அனலை கக்கிய அக்னி நட்சத்திரம் இன்றுடன் விடைபெறுகிறது..வெயில் விடாமல் சுட்டெரிக்குமாம்
சென்னை: அக்னி நட்சத்திரம் எனப்படும் கத்தரி வெயில் காலம் இன்றுடன் முடிவுக்கு வருகிறது. அக்னி நட்சத்திரம் இன்றுடன் முடிவுக்கு வந்தாலும் தமிழ்நாட்டில் சில இடங்களில் இன்னும் ஒரு வார காலத்துக்கு வெயிலின் தாக்கம் இயல்பைவிட சற்று அதிகமாகவே இருக்கும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மழையோடு தொடங்கிய அக்னி நட்சத்திர காலம் பிற்பகுதியில் அனலை கக்கிய நிலையில் முடியும் போது பல ஊர்களில் மழை கொட்டியுள்ளது.
தமிழகத்தில் அக்னி நட்சத்திர வெயில் காலம் கடந்த மே 4ம் தேதி தொடங்கியது. அதற்கு முன்பாகவே வெயில் வாட்டி வதைத்து வந்த நிலையில், அக்னி நட்சத்திரத்தில் இன்னும் அதிகமாக வெயில் பதிவாகக் கூடும் என மக்கள் மத்தியில் அச்சம் நிலவியது. கத்திரி வெயில் தொடங்கியதுமே தமிழகத்தின் ஒருசில பகுதிகளில் மழை பெய்தது. இது மக்களை சற்றே மகிழ்ச்சி அடைய செய்தது.

வங்கக்கடலில் உருவான மோச்சா புயல் மற்றும் வானிலை மாற்றம் காரணமாக உண்மையான அக்னி நட்சத்திர காலத்தை மக்கள் உணர முடிந்தது. கடந்த 2 வார காலமாகவே தமிழ்நாட்டில் வறண்ட வானிலை நிலவத் தொடங்கியது. பல ஊர்களில் வெயில் சுட்டெரித்தது பெரும்பாலான ஊர்களில் 40 டிகிரி செல்சியஸை தாண்டி பதிவானது. அக்னி நட்சத்திரத்தின் பிற்பகுதியில் மக்கள் கடும் அவதி அடைந்தனர்.
பகல் நேரங்களில் கடுமையான வெயில் தாக்கம் இருந்தாலும் மாலை நேரங்களில் விருதுநகர், மதுரை மாவட்டங்களில் பல்வேறு இடங்களில் கோடை மழை கொட்டித் தீர்த்தது. பலத்த இடி மின்னலுடன் சில நாட்களாக பெய்த கனமழை காரணமாக மாலை மற்றும் இரவு நேரங்களில் வெப்பம் தணிந்து இதமான சூழ்நிலை நிலவியது. இதனால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்தனர். நேற்றைய தினம் விருதுநகர் மாவட்டம் சிவகாசியில் இடி மின்னலுடன் கனமழை கொட்டித்தீர்த்தது.
அக்னி நட்சத்திரம் இன்றுடன் முடிவுக்கு வந்தாலும் தமிழ்நாட்டில் சில இடங்களில் இன்னும் ஒரு வார காலத்துக்கு வெயிலின் தாக்கம் இயல்பைவிட சற்று அதிகமாகவே இருக்கும் என்றும், இன்றும், நாளையும் ஓரிரு இடங்களில் 100 டிகிரி பாரன்ஹீட் முதல் 104 டிகிரி பாரன்ஹீட் வரை வெப்பநிலை பதிவாகும் என்றும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இதனிடையே தமிழக பகுதிகளின் மேல் நிலவும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி மற்றும் வெப்பச்சலனம் காரணமாக வருகிற 31 மற்றும் 1ஆம் தேதி தமிழ்நாட்டில் சில இடங்களில் மழைக்கான வாய்ப்பு இருப்பதாகவும் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தமிழகம், கேரளாவில் தென்மேற்கு பருவமழை வரும் ஜூன் 4ஆம் தேதி முதல் தொடங்க உள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications