்கு கார்களை எளிதாக அனுப்புவதற்காக மதுரவாயலில் இருந்து சென்னை துறை முகத்துக்குப் பறக்கும் சாலைத் திட்டத்தைக்கொண்டு வந்தது மத்திய அரசு.

ஆனால், அதை முடக்கிப் போட்டு விட்டது தமிழக அரசு" என்றெல்லாம் எழுதியிருக்கிறதே, இதற்கு ஆட்சியாளர்களின் பதில் என்ன? தென் மாவட்டங்களில் தொழில் தொடங்கினால் சிறப்புச் சலுகைகள் தரப்படும் என்று முதல் அமைச்சர் பேசியிருக்கிறார்.

கழக ஆட்சிக் காலத்திலேயே தென் மாவட்டங்களின் வளர்ச்சி குறித்து உச்ச நீதிமன்ற முன்னாள் நீதிபதி திரு. ரெத்தினவேல் பாண்டியன் அவர்கள் தலைமையில் தென் மாவட்டங்களில் தொழில் வளம் பெருக வேண்டும் என்பதற்காகவும், அந்தப் பகுதிகளிலே வாழ்கின்ற மக்களுக்குப் பயன்படும் வகையில் முற்போக்கான திட்டங்களை நிறைவேற்ற வேண்டுமென்பதற்காகவும் குழு அமைக்கப்பட்டு, அந்தக் குழுவின் பரிந்துரைகளின் அடிப்படையில் பல முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன.

மத்திய அமைச்சராக இருந்த தம்பி முரசொலி மாறன் அவர்களின் பெருமுயற்சிகளின் காரணமாக நாங்குநேரியில் மிகப் பெரிய சிறப்புப் பொருளாதார பூங்கா ஒன்றினை அமைக்கத் திட்டமிட்டு அதற்கான அடிக்கல் நாட்டு விழாவும் நடை பெற்றது. அதன் பின்னர் வந்த ஆட்சியில் அந்தத் திட்டத்தை நடை முறைப்படுத்துவதற்கான ஏற்பாடுகள் முறையாகச் செய்யப்படவில்லை. இதே நேரத்தில் கழக ஆட்சியில் இந்தத் துறை எவ்வாறு செயல்பட்டது என்பதையும் கூறுகிறேன்.

தமிழக தொழில் மற்றும் வர்த்தக வளர்ச்சிக்கு உதவிட முதலமைச்சர் தலைமையில் தொழில் வர்த்தகக் கூட்டமைப்புகளின் பிரதிநிதிகளைக் கொண்ட, "சிறப்புத் தொழில் முனைப்புக் குழு" (Special Task Force) 8.11.2006 அன்று அமைக்கப்பட்டது.

தமிழகத்தில் உள்ள குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்களின் போட்டியிடும் தன்மையை அதிகரித்து அவற்றின் செயல்திறனைப் படிப்படியாக மேம்படுத்துதல்; விவசாயிகளுக்குக் கூடுதல் வருமானம் கிடைத்திட, வேளாண் சார்ந்த தொழில்களை ஊக்குவித்தல், குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்களின் ஆண்டு வளர்ச்சி விகிதத்தை 10 சதவீதத்திற்கும் அதிகமாக நிர்ணயித்தல் போன்றவற்றைக் குறிக்கோள்களாகக் கொண்டு இந்தியாவிலேயே முதல் முறையாக 2008ஆம் ஆண்டில் குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில்களுக்கான தனிக் கொள்கை உருவாக்கப்பட்டது.

2009-2010ஆம் ஆண்டிற்கான தொழில்துறை மானியக் கோரிக்கை தயாரிப்பதற்கு முன்பாக துணை முதலமைச்சராக இருந்த தம்பி மு.க.ஸ்டாலின் 13.6.2009 அன்று சென்னை தலைமைச் செயலகத்தில் தமிழகத்திலுள்ள அனைத்து குறு, சிறு மற்றும் நடுத்தர மற்றும் பெரும் தொழில் முனைவோர் கூட்டமைப்புகளின் கூட்டத்தைக் கூட்டி தமிழகத்தின் தொழில் வளர்ச்சிக்காக மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் பற்றிக் கலந்தாலோசித்தார்.
அதன்பின் அத்தகைய கூட்டங்கள் நெல்லை, கோவை, திருச்சி, ஈரோடு ஆகிய இடங்களிலும் நடத்தப்பட்டன. மைய அரசின் மத்திய புள்ளிவிவர நிறுவனம் (Central Statistical Organisation) 2011இல், தனது 2008-09இல் தொழிற்சாலைகள் குறித்த ஆண்டு ஆய்வினை வெளியிட்டது. அந்த ஆய்வின்படி; "தமிழ்நாடு மொத்தம் 26,122 தொழிற்சாலைகளைக் கொண்டுள்ளது; இதன் மூலம் தொழிற் சாலைகள் எண்ணிக்கையில் இந்தியாவிலேயே தமிழகம் முதலிடம் வகிக்கிறது; தொழிற்சாலைகளில் பணிபுரியும் தொழிலாளர்களின் எண்ணிக் கையிலும் தமிழ்நாடு முதலிடம் வகிக்கிறது.

அதாவது தமிழ்நாட்டில் 17 இலட்சத்து 74 ஆயிரத்து 19 பேர் தொழிற் சாலைகளில் மட்டும் பணிபுரிகின்றனர்; "மொத்த முதலீட்டின்" வரிசையில் தமிழ்நாடு மூன்றாம் இடத்தை வகிக்கிறது; "மொத்த தொழில் உற்பத்தியில்"தமிழ்நாடு மூன்றாம் இடத்தை வகிக்கிறது; மேலும் "நிகர மதிப்பு கூடுதல்" அளவில் தொழிற்சாலை வரிசையில் தமிழ்நாடு மூன்றாம் இடத்தை வகிக்கிறது" என்றெல்லாம் எழுதியிருந்தது.

"Wall Street Journal" தனது 2010, ஜூலை 8ஆம் நாளிட்ட இதழில் தமிழக அரசின் செயல்பாடுகளை மிகவும் புகழ்ந்து கூறியிருந்தது. மேலும், அந்த இதழில் "தமிழ்நாடு; வாகன உற்பத்தித் தொழிற்சாலைகளுக்குத் தேவையான நிலங்கள், சாலைகள் மற்றும் மின்சாரம் ஆகியவற்றை வழங்குவதில் மற்ற இந்திய மாநிலங்களை விடச் சிறப்பாகச் செயல்படுகிறது. மேலும், தொழில் தொடங்கவும், விரிவாக்கம் செய்யவும் 12க்கும் மேற்பட்ட அரசுத்துறை சார்ந்த அனுமதிகளை ஒற்றைச் சாளர முறையில் ஒரே இடத்தில் வழங்குகிறது" என்றும் கூறிப் பாராட்டியது.

2006இல் கழக ஆட்சி அமைந்த பிறகு புதிய தொழில் கொள்கையை வகுத்து தொழில் வளர்ச்சிக்கு அளித்து வந்த ஊக்கம், தொழில் முதலீட்டாளர்களுடன் தொழில் நேயத்துடன் கொண்டுள்ள வெளிப் படையான அணுகுமுறை உலகத்தரத்திற்கு இணையாக மேம்படுத்தப் பட்டுள்ள தொழில் கட்டமைப்புகள் முதலியவற்றின் பயனாக ஐந்தாண்டுகளில் 5 இலட்சத்து 73 ஆயிரத்து 765 கோடியே 94 இலட்ச ரூபாய் அதிகரித்து மொத்த முதலீடு 2010 டிசம்பர்த் திங்களில் 7 இலட்சத்து 65 ஆயிரத்து 557 கோடியே 92 இலட்ச ரூபாய் என - ஏறத்தாழ நான்கு மடங்கு உயர்ந்து, தொழில் வளர்ச்சியில் ஓர் அமைதிப் புரட்சி ஏற்பட்டது.

