For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

மோடியிடம் ஜெ. முன்வைத்த 29 கோரிக்கைகளை நிறைவேற்ற அழுத்தமும் தர கருணாநிதி வலியுறுத்தல்

By Mathi
Google Oneindia Tamil News

சென்னை: பிரதமர் மோடியிடம் 29 கோரிக்கைகளை வலியுறுத்தி முதல்வர் ஜெயலலிதா மனு கொடுத்ததுடன் இல்லாமல் அவற்றை நிறைவேற்றவும் அழுத்தம் கொடுக்க வேண்டும் என்று திமுக தலைவர் கருணாநிதி வலியுறுத்தியுள்ளார்.

இது தொடர்பாக கருணாநிதி இன்று வெளியிட்ட அறிக்கை:

தமிழக முதலமைச்சர் ஜெயலலிதா தனி விமானத்தில் 14ஆம் தேதியன்று டெல்லி சென்று, அன்றையதினமே பிரதமரைச் சந்தித்து 29 கோரிக்கைகள் அடங்கிய மனுவினை கொடுத்து விட்டு, உடனே சென்னை திரும்பி விட்டார் என்ற செய்தி அனைத்து நாளேடுகளிலும் வெளிவந்துள்ளது.

2014ஆம் ஆண்டு இந்தியப் பிரதமராக நரேந்திர மோடி தலைமையிலான ஆட்சி அமைந்தபோது, தமிழக முதலமைச்சர் ஜெயலலிதா டெல்லி சென்று 3-6-2014 அன்று பிரதமரிடம் 31 கோரிக்கைகள் அடங்கிய மனுவினை அளித்ததோடு, இந்தியக் குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி, மத்திய நிதியமைச்சர் அருண்ஜெட்லி ஆகியோரையும் சந்தித்து விட்டு சென்னை திரும்பினார். அதற்குப் பிறகு இரண்டாண்டுகள் கழித்து, நேற்றையதினம் டெல்லி சென்று பிரதமரிடம் தமிழக வளர்ச்சிக்காக 29 கோரிக்கைகள் அடங்கிய மனுவினை பிரதமரிடம் அளித்து விட்டுத் திரும்பியிருக்கிறார்.

ஒரே கோரிக்கைகள்தான்

ஒரே கோரிக்கைகள்தான்

இடையில் 2015ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதத்தில் ஒரு விழாவில் கலந்து கொள்வதற்காக சென்னை வந்த இந்தியப் பிரதமர் மோடி, ஜெயலலிதாவை அவருடைய இல்லத்திலே சென்று சந்தித்த போதும், ஜெயலலிதா தமிழகத்தின் தேவைக்கான 19 கோரிக்கைகள் அடங்கிய மனுவினை அளித்தார். ஆனால் அந்தக் கோரிக்கை மனுக்களில் உள்ள தேவைகளைப் பார்த்தால், பெரும்பாலானவை ஒரே மாதிரியான கோரிக்கைகள் தான் திரும்பத் திரும்பப் பிரதமரிடம் எடுத்து வைக்கப்பட்டுள்ளன என்பதைப் புரிந்து கொள்ள முடியும்.

காவிரி மேலாண்மை வாரியம்

காவிரி மேலாண்மை வாரியம்

குறிப்பாக தற்போது பிரதமரிடம் தமிழகத்தின் தேவைகளுக்காக முதல் அமைச்சர் எடுத்து வைத்த கோரிக்கைகள் என்னவென்று பார்த்தால், "காவேரி நடுவர் மன்ற இறுதித் தீர்ப்பினை அமல்படுத்துவதற்காக, காவேரி மேலாண்மை வாரியம் மற்றும் காவேரி நதிநீர் முறைப்படுத்தும் குழு ஆகியவற்றை உடனடியாக அமைக்க வேண்டும்" என்பது முதல் கோரிக்கையாகும்.

2014ஆம் ஆண்டு பிரதமரைச் சந்தித்து, முதலமைச்சர் ஜெயலலிதா எடுத்து வைத்த கோரிக்கைகளில் முதல் கோரிக்கை, "காவேரி நடுவர் மன்ற இறுதித் தீர்ப்பினை அமல்படுத்துவதற்காக, காவேரி மேலாண்மை வாரியம் மற்றும் காவேரி நதி நீர் ஒழுங்கு முறைக் குழு ஆகியவற்றை உடனடியாக அமைக்க வேண்டும்" என்பது தான்! 2015ஆம் ஆண்டில் பிரதமர், ஜெயலலிதாவை அவருடைய வீட்டிலே சந்தித்த போது கொடுத்த கோரிக்கை மனுவிலும் இது தான் முதல் கோரிக்கையாக இடம் பெற்றுள்ளது.

மேகதாது அணை

மேகதாது அணை

ஜெயலலிதாவின் அடுத்த கோரிக்கை காவேரி ஆற்றின் குறுக்கே மேகதாது பகுதியில் கர்நாடக அரசு அணை கட்டும் முயற்சியைத் தடுத்து நிறுத்த வேண்டும். இதே கோரிக்கை கடந்த ஆண்டு ஜெயலலிதா பிரதமரிடம் கொடுத்த கோரிக்கை மனுவிலும் உள்ளது.

