For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

சென்னை மாநகராட்சி பணிகள் டெண்டர் இல்லாமல் தரப்படுவதாகக் கூறப்படுகிறதே? கருணாநிதி கேள்வி

By Karthikeyan
Google Oneindia Tamil News

சென்னை: சென்னை மாநகராட்சியில் பல பணிகள் டெண்டரோ ஏலமோ இல்லாமல் தனிப்பட்ட முறையிலே தரப்படுவதாகக் கூறப்படுகிறதே? என்று திமுக தலைவர் கேள்வி எழுப்பியுள்ளார்.

கருணாநிதி வெளியிட்டுள்ள கேள்வி பதில் அறிக்கை:

கேள்வி: அ.தி.மு.க. அமைச்சர் ஒருவரே பொது நிகழ்ச்சி ஒன்றில், அவருடைய கட்சியைச் சேர்ந்த நகரத் தலைவர் ஒருவர் 100 கோடி ரூபாய்க்கு அதிபதியாக இருப்பதாகச் சொல்லியிருக்கிறாரே?

முதல் அமைச்சரின் சொத்து பற்றி அவரது அமைச்சரவையிலே பணியாற்றும் ஒருவரின் ஒப்புதலை அலட்சியமாகக் கருதாமல் மேல் நடவடிக்கை மேற்கொள்ளப்பட வேண்டும். அவர் அதை மட்டுமா சொல்லியிருக்கிறார்? ஏடுகளில் வந்த செய்திப்படி, அந்த அ.தி.மு.க. அமைச்சர், " "ஜெயலலிதாவை நேரடியாக எதிர்க்க முடியாமல், அவர் மீது சொத்துக் குவிப்பு வழக்குப் போட்டு முடக்கப் பார்க்கிறார்கள். ஜெயலலிதாவுக்கு 1000 கோடி ரூபாய்க்கு சொத்து இருப்பதாகப் பிரச்சாரம் செய்கிறார்கள். இன்றைக்கு 100 கோடி ரூபாய் சொத்து என்பது சர்வ சாதாரணம். இந்த மேடையில் இருக்கும் நகரத் தலைவர் அமுதாவுக்கு 100 கோடி ரூபாய் சொத்து இருக்கிறது. பாலசுப்பிரமணி, மதியழகனுக்கு பல கோடி ரூபாய் சொத்து இருக்கிறது. எங்களுக்கே இவ்வளவு சொத்து இருக்கும் போது ஜெயலலிதாவுக்கு இருக்கக் கூடாதா?" என்று பேசியதாகச் செய்தி வந்துள்ளது. அமைச்சரின் இந்தத் தன்னிச்சையான வாக்குமூலத்தை வருமான வரித்துறையும், புலனாய்வுத் துறையும் குறிப்பெடுத்துக் கொண்டு, இந்தத் தொகை எவ்வாறு வந்தது என்பதைப் புலன் விசாரணை செய்து கண்டறிய வேண்டும்.

karunanidhi reported about chennai corporation tender

மேலும் முதல் அமைச்சரின் சொத்து பற்றி அவரது அமைச்சரவையிலே பணியாற்றும் ஒருவரின் ஒப்புதலை அலட்சியமாகக் கருதாமல் மேல் நடவடிக்கை மேற்கொள்ளப்பட வேண்டும். புதிய சொத்துக் குவிப்பு பற்றி, தமிழகத்திலே உள்ள அனைத்து எதிர்க் கட்சிகளும் விரிவாக எடுத்துச் சொல்லியும், அதற்கு இதுவரை உரியவர்களிடமிருந்து பதிலேதும் இல்லை. எதிர்க்கட்சிகள் எடுத்துரைத்ததெல்லாம், செவிடன் காதில் ஊதிய சங்காகி விட்டதா?

கேள்வி: புதுக்கோட்டையில் அமைச்சர் ஒருவர் சமூக அமைதியை சீர்குலைக்க முயலும் வகையில் கருத்துத் தெரிவித்து, அதன் விளைவாக போராட்டம் எல்லாம் நடைபெற்றிருக்கிறதே?

ஏடுகளில் எல்லாம் அந்தச் செய்தி பெரிதாக வந்துள்ளது. ஆனால் அ.தி.மு.க. தலைமை, குறிப்பிட்ட ஒரு பிரிவினரை இழிவு படுத்திப் பேசிய அந்த அமைச்சர் மீது நடவடிக்கை எடுக்காமல், போராடிய தரப்பினரை கைது செய்த தோடு, அவர்களுக்குத் தலைமை வகித்த ஆளுங்கட்சியைச் சேர்ந்தவர்கள் மீதே நடவடிக்கை எடுத்துள்ளது. இதிலிருந்து ஒரு தரப்பினரை தரக் குறைவாகப் பேசிய அந்த அமைச்சருக்கு ஆளுங் கட்சியும், இந்த அரசும் ஆதரவு தெரிவிக்கிறதோ என்ற சந்தேகம்தான் அனைவருக்கும் ஏற்பட்டுள்ளது.

கேள்வி: அரசின் பல்வேறு துறைகளுக்கிடையே நல்லுறவு இல்லாத காரணத்தால் முக்கியமான பல கட்டுமானப் பணிகளில் தொய்வு ஏற்பட்டுள்ளதாக "இந்து" ஒரு பக்கத்திற்கு செய்திக் கட்டுரையை வெளியிட்டிருக்கிறதே?

"A number of key infrastructure projects are in a limbo due to lack of coordination among various Government Departments. Residents who have been waiting for ages to avail of these facilities, are a disappointed lot - As Departments pass the buck, projects languish" என்ற தலைப்பில் முழுப் பக்க அளவுக்கு அந்த ஆங்கில நாளிதழ் "இந்து" இந்தச் செய்தியினை புள்ளி விவரங்களோடு அளித்துள்ளது. அந்தக் கட்டுரையில் திராவிட முன்னேற்றக் கழக ஆட்சியில் தொடங்கப்பட்ட ஒரு சில திட்டங்கள் முடிக்கப்படாமல் தாமதப்படுத்தப் பட்டிருப்பது பற்றி புகைப்படங்களோடு செய்தி வெளியிட்டிருக்கிறார்கள். மேலும் அந்தத் தாமதம் எத்தனை நாட்களாக, என்ன காரணங்களுக்காக இந்த ஆட்சியினரால் செய்யப்படுகிறது என்பது பற்றியும் விரிவாக எழுதியிருக்கிறார்கள். தியேட்டர்கள் விவகாரத்திற்கே விளக்கமளிக்காதவர்கள், "இந்து"வின் இந்தக் கட்டுரையைப் பார்த்தா கவலைப்படப் போகிறார்கள்?

கேள்வி: சென்னை மாநகராட்சியில் பல பணிகள் டெண்டரோ ஏலமோ இல்லாமல் தனிப்பட்ட முறையிலே தரப்படுவதாகக் கூறப்படுகிறதே?

அ.தி.மு.க. ஆட்சியில், விதிமுறைகளுக்கும் விடை கொடுத்து விட்டார்கள்; நிதி இழப்பு குறித்தும் எவ்வித நெருடலும் இல்லை. எப்படியோ அவரவர் பைகளை நிரப்பிக் கொண்டால் சரி என்று கடைசிக் கட்டப் பயணம் வேகமாய் நடந்து கொண்டிருக்கிறது!

உண்மைதான்! கடந்த வாரம் 6-11-2015 அன்று வெளி வந்த "தி இந்து " ஆங்கில நாளிதழில் "Road Contracts given without bids - This is in violation of rules; re-laying will be taken up by those who worked on 194 roads earlier" " (ஏலம் இல்லாமல் சாலைப் பணிகளுக்கு ஒப்பந்தம் செய்யப்படுகின்றன - இது விதிகளை மீறிய செயலாகும்; ஏற்கனவே 194 சாலைப் பணிகளை நிறைவேற்றியவர்களே இந்தப் பணி களையும் மேற்கொள்வார்கள்) என்று "இந்து" எழுதியுள்ளது. அந்தச் செய்தியில் 59 சாலைப் பணிகளை டெண்டர் கோரப்படாமல், விதிகளை மீறி, சென்னை மாநகராட்சி ஒப்படைக்க முடிவு செய்துள்ளது என்றும், உலக முதலீட்டாளர் மாநாட்டின் போது 194 சாலைப் பணிகளை நிறைவேற்றிய ஒப்பந்தக்காரர்களிடமே தற்போது 48 கோடி ரூபாய்க்கான பணிகள் ஒப்படைக்கப்பட விருப்பதாகவும் கூறப்பட்டுள்ளது.

பேருந்து சாலைகளைப் புதுப்பிக்க அரசு வழங்கிய நிதியில் சேமிப்பு உள்ளதால், அந்தப் பணியினைச் செய்ய புதிதாக டெண்டர் கோர அவசியமில்லை என்று மாநகராட்சி அதிகாரிகள் இதற்கு விளக்கம் அளித்தபோதிலும், அடிப்படை விதிகளில் இவ்வாறு செய்யக் கூடாது என்று உள்ளது. இப்படிச் செய்வதால் அரசுக்கு மிகப் பெரிய இழப்பு ஏற்படுமென்றும் அந்த நாளேடு எழுதியுள்ளது. ஆனால் விசாரித்தபோது, சென்னை மாநகராட்சி அளித்துள்ள விளக்கத்தில், இந்த 59 சாலைப் பணிகளுக்கான கோப்பு அரசின் ஒப்புதலுக்காக அனுப்பப்பட்டுள்ளதாகத் தெரிவித்துள்ளனர். அரசு ஒப்புதல் பெற்ற பிறகுதான், சென்னை மாநகராட்சியாரிடம் இந்தப் பணிகளை வழங்கப் போகிறது என்ற உண்மை தெரியும்.

இவ்வாறு கருணாநிதி கூறியுள்ளார்.

English summary
karunanidhi reported about Chennai Corporation tender Offered a personal manner
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X