மத்திய அரசின் கயிறு வாரிய துணைத் தலைவராக உள்ள கா. ராயர் சென்னையிலே சில மாதங்களுக்கு முன்பு செய்தியாளர்களைச் சந்தித்த போது, "மத்திய அரசின் சிறு, குறு, மற்றும் நடுத்தர தொழில் துறை அமைச்சகம் சார்பில், மத்திய கயிறு வாரியத்தின் (காயர் போர்டு) மூலமாக மத்திய, மாநில அரசுகளின் நிதி உதவியுடன் தமிழகத்தில் 100 கோடி ரூபாய் முதலீட்டில் கயிறு தொழில் பூங்கா அமைக்கும் திட்டம் உள்ளது. இதற்கு மத்திய அரசு 70 கோடி ரூபாய் நிதி உதவி அளிக்கத் தயாராக உள்ளது. மாநில அரசு 10 கோடி ரூபாய் மட்டுமே வழங்க வேண்டும். கதர், கிராம சர்வோதய சங்கத்தின் மூலமாக 20 கோடி ரூபாய் வழங்கினால் விழுப்புரத்தில் வழுதரெட்டி கிராமத்தில் 200 ஏக்கர் இடத்தில் இந்தத் தொழில் பூங்கா உருவாகும்.

ஆனால் தமிழக அரசு இதுவரை பூங்கா அமைக்க அனுமதி அளிக்கவில்லை. இது சம்பந்தமாக தமிழக ஊரகத் தொழில் துறை அமைச்சர் மோகனைச் சந்திக்க கடந்த இரண்டு மாதங்களாக முயன்றும் பார்க்க முடியவில்லை. நமது நாட்டின் குடியரசுத் தலைவரைக் கூட எளிதில் பார்க்க முடியும், அவருடன் புகைப்படம் எடுக்க முடியும். ஆனால் தமிழக அமைச்சரை மத்திய அரசு அதிகாரியான என்னால் கூடச் சந்திக்க முடியவில்லை. தமிழகத்தில் ஆண்டுக்கு 500 கோடி ரூபாய் மதிப்பிலான தென்னை மட்டையும், நாறும் தீயிட்டுக் கொளுத்தி வீணாக்கப்படுகிறது" என்று தமிழக அரசு மீது குற்றஞ் சாட்டிய மத்திய அரசு அதிகாரியின் பேட்டி ஏடுகளில் வெளிவந்தது.

நம் மாநிலத்தில் புதிய தொழில்களைத் தொடங்கு கிறார்களோ இல்லையோ, இலாபத்தோடு இயங்கி வந்த "நோக்கியா", "பாக்ஸ்கான்" போன்ற தொழிற்சாலைகள் எல்லாம், தொழிலாளர்களைத் தெருவிலே நிறுத்தித் தவிக்க விட்டு ஓடுகின்றன; ஆனால் ஆட்சியாளர்கள் பாராமுகமாக இருக்கின்றனர். ஆயிரக்கணக்கான தொழிலாளர்கள் வேலை இழப்புக் குறித்த கவலை துளியும் இல்லை அவர்களுக்கு. ஏன், தமிழக அரசோடு தொழில் தொடங்குவதற்காக ஒப்பந்தம் செய்து கொண்ட பல நிறுவனங்களே தங்கள் தொழில்களைத் தொடங்கியதாக இன்னும் செய்தி வரவில்லை.

2011இல் மைய அரசின் மத்திய புள்ளி விவர நிறுவனம், (Central Statistical Organisation) தனது 2008-2009இல் தொழிற்சாலைகள் குறித்து ஆண்டு ஆய்வினை வெளியிட்டது. அந்த ஆய்வின்படி, தமிழ்நாடு மொத்தம் 26,122 தொழிற்சாலைகளைக் கொண்டுள்ளது; இதன் மூலம் தொழிற்சாலைகள் எண்ணிக்கையில் இந்தியாவிலேயே தமிழகம் முதலிடம் வகிக்கிறது; தொழிற்சாலைகளில் பணிபுரியும் தொழிலாளர்களின் எண்ணிக்கையிலும் தமிழ்நாடு முதலிடம் வகிக்கிறது.
அதாவது தமிழ்நாட்டில் 17 லட்சத்து 74 ஆயிரத்து 19 பேர் தொழிற்சாலைகளில் மட்டும் பணி புரிகின்றனர். "மொத்த முதலீட்டின்" வரிசையில் தமிழ்நாடு மூன்றாம் இடத்தை வகிக்கிறது. "மொத்த தொழில் உற்பத்தி"யில் தமிழ்நாடு மூன்றாம் இடத்தை வகிக்கிறது. மேலும் "நிகர மதிப்பு கூடுதல்" அளவில் தொழிற்சாலை வரிசையில் தமிழ்நாடு மூன்றாம் இடத்தை வகிக்கிறது. என்றெல்லாம் கூறப்பட்டிருந்தது.

முதலீடுகளை வெற்றிகரமாக ஈர்ப்பதில் இந்தியாவின் சிறந்த மூன்று மாநிலங்களுள் தமிழகமும் ஒன்றாகத் திகழ்ந்ததை, "ASSOCHAM" நிறுவனம் வெளியிட்ட "BIZCON" என்ற அறிக்கையில், வாகன உற்பத்தியிலும், ஏற்றுமதியிலும் இந்தியாவிலேயே மிகப் பெரிய மாநிலமாகத் திகழும் தமிழகம், வாகன உற்பத்தியில் சிறந்து விளங்கும் உலகின் முதன்மையான 10 மையங்களில் ஒன்றாக விளங்குகிறது" என்று குறிப்பிட்டிருந்தது. இது கழக அரசு அறிவித்த ஒருங்கிணைந்த மிகப் பெரும் வாகனத் திட்டக் கொள்கையின் விளைவாக சாத்தியமாயிற்று.

4-2-2014 தேதிய நாளிதழ் ஒன்றுக்கு, அளித்த சிறப்புப் பேட்டியில், அன்றைய மத்திய அமைச்சர் சுதர்சன நாச்சியப்பன் "மத்திய அரசின் தொழில் துறை சார்பில் ஒரு பிரமாண்டமான தொழில் வளர்ச்சித் திட்டம் தமிழகத்திற்குக் கொண்டு வரப்பட்டுள்ளது. இதற்குத் தேவையான முதலீட்டில் 90 சதவிகிதம் வரை மத்திய அரசு கடனாக வழங்கும். இந்தத் திட்டத்தைச் செயல்படுத்த தமிழக அரசு ஆர்வம் காட்டவில்லை" என்று தொடங்கி தமிழக அரசு எவ்வாறு தொழில் வளர்ச்சியில் அக்கறை இல்லாமல் இருக்கிறது என்பதைச் சுட்டிக் காட்டியிருந்தாரே; முதலமைச்சர் ஜெயலலிதா அதற்கென்ன பதில் கூறப் போகிறார் என்று நான் அப்போதே கேட்டிருந்தேனே; முதலமைச்சரோ, துறையின் இந்த அமைச்சரோ ஏதாவது பதில் கூறினார்களா?

தி.மு. கழக ஆட்சியில் தொழிற்சாலைகளில் பணியாற்றிய பெண்களின் எண்ணிக்கை 4 இலட்சத்து 93 ஆயிரம் ஆகும். ஆனால் தற்போது அ.தி.மு.க. ஆட்சியில் தொழிற்சாலைகளில் பணியாற்றுகின்ற பெண்களின் எண்ணிக்கை 3 இலட்சத்து 78 ஆயிரம். வேலை வாய்ப்பினை இழந்த பெண்களின் எண்ணிக்கை 1 இலட்சத்து 15 ஆயிரம் ஆகும்.

லட்சக்கணக்கான பெண்கள் தமது வேலைவாய்ப்பினை இழந்தது தான் தொழில் வளர்ச்சிக்கான அடையாளமா? தமிழ்நாட்டில் தொழில் வளர்ச்சி பற்றி சுப்பிர மணியம் சுவாமி அவர்களே அண்மையில் கூறும்போது, "தொழில் வளம், பொருளாதார வளர்ச்சி எதுவுமே இல்லை. இங்கிருக்கும் தொழில் அதிபர்களை, கர்நாடக முதல்வர் சித்தராமையா, தங்கள் மாநிலத்துக்குக் கவர்ந்து போயிருப்பதாக அறிந்தேன்.