"மாநிலங்களுக்கிடையேயான அனைத்து நதிகளையும் இணைக்க, மத்திய அரசு நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்" - இது ஜெயலலிதா பிரதமரிடம் எடுத்து வைக்க அடுத்த கோரிக்கை. இதே கோரிக்கை 2014ஆம் ஆண்டிலும், 2015ஆம் ஆண்டிலும் ஜெயலலிதா எடுத்து வைத்த கோரிக்கை தான்!

பழைய கோரிக்கைகள்

பழைய கோரிக்கைகள்

இவை மாத்திரமல்ல; அவினாசி-அத்திக்கடவு திட்டத்தை அமல்படுத்த வேண்டும்; தமிழக மீனவர்களுக்குரிய பாரம்பரிய மீன் பிடி உரிமைகளைப் பாதுகாக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்; கச்சத் தீவைத் திரும்பப் பெற வேண்டும்; செய்யூர் அனல் மின் நிலையத்தினைத் தொடங்க நடவடிக்கை எடுக்க வேண்டும்;

13வது நிதிக் கொள்கையின்படி, நிலுவையில் உள்ள தமிழகத்திற்கான நிதியை உடனடியாக விடுவிக்க வேண்டும்; காவல் துறையை நவீன மயமாக்க உதவிட வேண்டும்; சென்னை மெட்ரோ ரெயில் திட்டத்தின் இரண்டாம் கட்டப் பணிகளைத் தொடங்க வேண்டும்;

சந்தேகம் எழுகிறது

சந்தேகம் எழுகிறது

தமிழ் மொழியை இந்திய அரசின் ஆட்சி மொழியாக ஆக்க வேண்டும்; ஜல்லிக் கட்டு நிகழ்ச்சிக்கு உள்ள தடையை நீக்க வேண்டும்; தமிழகத்தில் எய்ம்ஸ் மருத்துவ மனை அமைக்க விரைவில் முடிவு செய்ய வேண்டும்; தமிழ்நாடு அரசு கேபிள் டி.வி. நிறுவனம் டிஜிட்டல் முறையில் ஒளி பரப்பு செய்ய மத்திய அரசு விரைந்து அனுமதி அளிக்க வேண்டும் போன்ற கோரிக்கைகள் அனைத்துமே 2014ஆம் ஆண்டிலும், 2015ஆம் ஆண்டிலும் முதல் அமைச்சர் ஜெயலலிதாவினால் இந்தியப் பிரதமரிடம் அளிக்கப்பட்டவை தான்.

இந்தக் கோரிக்கைகள் திரும்பத் திரும்ப அளிக்கப்படுவதிலிருந்தே, முதல் அமைச்சர் ஜெயலலிதா, இந்தியப் பிரதமரிடம் கொடுத்த இந்தக் கோரிக்கை மனுக்கள் எல்லாம் உரிய முறையில் கவனிக்கப்படாத நிலையிலே தான் உள்ளன என்பதை நாம் எளிதில் புரிந்து கொள்ள முடியும். மேலும் இந்தக் கோரிக்கைகள் ஏதோ நாங்கள் கொடுப்பதைப் போலக் கொடுக்கிறோம், நீங்கள் வாங்கிக் கொள்வதைப் போல வாங்கிக் கொள்ளுங்கள் என்ற ரீதியில் தான் நடக்கின்றனவோ என்ற சந்தேகத்தையும் ஏற்படுத்துகிறது.

புதிய மொந்தையில் பழைய கள்

புதிய மொந்தையில் பழைய கள்

பிரதமரிடம் கோரிக்கைகளைக் கொடுத்தால், அதை ஏதோ கடமைக்காகக் கொடுத்தோம் என்ற ரீதியில் நிறுத்தாமல் தொடர்ந்து தொடர்புடைய அமைச்சர்கள், மத்திய நிதி அமைச்சர் ஆகியோரைச் சந்தித்து அந்தக் கோரிக்கைகளை நிறைவேற்ற வேண்டிய அவசர அவசியத்தை உணர்த்திட அரசியல் ரீதியாகவும், நிர்வாக ரீதியாகவும் அழுத்தம் தர வேண்டும். தமிழகத்திலே உள்ள தொடர்புடைய அமைச்சர்கள் டெல்லி சென்று, அந்தத் துறை அமைச்சரையும், அதிகாரிகளையும் சந்தித்து கோரிக்கைகள் பற்றிப் பேசி அவற்றை நிறைவேற்று வதற்கான வழிமுறைகளைக் கையாளுவது வழக்கம்.

ஆனால் அப்படி இல்லாமல், அரைத்த மாவையே திரும்பத் திரும்ப அரைப்பதைப் போல, 2014ஆம் ஆண்டு முதலமைச்சர் பிரதமரிடம் எடுத்து வைத்த கோரிக்கைகளைத் தான் இரண்டாண்டுகள் கழித்து நேற்றையதினமும் திரும்ப எடுத்து வைத்திருக்கிறார் என்கிற போது "Old Wine in a New Bottle" (புதிய மொந்தையில் பழைய கள்) என்ற பழமொழி தான் நினைவுக்கு வருகிறது!

இவ்வாறு கருணாநிதி கூறியுள்ளார்.

English summary
DMK leader Karunanidhi slammed TN CM Jayalalithaa's delhi visit.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X