தமிழகத்தில் இருந்து 12 ஆயிரம் கோடி ரூபாய்க்கான தொழில் முதலீடுகள், கர்நாடகத்துக்கு சென்ற முதலீட்டை, இங்கேயே தக்க வைக்க, தமிழக அரசு எந்த முயற்சியும் எடுக்காதது ஏன்? கடுமையான மின் பற்றாக்குறையும், அரசு அதிகாரிகளின் ஒத்துழையாமையும் எல்லா நிலைகளிலும் இருப்பதால், வெளி மாநிலங்களில் இருந்து யாரும் தமிழகத்தில், முதலீடு செய்ய முன்வரவில்லை.

தகவல் தொழில் நுட்பத் துறையில், தமிழகம், நாட்டிலேயே முதன்மையான மாநிலமாக வரும் என்று எதிர்பார்க்கப்பட்ட சூழ்நிலை மாறியிருக்கிறது. அதற்குக் காரணம், மாநில அரசு நிர்வாகம் சரியில்லாததே" என்று தெரிவித்திருக்கிறார் என்றால், முதலமைச்சர் ஜெயலலிதா அவர்களே, எங்கள் மீது கோபப்பட்டு என்ன பயன்?

நடைபெற்ற மாநாட்டில் அமெரிக்காவின் சன் எடிசன் நிறுவனம் 12 ஆயிரம் கோடி ரூபாய் முதலீடு செய்ய முன் வந்திருப்பதையும், அதானி நிறுவனம் 15 ஆயிரம் கோடி ரூபாய் முதலீடு செய்வோம் என்று அறிவித்திருப்பதையும் பெரிதாகக் குறிப்பிட்டுள்ளார்கள்.

ஆனால் இந்த இரண்டு நிறுவனங்களும் முதலீடு செய்யும் அதே துறையில் 15 ஆயிரம் கோடி ரூபாய் முதலீடு செய்ய முன் வந்தோம். தட்டில் கோடிகளை வைத்து தமிழகத்திற்கு மின்சாரம் தர வந்த எங்களை எட்டி உதைத்து துரத்தியடித்தது ஜெயலலிதாவின் அரசு என்று அந்த மாநாட்டில் பங்கேற்ற சீன கம்பெனியின் பிரதிநிதி ஒருவர் கூறியதாக "நக்கீரன்" இன்று எழுதியுள்ளது. இந்த இதழின் செய்தியாளர் அதிகாரிகளிடம் போடப்பட்டுள்ள ஒப்பந்தங்கள் பற்றி விசாரித்த போது, "கடந்த நான்கரை ஆண்டுகளில் 60 ஆயிரத்து 620 கோடி ரூபாய்க்கு ஒப்பந்தம் போடப்பட்ட நிலையில், 43 ஆயிரம் கோடி ரூபாய்க்கான முதலீடுகளை மட்டுமே பெற முடிந்தது.

இப்போது 2 லட்சத்து 42 ஆயிரம் கோடி ரூபாய்க்கான முதலீடுகள் என்று சொல்லப்பட்டுள்ள அறிவிப்பு சட்டமன்றத்தில் முதல்வர் படிக்கும் 110 அறிக்கையைப் போல ஆகி விடுமோ?" என்று கூறியதாக செய்தி வந்துள்ளது. இப்படிப்பட்ட செய்திகளைப் படிக்கும்போது, நான் தொடக்கத்தில் கூறிய "முள்ளு முனையிலே மூணு குளம் வெட்டினேன், அதிலே இரண்டு குளம் பாழ்; ஒன்றில் தண்ணியே வரல" என்ற பழமொழிதான் மீண்டும் ஞாபகத்திற்கு வருகிறது. இவ்வாறு கருணாநிதி கூறியுள்ளார்.

English summary
DMK chief Karunanidhi criticise Tamilnadu Global Investors meet which concluded recently.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X